Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Wednesday, 22 October 2025

வானிலை அறிக்கை




மழை பெய்யும்

என்று சொன்னீர்கள் ,

குடையோடு சுற்றிக்கொண்டிருந்தோம் .

மழை பெய்யாது என்று சொன்ன நாளில் ,
கொட்டிய மழையில் நனைந்தோம்.
ஏதேனும் ஒருநாளில்
நீங்கள்
பெய்யும் எனும்போது
பெய்கிறது மழை.

Tuesday, 30 August 2016

மீண்டும்

                                                  Image result for watching rain  paintings


ஏதோ ஒரு நாளின் காதல்
சற்றே  பூவின் வாசம்
எதற்கோ வந்த கோபம்
காரணமில்லா புன்னகை
தேநீர் குவளையின் சூடு
நனையும் மண்ணின் வாசம்
எல்லாம்  தேடி வந்து
என் வாசலில் கொட்டித்தீர்த்தது
மழை
மழை போன பின்னும்
அவை வழிந்து கொண்டே இருக்கின்றன
ஜன்னல் கம்பிகளிலும்
தாழ்வாரத்திலும்
என் விரலிடுக்குகளிலும்
இன்னும் பிறவிலும்

Sunday, 8 November 2015

மழை








பல நாள் சென்று
இன்று வந்தது
மழை


சாரல்  போல
எங்கோ
சில துளிகள்
எனாமல்

வானம் சுருக்கி
இடி மின்னல்
என பெருமழையாய்

எனை காணவென
இன்று
வந்தது மழை

என்ன கொண்டு வந்தாய்
எனை காண என

வேறு எதை கொண்டு வரவென
தலை கோதி
கன்னமிழைத்து
எனை கொண்டு தந்தேன்
என்றது
மழை

Friday, 4 July 2014

இன்னொரு நாளில்



வருவாயோ என்றேன்
வரலாமே   என்றது
வரலாம்  என்றேன்
வருவேன்  என்றது
என்றோ என்றேன்
இன்னொரு  நாளில் என்றது
இன்னும் ஒரு  நாளிலோ  என்றேன்
ம் ..பின்னர்  ஒரு நாளில் என்றது
பல நாள் போனது என்றேன்
இன்னமும் சில போகட்டுமே என்றது
நாள் நில்லாதே என்றேன்
செல்லட்டுமே என்றது
பொல்லாத்தனம் என்றேன்
பொல்லாதவள் என்றது
சொல்லால் அயர்ந்து
சுணங்கிக் கிடந்தேன் ...
இடியாய் மேளதாளம் கொட்ட
நான் நினையாத ஒரு நாளில்
என் வாசல் வந்து
சதிராடிச் சென்றது
மழை 

Wednesday, 10 July 2013

மழை





ஏதுமில்லா
ஒற்றை இரவில்
விழித்தே கிடந்தேன் நான்
கண்மூட மறுத்து
சோம்பலில் சுகித்திருந்தேன்
வேடிக்கை பார்த்திருந்தது
வெறுமை


கருத்திருந்தது வானம்
கண்சிமிட்டி  காணாமல் போயின
நட்சத்திரங்கள்
என் தலை வருடிக்  கடந்தது
நிலா
என் கன்னம் கிள்ளிப் போனது
காற்று


இன்னமும்  விழித்திருந்தேன்
பிடிவாதமாய்
கண்டிப்பதாய் வந்து போனதொரு
மின்னல்
பெருமூச்செறிந்து அகன்றது
காற்று


கனவுகள் அமர்ந்து
இமை அயர்ந்த நொடியில்
ஜன்னல் ஓரமாய் எட்டி
விளையாட்டாய் நீர் தெளித்து
உறக்கம் கலைத்து
இரவெல்லாம் என்னுடன் கதைத்திருந்தது
மழை



 

Wednesday, 26 September 2012

மழை

                                                            



தூர தேசமொன்றில்
தொலைந்து போயிருந்தேன் நான்
பெயர் அறியாத தெருக்களில்
உலவித் திரிந்தேன்


யார் இவள்  என
கிசுகிசுத்து  போனது காற்று
முகம் காண
வந்து போனதொரு மின்னல்


ஆதரவாய் கூந்தல் வருடிப்
போனதொரு மலர்
எவளோ  என கடந்து
போயினர் பலரும் 


யாரும்  இல்லாமல்
முகவரியற்று
நான் போன
அந்நாளில்


தேடி வந்து 
என் தோள் பற்றி
நானிருக்கிறேன் என
கரம் சேர்த்து 
என்னுடன் நடந்தது
மழை ......




Sunday, 2 September 2012

மழை







வெயில் தகித்த ஒரு கடும்நாளில்
எதிரெதிராய்  வீதியில்
நானும் வெயிலும்


கண் எரித்து
முகம் கருக்கி
பாதம்  சுட்டு
எக்காளமாய்
என் தாடை சுடும்
பொல்லா வெயில்


கண் மறைத்து
நிலம் நோக்கி
வியர்வை குளித்து
தாகித்து   நான் ....
இன்னும்  கிட்டத்தில்
எனை சாடும் வெயில்


என் தவிப்புணர்ந்து
வந்து
சடசடவென பொரிந்து
வெயில் விரட்டி
வியர்வை களைந்து
சட்டென என் முகம் மறைக்கும்
குடையாய்
மழை



Saturday, 25 August 2012

மழை





இன்றிரவில் 
என் வாசல் வந்து நின்றது மழை
யாசிப்பதாய்  பாவித்து ....

காணாதது போல் நான் இருக்க 
படிதாண்டி மெல்ல 
கூடம்  தொட்டு 

என் வழியெங்கும் 
முத்துக்கள் 
கொட்டி 

செல்லமாய் 
சாளரம் வழியே 
என் கன்னம் வருடி 

ஏதோவென்று 
நான் இருக்க 

பொய்க் கோபத்தில் 
 படபடவென்று  
மொட்டை மாடி ஏறி 
என் துணிகள் நனைத்து 

துணி எடுக்க 
தவிப்புடன் நான் ஓட    
என் கரம் பற்றி  
ஹோவென சிரிக்கும் மழை ......  







Tuesday, 7 August 2012

மழை







வெகு நாட்களாக மறந்து போயிருந்தேன் 
மழையை நான் 

எங்கோ தூர தேசம் போயிருக்க வேண்டும் 
என்று எண்ணியிருந்தேன் ..

எவர் ஊர்களிலோ தன்னை  மறந்து 
அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் ..

வெறும்வானம் பரிகசித்த சில நாளில் 
கோபித்தே  இன்னமும்  மறந்து போனேன்  

நான் 
எனை  வெறுத்த ஒரு நாளில் 
செல்லமாய் 
என் தலை தட்டி 
கண் மூடி 
கன்னம் தொட்டு 
நான் 
என்றது  மழை  ..........









Thursday, 2 February 2012

மழைப்பாடல்

மழை உங்களை முத்தமிடட்டும்
மழை உங்கள் நெற்றியில்
வெள்ளி நீர்த்துளிகள் கொண்டு தாளமிடட்டும்
மழை உங்களுக்கொரு தாலாட்டு பாடட்டும் .....
மழை நடைபாதைகளில் நடவா குளங்களை தேக்குகிறது
மழை சாக்கடைகளில் ஓடும் குளங்களை ஆக்குகிறது
மழை ,இரவில் ,எங்கள் கூரை மீட்டி
இனிய இரவுப் பாடலொன்றை இசைக்கிறது
அதோடு ,
மழையை நான் காதலிக்கிறேன்

 

 

April Rain Song

Langston Hughes

Let the rain kiss you
Let the rain beat upon your head with silver liquid drops
Let the rain sing you a lullaby
The rain makes still pools on the sidewalk
The rain makes running pools in the gutter
The rain plays a little sleep song on our roof at night
And I love the rain.

Friday, 30 December 2011

மீண்டும் மழை

மழை வெறித்திருந்த  சில நாளில்
சில்லென்றே  இருந்தது   வானம்
தாகம் தணியாமல்
அலைந்து கொண்டிருந்தன  தெருக்கள்
எங்கோ ஒளிந்திருந்தன  
பெரும் திரளான மேகங்கள்
சிறகுலர்த்திக் கொண்டன  
காகங்கள்,
வாடிப்போயிருந்தோம்
நானும் செடிகளும் ......
வானம் பார்த்தே காத்துக் கிடந்தோம்
சில சாபங்கள் சொல்லி .
மனமுணர்ந்து
என் முகம் துடைத்து
நான் பெய்யென பெய்தது
மாமழை ......
படம் :நன்றி Google images

Friday, 25 November 2011

மழை






ஏதுமில்லா வெறும் வானம்
உற்றுப்பார்க்க ஒன்றுமில்லாமல் ...
எங்கோ கைகாட்டும் சில நட்சத்திரங்கள்
அரை மனதாய் நிலா
கால் நீட்ட நாற்காலி
பிசுபிசுத்த செய்திகள்
போகாத பொழுது
ருசிக்காத உணவு
செய்ய ஏதுமில்லா அந்த
வெற்று பொழுதில்
எங்கிருந்தோ ......
வானம் பிரட்டி
கருமை பூசி
மேகம் நிறைத்து
என் உயிர் எழுப்பி
நா நனைத்து
தேனென இனித்தது மழை

Friday, 4 November 2011

மழை

                                      
                                                                         
வெயில் களவாடிப்  போயிருந்தது
என் மழையை .....
மேகங்களுள்
அதை பதுக்கி வைத்திருக்கக் கூடும்
ஒருவேளை மலைகளின்
பின்னால் கூட ....




காண சகியாமல்
கண்மூடி பயணிக்கிறேன்
என்னைப் பார்த்து
எக்காளமாய் சிரிக்கிறது வெயில்
எங்கென தேடுவாய் என
ஏளனம் செய்கிறது

மலை ஏற முடியாமல்
மேகம் எட்ட வழியின்றி
மின்னல் வரும் திசை பார்த்து
காத்துக் கிடக்கிறேன்
ஒரு துளியேனும் ... என
ஏக்கம் சுமக்கிறேன்

எவர் சொல்லி தெரிந்ததோ...
என் குறிப்புணர்ந்து
இடியால் மேகம் இளக்கி
என் கைப்பற்றி
பெரும் பிரவாகமாய்
பொழிந்தது
என் பூமியெங்கும் மழை....

Monday, 31 October 2011

மழை

                                                              





இந்நாளில் ,
என்னுடன் கண்ணாமூச்சி
விளையாடுகிறது மழை
மேகங்களுள் ஒளிவதும்
வெளியே தெரிவதுமாக ...

மின்னலென சிரித்து
பரிகாசம் செய்கிறது
வானவில்லை அழித்துவிட்டு
அழுவதாக நடிக்கிறது

குடைக்குள் ஒளிவதும்
வெளியே வருவதுமாக
கண்ணாமூச்சி விளையாடுகிறேன்
மழையுடன் நானும்

நான் ஏமாந்த
பொழுதொன்றில்
ஹோவென சிரித்து
என்னை இறுகப் பிடித்தது மழை

சினந்ததாய் போக்குக் காட்டி
சிலிர்த்து நனைகிறேன்
கால்வரை கிச்சலம் காட்டி
கண்ணைக் கட்டுகிறது

"மழை பொழிந்து கொண்டே இருக்கும்"
எங்கோ பாடுகிறது
எவரின் வானொலியோ ..
உடல் ?
அட ,நனைந்து கொண்டே தான் இருக்கட்டுமே !



படத்திற்கு நன்றி :http://photobucket.com/images/girl+in+rain/

Tuesday, 25 October 2011

மழை








உரத்த குரலில்
என்னை அழைக்கிறது மழை
சின்ன தூறலாய்
சிணுங்கிப் பார்த்து  
பெரும் துளியாய்
செல்ல சண்டை செய்து
பெரிய மழையாய்
இப்போது
கோபம் காட்டுகிறது .

எது செய்வதென்று தெரியாமல்
தவிக்கிறேன் நான் ...
கதவடைத்து காது பொத்தி
காணாதது போலிருக்கிறேன்
ஜன்னலில் ஆங்காரமாய்
அடிக்கிறது மழை .
தேநீர் கோப்பையுடன்
கவனியாதது போலிருக்கிறேன்
படி தாண்டி வருவேனென
அழிச்சாட்டியம் செய்கிறது.

உரத்த குரலில் அழைத்தபடியே
இன்னமும்
பெய்து கொண்டே இருக்கிறது மழை .
இனி தவிர்க்க முடியாதென
கதவை திறந்து
தெருவில் வந்து
தயக்கமாய் கால் நனைக்கிறேன்
ஜில்லென பாய்ந்து
என்னை ஆலிங்கனம் செய்து
உச்சி முகர்ந்தது  மழை ....




படத்திற்கு நன்றி :http://www.ghulmil.com/latest-animated-fantasy-wallpapers/animated-3d-girl-in-rain-wallpaper/