Tuesday, 22 October 2013

hymenoplasty (ஹைமெனோபிளாஸ்ட்டி ),வஜைனோபிளாஸ்ட்டி (vaginoplasty) ,இன்ன பிற
நேற்று இந்தியா டுடேயின் (India  today  )தமிழ் பதிப்பு படிக்க நேரிட்டது .இதில் சமீப காலங்களில் தென்னிந்தியாவில்   hymenoplasty  எனப்படும் கன்னித்திரை மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை மேல் தட்டு பெண்களிடம் பரவலாகி வருவதாக சொல்லப்பட்டிருக்கிறது .இதை பற்றிய கருத்தாய்வாக பாவிக்கும் இந்த கட்டுரையில் இதை எந்த மருத்துவமனைகளில் செய்கிறார்கள் ,எவ்வளவு செலவாகிறது ,ரகசியமாக செய்து கொள்ளலாம் போன்ற விரிவான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன .

அதோடு அல்லாமல் ,திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழந்த பெண்களுக்கு இது ஒரு பாதுகாப்பு உணர்வு தருவதாகவும் அவர்கள் திருமண வாழக்கையை எதிர்கொள்ள உதவுவதாகவும் சொல்கிறது கட்டுரை .படம் முழுதும் மதுவை ஓட விட்டுவிட்டு இறுதியில் குடி குடியை கெடுக்கும் என்று  சொல்லும் படங்களை போல ,கன்னித்திரை  உடலுறவு அல்லாது வேறு காரணங்களாலும் கிழியக் கூடும் என்பதை லேசாக சொல்லிப்போகிறது .இதில் விருந்தினர் பக்கத்தில் "குட்டி ரேவதி "-பெண்களில் உடல் ஆண்களின் உரிமை போல பாவிக்கப்படுகிறது என்பதை சாடியிருக்கிறார் .


சமுதாயத்தில்  எல்லா நிலைகளிலும் பெண்கள்  வெவ்வேறு  தருணங்களில் வெவ்வேறு  மனிதர்களிடம் தங்களுடைய தூய்மையை,கற்பெனப்படுவதை நிரூபணம் செய்து கொண்டே  இருக்க வேண்டியிருக்கும்  சமூக சூழலில் ,ஊடகங்கள் பெண்ணியம் ,empowerment என்ற பெயரில் தொடர்ந்து பெண்களை எழ விடாமல் மிதிக்கும் பணியை செய்து கொண்டே இருக்கின்றன .

ஆளே  தெரியாமல் நகை அணிந்து வெட்கப்படும் மணப்பெண் ,மணப்பெண் தோழியர்,சகல உடல் பகுதிகளையும் வெண்மையாக்கும் கிரீம்கள் தொடங்கி பெண் அழகிற்கும் விளம்பரத்துக்கும் உடல் இச்சைகளில் தேவைக்கும் மட்டுமே ஆனவள் அல்லது அவற்றிக்கு முக்கியத்துவம் தர வேண்டியிருப்பவள் என்று மறைமுகமாக  சொல்லிக்கொண்டே இருக்கின்றன இவை .அது மட்டும் அல்லாமல் இது மேல்தட்டு பெண்கள் செய்வது என்பதை அடிக்கோடிட்டு மேல் தட்டாக மாற விழையும் இன்றைய பொருளீட்டும் நடுத்தர வர்க்கத்தை வியாபார சந்தையாக்கும் முயற்சிகளே இவை . இன்றைய வியாபார சந்தையில் பெரும் மூலதனமும் வியாபாரப் பொருளும் பெண் தான் .1.திருமணம் செய்யும் ஆணுக்கு பெண் மேல்  இல்லாத நம்பிக்கையை ஒரு உடல் உறுப்பு மட்டும் தரக்கூடும் என்றால் இந்த திருமணம் என்பது எத்தனை ஒரு அபத்தமான உறவாக இருக்கிறது?

2.எந்த விளிம்பிற்கும்  சென்று இதை நிரூபிக்கும் தேவை தான் என்ன ?

3.முதலிரவில் இதன் மூலம் தங்கள் கற்பை நிறுவும் பெண்கள் வாழ்நாள் முழுதும் எதை கொண்டு அதை நிரூபித்து கொண்டு இருப்பார்கள் ?

4.சிகிச்சை செய்து கொண்டவளோ என்று ஆணுக்கு சந்தேகம் வந்தால் இந்த பெண்கள் செய்யப்  போவது என்ன ?

5.இந்த கட்டுரையில் ஒரு மறுமணம் செய்த  பெண்ணை கணவனே இந்த சிகிச்சைக்கு அழைத்து சென்ற அதி நவீன தகவலும் பகிரப்பட்டிருக்கிறது .இதன் அடிப்படை ஆண்களின் உடல் தேவைகளை நிறைவேற்றுவது தான் மனைவியின் கடமை என்பதை வலியுறுத்துவது தான் .கட்டுரையில் வரும் கணவன் போல எல்லா ஆண்களும் அவ்வப்போது தங்கள் மனைவியரை கன்னியராக மாற்ற முயற்சி செய்தால் ,நடக்கப்போவது என்ன ?
 
பெண்கள் முன்னேறியதாக தோன்றும் ஒவ்வொரு கால கட்டத்திலும் சமூகத்தின் ஆணாதிக்க கட்டமைப்பு அவள் ஆணுக்குரியவள் என்றும் கற்புடையவளாக   இருக்க வேண்டியவள் என்றும்  நேரிடையாகவோ மறைமுகமாகவோ அவளை கற்பு என்ற விலங்கு  பூட்டி கட்டிவைக்க முற்படுகிறது .எங்கு பறந்தாலும் கற்பு என்னும் கல்லை கழுத்தில் கட்டிக் கொண்டே பறக்கிறாள் பெண் .கருத்தாய்வு ,கருத்து கணிப்பு என்ற போர்வையில் ,படிப்பும்  பொருளாதாரமும் பெண்களுக்கு தந்திருக்கும் சுதந்திரத்தை மடை மாற்றும் முயற்சிகளே  இவை .

இந்தியா டுடேவிற்கு வன்மையான கண்டனங்கள் .Saturday, 12 October 2013

இன்று
இன்று போலவே இருந்தது நேற்றும்
இன்றும் மாறாது , நாளையும் கூட


நேற்றில் இன்று
தான் புதிதென பாவித்து
ஜோடனை செய்தபடி இருந்தது

இன்றாகி
ஜோடனைகள் கலைத்த போது
நேற்றாகி இருந்தது இன்றும்
நேற்றைய நாளையும் 


இன்றும்
நாளை வேறென 
கட்டியம்  சொல்லியபடி இருக்கிறது
நாளை  விளங்கித்தான்   போகும்
இது வெறும் நேற்றென


நேற்றும் இன்றும் நாளையும்
இன்றே என்றது இன்று


இன்றே என்றும் என்றால்
தினம் வேறொன்றாக
ஒப்பனைகள் எதற்கென 

ஒப்பனைகள் எனக்கில்லை என
என் ஒப்பனைகள்
கலைத்தபடி கடந்து போனது
நாளையாக