Thursday, 8 September 2016

தேவதைகள்

ஒன்பது வயது சிறுமி .அம்மா இல்லை .அப்பா குடிகாரர் .தாத்தாவும் பாட்டியும் அழைத்து வந்தார்கள் .வயிறெல்லாம் உப்பலாக .மூச்சு திணறிக்கொண்டு .
டெஸ்ட்டுகள் செய்து  பார்த்ததில் வயிற்றில் TB தொற்று போல் தோன்றியது .சிகிச்சை ஆரம்பித்து   ஒரு மாதம் கழித்து வரும் படி சொல்லி அனுப்பி வைத்தேன்.

இரண்டு வாரங்களுக்கு முன் திரும்ப வந்தாள் .வயிறு இன்னமும் கொஞ்சம் உப்பலாக .காய்ச்சலும்  வலியும் குறைந்து இருந்தன .CT  ஸ்கேன் செய்ததில் வயிற்றில் இன்னமும் நெறி கட்டிகள் குறையாமல் இருப்பது தெரிந்தது .ஒருவேளை கேன்சராக இருக்குமோ என்று அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பினேன் .

அவர்களும் சிலபல டெஸ்ட்டுகள் செய்த பின் ,பயாப்சி (biopsy ) செய்ய முடிவெடுத்து போன வாரத்தில் செய்தார்கள் .பலமுறை ஆந்திராவில் இருந்து அலைந்து திரிந்தார்கள் தாத்தாவும் பாட்டியும் இதற்கென .எங்களுக்கென்று இவள் ஒருத்தி தான் இருக்கிறாள் என்பார்கள் அழுதபடி .இன்று சோதனை முடிவுகள் வந்து ,TB தான் என்று உறுதியானது .

இந்த இரண்டு வாரத்தில் இவள்  உடல் நலமும் இன்னமும் கொஞ்சம் சீரானது .இந்த இரண்டு வாரங்களில் அவளும் நானும் ஒரு ஆறு முறையேனும் சந்தித்திருப்போம் .சிரித்துக்கொண்டே இருப்பாள் .கேள்விக்கு மட்டும் பதில் சொல்வாள் .எப்போதும் பொம்மை போல அழகாக உடை உடுத்தி இருப்பாள் .
இன்று அவள் தாத்தா பாட்டியிடம் ,அடுத்து என்ன செய்ய வேண்டும் ,எப்போது வர வேண்டும் என்றெல்லாம் பேசி ,இரண்டு மாதங்கள் கழித்து பார்க்கிறேன் என்று சொல்லி முடித்தேன் .

சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் .போகும் போது ,"டாக்டர் உங்க பேர் என்ன ?"என்  பேரு பூங்குழலி ."பூங்.....பூங்குலலி ...பூங்குழலி ."
"டாக்டர் பூங்குழலி ஆன்ட்டி -சால தேங்ஸ்"....

 


No comments: