Wednesday, 26 September 2012

மழை

                                                            தூர தேசமொன்றில்
தொலைந்து போயிருந்தேன் நான்
பெயர் அறியாத தெருக்களில்
உலவித் திரிந்தேன்


யார் இவள்  என
கிசுகிசுத்து  போனது காற்று
முகம் காண
வந்து போனதொரு மின்னல்


ஆதரவாய் கூந்தல் வருடிப்
போனதொரு மலர்
எவளோ  என கடந்து
போயினர் பலரும் 


யாரும்  இல்லாமல்
முகவரியற்று
நான் போன
அந்நாளில்


தேடி வந்து 
என் தோள் பற்றி
நானிருக்கிறேன் என
கரம் சேர்த்து 
என்னுடன் நடந்தது
மழை ......
Wednesday, 19 September 2012

தமிழ் அம்மா

சின்ன வகுப்பிலிருந்தே எனக்கும் என்னோட தமிழ் அம்மாக்களுக்கும் நல்ல ஒரு புரிந்துணர்வு இருந்துட்டே இருக்கும் .நல்லா படிக்கிற பட்டியல்ல இருந்ததும் ஒரு காரணமா இருக்கலாம் .எனக்கு  வெவரம் தெரிஞ்சு எனக்கு முதல் தமிழ் அம்மாவா இருந்தவங்க மிசஸ் .ராட்ஜெர்ஸ் (Mrs .Rodgers ).அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு மிசஸ் .சைமன் (Mrs .Simon ).


இவங்க ரெண்டு பேர் கிட்ட ஆனா  ஆவன்னா தொடங்கி சில பல திருக்குறள் எல்லாம் படிச்சு கொஞ்சம் தமிழ் சுமாரா எழுத ஆரம்பிச்ச காலத்துல (என்னோட ஆறாங்  கிளாசில ) எனக்கு தமிழ் அம்மாவா வந்தவங்க மிசஸ் .ரோசலின் ஜான்சன் (Mrs .Roselin Johnson )-இனிமேல் ரோசலின் மிஸ் .இவங்களும் அடுத்தடுத்த வகுப்புகள்ல எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த மிசஸ் .வசந்தா செல்லப்பா  (Mrs .Vasantha  Chellappa )-இனிமேல் செல்லப்பா மிஸ் ,இவங்க ரெண்டு  பேரும்   தான் என்னோட தமிழ் இன்னமும் அதிகம் மழுங்காம இருக்கக்  காரணம் .அதுல இருக்கிற தப்புகளுக்கும்  பொறுப்பு இவங்க ரெண்டே பேரு தான் .


இதுல முக்கியமா சொல்ல வேண்டியது ரெண்டு பேருக்கும் நேரெதிர் குணம் .செல்லப்பா மிஸ் பொறுமை, அமைதி ,புன்னகை .+இன்ன  பிற ..ரோசலின்  மிஸ் வேகம் ,பரபரப்பு ,சிரிப்பு +இன்ன பிற .பேச்சில மட்டுமில்ல நடை செயல்ன்னு எல்லாத்துலேயும் செல்லப்பா மிஸ் நிதானம்ன்னா  ரோசலின் மிஸ் வேகம் தான் .வேகத்திலேயும் மித வேகம் கிடையாது  மின்னல் வேகம் தான் .கர்ப்பாமாக இருக்கிறப்ப இவங்க நடக்கிற வேகத்த பாத்து நாங்க நெறைய நேரம் மூச்சடச்சு  போயிருக்கோம் .சரி இப்படி டொண்ட டொய்ங் போட்டு நா எதுக்கு இந்த ப்ளாஷ் பேக் சொல்றேன்னு  கடுப்பாகறவங்களுக்கு  மேட்டருக்கு வரேன் .இப்ப கி பி  2012 செப்டம்பர் மாதத்துக்கு  வந்திருவோம்  .என்னோட முகநூல் (தமிழ் அம்மாவ பத்தி பேசும்  போது  தமிழ்ல பேசுவோம்ல ) அக்கவுண்டிலேயிருந்து  என்னோட +2 கணக்கு மிஸ்ஸோட  ஐடி கெடச்சுது .இவங்க Sports  Day  ன்னு  போட்டிருந்த போட்டோவில ஒரு ஓரமா டாக்   பண்ணி ரோசலின் மிஸ் .  இன்னொரு பக்கம் மல்லிகா  ஜான்சன் மிஸ் (அவங்கள பத்தி இன்னொரு சமயம் விவரமா பாக்கலாம்  ).அப்படியே ரோசலின் மிஸ்ஸுக்கு friend  request  போட்டா ,"குழலி ,கால் மீ "ன்னு படக்குனு வருது ஒரு மெசேஜ்,அவங்களோட சராசரி வேகத்துல .நம்பர  குறிச்சிகிட்டு   டயல் செஞ்சு  ஹல்லோங்கறேன் ,"குழ...................லி "ன்னு ஒரு உற்சாகக் குரல்."அட ,எப்படி மிஸ் தெரியும்  ?""நீ பேசுவேன்னு தெரியும் .இன்னும் என்னைய ஞாபகம் வச்சிருக்கியே ."அட இருவது வருஷமும்  ஆயிரம் ஆயிரம் மாணவர்களுக்கு  அப்புறமும் இவங்க நம்மள நெனவு வச்சிருக்கிறத விடவா இது பெருசு ன்னு என் மனசு கேக்குது .அப்புறம் பழைய  கத புது கத எல்லாம் பேசி  முடிச்சப்புறம் சொல்றாங்க .ரெண்டு நாளைக்கு  முன்னால தான் இந்த அக்கவுன்ட்டே  ஆரம்பிச்சேன் ,என் மருமக சொன்னான்னு ..இன்னைக்கு ஒன்ன கண்டுபிடிச்சிட்டேன் .நானும் செல்லப்பா மிஸ்ஸும்  அப்பப்ப ஒன்ன  பத்தி பேசுவோம்.நாமெல்லாம் எப்படி கலகலப்பா சந்தோஷமா இருந்தோம் .இப்பல்லாம் அப்படி இல்லடா . இனிமே எனக்கு எப்ப மனசு  சங்கடமா இருந்தாலும் நா ஒங்கிட்ட பேசுவேன் .""நா சொன்னேன் நடு ராத்திரின்னா  கூட பேசுங்க மிஸ் ."என் செல்லமே,எனக்கு இன்னைக்கு  பசியும் எடுக்காது ,தூக்கமும் வராது   "ன்னு சொல்லி போன  வச்சாங்க.பேஸ்  புக்கில  "excited "ன்னு ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிட்டு  தூங்கப் போனேன்,நான் .


Sunday, 2 September 2012

மழைவெயில் தகித்த ஒரு கடும்நாளில்
எதிரெதிராய்  வீதியில்
நானும் வெயிலும்


கண் எரித்து
முகம் கருக்கி
பாதம்  சுட்டு
எக்காளமாய்
என் தாடை சுடும்
பொல்லா வெயில்


கண் மறைத்து
நிலம் நோக்கி
வியர்வை குளித்து
தாகித்து   நான் ....
இன்னும்  கிட்டத்தில்
எனை சாடும் வெயில்


என் தவிப்புணர்ந்து
வந்து
சடசடவென பொரிந்து
வெயில் விரட்டி
வியர்வை களைந்து
சட்டென என் முகம் மறைக்கும்
குடையாய்
மழை