Tuesday 16 October 2012

ஹோட்டல் அறையில் ...








                                                             

என்றோ
கடந்த ஒரு பயணத்தில்
தங்க நேர்ந்தது  
அவ்வறையில்
 

நான்கு சுவர்களும்
பளீர் வர்ணங்களுமாக
வழமை போலவே 
இருந்தது அவ்வறை ...
இறகுகள்  தைத்த  தலையணையும்
மேகங்கள் பொதித்த மெத்தையும்
இடப்பட்டிருந்தது  வழமை போலவே ....


நான்  நுழைந்த 
ஒரு நொடியில்
வெளியேறிப் போனது
பிறருடைய தடங்களும்
அறையை நிரப்பியிருந்த
அவர்களின் மூச்சுக் காற்றும்


வெற்றாகிப்  போன
அவ்வறையில்
தேங்கிப் போயின
என் மூச்சும்
என் சிரிப்புகளும் 



சுவர்கள் எங்கும் பதிந்து கிடந்தன
என் கண்கள்
தலையணையில் சிக்கிக் கிடந்தன
சில கனவுகள்
தரையெங்கும் சிதறிக் கிடந்தன
சில விசும்பல்களும்
என்னின்  தலைமுடியும்  



பயணம் முடிந்த  ஒரு நாளில் 
ஏதும்  சொல்லாமல்
என் தடயங்கள் அழித்து
புறப்பட்டு வந்தேன் நான்


மறுநாளில்
எவருக்கோ சொந்தமாகியிருக்கும்
அவ்வறையும் 


அந்நாளில்
ஜன்னலில்
என் தலைகோதிய காற்று
சொல்லி போயிருக்கக் கூடும்
அவள்  இங்கிருந்தாளென ....