Wednesday 6 October 2010

அம்மா என்றால் அன்பு

சிகிச்சைக்கென தினமும் சமூகத்தின் பல நிலைகளிலிருந்தும் ஏன் நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் சில நேரங்களில் வெளி நாட்டிலிருந்தும் கூட நோயாளிகள் வருகிறார்கள் .எச்.ஐ.விக்கென மட்டுமே சிகிச்சை தரும் மையங்கள் குறைவாக இருப்பதும் உள்ளூரில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் .இதில் ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் .

ஆண்கள் அனேகமாக ,டாக்டர் என்று கொஞ்சம் அசால்ட்டாகவே பேசுவார்கள் .பெண்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பயந்தாலும் பின்னர் வெகு சகஜமாக வீட்டில் ஒருவருடன் பேசுவது போலவே பேசுவார்கள் .அனேகமாக அம்மா என்றே அனைவரும் கூப்பிடுவார்கள் ."என்னம்மா சொல்றீங்க ?அம்மா என்ன சொல்றாங்களோ அத நா செஞ்சுக்கறேன் ன்னு சொல்லிட்டேன்ம்மா ",இப்படி அன்பையும் நம்பிக்கையையும் சேர்த்தே பொழிபவர்கள் பலர் .வெகு சிலர் மேடம் என்று அழைப்பார்கள் .

இன்னும் சிலரோ அக்கா என்று சொல்லி மாய்ந்து போவார்கள் ."இவரு கிட்ட நா அப்பவே சொன்னேக்கா ,அக்கா கண்டிப்பா கேப்பாங்கன்னு ,நீங்க இன்னிக்கி இருக்கீங்களோ இல்லையோன்னு பயந்துகிட்டே வந்தேன் க்கா ."இப்படி மூச்சுக்கு நூறு அக்கா சொல்லி பேசுவார்கள் .கொஞ்சம் ஸ்டைலாக சிலர் சிஸ்டர் என்று சொல்லிப் பார்ப்பார்கள் .

ஒரு பெண் வருவார் .கர்ப்பமாக இருந்த போது முதன்முதலாக சிகிச்சைக்கு வந்தார் .எப்போதும் "டீச்சர் " என்றே சொல்வார் ."இல்ல டீச்சர் ,ஆமா டீச்சர் "என்று எல்லா வாக்கியங்களின் முடிவிலும் ஒரு டீச்சர் இருக்கும் .அதை விட ,நாம் என்ன கேட்டாலும் எழுந்து நின்று தான் பதில் சொல்வார் .கர்ப்பமாக இருக்கும் போது, படுக்க வைத்து சோதித்துக் கொண்டிருக்கும் போது ,நாம் ஏதாவது கேட்டுவிட்டால் ,உடனே டபாரென்று எழுந்துவிடுவார் .கையைக் கட்டிக் கொண்டு "இல்ல டீச்சர் ..."என்று ஆரம்பிப்பார் .கேட்ட போது பள்ளிகூடத்தில் ஒரு ஆசிரியர் எழுந்து நின்று பதில் சொல்லாததற்கு தண்டனை கொடுத்ததன் பலன் இது .சடாரென்று இவர் எழுந்து நிற்கும் போதெல்லாம் நிறைய வேடிக்கையாகவும் கொஞ்சம் பயமாகவும் இருக்கும் எங்களுக்கு .


6 comments:

தருமி said...

வாசிச்சிட்டேன் டீச்சர்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

சடாரென்று இவர் எழுந்து நிற்கும் போதெல்லாம் நிறைய வேடிக்கையாகவும் கொஞ்சம் பயமாகவும் இருக்கும் எங்களுக்கு .

------------------

வெகுளித்தனமான மக்களை சந்திப்பதும் ஆனந்தம் தான்.

தமிழ் உதயம் said...

ஆசிரியர்களுக்கு நிகராக மருத்துவர்களை மதிக்கின்ற பாங்கு அல்லது மருத்துவர்களுக்கு சமமாக ஆசிரியர்களை நினைக்கும் பாங்கு

பூங்குழலி said...

//வாசிச்சிட்டேன் டீச்சர்!//


உங்களை மாதிரி மாணவர்கள் இருந்தால் ஆசிரியர்கள் ரொம்ப சந்தோஷப்படுவாங்க ...

பூங்குழலி said...

//வெகுளித்தனமான மக்களை சந்திப்பதும் ஆனந்தம் தான்.//


நூற்றுக்கு நூறு நிஜம்

பூங்குழலி said...

//ஆசிரியர்களுக்கு நிகராக மருத்துவர்களை மதிக்கின்ற பாங்கு அல்லது மருத்துவர்களுக்கு சமமாக ஆசிரியர்களை நினைக்கும் பாங்கு//


தாம் மிகவும் மதிப்பவர்களை ஆசிரியர்களுக்கு நிகராக நினைப்பது என்று கூறலாம் இல்லை மரியாதைக்குரிய சொல்லாக டீச்சர் என்பதை சொல்லும் பழக்கமாக கூட இருக்கலாம் .