Thursday 14 May 2015

உத்தமவில்லன்

நானும் என் பள்ளி தோழியும்   ரெண்டு நாளைக்கு முன்னால முடிவெடுத்து ஆன்லைன்ல டிக்கெட் எடுத்து இன்று உத்தமவில்லன் பாக்க போனோம்.போனோமா ..தியேட்டருல போனவுடனே ஆளுக்கொரு பாப்கார்ன் கோக் சகிதம் ரெடியாகிட்டோம் .அவ நேத்திலிருந்து ஒரே பொலம்பல் .எங்க வீட்ல ஒங்க ரெண்டு  பேருக்கும் வேற  படமே கெடைக்கலையான்னு திட்டுறாங்கன்னு .நல்லாவே இல்லையாமேன்னு ?நான் சொன்னேன் ,சரி விடு நாமளும் படத்த பாத்துட்டு நல்லா இல்லைன்னு சொல்லுவோம்ன்னு .

படம் பாத்தாச்சு .கமல் ரொம்பவே  மெனெக்கெட்டிருக்கார் ,எப்பவும் போலவே .ஆனா அது புல்லா  நமக்கு தெரியணும்ன்னு நெனச்சோ என்னவோ படம் நீளம் ,அதோட satire  நமக்கு புரியாதுன்னு நெனச்சாரோ என்னவோ ரொம்ப வெளக்கமா ...ரொம்...ப மெதுவா ...ஆனா அவர் பெரிய கோட்டைவிட்டது நாயகிகள் தேர்வுல .ஆன்ட்ரியா  அவ்வளவு முக்கிய ரோலுக்கு சுமார் effort ...சம்பந்தமில்லா காஸ்ட்யூம்ஸ் ...

படம் முழுக்க கமலோட  சொந்த வாழ்க்கை போலதான் இருக்கு ,எல்லாரும் சொன்ன மாதிரியே .அதிலும் நிறைய சுய பச்சாதாபம் தெரியுது ?கமல் கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடுறார் .எனக்கு ஏத்துக்கவே முடியல .அப்புறம் அந்த கடைசி சீன்ல ஒரு கூட்டமே ஹாஸ்பிடல் லாபியில படம் பாக்குறது ?சலங்கை ஒலி  சாயல் ?வேற வழியில்லையோ என்னவோ ?

அந்த உத்தமன் கதை ஒரு  பெரிய நடிகரோட swansong ன்னு சொல்றது  "ரிக்க்ஷாக்காரன் "எம்ஜிஆரோட பெஸ்ட் படம்ன்னு சொல்ற மாதிரி இருக்கு ..காமெடிய வேற ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்காங்க.இந்த கதைய இயக்குறதா நடிக்க கேபி ஏன் ஒத்துக்கிட்டார்ன்னு தெரியல... அந்த உத்தமன் குழுவே ஒரு பெருசுங்க க்ரூப்பா இருக்கு -சோவோட விவேகா பைன் ஆர்ட்ஸ் குழு மாதிரி ...

ஆனா படம் முழுக்க நிறைய  memorable moments ...

அந்த கடிதங்கள்
கமலுக்கு ட்யூமர்ன்னு தெரியும் போது கேபியோட ரியாக்சன்.
ஊர்வசி + எம் எஸ் பாஸ்கர்
பல வசனங்கள்
பல பாடல் வரிகள்
உத்தமன் intro ..

யாரும் கேக்கலைனாலும் என்னோட suggestions ...

அந்த  உத்தமன் கதையில கண்ண மூடிட்டு கத்திரிக்கோல வச்சிருக்கலாம் .
கமல் ஒரு படத்துக்கு ஒரு பாட்டு பாடுனா போதும் .
சில வசனம் ரேடியோ நாடகத்துக்கு எழுதின மாதிரி இருக்கு .
ஆன்ட்ரியா ரோலுக்கு ஸ்ரீதேவிய கேட்டிருக்கலாம் .
உத்தமன் படத்துக்காவது இளையராஜாவை  இசைய வைத்திருக்கலாம் .

என் தோழி சொன்னா ..எல்லாரும் சொன்ன  அளவுக்கு மோசமில்ல . ஆனா படம் முழுக்க சொந்த கதையாவே இருக்கே ,கமலுக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லையா ?



Monday 4 May 2015

இல்லாதவள்

என் பிரிய பேஷன்ட் இவள் .ரோஜாப்பூ போல் இருப்பாள் .சின்ன பிள்ளை போல தத்தி தத்தி  பேசுவாள் .தந்தை தாய் இல்லாமல் மாமாவால் வளர்க்கப்பட்டவள் .எப்போதும் ஒரு வித மனக்குழப்பத்திலேயே இருப்பாள் . எதற்கும் என்னிடம் தொலை பேசுவாள் .வாரத்தில் இருமுறையேனும் .

குழந்தை இல்லாமல் இருக்கவே அது குறித்து மிக வருத்தத்தில் இருந்தாள் .சுற்றாரின் இது குறித்த நச்சரிப்பு வேறு .இதெல்லாம் சேர்ந்து டிப்பிரெஷனாக (depression )  மாற மனநல மருத்துவரிடம் அனுப்பி அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டோம் .

இதனூடே இவள் கணவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது .அதே நேரத்தில் இவள் கருத்தரித்திருந்தாள் .கணவரின் உடல்நலம் குறித்து கவலையாய் இருந்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருந்தாள் .கணவரும் நன்றாக தேறினார் .2014 ,டிசம்பரில் அழகான பெண் குழந்தை பிறந்தது .குழந்தைக்கு  எச்.ஐ.வி  இருக்காதே என்று கேட்டுக்கொண்டே இருந்தாள் .குழந்தைக்கும் பரிசோதனை செய்யப்பட்டு நோய் இல்லையென உறுதி செய்யப்பட்டது .

பிரசவத்திற்கு பின்னர் கட்டிலிருந்த  டிப்பிரெஷன் மீண்டும் தலை துவக்க ஆரம்பித்தது .மருந்துகள் சாப்பிட்டபடியே இருந்தாள் .திடீரென போன் செய்வாள் .ஏதேனும் கேட்பாள் .பதில் கேட்டுக்கொண்டு அதன்படி செய்வாள் .
போனவாரம் சொந்த பணி காரணமாக லீவில் இருந்தேன் .

இன்று காலை இவள் கணவர் தொலை பேசியில் .குழந்தையை அடுத்தபடி பரிசோதனைக்கு எப்போது அழைத்து வரவேண்டும் என கேட்டார் ."அவள் என்ன செய்கிறாள் ?அவளையும் சேர்த்தே அடுத்த வாரம் கூட்டி வாருங்கள்  "என சொல்லவும் ,"அவள் போன வாரம் இறந்து போய்விட்டாள் "என்றார் கதறியபடி .ஐயோ என்று அலறியே விட்டேன் .

"நன்றாக  தான்  இருந்தாள் .என் அம்மா அக்காவிடம் சாதரணமாக பேசிக்கொண்டிருந்திருக்கிறாள் .திடீரென ரூமுக்குள் சென்று தூக்கு மாட்டிக்கொண்டாள் .எதற்கென்றே தெரியவில்லை என்றார் அழுதபடியே .சின்ன குழந்தையை விட்டுவிட்டு போய்விட்டாள் .குழந்தை வேண்டும் வேண்டும் என கேட்டுவிட்டு  இப்படி செய்துவிட்டாள் .
போன வாரம்  முழுவதும்  உங்களுக்கு பேச முயற்சித்துக்கொண்டே இருந்தாள் ...."