Tuesday, 16 June 2009

அதே 32 கேள்விகள்

இந்த 32 கேள்விகள் சங்கிலியில் என்னையும் இணைத்துவிட்ட சகோதரர் ரிஷானுக்கு நன்றி


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?
இந்த பெயர் என் அப்பாவின் நீண்ட நாள் கனவு .என் அம்மா எனக்கு பத்ரா என்றும் என் பாட்டி எனக்கு லிங்கேஸ்வரி என்றும் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம் .ஆனால் சொல்ல இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தாக தெரியவில்லை .என் பெயரின் அழகை நான் சிறு வயதில் உணரவில்லை (ஸ்டைலாக இல்லை என்று வருந்தியிருக்கிறேன் ).உணர்ந்ததிலிருந்து பிடித்துப் போனது .

பெயர்க்காரணம் இங்கே :
http://poongulali.blogspot.com/2008/08/blog-post.html

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பொசுக்கென்று நான் அழுவதாக சொல்வார்கள் ...அழுது ஒரு நாள் ஆகிவிட்டது .

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
சிறு வயதில் என் கையெழுத்தைக் கண்டு என் பெரியப்பா ஆனந்த கண்ணீர் சிந்தியிருக்கிறார் ."டாக்டர் கையெழுத்து மாதிரி இல்லாம தெளிவா இருக்கு" என்று பாராட்டு பெறுகிறது என் கையெழுத்து .பிடிக்கும் எனக்கு


4. பிடித்த மதிய உணவு என்ன?
அம்மா வைக்கும் மீன் குழம்பு


5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?
பார்த்தவுடன் சிரித்து வைப்பேன் .ஆனால் நட்பாக அவகாசம் தேவைப்படுகிறது .


6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
திருச்செந்தூர் கடலில் ஒரு தடவை குளித்து திக்கு முக்காடிப் போனேன் .அதிலிருந்து கடல் குளியல் என்றாலே வெறுப்பு தான் ."குத்தால அருவியிலே குளிச்சது போலிருக்குதா ?"அருவி குளியல் அதுவும் குற்றாலக் குளியல் போல சுகம் வேறு இல்லை .

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?
உடல் மொழியை


8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?
பிடித்தது -பலரிடமும் அன்பாக பழக முடிவது
பிடிக்காதது -சோம்பல்

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?

பிடித்தது -கடின உழைப்பு
பிடிக்காதது -முன்கோபம்


10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?
எப்போதும் அம்மா மடியிலேயே இருக்க முடியாததற்கு வருந்துகிறேன்


11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
பச்சை நிற சுரிதார்


12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
என் அறையில் ஏ .சி யின் சத்தத்தை மட்டும்


13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?
வெளிர் நீலம்


14. பிடித்த மணம்?
மல்லிகை


15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?
சாந்தி -http://punnagaithesam.blogspot.com/
இணையத்தில் அறிமுகமாகி நல்ல தோழியாகிப் போனவர் .எனக்கு சொந்தமாகவும் இருக்கக் கூடும் .எல்லோரிடத்தும் நல்லதையே காண்பவர் .
செல்லமாக "தலைவி "


துரை -கவிதைகள் http://duraikavithaikal.blogspot.com/
நாட்டு நடப்புகளை கவிதையில் அள்ளி வருபவர் .கடைசியில் டிவிஸ்ட்டோடு முடியும் இவர் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும் எனக்கு .16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு
கவிதைகள் .உணர்வுகளை வார்த்தைகளாக சொல்வது சுலபமில்லை .ஆனால் இவர் கவிதைகளில் உணர்வுகள் வார்த்தைகளுள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றன .நான் முதலில் படித்த இவரின் கவிதை "எலும்பு கூட்டு ராஜ்ஜியங்கள் ".அன்றிலிருந்து இந்தக் கவிஞரின் ரசிகையாகிப் போனேன் .

17. பிடித்த விளையாட்டு?
குறுக்கெழுத்து ,பிஞ்சிங் த நோஸ்

18. கண்ணாடி அணிபவரா?
வருத்தத்துடன் சிறிது காலமாக .


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மனதை அதிகம் சிரமப்படுத்தாத படங்கள் ....
மிகவும் பிடித்த படம் "எங்க வீட்டுப் பிள்ளை "


20. கடைசியாகப் பார்த்த படம்?
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் ......காசை தெண்டம் பண்ணிட்டோமே என்ற வேதனையுடன்


21. பிடித்த பருவகாலம் எது?
மழைக்காலம்


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
எப்போதுமே திரும்பத் திரும்பப் படிப்பது பிரேமா பிரசுரத்தின் "விக்கிரமாதித்தன் கதைகள் "


23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?
வேறு நல்ல படம் கிடைக்கும் போது


24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் - தண்ணீர் விழும் சத்தம்
பிடிக்காத சத்தம்- அதிகமாக இருக்கும் எந்த சத்தமும்


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?
அமெரிக்கா,மனம் என்னமோ வீட்டை தான் சுற்றி வந்தது


26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
கொஞ்சம் எழுத்து ,கொஞ்சம் மேடைப் பேச்சு


27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?
நேரத்திற்கேற்ப ஒரு பொய் பேசுவது

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?
நிறைய குட்டிச் சாத்தான்கள் இருக்கின்றன ,குறிப்பாக
தூங்கிக் கொண்டே இரு என்று சொல்லும் சாத்தான்

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
கொடைக்கானல்

30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?
சீ இவளா ,என்று எவரும் சொல்லாமல்

31.கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
தொலைக்காட்சி பார்ப்பது


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.
ஒரு இனிய பயணம்

Monday, 15 June 2009

தாயிற் சிறந்த .....

ஒரு ஆராய்ச்சிக்காக பாலியல் தொழில் செய்யும் சில பெண்களோடு பணி புரிய நேர்ந்தது .ஆளுக்கொரு கதை இருக்கும் .சில சுவாரசியமாக ,சில வழக்கம் போல .

இவர்களுள் குறைந்த வயதுடைய பெண் ஒருவர் .வயது பதினெட்டு .இவரோடு எப்போதும் வரும் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் .கேட்டால் பக்கத்து வீடு என்று சொல்வார்.


மாதம் ஒரு முறை என பரிசோதனைக்கு வரும் போதெல்லாம் போதையிலேயே இருப்பார் .கேட்டால் ஊரிலிருக்கும் கோவில்கள் பேரையெல்லாம் சொல்லி இல்லவே இல்லை ,தனக்கு அந்த பழக்கமே கிடையாது என்று சத்தியம் செய்வார்.ஒரு முறை பரிசோதனைக்கு வந்த போது ,மிக அதிக போதையில் இருந்தார் .சரியாக பேசக் கூட முடியவில்லை .வீட்டிற்கு அனுப்பி விட்டோம் .

அடுத்த நாள் வந்த போது இதை பற்றி கேட்டு பயன் ஏதும் இல்லை என்பதனால் ,வழக்கம் போல நான் சோதனைகளை மட்டும் செய்து கொண்டிருந்தேன் .நான் ஒன்றும் கேட்காமல் இருந்தது அந்த பெண்ணை உறுத்தியிருக்க வேண்டும் ."என் மேல கோவமா ?"என்றார் மெதுவாக .நான் அமைதியாகவே இருந்தேன் ."நேத்து ரொம்ப குடிச்சிட்டேன் போல .கஸ்டமர் குடிக்கச் சொன்னான் ."

"இப்படியா குடிக்கிறது ?நிப்பாட்டலாமே ,மருந்து மாத்திரை எல்லாம் இருக்கு "என்று கேட்டேன். சிரித்துக் கொண்டார் ,"எனக்கு பதிமூணு வயசிலிருந்து இந்த பழக்கம் இருக்கு .நா பெரிய பொண்ணு ஆன உடனே எங்கம்மாவும் எங்க மாமாவும் கஸ்டமர் கூட்டிட்டு வந்தாங்க .குடிச்சா தான் அந்த வயசுல வலி தெரியாம இருக்கும் ன்னு குடிக்க பழக்குனாங்க .அப்புறம் அப்படியே பழக்கம் ஆயிருச்சி ."உங்கம்மா எங்கே ?"என்று நான் கேட்டதற்கு ,"மாசா மாசம் என்கூட வராங்களே அவங்க தான் எங்கம்மா .இங்க அத சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க .நா சொன்னேன்ன்னு சொல்லிராதீங்க ,"என்று பதில் சொன்னார் .

நான் மீண்டும் ,"குடிப் பழக்கம் விடறதுக்கு வைத்தியம் பாக்கலாமா ?"என்று கேட்க ,"நீங்க நிப்பாட்ட மருந்து குடுப்பீங்க ,நானும் நிப்பாட்டுவேன் .ஆனா வீட்டுக்கு வந்ததும் கஸ்டமர் வருவாங்க ,அப்ப திருப்பி குடிக்க தோணும் ,சரி நானே குடிக்காம இருந்தாலும் கஸ்டமர் கம்பனிக்கு குடிக்க சொல்வாங்க ,அப்ப என்ன செய்யறது ?"


Thursday, 11 June 2009

மிட்டாய்க்காரன்


பீய்ங் பீய்ங் பீய்ங்ங்ங்ங்ங்ங் ...........

இந்த சத்தம் கேட்டதுமே உற்சாகம் தொத்திக் கொள்ளும் நான் சிறுமியாய் திருநெல்வேலியில் இருந்த நாட்களில் .மிட்டாய்க்காரன் வருவதை அறிவிக்கும் ஓசையாக அறிந்துவைத்திருந்தேன் இதை .மிட்டாய்க்காரன் வந்ததும் ஆச்சியிடம் சில்லறையை வாங்கிக் கொண்டு தெருவில் இறங்கி ஓடுவேன் .


தலையில் ஒரு தலைப்பாகை .கையில் ஒரு நீள கம்பு .அதற்கு தலைப்பாகையாய் ஒரு பொம்மை .அதன் கீழ் சுத்தப்பட்டிருக்கும் மிட்டாய் .அதோடு வருகை அறிவிக்கும் அந்த ஒலி .ச்சுயிங் கம் போல பஞ்சு மிட்டாய் நிறத்தில் இருக்கும் இந்த மிட்டாய் .இதை நேர்த்தியாக கொஞ்சம் விசாரிப்புகளுக்கு பிறகு கையில் வாட்சாகவும் ,விரலில் மோதிரமாகவும் ,சில நேரங்களில் காதில் கம்மலாகவும் கூட சுற்றி விடுவார் .பெருமையாக இருக்கும் .வாட்சை மெதுவாக கொஞ்சம் நக்கி, கொஞ்சம் கடித்து என்று தின்பதற்கும் அத்தனை சுவை .


பல வருடங்களாகி விட்டன .நானும் மிட்டாய்க்காரனை இல்லாமல் போய் விட்டதாக கருதி ,மறந்து தான் போயிருந்தேன் .கொடைக்கு சென்ற போது கோவிலுக்கு வெளியே, கூட்டத்தில் ,சுற்றி வரும் சிறுவர்கள் நடுவே ,அட ,மிட்டாய்க்காரனே தான் .

Wednesday, 10 June 2009

கரெண்ட் கொடுங்கள் ??????

ஒரு நாள் காலை ,நான் மருத்துவமனைக்குள் நுழைகிறேன் ,ஒரு பெண் ,என்னை ஓடி வந்து பிடித்துக் கொண்டார் .என் நோயாளி ஒருவரின் சகோதரி இவர் ."என் தம்பி போய் விட்டான் ,போய் விட்டான் "என்று கதறினார் ."இவர்கள் கவனிக்காமல் என் தம்பியைக் கொன்று விட்டார்கள் "என்று குற்றம் சாட்டினார் ,பணியிலிருந்த மருத்துவர் செவிலியர் மீது .


என்னவென்று விசாரித்த போது ,செவிலியரில் ஒருவர் சொன்னார் ,"டாக்டர் ,காலயில ஆம்புலன்சில வந்தாங்க .வரும்போதே அவர் இறந்து போயிருந்தார் .வந்த உடனே கரெண்ட் வைங்க ,கரெண்ட் வைங்கன்னு கத்தினாங்க .இப்ப கரெண்ட் வைக்காததால தான் அவர் இறந்து போயிட்டார்ன்னு சொல்றாங்க ,"என்று சொன்னார் .


நான் தனியே அவரை அழைத்து விசாரித்தேன் .வீட்டில் காலையில் தலை சுற்றுகிறது என்று அவர் தம்பி சொல்லியதாகவும் இவர் ஜூஸ் கலக்கி கொண்டு வரும் முன் மயங்கி விழுந்து கிடந்ததாகவும் .அதன் பிறகு பேச்சு மூச்சே இல்லை எனவும் கூறினார் .அதன் பிறகு ஆம்புலன்சிற்கு போன் செய்து இங்கு அழைத்து வந்ததாகவும் கூறினார் .வீட்டில் இருக்கும் போதே தன் தம்பி இறந்துவிட்டதை தான் உணர்ந்ததாகவும் கூறினார் .


பின்னர் எதற்காக கரெண்ட் வையுங்கள் என்று சொன்னீர்கள் என நான் கேட்டதற்கு ,"சிவாஜி படத்தில் கரெண்ட் வைச்சி இறந்த ரஜினிகாந்துக்கு உயிர் கொண்டு வந்தாங்க தானே ?அதுமாதிரி இங்க வந்தவுடனே செஞ்சிருந்தா ,என் தம்பியும் நல்லாயிருப்பான் ,"என்று சொன்னார் .

பொறுமையாக ,"உங்க தம்பி இங்க வரதுக்கு ரொம்ப முன்னாலேயே இறந்து போய்ட்டார் .அவருக்கு இந்த மாதிரி கரெண்ட் எல்லாம் வச்சி உயிர் கொண்டு வர முடியாது ,"என்று விரிவாக விளக்கம் சொல்லி அனுப்பி வைத்தோம் .

Tuesday, 9 June 2009

என் கொலுசுகள்


தீராத மையல் எனக்கு
என் கொலுசுகள் மேல்
அவை அணியாத கால்களை
காணவே அருவருக்கும் மனம்
கணுக்கால் மறைக்கும் செருப்புகள் கூட
நான் அணிவதில்லை
என் கொலுசுகளுக்கு
மூச்சடைக்கும் என


உரத்த குரலில்
அதிர பேசும் வாயாடிகள் அல்ல
என் கொலுசுகள்
வாயடைத்து போன ஊமைகளும் அல்ல.
செல்லமாய் சிணுங்கி
என் பாதங்களுடன் மோகித்துக் கிடக்கின்றன
என் கொலுசுகள்


என் பாதத்தில் பங்குபெற வந்த
மெட்டிகள் மேல்
பொல்லாத கோபம்
என் கொலுசுகளுக்கு
இன்னமும் அவற்றினிருந்து
ஒரு அடி தள்ளித்தான் கிடக்கின்றன


பட்டுப்புடவை மேல் மட்டும்
என் போலவே
ஆசைதான்
என் கொலுசுகளுக்கும்
எட்டியதை
இழை இழையாய் பிரித்து
உடுத்திப் பார்க்கின்றன


நான் மட்டும் இருக்கும் போது
சிரித்து
என் கால்களில் சறுக்கி விளையாடி
உரிமை கொள்ளும்
என் கொலுசுகள்


நான் புதிதொன்றை
மாற்றும் போதும்கூட
பல்லிளித்து
வருத்தம் காட்டாமல்
விலகிக் கொள்ளும்


என் மேல் தீராத மையல் தான்
என் கொலுசுகளுக்கும்

Monday, 8 June 2009

என்றுமே மக்கள் திலகம்

ஆலடிப்பட்டிக்கு அருகில் இருக்கும் புகழ் பெற்ற மலைக் கோவில் என சொல்லி ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள் .போன நேரம் மதியம் பன்னிரண்டு .கடும் வெயில் .மலைக்கு மேல் ஏறி முருகனை பார்ப்பது பற்றி நினைக்கக் கூட முடியவில்லை .கீழிருந்த ஒரு ராமர் கோவிலில் வழிபட்டு திரும்பினோம் .

அந்த ராமர் கோவிலில் அந்த நேரத்திலும் நல்ல கூட்டம் .வெளியில் முறுக்கு ,ஐஸ் ,அண்ணாச்சி பழம் (இதை தோல் சீவி அழகாய் தந்தார்கள் ,அத்தனை சுவை )இவற்றுடன் சுண்டலும் விற்றுக் கொண்டிருந்தார்கள் .உள்ளே சாமிக்கான அலங்காரத்தில் இளநீர் ,ஈந்தங் குலை போன்றவையும் இடம்பெற்றிருந்தன .

ஒரு பக்கம் ராமர் கதையும் காதில் விழுந்துக் கொண்டிருந்தது .குரலையும் சொல்லும் பாங்கையும் வைத்துப் பார்க்கும் போது திருமுருக கிருபானந்த வாரியாரின் உரையை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றியது .ஆனால் ஒரு பெரியவர் ,(அவரை ஒட்டிய சாயல் கூட )ஒரு நாற்காலியில் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தார் .

அதில் ராமர் ஆட்சியின் பெருமைகளைப் பற்றி சொல்லி விட்டு ,".நீங்கள் ஏதோ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியைப் பற்றி சொல்வதாக எண்ணிக் கொள்ளக் கூடாது . நான் சொல்வது அந்த ஸ்ரீ ராமச்சந்திரனின் ஆட்சியை பற்றி .ஆனால் இந்த ராமச்சந்திரன் ஆட்சியும் அந்த ராமச்சந்திரன் ஆட்சியைப் போல் தான் இருந்தது .அவர் இருந்தப்ப விலை ஏறியதா ,மக்கள் இப்படி கஷ்டப்பட்டார்களா ?
அந்த ஸ்ரீ ராமச்சந்திரனைப் போலவே இந்த ராமச்சந்திரனும் மக்களுக்கு நன்மையே செய்தார் ,"என்று முடித்தார் .

Friday, 5 June 2009

இப்படியும்

முதன்முறையாக சிகிச்சைக்கென வரும் நோயாளிகளிடம் நாங்கள் தவறாமல் கேட்கும் கேள்விகள் இரண்டு .
1.எத்தனை நாட்களாக எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது உங்களுக்கு தெரியும் ?
2.எதற்காக முதன்முறை பரிசோதனை செய்து கொண்டீர்கள் ?


இரண்டாவது கேள்விக்கான அநேகரின் பதில்கள் .
1.உடல்நலக் குறைவின் காரணமாக
2.ஏதோ அறுவை சிகிச்சைக்கென செய்த சோதனைகளில்
3.கர்ப்பமாக இருக்கும் போது
4.கணவனுக்கோ மனைவிக்கோ நோய் இருப்பது தெரியவந்த போது
5.சந்தேகத்தின் பேரில்
இப்படிப்பட்ட காரணங்களையே பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம் .


வழக்கம்போல் ஒருவரை நான் இதே கேள்விகளை கேட்ட போது அவர் சொன்ன பதில் ,"கல்யாணம் நிச்சயம் ஆயிருந்துது .பொண்ணு வீட்டில எச்.ஐ.வி டெஸ்ட் பண்ண பெறகு தான் கல்யாணம்ன்னு முடிவா சொல்லிட்டாங்க .அப்படி பண்ணப்ப தான் தெரிஞ்சிது .ஆனா பொண்ணுக்கு நோய் இல்ல .அதனால கல்யாணத்த நிறுத்திட்டாங்க ."உடன் வந்திருந்த அவர் அண்ணன் சொன்னார் ,"எங்கூரில இந்த நோய் நெறைய பேருக்கு இருக்கு .அதனால நெறைய பொண்ணு வீட்டுல இப்ப இப்படி கேக்குறாங்க "என்று .


ஆச்சரியமாக இருந்தது .இப்படியும் செய்கிறார்களா என .பெண் வீட்டில் செய்ய சொன்னதே ஆச்சரியமாக தான் இருந்தது .அதை விடவும் இவர்கள் செய்ததும் ,செய்த பின் நோய் இருப்பதை பெண் வீட்டில் ஒப்புக் கொண்டதும் ,எல்லாமே ஆச்சரியம் தான் .

Thursday, 4 June 2009

சிலை


வெறும் கல்லெனவே ஈன்றார்கள் என்னை
என் மேல் நோகாமல்
கை நோக செதுக்கினார்கள் பொறுமையாக
சிற்பம்போல் ஆக்கி காத்திருந்தார்கள்
நீ வர ....


அந்நாளில் பார்த்த போது
சிற்பமாகவே தெரிந்தேன் உனக்கும்
எஞ்சியிருந்த துகள்கள் கூட
அழகெனவே சொன்னாய்
அப்போது ...


எது மாறிப் போனதோ
உளி கொண்டு புறப்பட்டாய்,
செதுக்குவதாய் எண்ணிக் கொண்டு
சிதைக்க மட்டுமே செய்கிறாய்.
உடைந்த கற்களாய் உதிர்ந்து கொண்டிருக்கிறேன் நான்...Monday, 1 June 2009

விடை தெரியாத கேள்விகள்இன்று ஒரு இளம் பெண்ணை அழைத்து வந்தார்கள் .வயது பத்தொன்பது .எச்.ஐ.வி நோய்க்கான மருந்துகளை சில வருடங்களாகவே எடுத்துக் கொண்டிருக்கிறாள் .நோய் இருப்பது தெரியுமா என்பது எவருக்கும் தெரியவில்லை .இதை கேட்கவும் தெரியப்படுத்தவும் எவருக்கும் துணிவில்லை .

சிறு குழந்தையாய் இருந்த போது ,ஏதோ அவசர தேவைக்காக தந்தையின் ரத்தத்தை ஏற்றியிருக்கிறார்கள் ,தந்தைக்கு நோய் இருப்பது தெரியாமல் .
அதனால் ,இந்த பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள் .

இது போல் இன்று பல இளைஞர்கள் இருக்கிறார்கள் .கர்ப்பத்தில் தாயிடமிருந்தோ ,இப்படி ரத்தம் மூலமாகவோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் .
இவர்கள் எதிர்காலம் இவர்களின் குடும்பத்தினரை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது .

நோயைப் பற்றி எப்படி சொல்வது ?
எவர் சொல்வது ?
சொன்னால் பிள்ளையால் தாங்க முடியுமா ?
நம்மீது வெறுப்பு தோன்றுமா ?
திருமணம் செய்யலாமா?
செய்யாமல் இருந்தால் சுற்றத்தாரின் கேள்விகளுக்கு எவர் பதில் சொல்வது?

இப்படி நோயுடன் மட்டுமல்ல ,விடை தெரியாத கேள்விகளுடனும் பல பெற்றோர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் .