Monday 23 November 2009

காது வளர்த்து


பாட்டி பாமடம் என்றும் சொல்லப்படும் தண்டட்டி அணிந்திருப்பார் .ஒரு காதில் இரண்டு உருளைகள் போன்ற அமைப்பில் இரண்டு காதுகளிலும் .பார்க்க கனமாக தெரிந்தாலும் அத்தனை கனம் இல்லை என்றே சொல்லுவார் .லேசாக இருக்க உள்ளே அரக்கு வைத்திருப்பார்களாம் .

நானும் என் அக்காவும் எங்களுக்கு ஆளுக்கொரு காதில் இருக்கும் பாமடத்தை தர வேண்டும் என்று வேடிக்கையாக கேட்போம் பாட்டியிடம் .எப்படி சீண்டிய போதும் பாட்டி ,"ஏளா ,அந்த பாமடம் ரெண்டும் ஒங்க அத்தைக்கு தான் " என்ற ஒரே பதிலை மட்டுமே கூறுவார் .நானும் அக்காவும் விடாமல் ,"ஒரு காது பாமடத்தை ரெண்டு அத்தைக்கும் குடுங்க .இன்னொரு காதுல இருக்க பாமடத்தை நாங்க ரெண்டு பெரும் எடுத்துக்கறோம் ."இதற்கும் பாட்டி அசைய மாட்டார் ,"ஏளா ,ஒங்க அத்த சும்மா விடுவான்னு நெனைச்சீகளோ "என்று பதில் வரும் .இதற்கு மேல் பேசினால் பதிலே பேச மாட்டார் பாட்டி .இறுதியாக பாட்டியின்
விருப்பப்படியே பாமடம் போய்ச் சேர்ந்தது இரண்டு அத்தைக்கும் .

பாட்டியின் காதை நான் சிறு வயதிலிருந்தே பார்த்து அதிசயித்திருக்கிறேன் .எப்படி இப்படி பெரிய ஒட்டையாக்க முடியும் என .அறுத்து எடுத்திருப்பார்களோ என்று நினைத்திருக்கிறேன் பல நேரம் .பாட்டியின் காது ஒரு புதிராகவே இருந்தது எனக்கு பல காலம் .பாட்டியிடமே கேட்ட போது அவர் சொன்னது இது .

முதலில் காதில் சாதாரண ஓட்டை எல்லாருக்கும் காது குத்துவது போலவே போடுவார்களாம் .உடனே அதிலொரு ஓலையை சொருகி வைப்பார்களாம் .சில நாள் கழித்து மீண்டும் கொஞ்சம் பெரிய ஓலையாக வைப்பார்களாம் .இப்படி ஓலையின் அளவை பெரிதாக்கிக் கொண்டே போவார்களாம் சில காலம் .துவாரம் கொஞ்சம் பெரிதானவுடன் பாமடத்தை மாட்டிவிடுவார்களாம்.பின்னர் அந்த பாமடத்தின் கனத்திலேயே காது நீளமாகி விடுமாம் .

இப்படியாகவே காது வளர்த்திருக்கிறார்கள் .


2 comments:

maithriim said...

இந்த மாதிரி பதிவுகள் ரொம்பத் தேவை, உறவுகளின் அழகைக் காட்டவும், நம் பழக்க வழக்கங்களைப் பதிவு செய்யவும் :-) அருமை!

amas32

பூங்குழலி said...

ரொம்ப நன்றிமா