Wednesday, 5 October 2022

விஜயதசமி

சின்ன வயசிலிருந்து வீணை மேல ஒரு மோகம் .என் கிளாஸ்மேட் ராதிகா வீணை படிச்சிட்டிருந்தா .ஆனா அவங்க வீணை மிஸ் எங்க வீட்லேருந்து ரொம்ப தூரம் ."எங்க வீணை மிஸ் உங்க வீட்டுக்கிட்ட வீடு மாறிட்டாங்க"னு ராதிகா ஒருநாள் சொன்னப்ப ஏகப்பட்ட சந்தோசம் .எங்கன்னு பார்த்தா அடுத்த தெருல  .கிரிக்கெட்டர் ரங்காச்சாரியோட (அந்த நாள்ல இவர் தான் ரேடியோ பாலாஜி மாதிரி -ஆனா மழலை குரல் -டீம்ல இருந்தவர் )மகள் தான் வீணை மிஸ் ஜெயலக்ஷ்மி என்கிற ஜெயாம்மா ஆன்ட்டி .அதே கம்பவுண்ட்ல இன்னொரு வீடு கட்டிக்  குடி வந்திருந்தாங்க  .

இப்ப வீட்ல பெர்மிஷன் கிடைக்கல .கொஞ்சம் பூசுனாப்ல இருந்தேன் .பத்தாவது வேற .வெயிட் குறைஞ்சா போகலாம்னு கண்டிஷனோட விடுமுறைல போக ஆரம்பிச்சேன் .(வெயிட் குறைஞ்சதானு நினைவு இல்ல ).

மத்தியானமா கிளம்பிப்  போவேன் .பட்டுப்பாவாடை தாவணி ,வீட்ல பறிச்சு கட்டின மல்லிப்பூனு  மங்களகரமா ஏறக்குறைய தினமும் .வீணைய விட  பிடிச்சது எங்க வீணை மிஸ்ஸை  .எக்கச்சக்கமா கதை பேசுவோம் .அவங்க வீட்ல அஞ்சாறு வீணை  இருந்தது .பாய் விரிச்சு உக்காந்து ஆளுக்கொரு வீணையை  எடுத்து வச்சுக்குவோம் .ரெண்டு மீட்டு மீட்டிட்டு வீணையை மடியிலேயே வச்சுக்கிட்டு  கொஞ்ச நேரம் பேசுவோம் .அப்புறம் வீணையை கீழ வச்சுட்டு பேசுவோம் ,அப்புறம் திரும்ப பழைய பாடத்தை வாசிச்சிட்டு திரும்ப பேசுவோம் ,அப்புறம் புதுப்பாடம்.அவங்க மக என் வயசு தான், வெளிய யார்கிட்டயோ சொல்லிக்கிட்டிருந்தா -"பேச்சு சத்தமா கேக்கறதே ,யாரு?பூங்குழலியா இருக்கும் .வாசிக்கறாளோ இல்லையோ ரெண்டு பேரும்  பேசிக்கிட்டே இருப்பா "னு .

நான் ரொம்ப சுமாரா தான் வாசிப்பேன் .அதோட பெரிய இசை அறிவெல்லாம்  கிடையாது .கணக்கு வாய்ப்பாடு மாதிரி  நோட்ஸ் மனப்பாடமா தெரியும் .என் தம்பி சொல்லுவான் "யாராவது செத்துட்டா டிவில உன்னை வாசிக்க அனுப்பலாம்"னு (அப்ப பெரிய தலைவர்கள் இறந்துட்டா DD எல்லா நிகழ்ச்சியையும்  ரத்து பண்ணிட்டு சாரங்கி வதன்னு ,சாரங்கிய போட்டு இழுத்திட்டிருப்பாங்க -அந்த கிண்டல் ).ஆனா ஒருநாள் கூட என்னை குறை சொன்னதே இல்லை .நோட்ஸ் எப்படி மறக்காம வாசிக்கறேனு என்னோட ஒரே பாசிட்டிவான அதையே தான் சொல்வாங்க .உன் தம்பிக்கென்ன தெரியும் நீ நல்லா தான் வாசிக்கறேனு வேற .  தினம் கிளாஸ்சுக்கு போனதுல வர்ணம் கீர்த்தனைனு  ஜெட் வேகமா முன்னேறிட்டேன் . "என்னடி  இவளே ,இத்தனை நாள்ல இவ்வளவு கத்துண்டுட்ட!"னு ஒருநாள் ஆன்ட்டியே  ஷாக்காயிட்டாங்க .

கல்லூரிலாம் போனப்புறம் முன்ன மாதிரி போக முடியல .அப்புறம் ஆண்ட்டியும் வீடு மாத்தி பம்மல் கிட்ட போய்ட்டாங்க .வீணை சொல்லிக்கொடுக்கறதையும் அதுக்கு முன்னமே நிப்பாட்டிட்டாங்க.என் வீணை சில வருஷம் முன்னால ரிப்பர் பண்ணி வச்சேன் .ஆனா எந்த ஸ்வரத்துக்கு எங்க இழுக்கனும்ங்கறதெல்லாம் மறந்து போச்சு .

விஜயதசமி எப்பவுமே ஸ்பெஷல் .அன்னைக்கு கண்டிப்பா புதுப்பாட்டு பழகணும் .பழசு பாதில நின்னாலும் கூட .கண்டிப்பா வரவீணாவும் ,விநாயகா நின்னுவும் வாசிக்கணும் .அன்னைக்கு ஆண்ட்டி வீடே அலங்காரம் பண்ணி ஜேஜேனு இருக்கும் .எல்லா ஸ்டூடன்ட்ஸும் கண்டிப்பா வருவாங்க. .எல்லாருக்கும் ஆசீர்வாதம் உண்டு .அத்தனைக்கும்  மேலா அவங்க அன்பும் வாஞ்சையும் மறக்கவே முடியாதது .Miss you Aunty ...

🎶🎶 அந்த நாளும் வந்திடாதோ ....🎶🎶