Tuesday, 30 December 2008

தமிழா ,நீ பேசுவது தமிழா ?

தமிழா!நீ பேசுவது தமிழா?
தமிழா!நீ பேசுவது தமிழா?


அன்னையைத் தமிழ்வாயால்'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...


தமிழா!நீபேசுவது தமிழா?


உறவை 'லவ்' என்றாய்உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியைபார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்விடியாதுன்வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்அறுத்தெறி நாக்கை...


தமிழா!நீ பேசுவது தமிழா?


வண்டிக்காரன் கேட்டான்'லெப்ட்டா? ரைட்டா?
'வழக்கறிஞன் கேட்டான்என்ன தம்பி 'பைட்டா?
'துண்டுக்காரன் கேட்டான்கூட்டம் 'லேட்டா?
'தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


கொண்ட நண்பனை'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியைஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழிசாவது நல்லதா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


பாட்டன் கையில'வாக்கிங் ஸ்டிக்கா
'பாட்டி உதட்டுலஎன்ன 'லிப்ஸ்டிக்கா?
'வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா?
'வெள்ளைக்காரன்தான்உனக்கு அப்பனா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


-உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

Friday, 26 December 2008

என் கோலங்கள்நான் முதல் முதலில் கோலம் போட பழகியது திருநெல்வேலியில் .ஆச்சி வீட்டில் விடுமுறையில் பக்கத்து வீட்டு மீனா அக்கா சொல்லி கொடுத்த சாக்லேட் கோலம் தான் நான் போட்ட முதல் கோலம் .இதன் பின்னர் கிளி ,மயில் என்று படி படியாக முன்னேறி அதில் தேர்ந்தது தனி கதை .


என் பெரியப்பா வீடு சென்னை ராயப்புரத்தில் இருந்தது .இங்கிருந்த குறுகலான தெருக்களில் கோலம் போட நடக்கும் அடி தடிகளை சிறு வயதில் நான் பார்த்ததுண்டு .பெரிய கோலம் போட இடம் கிடைக்காமல் போய் விடும் என்று இரவிலேயே கோலம் போடுவார்கள் .இதில் சண்டை வேறு .எங்கள் வீட்டருகே விசாலமாக இடம் இருந்தது ,கோலம் போடும் ஆர்வம் தான் பலருக்கும் இல்லை .


நான் பள்ளி படித்துக் கொண்டிருந்த போது மார்கழி என்றாலே கோல நோட்டுக்களின் ராஜாங்கம் தான் பள்ளியில் .எல்லோரும் அவரவருக்கு தெரிந்த கோலங்களை பகிர்வது வழக்கம் .இதில் என் தோழி மீனா ,புள்ளிகளுக்குள் சொந்தமாக கோலம் போடுவதில் வல்லவள் .அவள் கண்டுபிடித்த கோலங்கள் இன்றும் என்னிடம் உண்டு .ஆசிரியர் ஒரு பக்கம் பாடம் நடத்திக் கொண்டிருக்க மறைவாக நோட்டை ஒளித்து வைத்து கோலம் போட்ட காலங்கள் அவை .


வீட்டில் மாலை நேரங்கள் முழுவதும் மறு நாள் காலை போடப் போகும் கோலங்களுக்கான ஒத்திகை நடக்கும் . காலையில் ஐந்து மணிக்கு எழுந்து(இப்போதும் இது எனக்கு எப்படி முடிந்தது என்பது ஆச்சரியம் தான் ) நோட்டும் கையுமாக கிளம்பி ,முந்தின நாள் கோலத்தை பல முறை மீண்டும் ரசித்த பின்னர் அரை மனதுடன் அதில் தண்ணீர் தெளித்து, கோலத்தை ஆரம்பித்து ஏழு மணிக்கு முடித்து ...முடித்த பின் ஒவ்வொரு பக்கமாக அதை நின்று அழகு பார்த்து என்று நாள் பூராவும் கோலத்தை சார்ந்தே நகரும் . ஒரு முறை நான் உட்கார்ந்து கொண்டு கோலம் போடுவதை பார்த்த என் பாட்டி கோபித்து ,நின்று தான் கோலம் போட வேண்டும் என்றார்கள் .அன்றிலிருந்து அதையும் பழகி கொண்டேன்.


இதில் அவ்வப்போது என் கோலத்தை பிரமிப்பாக பார்த்து நகரும் பக்கத்து வீட்டு கிருஷ்ணவேணி (இன்றும் பண்டிகைகளில் நான் போடும் கோலங்களுக்கு முதல் ரசிகை) ,எதிர்த்த வீட்டு மோகனா ,பாப்பம்மாள் (எல்லோரும் பணி பெண்கள் ) இவர்கள் எல்லாரும் அன்றைய கோலத்தை பார்த்து விட்டார்களா என்ற அலசல் வேறு . இதெல்லாம் என் பள்ளி காலத்தில் .

அப்புறம் கல்லூரி காலங்களில் பண்டிகை விஷேஷங்களில் மட்டுமே கோலம் போடுவது என்றாகி போனது .இதில் ஒரு பொங்கல் நாளில் நான் போட்ட கோலத்தை என் பக்கத்து வீட்டிற்கு வந்திருந்த வெளிநாட்டு தம்பதியர் சுத்தி சுத்தி வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மறக்க முடியாதது. இதை எதை வைத்து போடுகிறீர்கள் ,இது எப்படி தரையில் ஒட்டுகிறது ,எப்படி அழியாமல் இருக்கிறது என்று கேள்விகள் வேறு .


திருமணத்திற்கு பின் ,என் மாமியார் வீடு மூன்றாவது மாடியில் ,வாசலில் கோலம் போட இடமே கிடையாது .இதற்கு பின் என் அம்மா வீட்டிற்கு சென்னைக்கு வரும் போது மட்டுமே கோலம் போடுவேன் .இதில் ஒரு முறை அம்மா நான் வேறு எங்கோ வெளியில் சென்ற நேரம் பணி பெண்ணை வைத்து கோலம் போட்டு விட ,பெரிய சண்டையே போட்டேன் .கோலம் போட கிடைத்த ஒரே வாய்ப்பும் நழுவியதே என்று .அதோடு ,"ஏம்மா ,நீ போடலையா ?"என்ற கிருஷ்ணவேணியின் விசாரிப்பும் என்னை வருத்தப்படுத்தியது .


இப்போது நான் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் வாசல் என்பது ஏதோ பேருக்கு வீட்டுக்கு முன்னால் இருக்கும் இடம் .பல நாட்கள் ,"இதற்கு கோலம் வேறு தேவையா" என்று கோலம் போடாமல் விட்டு விட்டேன் .இப்போது தான் போடாமலேயே விட்டு விட்டால் மறந்து விடுமே என்று அஞ்சி சில மாதங்களாக சின்ன சின்ன கோலங்களாக போட ஆரம்பித்திருக்கிறேன் ( பழக்கம் விட்டு போய் போன வருடம் பொங்கலுக்கு நான் போட்ட கோலத்தில் இருந்த பெண்ணை பார்த்து என் சின்ன மகன் "அம்மா வாசலிலே பேய் வரைஞ்சிருக்காங்க "என்று சொல்லி என் மனதை உடைத்தது தனி கதை)


வாசலெங்கும் கோலங்களாக பூத்திருக்கும் இந்த மார்கழி நேரத்தில் என் கோலங்கள் நினைவு சுழல்களாக என் மனதில் சுழன்று கொண்டே இருக்கின்றன .

Friday, 12 December 2008

இன்றும்

இன்றும் ஒரு நாளில்
பூக்கும் என் சிரிப்பைஎல்லாம்
அரும்புகளாகவே கிள்ளி எறிகிறாய்


என் வாசல்வரை வந்த வசந்தங்களை
கதவிடுக்குகள் வழியே
விரட்டியடிக்கிறாய்


மகிழ்ச்சிகள் துளிர்த்த போதெல்லாம்
வெந்நீர் ஊற்றி அவற்றை
வேக விடுகிறாய்தப்பி சிதறிய என் முகவரிகள்
சிலவற்றையேனும்
தீயிட்டு அழிக்கிறாய்


எஞ்சிப் போன சில வெற்றுத் தாள்களில்
மீண்டும் மீண்டும் எழுத முயன்று
உயிர் வலித்துப் போகிற நான் .........


காட்டாறாய் உருமாறிஅணை உடைக்கும் போது
நீயும் தொலைந்து போவாயென
இன்றும் அமைதியாய்.....

Thursday, 11 December 2008

தமிழுக்கும் அமுதென்று பேர்


தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

Tuesday, 25 November 2008

வாழ்க்கை துணைநலம்

ஒரு குடும்பத்தின் கதை இது .

புதிதாக சிகிச்சைக்கு வந்தனர் ஒரு தம்பதியினர் .
பேச ஆரம்பிக்கும் முன்னே அழ ஆரம்பித்தார் மனைவி .

தன் கணவருக்கும் (பள்ளி ஆசிரியர் இவர் ) அவருடைய மாணவரின் தாய்க்கும் தொடர்பு இருந்ததாம் (இவர் ஒரு விதவை ) .
நோயுற்று , இறக்கும் தறுவாயில் அந்தப் பெண் இவரை அழைத்து வரச் செய்து ,"எனக்கு எச் .ஐ.வி நோய் உண்டு .இது உன் கணவருக்கும் தெரியும் .என் வறுமை காரணமாக நான் இவரோடு மட்டுமல்லாமல் இன்னும் சிலரோடும் தொடர்பு வைத்திருந்தேன் . இவரை ஆணுறை உபயோகிக்கும் படி கட்டாயப் படுத்தினேன் .இவர் ஒப்புக்கொள்ளவில்லை .ரத்த பரிசோதனையாவது செய்துக் கொள்ள சொன்னேன் .அதற்கும் இவர் சம்மதிக்கவில்லை .உங்களோடு தொடர்பு கொள்வதையாவது தவிர்க்க சொன்னேன் .அதையும் இவர் கேட்டிருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை .இவருக்கு நிச்சயம் எனக்கிருந்த நோய் வந்திருக்கும் .உங்களுக்கும் வந்திருக்கலாம் .கண்டிப்பாக நீங்கள் ரத்த சோதனை செய்து கொள்ளுங்கள் "என்று கூறியதாகவும் அதன் பின்னரே இருவரும் சோதனை செய்ததில் இருவருக்கும் நோய் பாதித்திருப்பது தெரிய வந்ததாகவும் கூறினார் .

என்ன அவலம் .....தன் சுகத்திற்காக தன்னையும் கெடுத்துக் கொண்டு பிறரையும் கெடுக்கும் இவர் போன்றோரை என்ன செய்தால் தகும் .

இறுதியாக அந்த மனைவி சொன்னார் ,"இவர் இறந்து நான் வாழ்ந்தால் ,நான் ஒருவேளை வசதியாக வாழக் கூடும் என்ற கெட்ட எண்ணத்திலேயே இவர் இவ்வாறு செய்திருக்கிறார் ," என்று .

உண்மைதானோ ?

Monday, 24 November 2008

குறை ஒன்றும் இல்லை
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
மூதறிஞர் ராஜாஜி

Friday, 21 November 2008

மங்கையராக பிறந்திடவே ...

"மங்கையராக பிறந்திடவே மாதவம் செய்ய வேண்டும்"


இது நாம் கேட்டுப் பழகிப் போன கூற்று தான் .மாதவம் செய்யவில்லை என்றால் இங்கு மங்கையராய் பிறப்பதும் வாழ்வதும் கடினம்தான் .
பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் குறைவது பற்றியும் பெண் சிசுக் கொலை பற்றியும் எழுதி களைத்தாயிற்று .

இன்று திண்டுக்கல்லில் ஒரு தந்தை தனக்கு மூன்றாவதாகவும் பெண் மகவு பிறந்ததற்காக தற்கொலை செய்துக் கொண்டார் .

ஆண் மகன் வேண்டும் என்ற கட்டாயம் எதற்காக ?எவருக்காக ?


முதல் இரண்டு குழந்தைகளையுமே வளர்ப்பதில் ஆயிரம் சிரமங்கள் இருக்கும் போது இன்னொரு குழந்தையை அது ஆணாகவே பிறந்திருந்தாலும் பெற வேண்டிய அவசியம் என்ன ?

இன்றும் ஆண் பிள்ளை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்ன ?

எந்த பிள்ளையும் காக்கலாம் ,காப்பாற்றாமல் போகலாம் என்ற உண்மை இன்னுமா சிலரின் வீடு வந்து சேரவில்லை ?

குலம் தழைக்க ஆண் பிள்ளை என்று சொல்லிக் கொள்ள நாம் என்ன இன்னும் முடியரசர்கள் காலத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ?


முன்பு வரிசையாக பெண்களை பெற்று விட்டு "போதும் பொண்ணு ","மங்களம்"
என்றெல்லாம் பெயரிட்டு அந்த வரிசையை முறியடிக்கப் பார்த்தவர்களை பார்த்திருக்கிறோம் .மாறுபாடாக இன்று ஒரு தந்தை தன்னை தானே முடித்துக் கொண்டு இதை செய்திருக்கிறார் .

பெற்ற குழந்தைகளையும் மனைவியையும் கை விட்டதோடு அல்லாமல் பிறந்த குழந்தைக்கு தந்தையை விழுங்கியவள் என்ற பாரத்தையும் ஏற்றிவிட்டு .....


http://thatstamil.oneindia.in/news/2008/11/21/tn-father-commits-suicide-after-wife-gave-birth-3rd-famale-c.html

Tuesday, 18 November 2008

மறந்து விடுவோம்


இதயமே மறந்து விடுவோம் அவனை,
இன்றிரவில், நீயும் நானும்
அவனில் துஞ்சிய கதகதப்பை நீயும்
அவன் பொழிந்த ஒளியை நானும்


நீ மறந்ததும் என்னிடம் மறக்காமல் சொல்லிவிடு
உனை தொடர்ந்து நானும் என் நினைவகற்ற வேண்டும்
வேகமாய் செய் ..நீ தாமதித்துக் கொண்டிருக்கையில்
அவனை நான் நினைத்துவிடக் கூடும்


Heart, we will forget him
by Emily Dickinson


Heart, we will forget him,
You and I, tonight!
You must forget the warmth he gave,
I will forget the light.


When you have done pray tell me,
Then I, my thoughts, will dim.
Haste! ‘lest while you’re lagging
I may remember him!

Wednesday, 12 November 2008

பேரரளிப் பூக்கள்


மலையின் சிகரம்தொட்டு மிதந்தலையும் மேகம்
தனியே திரிந்தலைந்தேன் மேகம்போல் நானும்
தங்கக் குவியலாய் கண்முன்னே
விரிந்து கிடந்தது பேரரளிக் கூட்டம்
குளக்கரை நிரப்பியும் மரநிழலில் அடர்ந்தும்
காற்றில் படபடத்து நடனமாடியும்


பால்வீதியெங்கும் பரவிப் பதிந்து
மின்னிக் கிடக்கும் நட்சத்திரங்கள் போல்
எல்லையில்லா நீர்க்கரை ஓரம்
எல்லையும் தாண்டி படர்ந்து கிடந்தன
காற்றின் ஜதிக்கு தலையாட்டும் மலர்கள்
ஒரே பார்வையில் பத்தாயிரம் கண்டேன்


கடலில் மிதந்து அலைகள் ஆடின
மலர்களோ அலைகளை மிஞ்சி ஆடின
இத்தனை களிப்பில் தோழமை கிட்டினால்
கவிஞன் உணர்வுகள் துள்ளாதிருக்குமோ ?
பார்த்தேன்பார்த்தேன்பார்த்துக்கொண்டேயிருந்தேன்
கிட்டிய செல்வங்கள் பற்றி உணர்வில்லாமல்..


பாரங்கள் சுமந்தோ சுமைகள் துறந்தோ
படுக்கையில் என்னுடல் கிடத்திடும் நேரம்
தனிமையின் சுகமாம் மனக்கண் திரையில்
பளிச் மின்னல்களாய் இவை தோன்றி நிறைய
என் உள்ளமும் உவகையில் நிறைந்துபோகும்
பேரரளிப் பூக்களுடன் இசைந்தும் ஆடும்


"The Daffodils" by William Wordsworth

I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,
When all at once I saw a crowd,
A host of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.


Continuous as the stars
that shineand twinkle on the Milky Way,
They stretched in never-ending line
along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
tossing their heads in sprightly dance.


The waves beside them danced;
but theyOut-did the sparkling waves in glee:
A poet could not but be gay,
in such a jocund company:
I gazed - and gazed - but little thought
what wealth the show to me had brought:


For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.

Tuesday, 11 November 2008

கல்விச்சாலை

சென்னை அண்ணாநகர் பெயின்ஸ் பள்ளி என் பள்ளிக்கூடம் .
என் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நான் பயின்றது இங்கே தான் .

நான் முதல் வகுப்பு படிக்கும் போது ஆரம்பிக்கப்பட்டது இந்த பள்ளி .முதல் வகுப்பை கீழ்பாக்கம் பெயின்ஸ் பள்ளியில் படிக்க துவங்கியிருந்தேன் .இந்த பள்ளி ஆரம்பித்ததும் இங்கே மாற்றமானேன் .ஒரு சிறு வீட்டில் இரண்டு மாடிகளில் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே ஆரம்பிக்கப்பட்டிருந்தது .என் தம்பி எல்.கே.ஜி ,நான் ஒன்றாம் வகுப்பு .வகுப்பு என்று சொல்வதை விடவும் அதை அறை என்றே சொல்ல வேண்டும் .நாங்கள் முப்பது பேர் இருந்திருப்போம் என்று எண்ணுகிறேன் .

அடுத்த ஆண்டே என்னோடு என் பள்ளியும் வளர்ந்தது .இப்போது அது இயங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் அழகான கட்டடங்களுடன் பெரிதானோம் .இப்படியே ,நான் வளர என் பள்ளியும் வளர ....இன்று வரை என் வயதே என் பள்ளிக்கும் .

நான் எட்டாம் வகுப்பில் இருந்த போது ,என் பள்ளியின் நிறுவனர் ,"ஜெஸ்ஸி மோசஸ் "அவர்கள் மறைந்த போது அவர் பெயரே பள்ளிக்கும் சூட்டப் பட்டது .
நான் பள்ளிப் படிப்பை முடித்த போது என் பள்ளியும் அதன் முழு வளர்ச்சியை எட்டியிருந்தது .

பள்ளியிலேயே பொதுத் தேர்வு முதலில் எழுதியது நாங்கள் தான் .பத்தாம் வகுப்பு
பொதுத் தேர்வில் முதன்முதலில் நூறு விழுக்காடு தேர்வு பெற்றதும் நாங்கள் தான் .அது மட்டுமல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்பில் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததற்காக தண்டனை வாங்கிய ஒரே வகுப்பும் என்னுடையது தான் .

இன்னும் பல சொல்லக் காத்திருக்கிறேன் ...

Friday, 7 November 2008

தேவுடா !தேவுடா ! ஏழுமலை தேவுடா !

வேண்டுவோருக்கு பொன்னும் அருளும் கொட்டிக் கொடுக்கும் ஏழுமலையான் சார்ந்த செய்தி இது .


இங்கு சில அபிஷேகங்களும் பூஜைகளும் இன்னமும் முப்பது வருடங்களுக்கு முன்பதிவு செய்யப் பட்டுவிட்டனவாம் .இதனால் இதிலும் எதிலும் போலவே "தக்கல்" முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது .இந்த முறைப்படி ரூ.ஐம்பது ஆயிரம் கட்டி அதனோடு உங்களுக்கு தேவஸ்தான உறுப்பினர்கள் இன்னமும் சில அதிகாரிகள் போன்றோர் சிபாரிசும் இருந்தால் உங்களுக்கு இந்த சேவைகளில் முன்னுரிமை வழங்கப்படும் .


என்ன நம்பிக்கையில் இந்த முன்பதிவுகள் செய்யப் படுகின்றன ?


அதிக பணம் வசூலிப்பதற்காக சில இடங்கள் காலியாக வைக்கப்படுகின்றனவா ??

எதற்காக ஒரு வழிபாட்டு தலத்தில் பணம் சார்ந்த இத்தனை பேதங்கள் ???
வாசலிலிருந்து சேவைகள் வரை ....

பணத்திற்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் இங்கு இத்தனை தூரம் முன்னுரிமை கொடுக்கப்படுவது ஏன் ?

அந்த ஏழுமலையானுக்கு தான் வெளிச்சம் .....

Thursday, 6 November 2008

தங்கப்பல் தாத்தா


தங்கப்பல் தாத்தா என் பாட்டிவீட்டின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் .பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்று சொல்வதை விட பக்கத்துக்கு வாசல்காரர் என்று சொல்வதே சரியாக இருக்கும் .பாட்டி வீட்டுக்கு வலது பக்க வீடு இவருடையது .பாட்டி வீட்டிற்கும் இவர் வீட்டிற்கும் இடையே இவர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பார் .இவர் வேறு எதுவும் செய்து பார்த்ததாக எனக்கு நினைவில்லை .இவர் பெயருக்கு காரணமான தங்கப்பல்லையும் நான் பார்த்ததில்லை .


சில வருடங்களுக்கு பின்னரே எனக்கு தெரிந்தது ,இவர் என் பாட்டியின் தம்பி என்பதும் இவர் பெயர் ஆறுமுகம் என்பதும் .
என் பாட்டி மிகவும் உடல் நலம் குன்றி இருந்த வேளையில் என் அண்ணன்கள் இருவர் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருந்தனர் .அப்போது பாட்டியிடம் என் அத்தை ,"தம்பி மகன்கள் வந்திருக்கின்றனர் "என்று சொல்லிய போது பாட்டி உடனே கேட்டாராம் ,"நாகூரும் தர்மருமா ?" என்று .தங்கப்பல் தாத்தாவின் மகன்கள் இவர்கள் இருவரும் .என் பாட்டி தன் தம்பி மீது கொண்டிருந்த பாசம் அது .Wednesday, 29 October 2008

பாட்டி

பாட்டியை பற்றிய சுவாரசியமான நிகழ்வு இது .
பாட்டி எங்கள் வீட்டில் எப்போதும் நார் கட்டிலில் ஜன்னல் ஓரம் படுத்திருப்பார் .

ஒரு நாள் காலையில் ,"எவனோ களவாணிப் பய ஜன்னல் பக்கம் வந்து ராத்திரியிலே என் கையை தொட்டான் .நா கதிரவன் தான் படுக்க வர்றான் ன்னு நெனைச்சி ஏலே சின்ன மணி தள்ளி படு ,தள்ளி படு ன்னு சொல்லிகிட்டே இருக்கேன் குதிச்சு ஓடிட்டான் ,"என்றார் .

எங்கள் எல்லாருக்கும் இது ஏனோ ரொம்ப வேடிக்கையாய் இருந்தது .பாட்டி,"ஏதாவது கனவாயிருக்கும் "என்றதுக்கு "ஏளா , எனக்கு தெரியாதா ....." இது பாட்டி .
சரியென துப்பறியும் வேலை பார்த்ததில் ஜன்னல் ஓரம் காலடி சுவடுகள் .பாட்டி சொன்னது உண்மை தான் .


இதில் பயந்துபோன பாட்டி ஜன்னலிலிருந்து இரண்டு அடி கட்டிலை தள்ளி இழுத்த பிறகு தான் தூங்கப் போவார் ."பாசத்தால் திருடனை விரட்டி விட்டார் பாட்டி "என்றும் "கையை தொட்டவன் காதை தொட்டிருந்தா பாமடமாவது கிடைத்திருக்கும் "என்றும் பாட்டியை கிண்டல் செய்து கொண்டிருந்தோம் சில காலம் .

Friday, 24 October 2008

என் சிரிப்பு


என் சிரிப்பை சிறையெடுத்திருக்கிறேன்
இப்போது -
எவர் பொருட்டும்
அது களவு போய்விடக் கூடாதென


அதை நீட்ட நினைப்பவர்களும்
நீக்க நினைப்பவர்களுமாக
பெரும் யுத்தம்
நடந்து கொண்டே தான் இருக்கிறது


என் சிரிப்பை புதைத்திருக்கிறேன்
ஒரு சமயம் -
எவரும் கண்டு விடாமல் இருக்க


பல நேரங்களில்
என் சிரிப்பை மீட்டிருக்கிறேன்
எனை ஆண்ட பல வேந்தர்கள்
ஆணைக்குட்பட்டதாகவே இருந்தது என் சிரிப்பு
அப்போது


காணாமல் போயிருந்தது சில காலம்
வெளியில் தேடி
அலைந்து மெலிந்த பின்
என்னுள் ஓரமாய் ஒளிந்திருந்தது
துணிவை சேர்த்து ஒட்டிக் கொண்டேன்


இப்போது
என் சிரிப்பு எப்போதும்
தேங்கியிருக்கிறது
என் கடைவாய் ஓரங்களில் ..............

Thursday, 23 October 2008

பொழுது புலர்ந்தது

அலைகடலில் கிளம்பிய காற்று
சொன்னது"ஓ பனியே! என் வழி மறைக்காதே!"

கலங்களை கண்டு கூறிச் சென்றது
"இரவும் முடிந்தது ,ஓய்வும் முடிந்தது"


தொலைவில் தெரிந்த ஊருக்குள் விரைந்து
"பொழுது புலர்ந்தது, துயில் களையுங்கள்!" என்றது


தூங்கிய வனத்திடையே இலைகளை தட்டி
"சோம்பல் முறித்து ,ஆர்ப்பரியுங்கள்" என்றது


மடித்த சிறகினை வருடி பறவையிடம்
"விழித்துப் பாடும் வேளை "என்றது


வயல் வெளியெங்கும் ஓடிப் பரவி
"கூவு சேவலே ,இது விடியல் "என்றது


முதிர்ந்து நிற்கும் சோளக்கதிரதட்டி சொன்னது
"தலை தாழ்த்துங்கள்! கதிரவன் ரதம் வரும் நேரம்"


மணி கூண்டிடையே போய் உரக்கச் சொன்னது
"பகலினை அறிவிக்க ஓங்கி ஒலித்திடு "


கல்லறைகள் முத்தமிட்டு ஏக்கமாய் சொன்னது
"இன்னும் வேளையில்லை ,அமைதியாய் உறங்குங்கள் "


DAYBREAK
Henry Wadsworth Longfellow

A wind came up out of the sea,
And said, "O mists, make room for me."

It hailed the ships and cried,
"Sail on,Ye mariners, the night is gone."


And hurried landward far away,
Crying "Awake! it is the day."


It said unto the forest, "Shout!
Hang all your leafy banners out!"


It touched the wood-bird's folded wing,
And said, "O bird, awake and sing."


And o'er the farms, "O chanticleer,
Your clarion blow; the day is near."


It whispered to the fields of corn,
"Bow down, and hail the coming morn."


It shouted through the belfry-tower,
"Awake, O bell! proclaim the hour."


It crossed the churchyard with a sigh,
And said, "Not yet! In quiet lie."

Tuesday, 14 October 2008

பொறையுடைமை ???

என்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண் இவர் .பரிசோதனையின் போது கர்ப்ப வாயில் புற்று நோய் இருப்பது தெரிய வந்தது.இது ஒரு ஆறு மாத காலத்திற்கு முன் .சிகிச்சைக்கு அடையாறிலுள்ள புற்று நாய் சிகிச்சை மருத்துவமனைக்கு அல்லது எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினேன் .

இதன் பிறகு நான்கு மாதங்கள் இந்த பெண் வரவேயில்லை .சிகிச்சைக்கும் எங்கும் செல்லவில்லை .ஒரு முறை மருத்துவமனைக்கு சென்று விட்டு யோசித்து சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு காணாமல் போனார்கள் இவரும் இவர் கணவரும் .யோசித்து யோசித்து நோயும் அதிகமாகி பல முறை சொன்ன பின் இப்போது சென்றிருக்கிறார்கள் சிகிச்சைக்கு ...

Monday, 6 October 2008

பிறன்மனை நோக்காமை

ஆதரவற்று போய் விட்டதால் சிலர் இந்த சமூகத்தில் எத்தனை இன்னல்கள் பட நேர்கிறது ?

இந்த பெண் வயது வெறும் இருபது தான் .தாயும் தந்தையும் சிறு வயதிலேயே இறந்து விட தன் பாட்டி (ஆத்தா ),மாமன்கள் என்று பலரது வீட்டிலும் மாறி மாறி வளர்ந்தவர் .இவர் தம்பி தங்கைகளோ வேறு உறவினர்களிடம் .

பதினெட்டு வயதானவுடன் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.மாப்பிள்ளை
எச்.ஐ.வி நோயாளி .அதுவாகிலும் பரவாயில்லை .இந்த மாப்பிள்ளைக்கு ஒரு அண்ணன் ,ஏதும் வருமானம் இல்லாமல் .நன்கு சம்பாதிக்கும் கொழுந்தனை
கைக்குள் போட்டுக் கொண்டு அண்ணி ,சித்திரவதை செய்ததோடல்லாமல் ,மூன்று மாத கர்ப்பமாக இருந்த போது வீட்டை விட்டு விரட்டியும் விட்டாள் .

இப்போது இந்த பெண் ,கை குழந்தையுடன் வீடு வீடாக சென்று கொண்டிருக்கிறார் .எச்.ஐ.வி நோயும் வேறு தொற்றிக் கொண்டது .ஆத்தாவிடம் குழந்தையை விட்டு விட்டு கூலி வேலை செய்கிறார் .எவர் சமரசம் பேச சென்றாலும் அண்ணியே பேசுவதால் தீர்வு வரவில்லை ...வரப் போவதுமில்லை ....

Wednesday, 1 October 2008

பொம்மைகள்

என் மகனுக்கென
வாங்கியதாய்,
என் வீடு முழுவதும்
கிடக்கின்றன.....
வண்ண வண்ண பந்துகள்
ஓடும் கார்கள்
பேசும் கிளிகள்
பம்பரங்கள்
அம்புகள்
பிளாஸ்டிக் வீடுகள் என
சிறு வயதில்
நான் விரும்பிய
விளையாட்டு பொம்மைகள்

Monday, 29 September 2008

பாட்டி வீடு

என் பாட்டி வீட்டில் என்னை மிகவும் ஆச்சரியப் படுத்தியது அங்கிருந்த கழிவறை தான் .பாட்டி வீட்டிற்கு எதிரில் வீட்டிற்கு வெளியே இருந்தது .உள்ளேயே தண்ணீர் தொட்டி கூட உண்டு .கூரை இருந்ததாக நினைவில்லை .

இதில் என்ன ஆச்சரியம் என்று நினைக்கலாம் .என் அம்மாவின் அம்மா வீடு திருநெல்வேலி டவுனில் இருந்தது .நாகரீகம் சற்று வளார்ந்து விட்டதாகக் கருதக் கூடிய ஊரில் இருந்த அந்த வீட்டில் கழிவறை கிடையாது .கழிவறை என்று பெயரிடப் பட்ட அறையில் ஒரு குட்டி சுவர் இருக்கும் அவ்வளவே .எறும்புகள் மொய்க்கும் .நினைத்தாலே கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது இப்பொழுது கூட .காலையில் ஒரு பெண் வந்து ஒரு தென்னம் மட்டையை வைத்து அத்தனையும் சுத்தம் செய்து ஒரு வண்டியில் அள்ளிக் கொண்டு போவார் .உயிரே இருக்காது அவர் முகத்தில் .பின்பு இப்படிப்பட்ட இழிவான அருவருப்பான பணியை காலம் காலமாக செய்யும் அவருக்கு மனநிலை எப்படி இருக்கும் ?வெட்கக் கேடான விஷயம் இது .ஆனால் அந்த சிறு வயதில் அவரை கண்டாலே
அருவருப்புடன் ஒதுங்கவே தெரிந்தது .


என் பாட்டி வீட்டில் 1965 லிருந்து 1968 குள் கழிவறை கட்டப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன் . ஏனென்றால் அப்போது தான் என் பெரியப்பாவிற்கு திருமணம் ஆகியது .என் பெரியம்மா சென்னையில் வளர்ந்தவர் .பட்டிணத்திலிருந்து மருமகள் வருவதால் இந்த கழிவறையை கட்டினார்களாம் .

Wednesday, 24 September 2008

கண்ணீர்


சில நேரங்களில்
எல்லையற்ற மகிழ்ச்சி என்னுள் பூக்கும் போது
கண்ணீர் என் கண்ணாடி


சில நேரங்களில்
விலா கொள்ளாமல் நான் சிரிக்கும் போது
கண்ணீர் என் கடிவாளம்


சில நேரங்களில்
சிறுதுகள்கள் உள்ளேறி உறுத்தும் போது
கண்ணீர் என் மருந்து


சில நேரங்களில்
இதயத்து சுமை ஏந்தி நான் துவழும் போது
கண்ணீர் என் சுமைதாங்கி


சில நேரங்களில்
துயரங்கள் எனை ஆழ்த்த முயலும் போது
கண்ணீர் என் வடிகால்


சில நேரங்களில்
எவருமில்லா தனிமையில் நான் தவிக்கும் போது
கண்ணீர் என் துணை


சில நேரங்களில்
என்னை மீட்க நான் எத்தனிக்கும்போது மட்டும்
கண்ணீரும் என் ஆயுதம்

Friday, 19 September 2008

துணிவுடைமை

சில நிமிடங்களின் தடுமாற்றங்கள் நம் வாழ்க்கையின் திசைகளை பல வேறாக
மாற்றக் கூடும் .என் நோயாளி இவர் .வயது ஐம்பது இருக்கும் .ஒரு மகன் இரண்டு மகள்கள் .கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக எச்.ஐ.வி. நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .


இவருக்கும் இவர் கணவருக்கும் ஒரே நேரத்தில் தான் ரத்த சோதனை செய்யப்பட்டதாம் .நோய் இருக்கிறது என்று தெரிய வந்ததும் இவர் கணவர் ஊரில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் .நோயுடன் சிறு பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பையும் தன் மனைவி தலையில் சுமத்தி விட்டு.

அவர் சொன்னார் ,"எனக்கு இங்கு மருத்துவமனையில் வந்து பார்க்கும் போது முதலில் பயமாக இருந்தது .பின்னர் இத்தனை பேர் இங்கு வந்து சிகிச்சை செய்து நலமாக இருக்கிறார்களே நாமும் அது போல இன்னும் சில வருடங்களேனும் நம்
பிள்ளைகள் வளரும் வரை உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன் .ஆனால் என் கணவருக்கோ இதெல்லாத்தையும் விட
தனக்கு நோய் இருப்பதும் அதன் அவமானமும் தான் பெரிதாக தெரிந்து விட்டது .எத்தனை நான் தேற்றியும் பலனில்லாமல் இப்படி செய்து கொண்டார்."

வருத்தப்படாதீர்கள் என்று சொன்னேன் .அவர் கூறினார் ,"இன்று எனக்கு இருப்பது வருத்தமல்ல ,கோபம் தான் .தன்னை பற்றி மட்டுமே நினைத்து அவர் தன் முடிவை தேடிக் கொண்டார் .என் பிள்ளைகளை பற்றியோ என்னை பற்றியோ
கவலைப் படவில்லை ."

இன்று தனியாகவே தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார் இவர் .

Monday, 15 September 2008

தோட்டம்


பாட்டிக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உண்டு .இதில் ஒரு பெரிய கிணறும் பம்ப் செட்டும் உண்டு .இதில் குளிக்க சென்ற நினைவிருக்கிறது சிறு வயதில் .

இதில் சில பனை மரங்களும் தென்னை மரங்களும் உண்டு .தன்னால் இயன்ற
வரை பாட்டி இதை மேற்பார்வை செய்து வந்தார் .வீட்டிலிருந்து வெகு தொலைவு நடந்து செல்வது போன்று தோன்றும் முன்பு .சமீபத்தில் சென்ற போது தான் தெரிந்தது அது ஒன்றும் அத்தனை தொலைவில் இல்லை என்பது .
இளநீர் பறிக்க சொல்லி அதை அங்கே வெட்டி குடித்த நினைவும் இருக்கிறது .

இதில் ஒரு பக்கத்தில் என் தாத்தாவின் கல்லறை இருக்கிறது .சில கற்களை அடுக்கி சதுரமாக கட்டப் பட்டது போல் தோன்றும் அது .நான், இதில் என் தாத்தாவை புதைத்துஇருக்கிறார்களோ என்ற பயத்தில்," இதற்கு அடியில் என்ன
இருக்கிறது?" என்று கேட்ட போது என் பெரியம்மா சொன்னார் ,"உன் அப்பா ,பெரியப்பாக்கள் அழுத கண்ணீரை பாட்டிலில் அடைத்து புதைத்தோம் "என்று .

இன்றோ அதே தோட்டத்தில் ,என் பாட்டி ,என் பெரிய அத்தை ,பெரிய பெரியப்பா
என்று நான்கு கல்லறைகள் இருக்கின்றன.குடும்பத்தின் தோட்டம் என்று மட்டும் அல்லாமல் குடும்பத்தின் கல்லறை தோட்டமும் ஆகி விட்டது அது.

வெள்ளிநிலவு

சத்தங்கள் இல்லை அவசரம் இல்லை
வெள்ளிக் காலெடுத்து நிலவும்
இரவைக் கடக்கிறாள்


அங்கும் இங்கும் அவள் பார்வை பட்டதும்
அடவெள்ளி மரங்களில் விளைந்தன
வெள்ளிக்கனிகள்


கூரைகள் மேல் அவள் தொட்டுப் பார்த்து
ஓலைக் கீற்றிலும் வெள்ளிகள்
வேய்ந்து போனாள்


காவலின் களைப்பில் உறங்கும் நாய்க்கும்
அசைவற்ற உறக்கத்தில் நீளும்
வெள்ளிக் கால்கள்


இருளில் ஒளித்த கூட்டில் தெரியும்
வெள்ளி இறகுகள் சுமந்துறங்கும்
வெள்ளை புறாக்கள்


வயலில் திரியும் குட்டி எலிக்கும்
இருட்டில் மிளிரும்
வெள்ளிக் காலும் கண்ணும்


நிலவில் குளித்த
வெள்ளி ஓடையில் மின்னும்
வெள்ளி நாணல்கலுள் வெள்ளி மீன்களும்Silver by Walter de la Mare


Slowly, silently, now the moon
Walks the night in her silver shoon;
This way, and that, she peers, and sees
Silver fruit upon silver trees;
One by one the casements catch
Her beams beneath the silvery thatch;
Couched in his kennel, like a log,
With paws of silver sleeps the dog;
From their shadowy cote the white breasts peep
Of doves in silver feathered sleep
A harvest mouse goes scampering by,
With silver claws, and silver eye;
And moveless fish in the water gleam,
By silver reeds in a silver stream.


Saturday, 13 September 2008

வாழ்க்கை

கருத்த மேகங்கள் இருளை கூட்டும்
இருண்ட கனவில்லை வாழ்க்கை
விடியலை கலைக்கும் சின்னத் தூறல்
கூடும் மேகத்தை விலக்கக்கூடும்

சில பொழுதில் அடர்ந்து சூழும்மேகம்
ஒரு மழையாய் விலகக் கூடும்
சில துளியால் பல மலர்கள் பூக்கும்
நனைவதற்கு அஞ்சலாமோ

நொடிகள் மணிகளாய் மணிகள் நாட்களாய்
வாழ்க்கை கடந்து போகும்
சோகம் மறந்து இன்பம் உணர்ந்து
திளைக்க மறக்கலாமோ

நம் உயிரின் நேசங்களை மரணம் சிலநேரம்
அழைத்துப் போனால் என்ன?
சில சோகத்தின் தாக்கத்தில்
நம்பிக்கை கொஞ்சம் தளர்ந்து போனால் என்ன?

விழுந்த போதிலும் நம்பிக்கை சிறகுகள்
இறகாய் நம்மை தாங்கும்
விழுந்த போதும் வீழ்ந்திடவில்லை
உயிர்த்தெழுந்தே மீண்டும் தோன்றும்

ஆண்மை கொண்டு அச்சம் தவிர்த்தால்
சோதனை வென்றிடக் கூடும்
துயர்களை சுமக்கும் துணிவில் மட்டும்
வெற்றிகள் பிறக்கக் கூடும் .LIFEby: Charlotte Bronte (1816-1855)
LIFE, believe, is not a dream
So dark as sages say;
Oft a little morningrain
Foretells a pleasant day.
Sometimes there are clouds of gloom,
But these are transient all;
If the shower will make the roses bloom,
O why lament its fall?
Rapidly, merrily,
Life's sunny hours flit by,
Gratefully, cheerily
Enjoy them as they fly!
What though Death at times steps in,
And calls our Best away?
What though sorrow seems to win,
O'er hope, a heavy sway?
Yet Hope again elastic springs,
Unconquered, though she fell;
Still buoyant are her golden wings,
Still strong to bear us well.
Manfully, fearlessly,
The day of trial bear,
For gloriously, victoriously,
Can courage quell despair!

Thursday, 11 September 2008

பகவதி பாட்டி
யாரிந்த பகவதி பாட்டி ?
என் தாத்தாவின் பாட்டி .

இவரை பற்றி தெரியாதவர்கள் எங்கள் சந்ததியில் எவரும் இல்லை .
ஆலடிப்பட்டியிலிருந்து தீபத்திற்கு திருவண்ணாமலை செல்லும் பழக்கம் பல வருடங்களுக்கு முன் இருந்ததாம் .அப்படி தன் கணவருடன் வண்டியில் சென்றார் பகவதி பாட்டி .சென்ற இடத்தில தாத்தா எதிர்பாராமல் இறந்து விட ,அவரை அங்கேயே அடக்கம் செய்து விட்டு ஊர் திரும்பினாராம்.


ஊருக்கு திரும்பியவர் தன் வீட்டு மாடியில் குடியேறினர் .ஆனால் அதன் பின்னர் தன் வாழ்நாள் முழுதும் அங்கிருந்து இறங்கவே இல்லை .உடை ,குளியல் ,உணவு என்று சகலமும் அந்த ஒரு அறையிலினுள் தான் .பாட்டிக்கு வேண்டிய சகல பணிவிடையும் அவர் மருமகள்கள் நால்வரும் செய்தனர் .இறந்த பின் தான் அவர் உடல் அங்கிருந்து இறக்கப்பட்டது .


இத்தனை நெஞ்சுரம் கொண்டவராக பகவதி பாட்டி இருந்ததால் ,இந்த பெயர் கொண்ட எவரும் அப்படியே இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது .என் அத்தையின் பெயரும் கூட பகவதி தான் .பகவதி பாட்டியின் கல்லறை ஊரில் உண்டு .நான் அதைப் பார்த்ததாக நினைவில்லை .என் அத்தை ,தான் இறந்த பிறகு
பகவதி பாட்டியின் கல்லறை அருகில்தான் தனக்கும் கல்லறை வைக்க வேண்டும் என்று விரும்பினார்.இடம் தான் கிடைக்கவில்லை . தாத்தாவின் கல்லறை திருவண்ணாமலையில் இருக்கிறதாம் .எங்கே என்று அறிந்தவர்கள் எவரும் இல்லை .

பகவதி பாட்டியை நினைக்கும் போது அவருடைய உறுதியை நினைத்து ஆச்சரியப்பட்டாலும் அவர் மருமகள்களை நினைத்து பார்க்கையில் கொஞ்சம் வருத்தம் தான்.

இவர் குடியிருந்த வீடு என் பாட்டி வீட்டிற்கு எதிரில் இருந்தது .என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன் .பாழடைந்து போய் இருந்த இந்த வீட்டை ஊரில் யாரைக்கேட்டாலும் பய பக்தியுடன் சொல்வார்கள் ,"இது பகவதி பாட்டியின் வீடு "என்று .ஆலடிப்பட்டியின் சரித்திரச் சின்னங்களில் ஒன்றாகவே அது மாறிப் போயிருந்தது .

Wednesday, 10 September 2008

வயலின் இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதன்

மனதை மயக்கும் தன் வயலின் இசையால் இசை நன்கு அறிந்தோரையும் அதிகம்
அறியாதவரையும் ஒரு சேர கட்டிப் போட்ட வயலின் இசை மேதை திரு .குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் காலமானார் .


வயலின் முதல் முதலில் பேசியது இவர் மீட்டிய போது தான் .
பல முறை இவர் நிகழ்ச்சியைப் பார்த்த போதெல்லாம் இவர் வயலினில் பேச்சுக் குரல் கேட்பது போன்றே தோன்றும் எனக்கு .

நெற்றியை மறைக்கும் திருநீறு ,அதில் காசகல குங்குமம் ,கழுத்தை மறைக்கும் நகைகள் என்று தனக்கென்று உடையிலும் தனி அடையாளம் கொண்டிருந்தவர் .

திரை இசைப் பாடல்களை பலரின் எதிர்ப்புகளுக்கு இடையே கர்நாடக சங்கீத மேடைகளில்அரங்கேற்றியவர் .கோமாளித்தனங்கள் செய்கிறார்,சங்கீத மேடையை அவமதிக்கிறார்
என்ற ஏசல்களை மீறி ரசிகர்களுக்காகவே வாசித்தவர் .இவர் அடிக்கடி கூறுவாராம் "நான் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என்று ".
தெய்வம் என்ற திரைப்படத்திற்கு இவர் இசை அமைத்த பாடல்கள் காலத்தை வென்றவை .

இசை உலகம் ,இசையின் எல்லா பரிமாணங்களையும் ஆராயத் துணிந்த ஒரு மாமேதையை இழந்திருக்கிறது .


அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் .Monday, 8 September 2008

நேரமில்லை!

இது எனக்கு மிகவும் பிடித்த கவிதை . இதை என்னால் இயன்ற வரை மொழியாக்கம் செய்திருக்கிறேன் .

Leisureby William Henry Davies

What is this life if, full of care,
We have no time to stand and stare.

No time to stand beneath thebough
And stare as long as sheep or cows.

No time to see, when woods we pass,
Where squirrels hide their nuts in grass.

No time to see, in broad daylight,
Streams full of stars like skies at night.

No time to turn at Beauty’s glance,
And watch her feet, how they can dance.

No time to wait till her mouthcan
Enrich that smile her eyes began.

A poor life this if, full of care,
We have no time to stand and stare.நேரமில்லை!


அட !என்ன வாழ்க்கை இது!
நேரமில்லை! நேரமில்லை !
நின்று எதையும் ரசிக்கவும் நேரமில்லை!


மர நிழலில் இளைப்பாறி
மந்தைகளாய் சில நிமிடம்
வெற்றுவெளியில் விழியை விட்டு வைக்க நேரமில்லை!


பயணிக்கும் பாதையில் விளையாடிய சிறு அணில்கள்
கவ்வி வந்த விதையோடு
தோட்டத்தில் மறைந்துவிட்டால்
எந்த புல்லில் ஒளித்திருக்கும்
என எட்டிப் பார்க்க நேரமில்லை!


சல சலவென்று ஓடி வந்து
நிலம் நிறைக்கும் நீர் மடியில்
இரவில் கொட்டி விட்ட விண்மீன்கள்
பகலில் நின்று பார்க்க நேரமில்லை!


காதல் வீசும் வேல் விழியால் பாவை
ஒரு கணை தான் வீசிப் போக
மறுபார்வையில் சில பதில்கள்
சொல்லி வைக்க நேரமில்லை!


மண்தொட்ட அவள் பாதம்,
நடப்பதே அழகென்றால்
அவை நடனமாடும் அழகுதனை
பார்த்துச் செல்ல நேரமில்லை!


அவள் விழி துவங்கிய புன்னகையும்
கன்னத்தில் வடிந்து வந்து
கடைவாய் ஓரம் தேங்கத் துவங்கும் வரையும்
காத்திருக்க நேரமில்லை!


அட !என்ன வீணான வாழ்க்கை இது !
நேரமில்லை! நேரமில்லை !
நின்று எதையும் ரசிக்கவும் நேரமில்லை !

மக்கள் தொலைக்காட்சி

மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழாவினை சனிக்கிழமை மாலை நேரலையில் ஒளிபரப்பினார்கள் .மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தமிழ் தொலைக்காட்சியை நாமும் வாழ்த்துவோம் .

இன்றைய மற்ற பெருவாரியான தொலைக்காட்சிகளில் இது முற்றிலும் மாறுபாடானதே.

மற்றவை அனைத்திலும் திரைப்படங்களும் தொடர்களும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்க இந்த ஒரு தொலைக்காட்சி மட்டும் திரைப்படங்களை தவிர்த்து வருகிறது.
இன்னும் சிறப்பான ஒரு விஷயம் ..இங்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழிலேயே
சிறிதும் ஆங்கில கலப்பின்றி நடத்தப்படுவது .
இன்று இந்த தொலைக்காட்சியின் வாயிலாக வழக்கில் உள்ள பல பிற மொழி
சொற்களுக்கு தமிழ் சொற்களை அறிய முடிந்திருக்கிறது .

ஒரு கட்சியினரால் நடத்தப் படும் தொலைக்காட்சி என்றாலும் விழாவில் அந்த சாயல் அதிகம் விழவில்லை .விழா நிகழ்ச்சிகளும் சிறப்பாக சிந்திக்கப் பட்டிருந்தன .


தமிழண்ணல் ,ராஜா ,மு.ரா, கவிஞர் சுப்பு ஆறுமுகம் ,நாஞ்சில் நாடன் ,பெரியார்தாசன் என்று பல நல்ல தமிழறிஞர்கள் மேடையில் .
நெல்லை தமிழ் ,குமரி தமிழ் ,கோவை தமிழ்,சென்னை தமிழ் என்று சிறப்பு உரைகள் . இவர்களோடு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ,பத்திரிகையாளர் பகவான் சிங் ,இயக்குனர் அமீர் ,சீமான் என துறை வல்லுனர்கள் வேறு.
அதி முக்கியமான செய்தி ஆளுக்கொரு நிகழ்ச்சி இவர்களுக்கு விமர்சனத்திற்கு
கொடுக்கப்பட்டிருந்தது .அதில் சிலர் குறைகளையும் சுட்டிக்காட்டி பேசவே செய்தார்கள் .

ஆட்டங்கள், தேவையில்லாத ஆர்ப்பாட்டங்கள் என்று கொக்கரிக்கும் தொலைக்காட்சிகள் இடையே இதமான மாறுதல் .நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ,இறுதியில் பேசும் போது சொன்னார் ,"குறை கூற வாருங்கள் "என்று .ஒப்புக்கே சொல்லப்பட்டிருந்தாலும் உயர்வான வார்த்தைகள் .


இந்த விழாவில் என்னை கவர்ந்த சில நிகழ்வுகள் .
பிறரை அதிகம் ஏளனம் செய்யாமல் நடத்தப்பட்டது.
பேசியவர்கள் அனைவருமே தமிழேலேயே பேச முயன்றார்கள் .
உடல் நலம் கருதி சுப்பு ஆறுமுகம் அவர்களை அமர்ந்தே உரையாற்றச் சொன்னார்கள் .
கால விரயம் இன்றி விழாவினை நடத்தியது .
பேச்சாளர்கள் அனைவரையும் மணி அடித்து தங்கள் நேரத்துக்கு மிகாமல் பேசச் செய்தது .

மக்கள் தொலைக்காட்சி தான் ஏற்ற பாதையினின்று விலகாமல் மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் !

Saturday, 6 September 2008

பாட்டி

பாட்டிக்கென்று சில விசித்திரமான பழக்கங்கள் உண்டு .


நான் பள்ளியில் படிக்கும் போது நடந்தது இது .என் வகுப்பு தோழி ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தாள் . என் பாட்டியும் இவளும் ஒரு அறையில் இருந்தார்கள் .திடீரென்று நான் இருந்த அறைக்கு ஓடி வந்த அவள் "உங்க பாட்டி வாய்க்குள்ள அமிர்த்தாஞ்சன் தடவுறாங்க "என்று சொன்னாள் .எந்த வலியானாலும் அதற்கு அமிர்த்தாஞ்சன் தடவும் பழக்கம் இருந்தது பாட்டிக்கு.இந்த முறை அவர் தடவியது பல் வலிக்கு !


பாட்டிக்கு பிடித்த உணவுகளில் முக்கியமானது முருங்கைக் கீரை .எங்கள் வீட்டிலும் ,இரண்டு பெரியப்பாக்கள் வீட்டிலும் முருங்கை மரங்கள்
உண்டு .இதை பறித்து இலைகளை ஆய்வது என்பது கொஞ்சம் சிரமமான ,அனேகர் சங்கடப்படும் வேலை . இதை நன்கு அறிந்ததாலோ என்னவோ ,தனக்கு முருங்கை கீரை சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது பாட்டியே கீரையை பறித்து ஆய்ந்து கொண்டு வருவார் .காலை நீட்டி அமர்ந்து குனிந்த தலை நிமிராமல் மடியில் முறத்தை வைத்துக் கொண்டு ஆய்ந்து முடிப்பார் .சமைப்பதற்கு கஷ்டம் என்று யாரும் சாக்கு சொல்ல முடியாது !இதை சமைக்க முடியாது என்று சொன்னதால் அக்காவுக்கும் பாட்டிக்கும் ஒரு முறை சண்டை கூட நடந்ததுண்டு .

பாட்டி இறந்த நாளில் என் அண்ணன் ஒருவர் சொன்னார் ,"பாட்டியின் ஆவி கண்டிப்பாக இந்த முருங்கை மரத்தில் தான் இருக்கும் "என்று .....

Monday, 1 September 2008

சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து

சென்னையின் இன்றைய முக்கிய அடையாளங்களின் ஒன்றான தியாகராய நகர்
சரவணா ஸ்டோர்ஸில் இன்று தீ விபத்து .ஊழியர்களுக்காக சமையல் நடந்து கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து இந்த விபத்து நேர்ந்ததாக
சொல்லப்படுகிறது .உயிர் சேதம் பொருள் சேதம் பற்றி முடிவான செய்திகள் ஏதும் இல்லை .

ரங்கநாதன் தெரு ,சென்னையின் முக்கிய கடைவீதிகளில் முதன்மையானது .குறுகலான இந்த சந்தில் எப்போதும் பல்லாயிரக் கணக்கான
மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் .இதில் தீ விபத்தோ ,இல்லை
ஒரு நில அதிர்வோ ஏற்பட்டால் சேதங்கள் அதிகம் என்பது மட்டுமல்லாமல்
மீட்பு பணிகளிலும் அதிக சிரமம் என்று பல நேரங்களில் அச்சம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது .புது மேம்பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப் பட்ட போது கூட
அதில் தீயணைப்பு வண்டிகள் நுழைவது கடினம் எனக் கூறப்பட்டது .


இந்த எச்சரிக்கைகளை மெய்ப்பிக்கும் வண்ணம் இன்று தீ விபத்து நடந்தே விட்டது .அதிகாலை நேரம் என்பதால் சேதம் குறைவே .அலுவல் நேரங்களிலோ
மாலையிலோ இந்த விபத்து நேர்ந்திருந்தால் எண்ணிப் பார்க்க முடியாத கோரம்
நடந்து முடிந்திருக்கும் .

சரி நாம் எண்ண செய்ய முடியும் .அடடா ,நல்ல வேளை,அப்பவே சொன்னாங்க என்று வழக்கம் போல் அங்கலாய்த்து விட்டு மறுபடியும் தீபாவளி துணிகள் வாங்க கிளம்ப வேண்டியது தான் .

Thursday, 28 August 2008

பாட்டி

பாட்டி வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்."என் அம்மா எனக்கு நாற்பது கழஞ்சு நகை போட்டாள்" என்று அவ்வப்போது பெருமையாக சொல்வார் .என் தாத்தாவும் வசதியானவர் தான் . ஆனால் பாட்டி தன் திருமணத்திற்கு பின் அறிந்தது கடனும் கடுமையான உழைப்பும் தான் .அத்தனை சங்கடங்கள் நடுவிலும் தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதில் தாத்தாவும் பாட்டியும் உறுதியாக இருந்தனர் .

இத்தனை சங்கடங்கள் சமாளித்த பாட்டிக்கு கொஞ்சம் இருமல் உண்டு .அடிக்கடி தலையெடுக்கும் இதற்கு பயந்து பாட்டி எப்போதும் ஒரு இருமல் மருந்தை வைத்திருப்பார் .அதை தினம், இருமல் உண்டோ இல்லையோ குடிக்கவும் செய்வார் .இது தீரும் முன் புதிதாக வாங்கிவிட வேண்டும் .இல்லையென்றால் கோபம் சற்று அதிகமாகவே வரும் பாட்டிக்கு .இந்த இருமல் மருந்திற்கு துணையாக அரிசியும் பனங் கற்கண்டும் கலந்து வைத்திருப்பார் .அதையும் அவ்வப்போது மென்று கொள்வார் .என் பாட்டியை நினைக்கும் போதெல்லாம் இந்த இரண்டும் எனக்கு தவறாமல் நினவுக்கு வரும் .இன்னொரு கொஞ்சம் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் எல்லா பேத்திகளின் பெயரையும் மாறி மாறிக் கூப்பிடுவார் .என்னை என் அத்தை மகள் கனிமொழி பெயரைச் சொல்லியும் அவளை என் அக்கா பெயரை சொல்லியும் இப்படி .இதனால் எங்களுக்குள் கொஞ்சம் சச்சரவு கூட வந்ததுண்டு .ஆனால் பாட்டி இது எதற்கும் அசந்ததில்லை. இது சம்பந்தமான எங்கள் அங்கலாய்ப்புகள் எதையும் அவர் பொருட்படுத்தியதே இல்லை .


புது காலர் டியூன்

எச் .ஐ.வி நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இப்போது ஒரு புது காலர் டியூன் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது .இது "காண்டோம் காண்டோம் "
என்று ஒலி எழுப்புமாம் .

சரி ,ஏதோ புது முயற்சிகள் வரும்போதெல்லாம் குறை காணுவதா என்று எண்ணத் தோன்றலாம் .ஆனால் இது எந்த வகையில் பயன் தரும் ?விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருக்கும் தன்னார்வலர்கள் வேண்டுமானால் இதை பெருமையாக ஏற்றுக் கொள்ளலாம் .பொது மக்கள் இதை எத்தனை தூரம் ஏற்கக்கூடும் ?

தமிழ் கூறும் நல்லுலகில் இதை "ஆணுறை ஆணுறை "என்று சொல்லும் படி
மாற்றி அமைப்பார்களோ ?

கடையில் சென்று தங்கள் தேவைக்கு ஆணுறை வாங்க தயங்கும் எத்தனையோ
சகோதரர்கள் இதை எவ்வாறு பயன்படுத்துவார்கள் ?
இவர்கள் வாங்கத் தயங்குவது மட்டுமல்லாமல் தங்கள் மனைவியை சென்று வாங்கச் சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .இவர்களுக்கு இது எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறது ?

ஆனால் பயனே இல்லை என்று மொத்தமாக ஒதுக்குவதும் கடினம் தான் .ஏனெனில் ,கடையில் "ஆணுறை வேண்டும்"என்று கேட்கத் தயங்குபவர்கள் இந்த டியூனைப் போட்டுக் காட்டி வாங்க முடியும் தானே !

நடைமுறையில் இருக்கும் எத்தனையோ விழிப்புணர்வு யுக்திகள் இன்னும் பலப் படுத்தப் பட வேண்டும் .இதுவரை இந்த பிரச்சாரத்தில் செலவழிக்கப் பட்டிருக்கும்
பணம் சரியாக பயன் படுத்தப்பட்டிருந்தால் இந்தியாவின் அனைத்து குடிமக்களும் இந்நேரம் விழிப்படைந்திருக்க வேண்டும் என்கிறது ஒரு புள்ளி விவரம் .

Wednesday, 27 August 2008

பாட்டி


பாட்டியின் பெயர் பத்திரகாளி .கொஞ்சம் பயமுறுத்தும் பெயர் தான் .


காதில் தண்டட்டியும் ரவிக்கையில்லா சேலையுமாக பாரதிராஜா படங்களின் பாட்டி போலவே இருப்பார் .நல்ல சிவந்த நிறமாம் .இதில் என் பாட்டிக்கு ரொம்ப பெருமை .தன் நிறத்தை மங்கிக் காட்டக் கூடும் என்று தோன்றிய புடவைகளை கூட அவர் உடுத்தியதில்லை . நான் பார்த்த காலங்களில் சிவந்த நிறத்தை பல சுருக்கங்கள் மறைத்துவிட்டிருந்தது .அவர் கன்னத்தில் இருந்த மச்சமே, அவர் என் அண்டை வீட்டில் ஒருவருக்கு இருந்த மச்சத்தை பார்த்து விட்டு" எனக்கும் இதே போல் உண்டு " என்று சொல்லும் போது தான் தெரிந்தது .மச்சத்தை கூட காலம் சுருக்கங்களில் ஒளித்து விட்டிருந்தது .

அதிக உயரமில்லை பாட்டி .ஆனால் அழகாக இருந்தார் .கத்தையாக முடி, சாகும் வரை இருந்தது (அதில் குண்டு குண்டாக பேனும் கூட ) .அதை எண்ணெய் வைத்து சீவி நுனியில் கொண்டை போட்டிருப்பார்.

பாட்டியை நினைத்தவுடன் நினைவுக்கு வருவது அவருடைய தெளிவு .எந்த மருமகளிடமும் கெட்ட பெயர் வாங்காத சண்டை போடாத மாமியாராகவே இறுதி வரை இருந்தார் .

ஆம் .அமைதியான வைத்தியலிங்க தாத்தாவை வழிநடத்திய சாமர்த்தியமான
பத்திரகாளி இவர் .

Wednesday, 20 August 2008

என் முகம் ?


பிறந்த பொழுதில் இருந்தது
என் முகம்
எனதே எனதாக .


பார்த்துப் போனோரும் பார்க்க வந்தோரும்
அவருக்கு பிடித்தமான சாயங்களை பூசிப் போக
மறு நொடியே மாறிப் போனது ...


வர்ணங்கள் பல தாங்கியும் புதிதாக பூசிக் கொண்டும்
பிறரின் நிறங்களை வியந்தபடி
வலம் வருகிறேன் நான்பல பொழுதுகளில்
சில வண்ணங்கள் களைந்தும் சில ஏற்றியும்
ஒப்பனை செய்வதும் எளிதாகிறதுவண்ணங்களை கழுவி விட்டால்
தெரியும் நிஜ முகம்
எனக்கே அன்னியம் தான்


நிஜமுகம் தோண்டும் போதெல்லாம்
வர்ணங்களை நீக்குவதன்
களைப்பே மேலிடுகிறது


இருந்தாலும் தேடத்தான் வேண்டும் நான்-
சவப்பெட்டியில் தெரிவவாவது
என் முகமாக இருக்க வேண்டும் எனில் ..

Saturday, 16 August 2008

அன்புடைமை ?

நான் மருத்துவம் பயின்ற நாட்களில் நடந்தது இது .
சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்த பெண்..தையல் எடுக்கும் நாளில் நான் அதுவரை தையல் பிரிக்காததால் என் முறையானது .
எனக்கு தெரியும் அனுபவம் இல்லாததால் வலி சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று .

ஆரம்பிக்கும் முன் சொன்னேன் ,"கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்க"என்று.முடியும் வரை அந்த பெண் ஒரு முனகல் கூட எழுப்பவில்லை .முடித்தவுடன் "ரொம்ப வலித்ததா ?"என்று நான் கேட்டதற்கு
அந்த பெண் சொன்னாள் ,"உங்கள் அன்பான வார்த்தையில் என் வலி தெரியவில்லை "என்று .

சாதாரணமாக தோன்றினாலும் யார் குற்றம் இது ?
சிகிச்சைக்கு வரும் நோயாளியிடம், அன்பாகக் கூட வேண்டாம் ,குறைந்த பட்சம்
மரியாதை கூட இன்றி ,வாடி போடி என்று பேசி பழகியது யார் குற்றம் ?

பணம் தரும் நோயாளிகளிடம் நாம் இவ்வாறு பேசத் துணிவோமா ?

நம்மிடம் இருந்து விலகி வேறு மருத்துவரிடம் செல்லக் கூடும் என்ற நிலை இருந்தால் இவ்வாறு செய்வோமா ?

அதிகமோ குறைவோ இவர்களுக்கு பணி புரிய தானே நாம் ஊதியம் பெறுகிறோம் ?

Monday, 4 August 2008

அறியாமை ????

சில தினங்களுக்கு முன் ஒரு தம்பதியர் சிகிச்சைக்கு வந்தனர் .கணவர் சொன்னார் எங்களிருவருக்கும் ஹச் .ஐ.வி உண்டு .ஆனால் இது பற்றி என் மனைவிக்கு தெரியாது .என் குழந்தையும் கூட பாதிக்கப்பட்டுள்ளது .
நாங்கள் மூவரும் நோய்க்கான எ.ஆர்.டி மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

எப்படி இந்த பெண் எதற்கென்று தெரியாமலேயே சில நாட்கள் அல்ல நான்கு வருடங்கள் மருந்து சாப்பிட முடியும்?
தான் சாப்பிடுவது மட்டுமல்லாமல் தன் குழந்தைக்கும் கொடுக்க அனுமதிக்க முடியும் ?
ஏன் இவள் ஒருமுறை கூட தன் கணவனிடமோ வேறு எவரிடமோ இவை எதற்கான மருந்துகள் என்று கேட்கவில்லை ?


இதில் அறியாமையை விட அலட்சியமே அதிகம் .
ஒன்று இந்த பெண் உலகமே அறியாத அப்பாவியாக இருக்க வேண்டும்
இல்லை உண்மையை தெரிந்து கொண்டே அதை சந்திக்க பயந்து போய் ' கணவன் கொடுத்தான் ' என்ற முக்காடின் பின் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும் .Friday, 1 August 2008

பெயர்க்காரணம்
என் பெயரை யாராவது பாராட்டும் போது இல்லை பொருள் கேட்கும் போது எனக்கு மனசுக்குள்ளே ரொம்ப பெருமையா இருக்கும் .


ஆனா, சின்ன வயசுலே அப்படி இல்லை ..
நிர்மலா ,ஷீலா இது மாதிரி பெயரையெல்லாம் கேட்கும் போது பொறாமையா இருக்கும் .நம்ம பெயர் ஸ்டைலா இல்லையேன்னு.அதோட நம்ம பேர்ல ஒரு சினிமா பாட்டு கூடஇல்லையேன்னு வருத்தமா இருக்கும் .
'பூ முடிப்பாள் இந்த பூங்குழலி'இந்த பாட்ட நான் முதல் தடவ கேட்டப்ப
ஏற்பட்ட சந்தோஷம் ..


இந்த பெயரோட ஆரம்பம் எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி ,கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தான் .இந்த பெயர் எங்கப்பாவ ரொம்ப பாதிச்சிருச்சி .பெண்களுக்கு வைக்க இத விட்டா வேற பெயரே கிடையாது ன்னு முடிவு பண்ணி யாருக்கு வைக்கலாம்ன்ணு யோசிச்சப்ப எங்க அக்கா பொறந்தாங்க (பெரியப்பா மகள்).என் பெரியப்பா "யாருக்குமே வாயில நுழையாதுப்பா " ன்னு பயந்து போனதும், அப்ப திருமணம் ஆகாத எங்கப்பா இது தன் மகளுக்கு தான்னு முடிவு பண்ணியிருப்பார் ன்னு நினைக்கிறேன்.எங்கப்பா ஆசை பட்டபடியே நான் பிறந்து எனக்கும் வெற்றிகரமா" பூங்குழலி" என்ற இந்த கிடைத்தற்கரிய பெயரையும் வச்சாச்சி .இந்த பெயரோட பொருள் என்னனா "பூவைச் சூடிய கூந்தலுடையவள் ,பூ போன்ற மென்மையான கூந்தலுடையவள் ".ஆக முக்கியமான விஷயம் கூந்தல் .ஆனா நான் பிறந்தப்ப ,காஞ்ச நிலத்தில லேசா அங்கொண்னும் இங்கொண்னுமா இருக்குமேபுல் ,அது மாதிரி தான் என் கூந்தல் இருந்ததாம்.(உங்கப்பா உனக்கு இந்த பெயர் வச்ச நேரம் உன் கூந்தல் நிஜமாவே பூங்குழலாயிருச்சி ன்னு எங்கம்மா சொல்வாங்க)

 என் தம்பி பிறந்தப்ப இவன் பேரு குழலனான்னு எங்க மாமா கிண்டல் பண்ணியதா அம்மா சொல்வாங்க.அதோடஅவங்க ழகரம் பத்தி ரொம்ப அசட்டையா இருந்துட்டாங்க ..இப்ப அத வேற பழகவேண்டியதா போச்சி.
(வீட்டுல எல்லாரும் குழலி ன்னு என்னை கூப்பிடுவாங்க ).


இப்ப பெயர் வைச்சாச்சி !இத ஆங்கிலத்திலே எப்படி எழுதணும் ?இது அடுத்த பிரச்சனை .எங்கப்பா ,பேர் தெரிஞ்சவுங்க எப்படி எழுதினாலும்
சரியா தான் சொல்வாங்க ,தெரியாதவங்க எப்படி எழுதினாலும்
தப்பு தப்பா வாசிப்பங்க ன்னு முடிவு செஞ்சி Poongulali ன்னு எழுதினாங்க.
எல்லாரும் என்னை எப்படி எப்படி விளிச்சாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?சில பேர் அவங்களே Poonkuzhali எழுதிட்டு பூந்குஸலி ன்னு படிச்சாங்க .....
அண்டை வீட்டிலே ஒரு சிறுவன் 'குர்லி' னும் ,
என் தம்பி கதிரவன்' கொல்லி 'னும், என் மாமியார் ' கொலலி' னும் அவங்க அவங்க வசதிக்கு கூப்பிட்டாங்க. எங்க மருத்துவமனைக்கு வரும்
வெளி நாட்டு நண்பர்கள் வசதியா' பூங்கா 'ன்னு சொன்னாங்க .
(Your name isa tongue twister ).

என் பள்ளியில் நான் ஒரே பூங்குழலி தான் .அன்புடன் குழுமத்தில் ஒரே பூங்குழலி நான் தான் ஒரு தடவை சேது சொன்னாங்க ..
ஒரு வழியா நானும் என் பெயரும் இரண்டற கலந்து ஒரு
சந்தோஷமான வாழ்க்கைய வாழ்ந்திட்டு இருக்கோம்.


இத்தனை வருஷம் முடிந்து திரும்பி பார்க்கும் போது
இவ்வளவு அழகான பெயரை எனக்கு சூட்டிய
அப்பாவிற்கு நன்றிகள் சொன்னால் போதாது .
அதோடு இந்த பெயர் சூட்ட தடை ஏதும் சொல்லாத
என் அம்மாவிற்கும் நன்றி சொல்ல வேண்டும்.

Wednesday, 30 July 2008

அஞ்சறைப்பெட்டி


என் பாட்டி வீட்டில் என்னை மிகவும் கவர்ந்தது இந்த அஞ்சறைப் பெட்டி .செவ்வக வடிவத்தில் இருந்த இதில் ஆறு அறைகள் இருக்கும் . மரத்தில் செய்யப் பட்டது இது .இதில் என்ன வைக்கப்பட்டிருந்தது என்பதெல்லாம் எனக்கு சரியாக ஞாபகம் இல்லை ஆனால் இது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது மட்டும் நினைவிருக்கிறது.

அடுக்களையிலேயே இருந்த இது என் பாட்டி இறந்த பின்னால் எவர் அடுப்புக்கோ விறகானது .இதை எனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இன்று வரை உண்டு .பல இடங்களில் விசாரித்தும் அது போன்ற மற்றொன்று எனக்கு இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது .


Saturday, 19 July 2008

பாட்டி வீடு
மர ஏணியில் ஏறிப் போனால் மச்சி வீட்டுக்கு போகலாம் .இதில் இரண்டு அறைகள் இருந்தன .ஒரு அறையில் நெல் மூட்டைகள் அடுக்கப் பட்டிருக்கும் ,இன்னொரு அறையில் பல புத்தகங்கள் இருக்கும் .இவற்றை யாரும் அதிகம் பயன்படுத்தி நான் பார்த்ததில்லை .நெல் மூட்டைகளுக்கு நடுவே ஒரு ஊஞ்சல் இருந்ததாக ஞாபகம் .அந்த அறை பெரிதாகவும் இருள் அடைந்தும் உள்ளே சென்றதும் ரொம்ப பயமாகவே இருக்கும் .அதுவும் அந்த மர ஏணியில் சென்றால் கேட்கவே வேண்டாம் .வெளியில் இருந்தும் இதற்கு ஒரு படிக்கட்டு உண்டு .அதில் ஏறி சென்ற நாட்களில் கொஞ்சம் பயம் குறைந்ததாக உணர்ந்திருக்கிறேன் நான் .
இதற்கு மேல் ஒரு மொட்டை மாடியும் அதற்கு ஒரு மர ஏணியும் உண்டு .பயந்து போய் இதில் நான் அதிகம் ஏறியதில்லை என்று சொல்லித் தெரிய வேண்டுமா ?

Tuesday, 1 July 2008

பாட்டி வீடு


எங்கள் ஊரில் இன்னொரு சிறப்பு இங்கிருக்கும் வீடுகள் .ஒவ்வொரு வீடும் ஒரே மாதிரியாக இருக்கும் .மூன்று வீடுகள் சேர்ந்தார் போல் இருக்கும் இதில்
நடு வீடு பாட்டி வீடு . நுழைந்த உடன் ஒரு மாட்டுத் தொழுவம் ,அடுத்தது அடுப்படி (பெண்களுக்கு முதல் உரிமை என்பது இங்கு நான் கண்ட உண்மை ).
அடுப்படி வாசலில் ஒரு வெற்றிடம் அதில் ஒரு பெரிய வேப்ப மரம் ,மர நிழலில்
ஒரு ஆட்டுரல் .இதை தாண்டி உள்ளே போனால் முற்றம் .இதில் சுவற்றில் எல்லாருடைய புகைப் படங்களும் இருக்கும் .என் பெரியப்பா ,பெரியம்மா ,அம்மா ,அப்பா ,அத்தையும் அவர் தோழியும் என அனைவரும் இளம் வயதில் புன்னகை பூத்திருப்பர் .
அடுத்த அறை படுக்கை அறை ,இதில் ஒரு பெரிய கட்டில் இருக்கும் .இதற்கு மெத்தை என் அப்பா வாங்கித் தந்ததாம் .இந்த அறையின் ஒரு ஓரத்தில் ஒரு மர ஏணி ஒன்று இருக்கும் .இதில் ஏறிப் போனால் ஒரு மரக் கதவு இருக்கும் .இது மச்சிக்கு செல்லும் வழி.வெளியிலிருந்தும் ஒரு படிக்கட்டு உண்டு .
அடுத்த அறையில் எனக்கு ரொம்ப பிடித்தது அதில் தொங்கும் உறி.ஒரு மர பெஞ்சில் தண்ணீர் குடங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் . அடுத்தது கூரையில்லாத குளியலறை .

இல்லாமை ????????????

அரசு மருத்துவமனைகள் பற்றி தவறான கருத்துகள் பல உண்டு .

இங்கு தேவையான சாதனங்கள் பல இல்லை...
இது ஓரளவே உண்மை .
இருக்கும் சாதனங்கள் சரியாக உபயோகப் படுத்தப்படுவதில்லை என்பதே உண்மை .பல லட்சம் செலவில் வாங்கப் பட்ட சாதனங்கள் சில சின்ன நடைமுறை சிக்கல்கள் காரணமாக கேட்பாரற்று கிடந்து பழுது பட்டு போயிருக்கின்றன .

தேவையான ஆள்பலம் இல்லை .....
பணியில் இருப்பவர்கள் தங்கள் வேலைகளை மட்டுமே சரியாக செய்தால் கூட
இது ஒரு முடிவுக்கு வரும்.

தேர்ச்சி பெற்ற சிறப்பு மருத்துவர்கள் இல்லை ......
கண்டிப்பாக இருக்கிறார்கள் ,ஆனால் பலரும் இங்கு வரும் நோயாளிகளை தங்கள் தனி மருத்துவமனைகளுக்கு மாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் .

பல வசதிகள் சில ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளை காட்டிலும் குறைவாகவே இருக்கின்றன .ஆனால் இங்கு சுத்தமாக இல்லாமல் போனது
அன்பும் ,நோயாளிகளுக்கு தேவையான அரவணைப்பும் .

வாசலில் வந்தவுடன் காசு கேட்கும் ஊழியர்கள் ,உயிர் போகும் அவசரமாக இருந்தாலும் அங்கே போ இங்கே போ என்ற அலைகழிப்பு ,வா போ என்று மரியாதை இல்லாத பேச்சு ,இங்கு வருபவர்கள் ஏதோ நான்காம் தர குடிமக்கள் என்ற அலட்சிய மனோபாவம் ..இவையெல்லாம் களையப் படாவிடில் இந்த மருத்துவமனைகள் மக்களின் ஆதரவை ஒரு போதும் பெறப் போவதில்லை .

Monday, 30 June 2008

தமிழ் தாய் வாழ்த்து


நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்

தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!

அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!
தமிழணங்கே!

நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே


"மனோன்மணீயம்" பெ. சுந்தரம் பிள்ளை

குடும்ப வன்முறை ?

ஒரு புதிதாக மணமான இளம் பெண் .ரத்த பரிசோதனை செய்ததில் ரத்த சோகை
இருப்பது தெரிந்தது .உணவுகளால் மட்டுமே சரி பண்ணக் கூடிய அளவில் இருந்ததனால் என்னென்ன உட்கொண்டால் இந்த சோகை குறையும் என்று
சொல்லி அனுப்பினேன் .இரண்டு வாரம் சென்று மீண்டும் வர வேண்டும் என்றும் கூறினேன் .

இரண்டு வாரம் சென்றது ,மூன்று வாரம் சென்றது இந்தப் பெண் வரவில்லை ....
அவளை அறிந்தவர்களிடம் கேட்ட போது ஒரு பெண் சொன்னார் ,'அடப் போங்கம்மா !நீங்க பாட்டுக்கு பொறிகடலை சாப்பிடு ன்னு சொல்லி அனுப்பிட்டீங்க ,அந்தப் பிள்ளை ரெண்டு ரூவாய்க்கு கடலை வாங்கப் போக ,மாமியாக்காரி தெருவுலப் போட்டு அடிக்கிறா ,அழுதுக்கிட்டே
கெடந்தது பாவம் .'

மாமியார் கொடுமை என்று கூறினாலும் ,இதே மாமியார் இந்த பெண்ணை
பரிசோதனைக்கு அழைத்து வரவும் ,பரிசோதனைகள் செய்ய செலவழிக்கவும்
யோசிக்கவில்லை .அவள் பிரியப்பட்டதை அவளாகவே வாங்கி சாப்பிட்டாள் என்பதே அவரின் கோபம் ,அதை தன் மகன் வாங்கிக் கொடுத்தும் தான் .

Saturday, 28 June 2008

இயலாமை

கடமலைக் குண்டு ,


என் மருத்துவப் பணியில் ஒரு விழிப்புணர்வு தந்த இடம் .பெரிய மருத்துவமனைகளையும் அதன் அலங்காரங்களையும் அறியாத, அவற்றை நெருங்க முடியாத நோயாளிகளின் தேவைகளை நான் உணர்ந்தது இங்கு தான் .


ஒரு மூதாட்டி -வயது அறுபது தாண்டியிருக்கும் --
தலை சுற்றுகிறது என்று சொல்லி வந்தார் ,சர்க்கரையின் அளவோ 400 உணவு பற்றி சொல்லும் போது சொன்னேன் ,அரிசி உணவுகளில் மாவுச் சத்து அதிகமாக இருப்பதால் கோதுமை போன்ற பிற தானியங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் .அவர் கூறினார் ,'அரிசி கிலோ 4 ரூ விக்குது ,
கோதுமையும் கேழ்விரகும் கிலோ 8ரூ விக்குது ,நா வாங்கும் 40ரூ கூலியிலே சோறு தின்னா கட்டுமா ?கோதும தின்னா கட்டுமா ?'


இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் தானம் கட்டளையின் நிறுவனர் திரு.வாசிமலை கூறினார் , இவர்கள் பழக்கங்களுக்கு ஏற்றவாறு உணவு வகைகளை இவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் ,(ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது)அதை விட சிறப்பான வழி, இவர்கள் அளவிலான வசதிகளுடன்
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் உடன் இவர்களை உரையாடச் செய்து அவர்கள் பின்பற்றும் உணவுகளை இவர்களும் பின்பற்றச் செய்யலாம் என்று.
Friday, 27 June 2008

அறியாமை ?????????????

ஒரு முறை இரு முறை அல்ல நான் பல முறை கண்டது இது .பெண்கள் வயதை சொல்ல பிரியப் படமாட்டார்கள் ,சொல்ல மாட்டார்கள் ,குறைத்து சொல்வார்கள் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம் ,ஆனால் வயதே தெரியாமல் இருக்க முடியுமா ?
இன்னும் நம் கிராமங்களில் வாழும் பல பெண்கள் வயது ஒரு தோராயமான அளவு தான் .
பலருக்கு முப்பதை தாண்டி சொல்லவே தெரியாது ...
இன்னும் சிலர் மாமியார் (?)அல்லது கணவனைக் கேட்டே சொல்வார்கள் ...
இவர்களாவது பரவாயில்லை சிலர் நம்மையே கேட்பார்கள் ........


ஒரு பாட்டி என்னிடம் சொன்னார் 'நீ என் பேத்தி மாதிரி ,உனக்கு என்ன தோணுதோ ?அதையே போட்டுக்கோ ??'


வேடிக்கையாய் தோன்றினாலும் இவர்கள் அறியாமையை என்னவென்று சொல்வது ?
இவர்கள் வயதை தெரிந்து வைத்திருக்கும் அளவிலான அறிவுடைமை கூட
இவர்களுக்கு மறுக்கப் பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .

Thursday, 26 June 2008

அறியாமை ??????????????

நான் மருத்துவம் இறுதியாண்டு படிக்கும் பொது நிகழ்ந்தது இது .ஐம்பத்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ,மார்பக புற்று நோய் சிகிச்சைக்காக சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் .
மார்பகம் அரித்துப் போய் ,புண்ணாகி ,சீழ் வடிந்து ,புழுக்கள் வைத்து பார்க்கவே அத்துணை அருவருப்பாக இருந்தது .துர்நாற்றம் வேறு .

பல கேள்விகள் இன்று நினைக்கும் போதும் என் மனதில் தோன்றும்
இது உடனடி சிகிச்சை தேவைப் படும் விஷயம் கூடவா அத்தனை நாள் தெரியாமல் போயிருக்கும் ?
கூட இருந்தவர்கள் இதை கவனியாமல் விட்டது எப்படி ?
புழுக்கள் சேரும் வரை அந்த வேதனையை அவர் எவ்வாறு பொறுத்துக் கொண்டிருந்தார் ?
நான் பார்த்து இது போன்ற ஓரிருவரை ,இது போல் எத்தனையோ பேர் மருத்துவமனைகளை தொடாமல் மடிந்து கொண்டிருக்கிறார்கள் .


Tuesday, 6 May 2008

ஆலடிப்பட்டி

இன்று என் தாத்தாவின் நினைவு நாள் .இந்நாளில் பல வருடங்கள் என் அப்பா விரதம் இருந்ததை நான் அறிந்ததுண்டு .என் தாத்தா பலவருட தவத்திற்கு பின்னால் தன் குடும்பத்தில் ஆண் மகனாகப் பிறந்தவர் . பூசாரிக் குடும்பத்தில் பிறந்ததால் 'வைத்தியலிங்கப் பூசாரி' என அழைக்கப் பெற்றவர் . இவர் படிப்பிற்கு ஐந்தாம் வகுப்பு மேல் அடுத்த ஊர் விடுதியில் இருக்க வேண்டியதிருந்ததால் ,அவர் அம்மா மகனை பிரிய முடியாது என்று முடிவெடுத்தார் .இதனால் என் தாத்தா ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த மேதை ஆனார் .
பலசரக்கு கடை ஒன்றை எங்கள் ஊரில் நடத்தி வந்த இவர் ,கம்பராமாயண கதை கூறியே வியாபாரம் செய்வார் என்று சொல்வார்கள் .கல்வியை விட உயர்ந்த செல்வம் எதுவுமில்லை என்பதை நன்குணர்ந்தவர் இவர் .இதே ராமாயணத்தில் பல்லாயிரம் பாடல்கள் இவருக்கு மனப்பாடமாகத் தெரியுமாம் .
அய்யா என்று தன் பிள்ளைகளால் பாசத்துடன்னும் வாஞ்சையுடனும் அழைக்கப் பட்டவர் . என் தாத்தாவின் கல்லறை எங்கள் ஊர் தோட்டத்தில் இன்றும் இருக்கிறது .

என் தாத்தாவைக் குறிப்பதாக கம்பராமாயணத்தில் இருந்து என் தந்தை குறிப்பிடும் பாடல் இது

"நந்தா விளக்கனைய நாயகனே- நானிலத்தோர்
தந்தாய் தனி அறத்தின் தாயே தயாநிலையே
எந்தாய் !இகல் வேந்தர் ஏரே இறந்தனையே
அந்தோ இனி வாய்மைக்கு யார் உளரே மற்று "

Friday, 2 May 2008

ஆலடிப்பட்டிஎன் சிறு வயதில் கோடை விடுமுறையில் திருநெல்வேலியிலிருந்த என் தாத்தா வீட்டிலிருந்து ஆலடிப் பட்டிக்கு நான் வருவது வழக்கம் .ஒரே ஒரு விடுமுறை காலத்தில் இரவு முழுவதும் பல பேர் சேர்ந்து உட்கார்ந்து பருத்தி காய்களிருந்து பருத்தியை பிரித்து எடுத்தது நினைவிருக்கிறது .
ஆலடிப் பட்டியை நினைத்த உடன் என் நினைவுக்கு வருபவை என் பாட்டி வீடு,பாட்டியின் அஞ்சறைப் பெட்டி ,பாட்டியின் தோட்டம் ,அதிலிருக்கும் தாத்தாவின் கல்லறை (மே ஆறாம் தேதி என் தாத்தாவின் நினைவு நாள் ) ,பாட்டி வீட்டு மச்சிக்கு செல்லும் மர ஏணி மற்றும் திருநெல்வேலியில் இல்லாத இங்கு இருந்த கழிப்பறை .
இந்த ஊரைப் பொருத்த வரை கிட்டத் தட்ட எல்லா வீடுகளும் ஒரே அமைப்பில் இருக்கும் .


Saturday, 26 April 2008

ஆலடிப்பட்டி


கூட்டுறவு சங்கத்தில் புகையிலையை வாங்கி ,அதை அச்சில் வைத்து வெட்டி எடுத்து, உள்ளே புகையிலையை வைத்து ,திணித்து, சுருட்டி, நூலோ நாரோ கொண்டு கட்டி ,அழகாய் கட்டு கட்டாய் கட்டி அடுக்கி வைத்து கொண்டே இருப்பார்கள் .ஒரு கட்டிற்கு இத்தனை பீடி என்று கணக்கெல்லாம் உண்டு .யார் அதிகம் வேகமாக பீடி சுற்றுகிறார்கள் என போட்டியெல்லாம் நடக்கும் .எங்கள் ஊரில் வெகு சிலரை தவிர அனைவரும் இந்த தொழில் அறிந்தவரே .வேறு வேலையிலிருந்த சிலரும் கூட பகுதி நேர தொழிலாக இதைச் செய்வார்கள்.
வீட்டு வேலைகளை முடித்து விட்டு மடியில் முறத்தோடு உட்கார்ந்தால் இத்தனை பீடிகள் என அவர்கள்' டார்கெட் 'எட்டும் வரை சுற்றி கொண்டே இருப்பார்கள் .

( இன்னும் சொல்வேன் )

Wednesday, 23 April 2008

ஆலடிப்பட்டி


பெண்கள் முன்னேற்றம் பற்றி இங்கு பலரும் பல விதமாக முழக்கங்கள் செய்துக் கொண்டிருக்க அதற்கு முன்னோடியாக பொருளாதார முன்னேற்றமும் கல்வியும் பெண்களுக்கு சுயமரியாதையும் முன்னேற்றமும் பெற்று தரும் என்று நிரூபிக்கப் பட்டது எங்கள் ஊரில் .வீட்டினுள் நுழைந்தவுடன் சமையலறையை நான் இங்கு மட்டுமே பார்த்திருக்கிறேன் .
பீடி சுற்றிக் கொண்டே ஒரு திண்ணையிலிருந்து எங்கள் ஊர் பெண்கள் காரியம் ஒரு கண்ணாகவும் கதை ஒரு கண்ணாகவும் வீட்டை நிர்வகிக்கும்
அழகே தனி தான் .இப்படி பீடி சுற்றுபவர்களுடன் சேர்ந்து அதை பற்றி தெரிந்து கொண்டு என் கை வரிசையை முயற்சிப்பதில் தனி சந்தோஷம் எனக்கு சிறு வயதில் ..............

(இன்னும் சொல்வேன் )

Monday, 7 April 2008

நான் கடவுள் இல்லை
மரணத்தின் விளிம்பில் நின்று
நீ யாசிக்கும் சில உயிர்த்துளிகள்
வரமளிக்க நான் கடவுள் இல்லை..


மரணித்துக்கொண்டிருக்கும் உன் நரம்புகளை
குருதி பாய்ச்சி உயிர்பிக்க முயலும்
உன் இருதயத்திற்கு தெரியுமா -
அதன் துடிப்புகள் எண்ணப் படுகின்றன


உன் நாசிக்கும் வாய்க்கும் இடையே
சிக்கி மெலிந்துக் கொண்டிருக்கும்
சுவாசத்திற்கு தெரியுமா-
இந்த கூடு அதற்கினி சொந்தமில்லை


மங்கிக் கொண்டிருக்கும் உன் பார்வையில்
தோன்றி மறையும் ஒவ்வொரு
நம்பிக்கை கீற்றும்
என்னை குத்திப் பாய்கிறது


உன் நரம்பில் புகுத்தப்படும் மருந்துகளும்,
உனக்காக செய்யப்படும் செயற்கை சுவாசமும்,
உன் பிரிவை மேற்பார்வையிடும்
என் வலியைக் குறைக்கத்தான்

காத்திருக்கும் உன் சொந்தங்களுக்கு
செய்திச் சொல்ல காத்திருக்கும்
மரணத்தின் தூதனாகவே
நான் இப்பொழுதில்

உன் நாடி துடிப்புகள் ஓங்கி அடங்கி
அய்யோ என்ற அழுகை வெடிக்கும் போது
எங்கேனும் ஒளிந்து கதற வேண்டும் நான்
நான் கடவுள் இல்லை, இல்லவே இல்லை

Friday, 4 April 2008

ஆலடிப்பட்டி


இது என் ஊர் .வளம் கொழிக்கும் தாமிரபரணியும் நீர் கொழிக்கும் குற்றாலமும் இரண்டு பக்கங்களிலும் மாற்றந்தாயின் மனதோடு நீர் மறுக்க வற்றிய குளங்களும் காய்ந்த கிணறுகளும் எங்கள் ஊரில் அதிகம் .
என் அப்பா பிறந்தது வளர்ந்தது ஆரம்ப கல்வி படித்தது எல்லாம் இங்கு தான் .
மண் பொய்ததால் இங்கு உழவு விடுத்து பீடி சுற்ற பழகியவர் பலர் பீடி சுற்றியதால் புகையிலையின் தாக்குதலில் காச நோய் கண்டவரும் பலர் . என் தந்தை தலைமுறையில் பலர் ஆசிரியர் பயிற்சி பயின்றனர் .
பல ஊர்கள் பொறாமைப்படும் வைத்தியலிங்கசாமி கோவில் உண்டு இங்கே .கோவிலின் பங்குனித் திருவிழாவும் சித்திரை கொடையும் சிறப்பானவை .இந்தக் கோவிலின் பூசாரிக் குடும்பமாக இருந்து நாத்திகராக மாறியவர்கள் என் அப்பாவும் பெரியப்பாவும் .
Friday, 28 March 2008

பிறப்பு


கருவறையில் விதையாகி
கர்ப்பத்தில் வேர் பிடித்து
இரண்டணுக்கள் ஒன்றாகி
ஓரணுவும் பலவாகி


நஞ்சில் அமுதுண்டு
நீரில் படுக்கையிட்டு
கண்ணிருந்தும் பாராமல்
காதிருந்தும் கேளாமல்
நாவிருந்தும் சுவையாமல்


ஐயிரண்டு திங்கள்
அருந்தவம் தானிருந்து
கால் முளைத்து
கை முளைத்து
மகனாகி மகளாகி


உயிர் பிளக்கும் வலி அடுத்து
பனிக்குடம் தான் உடைத்து
அழுத படி மூச்செடுத்து
தனியே தானாகி
தொப்புள் கொடி பிரியும் வரை.........

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்


பூங்குழலி

Tuesday, 25 March 2008

அழாதே


அழும் குழந்தை
அம்மா சொன்னாள்
இன்னும் சத்தமாய் அழு -
சில்லறை சேரட்டும்


பூங்குழலி

பசி
இறைவா நன்றி .
இன்றைக்கு உணவு தந்தாய்
நாளையேனும் -
ஆளுக்கொரு இலை கொடு


பூங்குழலிSaturday, 22 March 2008

கடவுள் வாழ்த்து


பாலும் தெளி தேனும்
பாகும் பருப்பும் இவை நான்கும்
கலந்து உனக்கு நான் தருவேன்
கோலஞ் செய் துங்கக்
கரிமுகத்து தூமணியே -நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

பாரதிக்கு வணக்கம்

தேடிச் சோறு நிதந் தின்று-பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று -பிறர்
வாடப் பல செயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ