Showing posts with label நோய் நாடி நோய் முதல் நாடி. Show all posts
Showing posts with label நோய் நாடி நோய் முதல் நாடி. Show all posts

Wednesday, 2 August 2023

தேவி

காலைல ரவுண்ட்ஸ் போகும் போது ஒரு பேஷண்டோட மனைவி என்கிட்ட தனியா பேசணும்னு கேட்டாங்க .அறைக்கு வரும் போது கூடவே வந்தாங்க , கணவரோட உடல்நலம் பத்தி சில விஷயம் கேட்டப்புறம் ,"இதுக்கு வரல,உங்க கிட்ட  வேற ஒண்ணு சொல்லணும் .நான் நாப்பது வருஷமா காலைல பூஜை பண்றேன் .அதோட மெடிட்டேஷனும்  பண்றேன் .தினம் நாலு மணி நேரம் .முடியற வரைக்கும் சாப்பிடவே மாட்டேன் .சுகர்  இருந்தா கூட இத எப்படி சமாளிக்கறனு என் சொந்தக்காரங்க எல்லாம் கேப்பாங்க .ஆனா நான் ஒருநாள் கூட விட்டதில்லை .அது என்னோட குருவோட அருள் .இப்ப நானே ஒரு குருவா இருக்கேன் .

ஏன் சொல்ல வந்தேன்னா ,ஒரு பட்டு புடவை .பூஜைல வச்சது .பிரசாதம் மாதிரி .  பிரசாதம் யார்கிட்ட கொடுக்கணும்னு மெடிட்டேஷன்ல  தெரியும் .நான் கண்மூடி பார்த்தப்ப உங்க முகம் தான் தெரிஞ்சது .என்ன டாக்டரம்மா முகம் தெரியுதேனு என் பிள்ளைங்கள நினைக்க பார்த்தேன் .ஹூஹும் .அப்பக்கூட உங்க முகம் தான் தெரிஞ்சது ,அவங்க முகம் தெரியவே இல்லை .அப்ப அத நான் உங்களுக்கு தான் கொடுக்கணும் .

அந்த புடவையை எடுத்துட்டு வரேன் .பத்திரமா பூஜைல வச்சுக்கோங்க .உங்களுக்கு நல்லதே நடக்கும் ."

எனக்கு இத கேட்டதும் ,சத்தியஜித் ரேயோட தேவி படம் நினைவுக்கு வந்தது .ஷர்மிளா தாகூரோட கணவர் கொல்கொத்தால படிச்சிட்டிருப்பாரு .இவங்க மாமனாருக்கு பணிவிடை செஞ்சுகிட்டு கிராமத்துல இருப்பாங்க .நல்லா கவனிச்சிக்கவே திடீர்னு மாமனாருக்கு கனவுல மருமக துர்க்கையா தெரிஞ்சிருவாங்க .அவரு உடனே இவங்க தான் தேவின்னு ,ஊருக்கே அம்மனாக்கிருவாரு .இதுல ஒரு கட்டத்துல வர போற ஆபத்தை புரிஞ்சிகிட்ட கணவர் அவங்கள "நீ தேவியில்லைனு தெரியறதுக்குள்ள வா ,நாம ஊரைவிட்டு போயிரலாம்"னு கூப்பிடறப்ப ஷர்மிளா தாகூர் சட்டுனு கேப்பாங்க  "நான் தேவியா இருந்தா ?"

மருத்துவதுறைல  ,இப்படி தேவியாகும் ஆபத்து அதிகம் .



Sunday, 30 May 2021

கதையல்ல நிஜம்

டெங்கி தமிழ்நாட்டில பரவல்ல இருந்த நேரம்.அரசு பெரிய அளவுல நிலவேம்பு குடிநீரை பரபரப்பா கொடுத்திட்டிருந்தாங்க .ஒரு  பிரபல  தொலைக்காட்சியில ஒரு விவாத நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தாங்க .அவங்க வழக்கமான பேனல் தான் .அவங்க அரசியல் விமர்சகர் /டாக்டர் ,பிரபல சித்த மருத்துவர் ,அதிமுக சார்பில ஒரு டாக்டர் ,நான் .

உள்ள போனதுமே நெறியாளரும் சித்த மருத்துவரும் ,"நாம இந்த ஆங்கில மருத்துவத்த அடிச்சி பேசிறனும்"னு பேசிக்கிட்டாங்க .நிகழ்ச்சி வழக்கமான வகையில ,ஆனா பேசுறதுக்கே  சொற்ப நேரமே கொடுத்தாங்க .எப்ப பேசினாலும் சித்த மருத்துவர் இடைமறிச்சி பேசிக்கிட்டே இருந்தாரு .நெறியாளரும் தடுக்கல .

அப்ப டிவிட்டர்ல யாருக்கும் நான் தான் அந்த நிகழ்ச்சியில பங்கேற்ற டாக்டர்ன்னு தெரியாது .இங்கே பிரபல ட்வீட்டர்கள் பலரும் நிலவேம்பு குடிநீருக்கு ஆதரவா ஆக்ரோஷமா களமாடிட்டு இருந்தாங்க .அதிலேயும் ஒருத்தர் அல்லோபதி டாக்டர்களுக்கு அவங்க களமோ என்னவோ சொன்னாரு பறிபோயிடும்ங்கற பயம் நல்லாவே தெரிஞ்சதுனு சொன்னாரு .அப்புறம் முன்னோர்கள் ஒண்ணும் முட்டாளில்லை டைப் விவாதங்கள் வேற .நானும் ரெண்டு மூணு ட்வீட் போட்டுட்டு கடந்து போய்ட்டேன் .

போன வருஷம் கொரோனா வந்தப்ப இப்படித்தான் கபசுர குடிநீர் அறிமுகம் ஆச்சு  .என்ன டோஸ் எத்தனை நாளைக்கு குடிக்கனும் எத்தனை நேரம் குடிக்கனும்ங்கிற எந்த தெளிவும் இல்ல .அவங்கவங்க அவங்கவங்க இஷ்டம் போல பயன்படுத்திட்டிருந்தாங்க/ இருக்காங்க . இப்ப கபசுர குடிநீர் ,கிராம்பு ,இஞ்சி ,மஞ்சள் ,வேப்பிலை அப்புறம் ஒரு நாள்ல்ல கணக்கில்லாத  முறை ஆவி பிடிக்கறதுனு  நோய் தீவிரமானதுக்கு அப்புறம் மருத்துவமனைக்கு வரவங்களுக்கு  என்ன சொல்றது ?

மக்களை குறை சொல்லி பலனில்ல .இதுக்கு பின்னால ஊடகங்களும் இருக்கு .சித்த மருத்துவர்களும் எந்த ஒரு அறிவியல் வட்டத்துக்குள்ள வர மறுத்து ,ஒரு ஒளி வட்டத்தோடயே வலம் வராங்க .நாங்க இதுக்கு தரவு இல்ல ,இப்ப புது ஆய்வு இது வேலைப்பாக்காதுனு  தெளிவா உள்ளத உள்ளபடியே சொல்றோம் ,ஆனா அதுல  எல்லாருக்கும் ஆயிரம் சந்தேகம் வருது .

இதுக்கு எல்லா நிலையிலேயும்  science சார்ந்த புரிதல கொண்டு வரணும் .ஒரு இயந்திரம்  பழுதானா  பெரும்பாலும்  பணமோ நேரமோ தான் இழப்பாகும் .ஆனா மருத்துவம் அப்படியில்ல .அதனால தான் மருத்துவர்கள் இத்தனை மதிக்கப்படுறாங்க .அதனாலேயே  அவங்களுக்கும் மக்கள் நலனிலேயும் அவங்க சரியான  சிகிச்சையை செஞ்சுக்க வழிகாட்டுறதிலேயும் பெரிய பொறுப்பு இருக்கு . 







 


  


Sunday, 1 March 2020

அன்பெனும் பெருங்கொடை

அம்மாவுடன் வரும்  ஒரு சிறுமி .சில வருடம்  வரல .ஒரு நாள் அவள் மாமா கூட்டிட்டு  வந்தார் .அவருக்கு இருபத்தைந்து வயதுக்குள்ள  இருக்கும்  .நோய் அதிகமாகி மூச்சு விடவே சிரமப்பட்டுட்டிருந்தா  .சத்தம் போட்டேன் 
"எங்கக்கா இறந்து போய்ட்டாங்க "
"அதனால இவளை ஏன் கூட்டிட்டு வரல"ன்னு கோபப்பட்டேன்."கண்டிப்பா அட்மிட் தான் பண்ணனும் .இப்ப ஒண்ணும் சொல்றதுக்கில்ல"னு சொல்லிட்டேன் .

அவளோ பத்து வயசு இருக்கும் .அட்மிட் ஆகவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறா .வீட்டுக்கு அனுப்புங்கன்னு அழுகை வேற .எதையோ சொல்லி ஏமாத்துற வயசும் இல்ல .கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு  அனுப்பிடுறோம்னு கஷ்டப்பட்டு ரூம்க்கு கூட்டிட்டு போறோம் .மொத்த மருத்துவமனையும் அவ கிட்ட கெஞ்சிருக்கோம் .எப்படியோ சமாதானமாகி இருந்துட்டா .உடம்பு ஒத்துழைக்கலன்னு புரிஞ்சுதோ என்னமோ .நுரையீரல் இருதயம்ன்னு ஏகப்பட்ட தொற்று . பத்து நாள்ல வீட்டுக்கு போயே  ஆகணும்ன்னு ஒரே அழுகை .உடல்நிலை இப்ப கொஞ்சம் தேறியிருந்தது.ஆனா அழுதே சிக் ஆகிருவா போலிருந்தது .இப்படியே அழுகை அடம் கெஞ்சல்னு ஒரு மூணு நாலு அட்மிஷன் .ரெண்டு வருஷத்துக்கு முன்னால இன்ஜினியரிங் சேர்ந்தப்ப "என்னை bless  பண்ணுங்க aunty "னு ஆசிர்வாதம் வாங்கினப்ப பிரமிப்பா இருந்தது .

மாமா  திருமணமாகி நல்ல வேலைல இருக்கார் .அவர் மனைவியும் அவள அத்தனை அன்பா பாத்துக்குறாங்க .போன  வாரம் மாமா கூட செக்கப் வந்திருந்தா ."நா மொதல்ல கூட்டிட்டு வந்தப்ப எங்கக்காக்கோ இவளுக்கோ எச்.ஐ.வி இருக்கதே எனக்கு தெரியாது .எங்கம்மா, அந்த ஆஸ்பத்திரிக்கு  தான் 
அக்கா போவான்னு சொன்னாங்க .அதனால கூட்டிட்டு வந்தேன் .நீங்க சொன்னத கேட்டதும் ஷாக் ஆகிருச்சு .அதோட இவளை  வேற அட்மிட் பண்ணனும்ன்னு சொன்னதும் எனக்கு ஒண்ணுமே புரியல .அப்புறம் கூட 
அவ்வளவு கோபம் தான்  வந்தது .சீ ..நம்ம  அக்காவும்  இறந்துட்டாங்க ,இவளுக்கும் இந்த வியாதியானு .சொன்னா நம்ப மாட்டீங்க ,போற  வழியில ஆட்டோலேருந்து தள்ளி விட்டுட்டேன் .நல்ல வேளை .இப்ப நெனச்சா கூட மனசு கஷ்டமாயிருக்கும் ,இப்படி முட்டாள்தனம் செய்ய போனோமேனு ."  



Sunday, 10 June 2018

நன்றி

எழுபத்தைந்து  வயதிருக்கும் .கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை முடிந்து இருபது வருடங்களுக்கு மேலான தன்னம்பிக்கையாளர் .தனியாக ஒரு பிசினஸ் செய்து அதை பல சோதனைகளுக்கிடையே வெற்றி பெற செய்து கட்டிய சாதனையாளர் .என்னுடய பல வருட பேஷண்ட் .ஏறக்குறைய ஒரு வருடம் முன்னர் கணவர் இறந்து போனார் .சில வருடங்களாக வருடம்  ஒரு முறையே வர முடிந்திருக்கிறது .அவர் மகன் சென்னையில் இருக்கிறார் . மருந்துகளை  இவர் வாங்கி அனுப்பி  வைப்பார் .  ஆனாலும் வாரம்  ஒரு முறையேனும் என்னுடன் தொலைபேசியில் பேசுவார். ஏதேனும் ஊர்  விஷயங்கள் பொதுவாக பேசுவார். உங்க உடம்பை நல்லா பாத்துக்கோங்க என்று சொல்லாமல் ஃபோனை  வைக்க மாட்டார்.

ஜனவரி மாதத்தில் மருத்துவமனையின் தொலைபேசி எண்கள் மாறிப்போனது .அதிலிருந்து பேசுவதில்லை .pharmacyயில்  அவர் மகனிடம் புது எண்களை  தர சொல்லி சொல்லி வைத்திருந்தேன் .போன வாரத்தில் திடீரென அவர் மகன் வந்தார் .வழக்கம் போல மருந்துகள் வாங்க வந்திருக்கிறார் போலும் என நினைக்க "உங்களுக்கு தாங்ஸ் சொல்ல வந்தேன் மேடம் .அம்மா போன வாரம் இறந்துட்டாங்க .ரொம்ப ஏதும் கஷ்டம் இல்ல .காலையில தூங்கி எந்திருச்சு பால் கேட்டிருக்காங்க .கொண்டு வரதுக்குள்ள இறந்துட்டாங்க.பத்து வருஷம் எங்கம்மாவை பாத்துக்கிட்டீங்க .இந்த பத்து வருஷத்துல இந்த எச்ஐவி பத்தி அவங்களுக்கு நினைப்பு கூட வந்ததில்ல.அதனால உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன் .ரொம்ப நன்றி மேடம் .அம்மாக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ."




Sunday, 10 December 2017

பொருளுடையாருக்கு

பல நாள் வராத பேஷண்ட் .சில வருடங்கள் இருக்கும் செக்கப்புக்கு வந்தே .இரன்டு வாரங்களுக்கு முன்னர் வந்தார் .ரொம்பவே மெலிந்திருந்தார் .
"வேலை சரியா இல்ல .ரொம்ப குடிக்கிறேன் .சிகரெட் வேற .பத்து மாசமா மாத்திரை வேற போடல .நீங்க கோபப்படுவீங்கன்னு வரல .இப்ப ரொம்ப முடியலனு வந்துட்டேன் ."டெஸ்டுகள் மருந்துகள் எல்லாம் முடிந்து இந்த வாரம் மீண்டும் வந்தார் .

இப்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் .
"எங்கம்மா கூட வருவேன்னு சொன்னாங்க .நா தான் எல்லாம் சரியா போயிட்டு இருக்கு . வேண்டாம்னு சொல்லிட்டேன் .இப்ப குடிக்கறதில்ல .என் கூட கம்பெனி கொடுத்திட்டு இன்னொருத்தர் குடிப்பாரு .அவரும் இப்ப பயந்து போய் நிப்பாட்டிட்டாரு ."ஒரு மாதம் கழித்து வர சொல்லி அனுப்பி வைத்தேன்

திடீரென நேற்று மதியம் இவர் அம்மா போன் பண்ணினார் ."அவனை பத்தி பேசணும் .என்ன கூட கூட்டிட்டு வர மாட்டேன்னுட்டான்."நான் போன்ல சொல்றேனே என்றவுடன் "இல்லை எனக்கு நேர்ல பேசணும்".நேற்று வந்தார் .டெஸ்டுகள் மாத்திரை மருந்துகள் பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்

"இன்ஜினியராக்கும் இவன் .இப்படி தானா தன் லைப்பை கெடுத்துக்கிட்டான் .பொண்டாட்டி அழகா இருப்பா .இவனுக்கு எச்.ஐ.வினு தெரிஞ்சதும் விட்டுட்டு போய்ட்டா .அவள என்ன சொல்ல முடியும் .என்னோட எல்லா பிள்ளைகளும் வசதியா இருக்காங்க .எனக்கு 75 வயசாகுது .இவங்கப்பாவுக்கு 82 வயசாகுது .நமக்கு அப்புறம் இவன் என்ன பண்ணுவான்னு இப்பதான் ஒரு வீடு வாங்கி இவன் பேர்ல பேங்க்ல ஒரு அமவுண்ட் போட்டு வச்சிருக்கோம் .அதுவும் அவன் பேர்லேயும் என் பேர்லேயும் சேத்து போட்டிருக்கோம் .


 இவனுக்கொரு பொண்ணு இருக்கா .இப்பதான் காலேஜ் முடிச்சிட்டு எம்பிஏ சேர போறா .பொண்டாட்டி வந்து கூட பாக்கறதில்ல.ஆனா பொண்ணு கிட்ட இத பத்தி எதுவும் சொல்லல ."

பொண்ணு அப்பாவ பாக்க வருவாளா ?

"இவன் பேர்ல நீங்க எதுக்கு பணம் போடுறீங்க ?அத எனக்கு எடுத்து கொடுங்க .நா காலேஜ் பீஸ் கட்டறதுக்கு வேணும்னு சண்டை போடுறா .குடிகாரனா இருக்கான் .என் அப்பான்னு இவன எப்படி சொல்றது ?என் கல்யாணத்துல என் அப்பான்னு நிப்பாட்ட முடியுமானு  கேக்கறா .காலம் ரொம்ப மாறிப்போச்சு டாக்டர் "



Sunday, 14 May 2017

பெய்யென பெய்யும் ?

கணவன் மனைவி மகன் மூணு பேருமே என்னோட பேஷண்ட்ஸ் தான் .
இதுல கணவன் அப்பப்ப இன்னொரு மனைவியோட அப்ஸ்காண்ட் ஆயிருவாரு .அப்புறம் திரும்பி வருவாரு .ஆனா வேலைக்கு போக மாட்டாரு மாத்திரை எல்லாம் ஒழுங்கா எடுக்க மாட்டாரு .இந்தம்மா எப்படியோ துப்பு துலக்கி கண்டுபிடிச்சத்துல அந்த இன்னொரு மனைவியும் என்னோட பேஷண்ட்டாம் .அதனால நீங்க அந்த பொண்ணு வரப்ப கொஞ்சம் மிரட்டுங்கன்னு இந்தம்மா எங்கிட்ட சொல்லிக்கிட்டே  இருந்தாங்க .நாம என்ன போலீசா இல்ல அமைச்சர் சரோஜாவா நெனைச்சாப்பல ஒருத்தர மிரட்ட ?(இதே பிரச்சனைல இவங்க ஒரு தடவை  பூச்சி மருந்தை குடிச்சு ,அப்ப வீட்டுக்காரரை கேட்க போனப்ப ,அவர் எந்த தப்பும் பண்ணல .எனக்கும்  எங்கம்மாவுக்கும் பிரச்சனை அதனால தான் நா மருந்து குடிச்சேன்னு ,இந்தம்மாவே எங்களை  கட் பண்ணிட்டாப்ல ). இப்படியே கதை ஒரு கோணல் பாலன்ஸ்ல போயிட்டிருந்தது .

நேத்து மாமனாரை கூட்டிக்கிட்டு செக் அப்புக்கு வந்தாங்க .ஒரே அழுகை .என்னனா இப்ப ரெண்டு மாசமா ஆள் வீட்டுக்கு வரல .பையனுக்கு மருந்து வாங்கி தரல .இந்தம்மா டெய்லரிங் பண்ணி வச்சிருந்த பணம் + அவரு அப்பாகிட்ட இந்தம்மாக்கு நா scan எடுக்க? சொன்னேன்னு சொல்லி 6000 ரூ எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு அங்க போய்ட்டப்பலயாம் .அது பக்கத்து  ஊரு போல .இந்தம்மா போலீஸ்ல போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க .போலீஸ் சொல்றங்களாம் அவரை கூட்டிக்கிட்டு வாங்க நாங்க கவுன்சிலிங் பண்றோம்ன்னு !

அதுக்குள்ள அந்த பொண்ணுகிட்ட விசாரிக்க ,அந்தம்மா அவங்க ஊரு போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கங்களாம் ."இவங்க கணவர் இங்க இருக்கதா  இவங்க போலீஸ்ல சொல்லியிருக்காங்க .ஒரு மாசம் முன்னாடி இங்க தான் இருந்தாரு இப்ப இல்லனு" .ஆளு என்னமோ அங்க தான் இருக்காராம் .

நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க .அந்த பொண்ண கூப்பிட்டு மிரட்டுங்க .அப்ப அவ அவர விட்டுடுவா .இங்க வந்தா ஒரு நாளைக்கு  பத்து போன் பண்றா அவரை இங்க இருக்க விடாம .நீங்க மிரட்டுனா பயப்படுவா .

நா சொன்னேன் ,அந்த பொண்ண என்னன்னு மிரட்டுறது ?இவரா தானே அங்க போய் உட்காந்துகிட்டு  இருக்காரு ?இதுல அந்த பொண்ணை மட்டும் குறை சொல்லி என்ன பண்றது ?திரும்ப வந்தா உன் பணத்தை தான் திருடிக்கிட்டு  போக போறாரு.  உனக்கு சம்பாதிக்கவும் ஆகல புருஷனுக்கும் ஆகல ,விட்டு தள்ளு .

Sunday, 29 January 2017

காவல் ? துறை

இது சமீபத்திய மெரினா சம்பந்தப்பட்ட  பதிவல்ல .என் பேஷண்ட் ஒருவரின் சொந்த அனுபவம் பற்றியது .ஒரு விதவை பெண் .ஒரு மகன் மகள் .கணவர் இறந்து இருபது  பிளஸ் வருடங்கள் .மகனுக்கு  இப்போது வயது இருபது .
போனவாரம் என்னை பார்க்க வந்திருந்தார் .

"என் பையன் தூக்கு மாட்டிகிட்டு செத்து போய்ட்டான் ,மேடம் .அவங்கப்பா இல்லாம எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளத்திருப்பேன் .மூணு வருஷத்துக்கு முன்னால ட்ரிபிள்ஸ் போனான்னு புள்ள மேல போலீசுல கேஸ் எழுதிட்டாங்க .அப்புறம் ஸ்டேஷன்ல கூப்பிட்டு ரெண்டு மூணு கையெழுத்து வாங்கிக்கிட்டாங்க .

அப்புறம் சும்மா சும்மா வீட்டுக்கு வருவாங்க .காசு கேப்பாங்க .வருஷத்துக்கு அம்பதாயிரம் வரைக்கும் செலவு பண்ணியிருக்கேன் .வீடு மாத்தி மாத்தி போவேன் .எப்படியோ யாரோ சொல்லிக்கொடுத்து சரியா வந்துருவாங்க .இப்ப ரெண்டு மூணு மாசமா புள்ள, கூப்பிட்டும் போகல .நா தான் தப்பு எதுவும் பண்ணலையே நா ஏன் போகணும்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தான் .இப்ப இந்த வீட்டுக்கு வந்து ஒரு  மாசம் ஆகிருச்சு .

நேத்து வேலைக்கு போயிட்டு வந்தா ,ஹவுஸ் ஓனர் வந்து யாரோ ஒருத்தர் உங்க மகன தேடி வந்தாரு .கலர் ட்ரெஸ்ல இருந்தாரு .ஆனா போலீஸ் மாதிரி இருந்ததுனு சொன்னாங்க .படபடன்னு போய் பாத்தா கதவு பூட்டியிருந்தது .தட்டி தட்டி தெறக்கல. அப்புறம் என் தம்பிய கூப்பிட்டு கதவை ஒடச்சு பாத்தா எல்லாம் உடைஞ்சு போச்சு .

எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளத்தேன். தைரியம் சொல்லி சொல்லி வச்சிருந்தேன் . எப்படியெல்லாம் காப்பாத்தியும் எம்புள்ளைய வாழ விடாம பண்ணிட்டாங்களே ..."

Wednesday, 12 October 2016

எங்கம்மா...

எப்பவுமே மருந்துகள் சரியா சாப்பிட மாட்டார் இவர் .போன மாசம் வந்து சில டெஸ்டுகள் செஞ்ச  பின் ,ஒரு வாரம் கழிச்சு வர சொன்னா இன்னைக்கு தான் வந்தார் .வந்ததுமே கிளம்புற அவசரத்துல வேற இருந்தாப்பல .நா ,வேற சில வேலையில இருந்ததால பாக்க ஒரு ரெண்டு மணி நேரமாகிருச்சி .

"என்ன டாக்டர் இன்னைக்கு இவ்வளவு லேட் பண்ணிட்டீங்க ?இவ்வளவு நேரத்துல நா அப்பல்லோவுக்கே  போய்ட்டு வந்துட்டேன் ."
இவர் அதிமுக .எப்பவுமே கட்சி கரை  வேட்டியில தான் வருவாப்புல .

அப்பல்லோவுக்குனு சொன்னதுமே எதுக்குன்னு தெரிஞ்சு போச்சு .
எப்படி இருக்காங்க உங்கம்மா ?
"நீங்க தான் சொல்லணும் ."
எனக்கென்ன தெரியும்
"டாக்டர்ஸுக்கே தெரியலைன்னா எங்களுக்கு எப்படி தெரியும் ?"

நேத்தைக்கு ஓபிஎஸ்க்கு மாத்தி கொடுக்க சொல்லியிருக்காங்களே .அப்ப நல்லா தானே இருக்காங்க ?கலைஞர் கூட சி எம் கையெழுத்து போட்டிருக்காங்களான்னு கேட்டிருக்காரே ?

"கேட்கட்டும் மேடம் .அப்பத்தான் விஷயம் தெரியும் .ஆளாளுக்கு வராங்க போறாங்க, ஆனா யாருமே ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறாங்களே ?போன வாரம் பூரா அப்பல்லோ வாசல்ல தான் இருந்தேன் .அப்புறம் இருந்து எதுவும் ஆகப் போறதில்லனு தெரிஞ்சதும் ஊருக்கு போய்ட்டேன் ."

என் கால பாருங்க ,காய்ச்சு போச்சி .30 கிலோமீட்டர் நடந்தேன் ,எங்கூர் பக்கத்துல ஒரு சாமிக்கு அம்மாவுக்காக வேண்டிகிட்டு  .எல்லாரும் கிண்டல் பண்றாங்க.நா நடந்து என்ன ஆகப்போகுதுன்னு கேட்டுறாதீங்க .இத்தன பேரு செய்றதுல ஏதாவது ஒண்ணு சாமிக்கு போய் எட்டி அம்மா நல்லாகிற மாட்டாங்களான்னு தான் .இந்த வெள்ள வேட்டி சட்டை  எங்கம்மா போட்ட பிச்சை .எங்கம்மா நல்லாயிருவாங்கன்னு சொல்லுங்க டாக்டர் ...."ஓவென  அழ ஆரம்பித்தார் .....

Wednesday, 21 September 2016

இருமணம் கொண்ட

ஒரு சனிக்கிழமை .நிறைய பேஷண்ட்ஸ் .பாத்துக்கிட்டே இருக்கிறப்ப ஒரு கணவன் மனைவி .இவங்களுக்கு ஒரு மகனும் மகளும் .ரெண்டு பெரும் படிப்பெல்லாம் முடிஞ்சி வேல பாக்குறாங்க .

"பிள்ளைங்க கிட்ட எங்க ரெண்டு பேருக்கும் எச் ஐவி இருக்குன்னு சொல்லிட்டோம் (சொல்ல சொல்லி கொஞ்ச நாளாவே சொல்லிட்டு இருக்கேன் ).இப்ப என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு பாக்குறோம் .ஒத்துக்க மாட்டேங்குறா .நீங்க கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க ."
நான் "நிறைய பேஷண்ட்ஸ் இருக்காங்களே  ."
"பரவாயில்ல,நாங்க வெயிட் பண்றோம் .எல்லா பேஷண்ட்டும் பாத்து முடிச்சிட்டு பேசுங்க "

பொண்ணு அழகா ரொம்ப துடிப்பா இருந்தா .
என்ன சொல்றாரு உங்கப்பா ?
"ஒண்ணுமில்ல ஆண்ட்டி .கல்யாணம் பண்ண சொல்லி எல்லாரையும் அட்வைஸ் பண்ண சொல்றாங்க .நா பேசாம கல்யாணமே பண்ணிக்கிறேன் ."
ஒனக்கு இஷ்டமில்லையா ?
"அம்மா அப்பா ஹெல்த் எப்படி இருக்கு ?"
நல்லா இருக்கே .
"அப்புறம் ஏன் அத சொல்லி என்ன கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு கம்பெல் பண்றாங்க ?நாங்க இருக்கும் போதே பண்ணிக்கோன்னு ?"
எப்ப கல்யாணம் பண்ணலாம்ன்னு நீ நினைக்கிற ?
"நல்ல பையனா இருந்தா ,எனக்கு ஓகே தான் .எனக்கு பையன பிடிக்கணும் ."
இந்த பையன பிடிக்கலையா ?
"ஆமா ஆன்ட்டி .பிடிக்கல .அப்பா மத்த எல்லாம் சரியா இருக்குன்னு சொல்றாரு .பிளாக்மெயில் வேற .நா கல்யாணமே பண்ணிக்கிறேன் .பரவாயில்ல .ஆனா இந்த பையன எனக்கு பாத்தாலே பிடிக்கல ."

இப்ப அம்மா அப்பாவ வர சொன்னோம் .
"ஒத்துக்கிட்டாளா ?"(நம்ம திறமைல அப்படி ஒரு நம்பிக்கை )
கல்யாணத்துக்கு ஓகே தான் .இந்த பையனுக்கு ஓகே இல்லையாம் .
"ஆமா ,பையன் நல்லா இல்ல .எங்களுக்கே பிடிக்கல .ஆனா மத்த எல்லாம் இருக்கு .அப்புறம் எங்களுக்கு ஒடம்பு நல்லாருக்கும் போதே செய்யணும் .சர்வீஸ் வேற இன்னும் நாலு வருஷம் தான் இருக்கு .அவளா ஏதாவது பையன இஷ்டப்பட்டாலும் பரவாயில்ல ."

உங்க ரெண்டு பேர் ஹெல்த் நல்லா இருக்கு .அப்புறம் யாரோட ஆயுசையும் யாராலயும் கணிக்க முடியாது .அத காரணம் கட்டி அந்த பொண்ணுக்கு பிடிக்காத பையன ,இதுல உங்களுக்கும்  பையன பிடிக்கல, கல்யாணம் பண்ணி வைக்கிறத விட பெரிய முட்டாள் தனம் வேற எதுவும் இல்ல .

எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்த அத பொண்ணு சொன்னா ,"ஆண்ட்டி ,நா இப்பதான் கொஞ்ச மாசமா வேலைக்கு போறேன்.இப்ப தான் இவங்க ரெண்டு பேருக்கும்  இந்த பிரச்சனை இருக்கிறது தெரியும் .இவங்க இத சொல்லி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்க .இதே காரணத்துக்காக நா என் கேரியர்ல நல்லா வரணும் .நாளைக்கு  அம்மா அப்பாக்கு ஏதாவது ஆஸ்பத்திரி செலவுக்கு தேவைப்பட்டா செலவழிக்க பணம் சேத்து வைக்கணும்ன்னு நினைக்கிறேன் .கொஞ்ச நாள் போகட்டும் .இவங்க பாக்குற பையன் எனக்கு பிடிச்சிருந்தா இல்ல எனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன் ."

Thursday, 8 September 2016

தேவதைகள்

ஒன்பது வயது சிறுமி .அம்மா இல்லை .அப்பா குடிகாரர் .தாத்தாவும் பாட்டியும் அழைத்து வந்தார்கள் .வயிறெல்லாம் உப்பலாக .மூச்சு திணறிக்கொண்டு .
டெஸ்ட்டுகள் செய்து  பார்த்ததில் வயிற்றில் TB தொற்று போல் தோன்றியது .சிகிச்சை ஆரம்பித்து   ஒரு மாதம் கழித்து வரும் படி சொல்லி அனுப்பி வைத்தேன்.

இரண்டு வாரங்களுக்கு முன் திரும்ப வந்தாள் .வயிறு இன்னமும் கொஞ்சம் உப்பலாக .காய்ச்சலும்  வலியும் குறைந்து இருந்தன .CT  ஸ்கேன் செய்ததில் வயிற்றில் இன்னமும் நெறி கட்டிகள் குறையாமல் இருப்பது தெரிந்தது .ஒருவேளை கேன்சராக இருக்குமோ என்று அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பினேன் .

அவர்களும் சிலபல டெஸ்ட்டுகள் செய்த பின் ,பயாப்சி (biopsy ) செய்ய முடிவெடுத்து போன வாரத்தில் செய்தார்கள் .பலமுறை ஆந்திராவில் இருந்து அலைந்து திரிந்தார்கள் தாத்தாவும் பாட்டியும் இதற்கென .எங்களுக்கென்று இவள் ஒருத்தி தான் இருக்கிறாள் என்பார்கள் அழுதபடி .இன்று சோதனை முடிவுகள் வந்து ,TB தான் என்று உறுதியானது .

இந்த இரண்டு வாரத்தில் இவள்  உடல் நலமும் இன்னமும் கொஞ்சம் சீரானது .இந்த இரண்டு வாரங்களில் அவளும் நானும் ஒரு ஆறு முறையேனும் சந்தித்திருப்போம் .சிரித்துக்கொண்டே இருப்பாள் .கேள்விக்கு மட்டும் பதில் சொல்வாள் .எப்போதும் பொம்மை போல அழகாக உடை உடுத்தி இருப்பாள் .
இன்று அவள் தாத்தா பாட்டியிடம் ,அடுத்து என்ன செய்ய வேண்டும் ,எப்போது வர வேண்டும் என்றெல்லாம் பேசி ,இரண்டு மாதங்கள் கழித்து பார்க்கிறேன் என்று சொல்லி முடித்தேன் .

சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் .போகும் போது ,"டாக்டர் உங்க பேர் என்ன ?"என்  பேரு பூங்குழலி ."பூங்.....பூங்குலலி ...பூங்குழலி ."
"டாக்டர் பூங்குழலி ஆன்ட்டி -சால தேங்ஸ்"....

 

Saturday, 2 April 2016

வசிய மருந்து

பேஷன்ட் உள்நோயாளிகள் பிரிவில் இருந்தார் .அவர் மனைவி என்னிடம் பேச விரும்புவதாக சொல்லி என் அறைக்கு வந்தார் .

"வாந்தி நிக்கவே இல்லையே!"
முன்னைக்கு இப்ப கொறஞ்சிருக்கே?மருந்தெல்லாம் கிடைக்குது .

"எங்கூர்ல என்ன சொல்றாங்கனா ..."
என்ன சொல்றாங்க ?

"வசியம் மிச்சமிருந்தா  வாந்தி நிக்காதாம் ?"
உங்க வீட்டுக்காரருக்கு வசியம் யார் வச்சது ?(பேஷன்ட் படு சுமார் பெர்சனாலிட்டி )

"அதெல்லாம் நெறைய பொம்பளைங்க வசியம் வச்சு ,அங்க இங்க போய் தான் இந்த நோய் வந்துச்சு .கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் கூட இன்னொரு பொம்பள கூட தான் இருந்தாரு"
முடியாம போன உடனே உங்ககிட்ட வந்துட்டாராக்கும் ?

"ஆமா .நா தான் வசியம் எடுத்தேன் .கையில முருங்க ஏல சார கசக்கி விடுவாங்க .அப்படியே இருந்தா ஒண்ணும் இல்ல, கெட்டியா ஆச்சுன்னா வசியம் இருக்குன்னு அர்த்தம் .பேதியாவறதுக்கு மருந்து கொடுப்பாங்க .வசியம் போயிரும் .முழுசும் போகலைனா தொண்டைல முடியா மொளச்சு வாந்தி வந்துகிட்டே இருக்குமாம் ."

 இப்ப என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்க ?
"வசியம் எடுக்கலாமா ?"
பேதிஎல்லாம் ஆச்சுன்னா ஒடம்பு தாங்காது .ரெண்டு மூணு மாசம் போகட்டும் .
"அதுக்குள்ளே முடி நெறையா மொளச்சா ? இப்ப அவரு தங்கச்சி (போலீஸ் இன்ஸ்பெக்டர் இவர் ) என்ன சொல்றாப்புலனா ,நீ வசியம் வச்சிருந்தா எடுத்திரு .(ஆனா நா எடுக்க தான் செஞ்சேன் .நா வைக்கல .சொன்ன நம்பல )நீ வசியம் வச்சதெல்லாம் சரிதான் .இனிமேல் என்ன ,எடுத்துரு வாந்தி நிக்கட்டும் "

உங்க வீட்டுக்காரருக்கு மஞ்சகாமாலை இருக்கு .அதனால வாந்தி வருது .தொண்டையில் காமெரா (endoscopy பண்ணியிருக்கோம் ) போட்டு பாத்தாச்சு .முடி கிடி எதுவும் உள்ள இல்ல .வேணா அந்த போட்டோ தரேன் .உங்க நாத்தனார் கிட்ட காமிங்க .


Tuesday, 29 March 2016

பொம்மை கல்யாணம்

வாசலில் வந்திறிங்கிய முதல் என்னை பார்த்து சிரித்து கொண்டே இருந்தாள் அவள் .பொம்மைக்கு புடவை கட்டியது போல .நாம் பார்க்கும் பேஷன்ட் போல தெரியவில்லையே ,எதற்கு நம்மை பார்த்து இத்தனை வாஞ்சையாய் சிரிக்கிறாள் என்று சிறிது யோசித்துவிட்டு வேறு பேஷன்ட்டுகளை பார்ப்பதில் மூழ்கிப்  போனேன் .

சிறிது  நேரத்தில் நான்  வழக்கமாக பார்க்கும் சிறுமியின் பைலை கொண்டு வந்து தரவும் பளிச்சென்று நினைவுக்கு வந்தது ,இவள் தான் அவள் என .பார்த்து இரண்டு மூன்று வருடம் ஆகியிருக்கலாம் ..சுரிதாரோ பாவாடை சட்டையோ அணிந்திருப்பாள் .எப்போதும் வளையல் கம்மல் எல்லாம் மேட்சாக இருக்கும்.

 அம்மாவுடன் வருடம் ஒருமுறை விடுமுறையின் போது மட்டும் வருவாள் . ஏதோ ஒரு ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டு இருந்தாள் .இவள் அம்மா ஒரு இளம் விதவை .அவள் அம்மா ஆதரவில் இருந்தாள் .மாத வருமானம் அதிக பட்சம் 5000 இருக்கலாம் .

உள்ளே வந்தாள் .பார்க்க அழகாகவும் சிரிப்பாகவும் இருந்தது .
என்ன பொடவ  கட்டியிருக்க ?
கல்யாணம் ஆயிருச்சு .
கல்யாணம் ஆயிருச்சா ?எப்ப ?
ஆறு மாசமாச்சு .
என்ன வயசு ஒனக்கு ?
பதினஞ்சு
ஒங்கம்மா ஒண்ணும் சொல்லலையே ?
ம்ம் ..நீங்க திட்டுவீங்கன்னு சொல்லல
மாப்பிள்ள ?
இங்க தான் அவரும் ட்ரீட்மென்ட் எடுக்குறாரு ...பைலை வாங்கி பார்த்தால் மாப்பிள்ளை வயது முப்பத்தெட்டு .
கூட்டிட்டு  வரவா ?உங்ககிட்ட பேசணுமாம் ..
குழந்தை பெத்துக்கணும்ன்னு  கேக்குறாங்க -
அதெல்லாம் ரொம்ப சின்ன பொண்ணு ,இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகணும் என்று அதட்டிய என்னை கோபமாக பார்த்துவிட்டு வெளியே சென்றான் .
ஒங்கம்மா வரட்டும் பேசிக்கிறேன் .

இன்று வந்தாள் அவள் அம்மா .பொல பொலவென்று அழ ஆரம்பித்தாள் .அவங்க வீட்ல ரெண்டு வருஷமா இந்த பொண்ண கேட்டுட்டே இருக்காங்க .வேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டே சமாளிச்சு,இப்ப ஊர்க்காரங்க எல்லாருமா சேந்து ,கட்டாயமா கோயிலுக்கு போன எடத்துல கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க .கல்யாணம் பண்ணிட்டா  அந்த பொண்ண நல்லாவே வச்சுக்கல ,என்னன்னு கேக்க  போன என்ன அடிச்சு வெரட்டீட்டங்க .எங்க அம்மாவும் செத்து போச்சு ,அண்ணன் தம்பியும் பேசுறதில்ல .என்னன்னு கேக்குறதுக்கு யாருமில்ல .இப்ப சொத்தும் இல்லன்னு சொல்லிட்டாங்க .பொழைக்க வெளியூர் போயிருக்காங்க .எம்புள்ளைய எங்கிட்ட பேச விடுறதில்ல .ஒங்ககிட்ட பேசுனா நா கேட்டேன்னு சொல்லுங்க .கொழந்த மட்டும் வேண்டாம்ன்னு சொல்லுங்கம்மா .நானும் என் புள்ளையும் இந்த நோய வச்சுட்டு படுற கஷ்டம் போதும் .இவ ஒரு கொழந்த பெத்தா அத பாக்குறதுக்கு எனக்கு தெம்பும் இல்ல எம்புள்ளைக்கு வயசும் இல்ல ....



Monday, 10 August 2015

ஹான்ஸ்

சில வருடங்கள் சென்றே பார்க்கிறேன் இந்த சிறுவனை .
செக்கப் வந்தே சில வருடங்கள் ஆனது .இப்போது வயது 14ஆம் .வந்தவுடன் பேசவே இல்லை .கீழே பார்த்த படியே அமர்ந்திருக்கிறான் .ஒன்பதாம் வகுப்பு என்று சொன்னதை தவிர வேறு எதற்கும் பதிலில்லை .
 
"நல்லா படிக்கிறானா ?மாத்திரை ஒழுங்கா சாப்பிடுறானா ?"என்ற போது  அவன் அம்மா சொன்னார் "அவனையே கேளுங்க " .எதற்கும் பதில் இல்லை .திடீரென  அவன் அம்மா ,"என்னனு கேளுங்க,இவன் நல்லா இருக்கனும்ன்னு நான் மாத்திரை கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில வாங்கிட்டு இவனுக்கு காசு கொடுத்து வாங்கி கொடுக்கறேன் .இவன் மாத்திரை கரெக்டா போடுறதில்ல  ,அதோட ஹான்ஸ் வேற போடுறான் ."
ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே புரியவில்லை .பதினான்கு வயது பள்ளி சிறுவன் அதிலும் படிப்பில் கெட்டிக்காரன்  ஹான்ஸ் போடுவானா ?ஒரு அம்மா இதை போய்  இட்டு கட்டி சொல்வதும் சாத்தியமில்லை .அப்போது உண்மையாகவே  இருக்க வேண்டும் .இவனுக்கு எங்கு கிடைத்திருக்கும் ?

"ஹான்ஸ் போடுறியா ?"இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான் ." உங்கம்மா  சொல்றாங்க ?" அப்போதும் அதே தலை அசைவு மட்டுமே .அவன் அம்மாவை வெளியே அனுப்பிவிட்டு ,மெதுவாக நானும்  என் கவுன்சிலரும் பேச்சு கொடுத்தோம் .

"நல்லா படிக்கிறீயா "
ஆமா செகண்ட் ரேங்க் .
"நல்லா படிச்சா தானே ,நல்லா இருக்க முடியும் ?"
ஆமா
"ஒருத்தங்க செய்யறதா இன்னொருத்தங்க குறை சொல்லக்கூடாது தானே ?"
ஆமா
ஒடம்புக்கு நல்லதில்லாதத செய்யலாமா ? "
ஹூஹும்  
"Friends யாராவது ஏதாவது வாங்கி கொடுத்தாங்களா ?
ஆமா
"என்ன ?சாக்லெட்டா ?"
ஆமா
"எப்பவாது ஹான்ஸ் வாங்கி கொடுத்தாங்களா ?"
............
"யோசிச்சு சொல்லு "
ஆமா
"ஹான்ஸ் நல்லதா?"
.........
"அப்புறம் ?"
...இல்ல
"உனக்கே  தெரியும் தானே ?"
........
"எதையும் செய்யறதுக்கு முன்னால இது கரெக்டா தப்பானு நீயே நல்லா யோசிசிக்கோ .."
உம்
"எப்பயும் நேரா பாத்து பேசு .கீழ பாக்காத .எங்களுக்கே நீ தப்பு பண்ணியிருப்பியோன்னு தோணுது .."
சரி .....
"அம்மாவ கூப்பிடலாமா ?"
சரி
அவன் அம்மாவை அழைத்து இனிமேல் மாத்திரை ஒழுங்கா சாப்பிடுவானாம் ."அம்மாகிட்ட சொல்லு "-இனிமேல் சரியா
மாத்திர போடுறேன் .நல்லா  படிக்கிறேன் "



 

Monday, 4 May 2015

இல்லாதவள்

என் பிரிய பேஷன்ட் இவள் .ரோஜாப்பூ போல் இருப்பாள் .சின்ன பிள்ளை போல தத்தி தத்தி  பேசுவாள் .தந்தை தாய் இல்லாமல் மாமாவால் வளர்க்கப்பட்டவள் .எப்போதும் ஒரு வித மனக்குழப்பத்திலேயே இருப்பாள் . எதற்கும் என்னிடம் தொலை பேசுவாள் .வாரத்தில் இருமுறையேனும் .

குழந்தை இல்லாமல் இருக்கவே அது குறித்து மிக வருத்தத்தில் இருந்தாள் .சுற்றாரின் இது குறித்த நச்சரிப்பு வேறு .இதெல்லாம் சேர்ந்து டிப்பிரெஷனாக (depression )  மாற மனநல மருத்துவரிடம் அனுப்பி அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டோம் .

இதனூடே இவள் கணவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது .அதே நேரத்தில் இவள் கருத்தரித்திருந்தாள் .கணவரின் உடல்நலம் குறித்து கவலையாய் இருந்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருந்தாள் .கணவரும் நன்றாக தேறினார் .2014 ,டிசம்பரில் அழகான பெண் குழந்தை பிறந்தது .குழந்தைக்கு  எச்.ஐ.வி  இருக்காதே என்று கேட்டுக்கொண்டே இருந்தாள் .குழந்தைக்கும் பரிசோதனை செய்யப்பட்டு நோய் இல்லையென உறுதி செய்யப்பட்டது .

பிரசவத்திற்கு பின்னர் கட்டிலிருந்த  டிப்பிரெஷன் மீண்டும் தலை துவக்க ஆரம்பித்தது .மருந்துகள் சாப்பிட்டபடியே இருந்தாள் .திடீரென போன் செய்வாள் .ஏதேனும் கேட்பாள் .பதில் கேட்டுக்கொண்டு அதன்படி செய்வாள் .
போனவாரம் சொந்த பணி காரணமாக லீவில் இருந்தேன் .

இன்று காலை இவள் கணவர் தொலை பேசியில் .குழந்தையை அடுத்தபடி பரிசோதனைக்கு எப்போது அழைத்து வரவேண்டும் என கேட்டார் ."அவள் என்ன செய்கிறாள் ?அவளையும் சேர்த்தே அடுத்த வாரம் கூட்டி வாருங்கள்  "என சொல்லவும் ,"அவள் போன வாரம் இறந்து போய்விட்டாள் "என்றார் கதறியபடி .ஐயோ என்று அலறியே விட்டேன் .

"நன்றாக  தான்  இருந்தாள் .என் அம்மா அக்காவிடம் சாதரணமாக பேசிக்கொண்டிருந்திருக்கிறாள் .திடீரென ரூமுக்குள் சென்று தூக்கு மாட்டிக்கொண்டாள் .எதற்கென்றே தெரியவில்லை என்றார் அழுதபடியே .சின்ன குழந்தையை விட்டுவிட்டு போய்விட்டாள் .குழந்தை வேண்டும் வேண்டும் என கேட்டுவிட்டு  இப்படி செய்துவிட்டாள் .
போன வாரம்  முழுவதும்  உங்களுக்கு பேச முயற்சித்துக்கொண்டே இருந்தாள் ...."


Tuesday, 28 October 2014

யாகாவாராயினும் நா காக்க ...

வழக்கமான பரிசோதனைக்காக வந்திருந்தார்  .வயது 70.எப்பொழுதும் அவருடன் அவர்  இளைய மகன் வருவார் .இன்று   புதிதாக இன்னொருவரும்  வந்திருந்தார் .தம்பி போலும் என  நினைத்துக்கொண்டேன் .முதலில் உள்ளே வரவில்லை .Viral load  test  செய்ய வேண்டும் ,இரண்டாயிரம் ரூபாய் ஆகும் இன்று  செய்து கொள்கிறீர்களா அடுத்த முறை செய்து கொள்கிறீர்களா என்று கேட்டு கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தார் .

"என்ன ?" என்று மகனை பார்த்து   கேட்கவும் ,"நீங்க யாரு ?"என்றேன் நான் ."அவங்க மகன் தான் " என்றார் ."நா பாத்ததே இல்லையே ?" என்றவுடன் ."நீங்க எங்கம்மாவுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க .வேல கீல செய்யாம கெடக்க சொல்லுங்க .நா மாசாமாசம் மாத்திரைக்கு செக் போட்டு கொடுக்குறேன் .அப்புறம் என்ன கேடு ?பதிமூணு  மாசத்துக்கு இப்பவே செக் கொடுத்துட்டேன் .இன்னும் என்ன எப்படி தேய்க்கலாம்ன்னு தான் பாக்குறாங்க ."அவர் உடனே ,"நீ செய்யலைன்னு நா சொல்லலையே தம்பி ?வாடகைக்கு கொஞ்சம் பணம் கொடுன்னு தானே சொல்றேன் .""ஒனக்கே எல்லாத்தையும் அழுதுட்டா ,நா ரெண்டு பொண்ணு பெத்துருக்கேன் . அதுங்களுக்கு கார் பங்களா கொடுத்து கட்டி கொடுக்க வேணாமா ?வரவன் ஒசியிலையா கட்டிக்க போறான் ?"


"ஒங்க  பொண்ணுக்கு பங்களா கொடுக்கணும்ன்னு சொல்றீங்க ,ஒங்கம்மாவுக்கு வாடகை கொடுக்கறதுக்கு இவ்வளவு பேசுறீங்க ?
"நா நெறைய படிச்சிருக்கேன் ."
"ஒங்கம்மா தானே படிக்க வச்சாங்க ?"
"ஆமா இவங்க தான் வந்து எக்ஸாம் எழுதுனாங்க "
"அவங்க அறிவு தானே உங்களுக்கும்  இருக்கும் ?"
"இப்ப கூட வந்திருக்கேன் ,பொழப்ப விட்டுட்டு ...நீங்க என்ன டெஸ்ட் வேணுமோ பண்ணிக்கோங்க "
"ஒங்கம்மாவுக்கு தானே கொடுக்கிறீங்க ?ஏன் கொடுத்தேன் கொடுத்தேன்னு கணக்கு சொல்லிகிட்டே இருக்கீங்க ?இத்தன வருஷத்துல இன்னைக்கு தான வந்திருக்கீங்க ?எப்பவும் ஒங்க தம்பி தான வருவாரு ?
"அந்த பொறுக்கி பயல கட்டிட்டு அழுறாங்க .அவன ஏதாவது செஞ்சு பிழைக்கட்டும்ன்னு மெட்ராசுக்கு அனுப்ப வேண்டியது தானே ?"
"அவர் கிராமத்துல இருக்கறதுல உங்களுக்கு  என்ன பிரச்சனை ?"


"நா ப்ரொபசரா இருக்கேன் .என் பொண்டாட்டியும் கெட்டிக்காரி அவளும் ப்ரொபசரா இருக்கா .இவங்களுக்கு மகனா பொறந்தது என் தப்பு .லூசு ,பைத்தியம் ....."

சட்டென்று கையெடுத்து கும்பிட்டு அவர் அம்மா சொன்னார் ,"நல்லா சாமிய கும்பிட்டுக்க தம்பி .அடுத்த ஜென்மத்திலயாவது ஒனக்கு புடிச்சாப்புல  ஒனக்கு அம்மா கெடைக்கனும்ன்னு ."





Thursday, 18 September 2014

கரும்புக் கொள்ளை



முன்பு நான் பகிர்ந்த  மல்லாட்டையும் மருத்துவமனையும் என்ற பகிர்வின் கதாநாயகர் இவர்  ( http://மல்லாட்டையும் மருத்துவமனையும் ).
இன்று வந்திருந்தார் .இந்த முறை கரும்பு .

"கரும்பை  போட்டவன் எல்லாம் கஷ்டப்பட்டு கெடக்குறான் .கடலூர் பக்கத்துல மில்காரன்  ஆறாயிரம் கோடிக்கு மேல  விவசாயிக்கு பாக்கி வச்சிருக்கான் .கேட்டா சக்கர  வெல போகலன்னு சொல்றான் .
இப்ப  மார்க்கெட்டுல கெடைக்கறது எல்லாம் காரட் ,பீட்ரூட் சக்கர தான் .வெளிநாட்டுலேருந்து அதுதான் இங்க வருது . கரும்பிலிருந்து சக்கர எடுக்கணும்ன்னா கிலோக்கு இருநூத்து அறுபத்து அஞ்சு ரூபா ஆகுமாம் .இங்கிருந்து வெளிநாட்டுக்கு போயிட்டு இருந்ததாம் .இந்தம்மா வந்து அத நிறுத்திப்புடிச்சி .அந்த சக்கர  டன் கணக்குல இருக்கும் .கிரேன் வச்சு தான் தூக்க முடியும் .அது அப்படியே வச்சிருந்தா பழுப்பாயிரும் .அத மறுபடியும் கழுவி தான் சக்கரையாக்கணும் .அத  செஞ்சு அத வித்தா தான் காச குடுக்க முடியும்ன்ட்டான் ."

"ஆனா மில்காரன் கெட்டிக்காரத்தனமா பத்து பதினஞ்சு ஏக்கருல கரும்பு  போட்டவனுக்கெல்லாம் காச கொடுத்துட்டான் .அதே மாதிரி பாங்குல வாங்குன கடனையெல்லாம் கட்டிருக்கான் .அதனால எவனும் அவன கேக்க மாட்டேங்குறான் .சின்ன வெவசாயி தான் வழியில்லாம பொலம்பிட்டு கெடக்கான் .அதோட மில்லிலேயே கரெண்ட்  எடுக்கிறான் .அதுல அவன் தேவைக்கு போக மிச்சத்த கவர்ன்மென்ட்டுக்கு கொடுக்குறான் .அதுல அவங்க இவனுக்கு  நாப்பத்து எட்டு கோடி பாக்கியாம் .அத கொடுத்தா வெவசாயிக்கு காச கொடுத்திருவேங்கறான்.நாப்பத்து எட்டு எங்க ?ஆறாயிரம் கோடி எங்க ?"


"இந்தம்மா  ஊரையே கவர் பண்ணிட்டோம்ன்னு நெனைக்குது .அதனால கண்டுக்க மாட்டேங்குது .எல்லாம் இந்த எலவசம் பண்ற வேல .எலவசமே வாங்கக் கூடாதுமா .நம்ம பணத்தையே எடுத்து நம்மகிட்டேயே கொடுக்கிறாங்க .ஓட்டுக்கு பணம் வாங்கலைன்னாலும் வம்புக்கு வரானுங்க .எங்களுக்கு ஓட்டு போடாம போயிருவியான்னு ?"

"வெவசாயி  தான் ,பேப்பருல கூட படிச்சிருப்பீங்க ,வேப்பில கட்டி போராட்டம் ,பிச்சை எடுக்குற மாதிரி போராட்டம்ன்னு தெருவில நின்னு என்னென்னமோ போராட்டம் பண்ணி பாக்குறான் .ஒண்ணும் நடக்கல ."

Thursday, 11 September 2014

பெண்பாவம்

தென் தமிழகத்தின் கிராமங்களில் ஒன்றை சேர்ந்தவர் இவர் .சிகிச்சைக்கு  சில மாதங்கள் வரவில்லை . விசாரித்தபோது ,இவரின்  பதினான்கு வயது மகள் பள்ளிக்கு  சென்று வரும் வழியில் ,ஒருவன் ,இவன் வயது பதினெட்டாம் ,தினமும்  கிண்டல் செய்தபடி இருந்திருக்கிறான் .கையை பிடிப்பது ,தூக்கி சென்று விடுவேன்  என்று இவன் அத்து மீறவும் ,அவன் பெற்றோரிடம் போய்  இவர் , மகனை கண்டிக்கும் படி சொல்லியிருக்கிறார் .அவர்கள் ஏதும் செய்தது போல் தெரியவில்லை .இவன் தொந்தரவு தொடர்ந்திருக்கிறது .அந்த பெண்ணோ பள்ளிக்கு போகவே பயந்து போயிருக்கிறது . பிரச்சனை பெரிதாவது போல் தோன்றவே இவர் போலீசிடம் போயிருக்கிறார் .அவர்கள் ஏதும்  கண்டுகொள்ளவில்லையாம் .பெண் வீட்டில் இருந்தாலும் எவரேனும் துணைக்கு இருக்க வேண்டியிருப்பதால் மருத்துவமனைக்கு வர முடியவில்லை என்று சொன்னார் .

மீண்டும் இன்று வந்திருந்தார் .பேச்சு  வாக்கில் இது குறித்து விசாரிக்கவே ,"அவன்  அப்படியே தான் செஞ்சுக்கிட்டிருந்தான்க்கா .போலீஸ் கிட்ட  போய் சொன்னா  அவங்க ஒண்ணும் கண்டுக்குற மாதிரி தெரியல .அவன் புள்ளைய தூக்கிருவேன்னு மெரட்டிக்கிட்டே இருந்தான் .புள்ள  பள்ளிக்கூடமே  போக மாட்டேங்கு .அப்புறம் அவர புடிச்சு இவர புடிச்சு போலீசுக்கு இருபதாயிரம் கொடுத்தப்புறம் அவன மெரட்டி இப்ப  வேற ஊருக்கு போயிட்டான் ."

"அவன் பிரெண்ட்   ஒரு பய ஊருக்குள்ள  இருக்கான் .அவன் போன வாரத்துல ஒரு மூணு வயசு  புள்ளைய தூக்கிட்டு போய் அசிங்கம் செஞ்சிருக்கான்.அந்த புள்ளையோட அப்பா வெளியூருல வேலைக்கு போயிருக்காப்ல .அந்த பொண்ணு அவனோட போய் ஒத்த ஆளா மல்லுகட்டியிருக்கு .யாரும் என்னன்னு கண்டுக்கல.அப்புறம் போலீசுக்கு ரெண்டாயிரம்  குடுத்திருக்கு .அப்பவும் அவங்க கேஸ் எழுதலக்கா .வெறுமனே அவன மெரட்டி விட்டிருக்காங்க .பாவம் அந்த புள்ள பயந்து போய் கெடக்கு .

"இந்த பயலுவ செல்லுல அசிங்க அசிங்கமா படம் பாத்துட்டு இப்படி புத்தி கெட்டு திரியிறான்ங்கக்கா "

என்னைய விட்டா ஒருத்தனையாவது போட்டு தள்ளிருவேன்க்கா .ஒருத்தன போட்டாத்தான் இவனுங்க அடங்குவாங்க .பத்து லட்சம் செலவாகும் .மூணு மாசம் உள்ள இருக்கணும் .உள்ள மாத்திர முழுங்க விடமாட்டங்க .நீங்க வேற தெனம் விடாம சாப்பிடனும்ன்னு  சொல்றீங்க .அதுக்கே தான் நா பேசாம இருக்கேன்க்கா  ."

"எத்தன வயசுலேயும் பொம்பள புள்ளைய வீட்டுல வச்சுக்கிட்டு நிம்மதியா இருக்க முடியலக்கா ."


Tuesday, 15 April 2014

குட்டி சுட்டி

தன் அப்பா அம்மாவுடன் சும்மாவேனும் ஒட்டிக் கொண்டுவரும்  சுட்டிப்  பெண் .அப்பாவிற்கு மட்டுமே  நோயும் சிகிச்சையும் .காலை நான் வரும் போதே ஓடி வந்து எனக்கு குட் மார்னிங் சொல்வாள் .பெரிய மனுஷி போல அப்பாவின் உடல்நலன் குறித்து கேட்டும் கொள்வாள் .வயது என்னவோ ஆறு தான் .

"நீங்க வாக்கிங் மாதிரி ஏதாவது எக்ஸ்சர்சைஸ் பண்ணுவது நல்லது ."
"எனக்கு நேரம் கெடைக்க மாட்டேங்குது ."
"எங்கப்பா எவ்வளவு நேரம் வாக்கிங் போகணும் ஆன்ட்டி ?"
"அரைமணி நேரமாவது ...."
"டெய்லியா ?"
"ஆமா..."
"சரி, நான் பாத்துக்குறேன்."
இவகிட்ட சொல்லிட்டீங்கள்ல ,இனிமே விடவே மாட்டா ..."

"எங்கப்பா மாத்திரையே சரியா போடறதில ஆன்ட்டி ."
"சரியா தான் போடுறேன் .நீ சும்மா டாக்டர் கிட்ட எதையாவது சொல்லாத ."
"நீ எங்க சரியா போடுற ?அம்மா திருப்பி திருப்பி  சொன்னா தான் போடுற .
நீங்க கரெக்டா டைமுக்கு போடனும்ன்னு  சொல்லியிருக்கீங்கள்ல ,எங்கப்பா போடுறதே இல்ல . இன்னைக்கி கூட டாக்டர பாக்க வேண்டாம்,மாத்திரை மட்டும் வாங்கிட்டு போயிரலாம்னு தான் சொன்னாரு .எங்கம்மா தான் இல்ல டாக்டர பாத்துட்டு தான் போகணும்ன்னு சொன்னாங்க .அப்புறமா தான் வந்தாரு .
எப்படி ஒண்ணைய போட்டு விட்டேன் பாத்தியா :)"

 

Tuesday, 18 March 2014

அன்புடைமை

இன்று  காலையில் நான் என் அறையில் உட்கார்ந்திருக்க அவசரமாய் வந்தார் அந்த மூதாட்டி .இவரின் மகனும் மருமகளும் என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்கள் . அவர்கள் இருவரும்  சிகிச்சைக்கு வருவார்கள் .இவர் எப்போதேனும் வருடம் ஒரு முறை போல வந்து போவார் ,இவர்களது உடல்நிலை குறித்து அறிந்து போக .இவர் தென் தமிழ்நாட்டு கிராம பகுதியை சேர்ந்தவர் .முன் கொசுவம்  வைத்து புடவை கட்டி அள்ளி முடிந்து கொண்டை  போட்டிருப்பார் எப்போதும் .

வந்தவர் வேகமாக ,"ரெண்டு தடவையும் வந்தப்ப நீ இல்லையாம் ,அதனால இந்த பாவி பைய டாக்டர் அம்மாவ  பாக்கவே முடியல .அவங்க வாரதே இல்லன்னு சொல்லிபுட்டான் .அவங்க இல்லைனா நா வரலைன்னு சொல்லியிருக்கேன் .நேத்து வந்து டிக்கெட் போட்டுட்டேன் சும்மா வாங்கன்னு சொல்றான் .சரி அம்மாளுக்குன்னு கொஞ்சம் வாழக்காய் ,அரிசி எடுத்து வச்சிருக்கேன்னு  சொல்ல ,அவுக இருக்குறதே இல்ல ,எல்லாத்தையும் சொமந்துட்டு போயி திரும்ப சொமந்துக்கிட்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டான் .போன தடவ இப்படித்தான் பனங்கிழங்கு எடுத்து வச்சு குருத்துவிட்டு போச்சு .நாச்சியா நீ  வாரமயே இருந்திட்டியே .இங்க வந்ததும் டாக்டரம்மா உள்ள தான் இருக்காங்க வேணும்னா போயி பேசிட்டு வான்னு சொல்றான் .

நாச்சியா ,எனக்கு உடம்பே முடியல .அடுத்த தடவையெல்லாம் வர முடியுதான்னு தெரியல .சாவறதுக்கு முன்னாடி ஒன்னைய பாத்திரனும்ன்னு நெனச்சேன் .இம்புட்டு  பெரிய தேங்கா ஏழு ,ஒரு கிலோ பச்சரிசி ,ஒரு தார வாழப்பழம்,வெளிய வச்சாலே பழுத்து போகும் .நல்ல நாட்டு பழம் .அம்புட்டும் எடுத்து வச்சேன் .நாச்சியா ,இல்லன்னு சொல்லி கொண்டு  வார முடியாம பண்ணிட்டானே படுபாவி .

இனிமேட்டு என்னால வர முடியாது .அய்யாவுக்கு வேற மேலுக்கு முடியல .நாச்சியா நீ எங்க ஊரு பக்கம் வந்தா கண்டிப்பா வீட்டுக்கு வரணும் .நீ ஸ்டேஷனுக்கு வந்து  ஒரு போன் மட்டும் போடு ,நா வந்து கூட்டியாறேன் .ஒனக்கு என்ன வேணுமோ சப்பாத்தி ,பூரி ,கேப்ப களி  நீ என்ன கேக்குறியோ செஞ்சு  தாரேன்   .நாச்சியா ,நீ கண்டிப்பா வரணும் ."



Wednesday, 12 February 2014

விடுதலை

எந்த ஒரு நீண்ட கால   நோயாளிக்கும் தன் நோயிலிருந்து விடுதலை கிடைத்து விட வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும் .என்றேனும்  அது பலிக்கும் என்ற நம்பிக்கையை சார்ந்தே பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நான் பணிபுரிவது எச் ஐ வி நோயாளிகளுக்கான ஒரு  சிறப்பு மருத்துவமனையில் .சிகிச்சைக்கு தொடர்ந்து வந்தாலும் இது குறித்த கனவுகளும் நம்பிக்கையும் கண்டிப்பாக எல்லாருக்கும் உண்டு .சிலர் சளைக்காமல் ஒவ்வொரு முறையும் வரும் போது விசாரித்து போவார்கள் .சிலர் மருந்து வருமா ?என்பதோடு நிறுத்தி கொள்வார்கள் .சிலர் ஊடகங்களில் இது குறித்து வரும் செய்திகளை கொண்டு வந்து விளக்கம் கேட்பார்கள் .அனேகமாக என்னுடைய பதில் கண்டிப்பாக சில வருடங்களுக்குள் வரும் என்பதாகவே இருக்கும் .

வழக்கம் போல் சிகிச்சைக்கு வந்தார் ஒரு பெண் .

பெண் -"நோயே  இல்லாம பண்ண  மருந்து வருமா ?"
நான் -    "கண்டிப்பா வரும் "
பெண்  -"எப்ப வரும் ?"
நான் -  "எப்ப வேணும்ன்னா வரலாம் ...ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள .."
பெண் -"இந்த ஆஸ்பத்திரி எச் ஐ வி இருக்கறவங்களுக்கு மட்டும் வைத்தியம்    பாக்குறது தான?"
நான் - "ஆமா "
பெண் -"அந்த மருந்து வந்தா இங்க தருவீங்களா ?"
நான் -"கண்டிப்பா தருவோம் ..."
பெண் -எங்களுக்கெல்லாம் மருந்து கொடுத்து நாங்க நல்லாயிட்டா ,நீங்க என்ன செய்வீங்க ?"
நான் -"தொழில் கெட்டு போயிரும்ன்னு மருந்து வந்தா கொடுக்காம
வச்சிக்குவோம்ன்னு நெனச்சீங்களா ?நோயா இல்ல ..ஒங்களுக்கெல்லாம் மருந்து கொடுத்திட்டு நாங்க வேற நோய்க்கு வைத்தியம் பாக்க போயிருவோம் ."