இன்று ஒரு இளம் பெண்ணை அழைத்து வந்தார்கள் .வயது பத்தொன்பது .எச்.ஐ.வி நோய்க்கான மருந்துகளை சில வருடங்களாகவே எடுத்துக் கொண்டிருக்கிறாள் .நோய் இருப்பது தெரியுமா என்பது எவருக்கும் தெரியவில்லை .இதை கேட்கவும் தெரியப்படுத்தவும் எவருக்கும் துணிவில்லை .
சிறு குழந்தையாய் இருந்த போது ,ஏதோ அவசர தேவைக்காக தந்தையின் ரத்தத்தை ஏற்றியிருக்கிறார்கள் ,தந்தைக்கு நோய் இருப்பது தெரியாமல் .
அதனால் ,இந்த பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள் .
இது போல் இன்று பல இளைஞர்கள் இருக்கிறார்கள் .கர்ப்பத்தில் தாயிடமிருந்தோ ,இப்படி ரத்தம் மூலமாகவோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் .
இவர்கள் எதிர்காலம் இவர்களின் குடும்பத்தினரை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது .
நோயைப் பற்றி எப்படி சொல்வது ?
எவர் சொல்வது ?
சொன்னால் பிள்ளையால் தாங்க முடியுமா ?
நம்மீது வெறுப்பு தோன்றுமா ?
திருமணம் செய்யலாமா?
செய்யாமல் இருந்தால் சுற்றத்தாரின் கேள்விகளுக்கு எவர் பதில் சொல்வது?
இப்படி நோயுடன் மட்டுமல்ல ,விடை தெரியாத கேள்விகளுடனும் பல பெற்றோர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் .