Friday, 31 July 2009

அம்மன் கொடை

சாயங்காலம் திரும்ப ஊர் சுற்ற ? கிளம்பினோம் .தெரிந்தவர்களை எல்லாம் பார்த்து விட்டு வர வேண்டும் என்பதால் ஒவ்வொரு வீடாக சென்று வந்தோம் .ஊரையே ஒரு முறை வலம் வந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும் .

இரண்டாம் நாள் கொடையின் சிறப்பு சாமியாட்டம் .
பந்தலில் ஒரு பக்கம் ,பொங்கல் விட்டுக் கொண்டிருந்தார்கள் .பொங்கல் முடிந்தவுடன் கொட்டடிக்க ஆரம்பித்தார்கள் .கொட்டடிக்க அடிக்க சாமியாட்டம் துவங்கியது .சரியான இட நெருக்கடி .சாமிக்கு ஆடவே இடமில்லை ."எடம் விடுங்கையா ...வழிய மறிச்சு நிக்காதீங்க " என்று சொல்லியபடியே சிலர் கூட்டத்தை விலக்கி சாமிக்கு ஆட இடம் கொடுக்க முயன்றுக் கொண்டிருந்தனர் .ஆட இடமில்லாமலோ என்னவோ, சாமி முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தது .


இந்த நெரிசலில் சிலர் சாமிக்கு மாலைகள் போடத் துவங்கினர் .எல்லாம் கொஞ்சமே பூக்கள் வைத்து கட்டப்பட்ட மாலைகள் .இந்த மாலைகளின் நார்கள் எல்லாம் சேர்ந்து சாமியின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தன .இதை எடுக்க ஒருவர் முயல அது இன்னமும் கொஞ்சம் இறுகிப் போனது .ஒருவழியாக ,சில மாலைகளை கழற்றி போட்டனர் .

கொஞ்சம் மூச்சு விட முடிந்தாலோ என்னவோ சாமி கொஞ்சம் வலுவாக ஆடத் துவங்கினார் இப்போது .இந்த ஆட்டம் அதிகாலை மூன்று மணி வரை தொடருமாம் .

Wednesday, 22 July 2009

அம்மன் கொடை

அடுத்த நாள் காலை தான் கோவிலுக்கு போக முடிந்தது .

கோவிலுக்குள்ளே நல்ல கூட்டம் .அதைவிட அதிகமாக குப்பையும் .ஒரு பக்கம் குடும்பம் குடும்பமாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் .இன்னொரு பக்கம் சக்கரை பொங்கல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் .அந்த தொன்னைகளும் மிச்சமாகிப் போன சக்கரை பொங்கலும் காலில் மிதிபட்டு பிசிபிசுவென இருந்தது .சுத்தம் செய்ய யாரும் முற்பட்டதாகக் கூடத் தெரியவில்லை .ஆனாலும் கோவில் திருவிழாவிற்கான களையோடு இருந்தது என்றே சொல்ல வேண்டும் .

வெளிப் பிரகாரம் முழுவதும் கடைகள் ,செருப்பு கடைகள் உட்பட .கொடைக்கென போட்டிருப்பதாக சொன்னார்கள் .நல்ல விற்பனை ஆகிக் கொண்டிருந்தது .விடிய விடிய இந்த கடைகள் திறந்திருக்குமாம் .வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தோம் .

Tuesday, 21 July 2009

அம்மன் கொடை
கரகம் தான் அன்றைய மட்டும் அல்ல கொடையின் ஹைலைட் போலும் .
இரவில் வீடு திரும்பிய போது மணி பன்னிரண்டு இருக்கும் .திரும்பி வர வழியே இல்லை .கோவிலை சுற்றி ஒரு சுற்று பாதை வழியாக தான் வர முடிந்தது .அப்படியொரு கூட்டம் .வழியில் அப்படியே புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்தேன் .
கோவிலுள் ஆண்கள் உட்கார்ந்து பூ கட்டிக் கொண்டிருந்தனர் .ஓலையில் மஞ்சள் நிற பூக்களை பரப்பி வைத்து அவர்கள் பூ கட்டுவது பார்க்கவே அழகாக இருந்தது .அவர்களை முதலில் ஒரு புகைப்படம் எடுக்க ,சரியாக விழவில்லை அது .மீண்டும் எடுக்க நான் முற்படும் போது ,சட்டென நிமிர்ந்து பார்த்த ஒருவர் ,"அட போட்டோ படமா எடுக்கீங்க ?"என்று கேட்டப்படியே பெரிதாய் சிரித்து ஒரு போசும் கொடுத்தார்.

Saturday, 18 July 2009

அம்மன் கொடை
ஊரே வாய் பிளந்து பார்த்திருக்க ,இரண்டு கரகங்கள் எடுத்து வந்து வைக்கப்பட்டன .இரண்டு பெண்களும் ஒரு ஆணும் வந்தனர் .

மினு மினு வென ஒரு ஒப்பனை .
நல்ல கருப்பு நிறத்தில் போர்வையை போர்த்திக் கொண்டிருந்தனர் .
விலக்கிய போது சரியான அரைகுறை ஆடையில் இருந்தனர் .
கரகத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு தலையில் தூக்கி வைத்து ஆட ஆரம்பித்தனர். அந்த ஆண் ,சும்மா கரகம் இல்லாமலேயே ஆடினார் .
சிறப்பாக ஆடினார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது ஆனால் முன்னும் பின்னுமாக நடந்து ஆடிக் கொண்டே இருந்தனர் .

இப்போது மூன்றாவதாக ஒரு பெண் வந்து நின்று கொண்டிருந்தார் .இன்னும் கொஞ்சம் அதிக ஒப்பனையுடன் .ஆட்டம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டே இருந்தார் .இவர் ஆட ஆரம்பித்தவுடன் தெரிந்தது ஏன் கூட்டம் முழுவதும் இங்கே காத்துக் கிடக்கிறதென்று .

அந்த மூன்றாவது பெண்ணும் அந்த ஒரு ஆணும் சேர்ந்து ஆடிய ஆட்டம் ஆபாசமாக இருந்தது என்று சொன்னால் கூட போதாது .கூட்டத்தினுள் அந்த பெண்ணை தூக்கிப் போட்டு ,இழுத்து என்று காணக் கூசும் நடனமாக அது இருந்தது .நேரம் ஆக ஆட்டமும் மோசமாகிக் கொண்டே இருந்தது.கூட்டம் என்னமோ சங்கடங்கள் ஏதும் இன்றி தான் பார்த்துக் கொண்டிருந்தது .எங்களுக்கு தான் கூச்சமாக இருந்தது போலும் ,கிளம்பி விட்டோம் .


காலையில் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது ,அதிகாலை மூன்று மணிக்கு ஆட்டம் முடிந்ததாக சொன்னார்கள் .நேரம் ஆக ஆக அதிகம் ஆபாச பேச்சுகளும் இருந்ததாகவும் சொன்னார்கள் .நாங்கள் கரகம் சுமந்தே ஆடவில்லையே என்றதற்கு ,இப்படிப்பட்ட ஆட்டம் ஆடுபவர்களுக்கு தான் அதிகம் வாய்ப்பு கிடைக்கிறதாம் .இவர்களை கஷ்டப்பட்டு தேடி புக் பண்ணி வருகிறார்களாம் .

என் உறவுப் பெண் ஒருவர் சொன்னார் ,"நாங்களெல்லாம் யாரும் இத பாக்க போறதில்ல .ஊருல இருக்க வயசானவங்க தான் இத ஒக்காந்து விடிய விடிய பாப்பாங்க ."

Friday, 17 July 2009

அம்மன் கொடை
உட்காரக் கூடிய இடங்களில் எல்லாம் ஆட்கள் முன்பே நிறைந்திருந்தார்கள் .இப்போது நிற்கக் கூட இடம் இல்லை .வில்லுப்பாட்டு மேடையருகே அதிகம் முப்பது பேர் இருந்திருப்பார்கள் .கூட்டம் முழுவதும் கரகாட்டத்தை பார்க்கவே மொய்த்துக் கொண்டிருந்தது .

கரகாட்டம் ஆரம்பிக்கும் முன்னரே மேள வாத்தியக்காரர்கள் நின்று வாசித்து கொண்டிருந்தார்கள் .இவர்கள் வாசிப்பு ஆட்டத்திற்கு ஒரு முன்னோட்டம் போலிருந்தது .ஆட்டத்திற்கான மூடை கொண்டு வருவதிலும் இந்த வாசிப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது என்றே நினைக்கிறேன் .அந்த விளக்குகளின் ஒளியில் வெட்கையில் வியர்த்து வழிந்துக் கொண்டிருந்தது .ஆனாலும் அசராமல் சாமியாட்டத்தில் துவங்கி வாசித்துக் கொண்டே இருந்தார்கள் . பல மணி நேரம் ஆகியிருக்கும் இவர்கள் முடிக்கும் போது .

ஒரு தடவை கூட சோர்வோ ,களைப்போ தெரியவே இல்லை வாசிப்பில் ....

Thursday, 16 July 2009

அம்மன் கொடை

கொட்டடிக்க ஆரம்பித்த உடன் கூட்டத்தை ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டது .

சுடலைமாடசாமி கோவிலருகில் ஒரு கூட்டமும் ,கரகம் பார்க்க தயாராக ஒரு கூட்டமும் என்று கூட்டம் பிரிந்து கிடந்தது .கொட்டடித்தவுடன் இரண்டு மூன்று பேர் சாமி ஆட ஆரம்பித்தார்கள் .ஆடுபவர்களுக்கு அலங்காரம் நடந்தது .சலங்கை கட்டிய அந்த கம்பும் சலங்கை வைத்த கருப்பு அரைக்கால் சட்டையும் போடாமல் நேரில் வந்தால் நிஜ சுடலைமாடனையே எவருக்கும் அடையாளம் காண முடியாது .இப்படியாக சுடலைமாடன்கள் ஆட ஆரம்பிக்கவும்
வழக்கம் போல எல்லோரும் மாலை போடவும் குறி கேட்கவும் தயாராக நின்றனர் .ஆனால் சுடலைமாடனின் ஆட்டம் அன்றைய நிகழ்ச்சிகளில் முக்கியமானது இல்லை போலும் .ஆரம்பித்தஒரு அரை மணி நேரத்தில் சாமியாட்டம் முடிந்து போனது .

கூட்டம் கலையும் முன்னரே வில்லுப்பாட்டுக்கென ஒரு மேடையும் கரகாட்டத்திற்கு இடமும் தயாராகிக் கொண்டிருந்தது .

Tuesday, 14 July 2009

அம்மன் கொடை
கொடை அன்று சாயங்காலம் தான் போய் சேர்ந்தோம் ஆலடிப்பட்டிக்கு .ஊரில் ஒரு திருவிழாவிற்கான அறிகுறிகளோ பரபரப்போ அதிகம் காணப்படவில்லை என்றே சொல்லலாம் அந்த நேரத்தில் .கேட்ட போது ,ஆரம்பிக்க இரவு ஆகும் என்பதால் கூட்டம் இனிதான் வரும் என்று சொன்னார்கள் .


ஒரு ஒன்பது மணி போல ,கோவில் பக்கம் போனோம் .ஜகஜோதியாய் விளக்குகள் ,அலங்காரங்கள் என்று களைக்கட்டியிருந்தது .கூட்டம் பரவாயில்லை இப்போது . வழியில் சுடலைமாடசாமி கோவில் . கோவில் வாசலில் உட்கார்ந்து திருநீர் கொடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர் .பக்கத்தில் ஒரு பெரிய உண்டியலையும் வைத்திருந்தார்கள் .இங்கு தான் கொட்டடடிக்க ஆரம்பிப்பார்கள் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள் .எதிரே வில்லுப் பாட்டுக்கான ஆயத்தங்களை ஒரு குழுவினர் செய்து கொண்டிருந்தார்கள் .இடம் பிடித்து உட்கார்வதில் ஆர்வமாக ஒரு கூட்டம் சுற்றி வந்து கொண்டிருந்தது .

மற்றபடி ஊரே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த கொட்டு சத்தம் இன்னமும் கேட்க ஆரம்பிக்கவில்லை .இன்னமும் நேரம் இருப்பதாக தோன்றவே ,பக்கத்தில் இருந்த ஜவுளிக் கடைக்குள் நுழைந்தோம் .ஊருக்கு போய் வந்ததன் நினைவாக இருக்கட்டுமே என்று ஒரு புடவையும் எடுத்துக் கொண்டேன் .வெளியே வந்து பார்த்தால் கூட்டம் அதிகமாகியிருந்தது .

கொட்டும் அடிக்க ஆரம்பித்திருந்தார்கள் .

Monday, 13 July 2009

வடை

இது சமையல் குறிப்பு இல்லை .


ஒரு பதினைந்து நாளுக்கு முன்னால ,ஞாயித்துக்கிழமை ,வெண்பொங்கல் செஞ்சேன் .சரி ,நல்லா இருக்குமேன்னு உளுந்து வடைக்கும் மாவு ரெடி பண்ணி வடையும் தட்டிப் போட்டாச்சு .கொஞ்சம் வேகட்டும்ன்னு அடுப்புல தீயை குறைச்சிட்டு ,உள்ளே போனா டம்முன்னு சத்தம் .ஓடி வந்து பாத்தா ,போட்டிருந்த நாலு வடையில ஒண்ணைக் காணோம் .அடுப்பு பூரா எண்ணெய் .

எங்கடா வடைன்னு தேடினா அது எங்கயோ ஒரு பக்கத்தில போய் விழுந்திருக்கு .சரி ஏதோ தண்ணி அதிகமாகி தெறிச்சிருக்கும் போலன்னு உள்ளே கிடந்த வடைய திருப்பி போட்டுட்டு நின்னுட்டிருக்கேன் ,திரும்பவும் ஒரு டமார் .இப்ப இன்னொரு வட வெளிய குதிச்சிது .கூடவே ஒரு ரெண்டு கரண்டி எண்ணையும் ...


நல்ல வேளை முன் ஜாக்கிரதையா கொஞ்சம் தள்ளியே நின்னுக்கிட்டிருந்தேன் .அப்படியும் முகத்தில கொஞ்சம் எண்ணெய் பட்டுப் போச்சு .பயத்தில அப்படியே ஓடிப் போய் தண்ணிய முகத்தில அள்ளி அள்ளி ஊத்தினேன் ( பாவ மன்னிப்பு சிவாஜி மாதிரி )எரிச்சல் மெதுவா குறைஞ்சது .அதுக்கப்புறம் அடுப்பை சுத்தம் பண்ணி மிச்சம் இருந்த மாவையும் சுட்டு முடிச்சேன் (என் தைரியத்த என்னாலேயே பாராட்டாம இருக்க முடியல ).


வெளிய குதிச்ச ரெண்டு வடையும் பாத்தா இப்ப வடை மாதிரியே இல்லை .ரெண்டு லேயரா பிரிஞ்சிருந்தது .வெளி ஓடு அப்படியே வெடிச்சு உள்ள ஒரு சுத்து மாவா தெரிஞ்சது .இதுக்கு என்ன பேர் வைக்கலாம்ன்னு இன்னமும் யோசிச்சிட்டுருக்கேன் .


முகத்தில ஒரு பக்கத்தில மட்டும் இப்ப ரெண்டு மூணு தழும்பு இருக்கு .நிஜமாவே நிலா மாதிரி இருக்கு என் முகம் இப்ப ....

Tuesday, 7 July 2009

மாப்பிள்ளை முறுக்கு

சிகிச்சைக்கு வரும் ஒரு தம்பதியர் இவர்கள் .கணவர் ஓரினச் சேர்க்கையின் மூலம் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர் .இப்போது மனைவிக்கும் இவர் மூலம் இந்நோய் .இரண்டு குழந்தைகள் .முறையான சிகிச்சை ,அதை செய்து கொள்வதற்கேற்ற வசதிகள் ,அமைதியான குடும்பம் என்று பெரிய சிக்கல்கள் ஏதும் இன்றிதான் போய்க் கொண்டிருக்கிறது இவர்கள் வாழ்க்கை .

ஒரு முறை மருத்துவமனைக்கு வந்த போது ,இவர் மனைவி ரொம்பவே வருத்தமாகவும் ,படபடப்பாகவும் இருந்தார் .என்ன என்று விசாரித்த போது ,"இவரு ரொம்ப சண்ட போடுறார்,"என்று கூறினார் .சண்டைக்கான காரணம் ,"இவ அம்மா அப்பா என்ன மரியாதையா நடத்தல .என்ன பாக்கும் போது ஏதோ ஒப்புக்கு பேசி வைக்கிறாங்க .என்கிட்டே ,மாப்பிள்ள நல்லா இருக்கீங்களா ?மாத்திரையெல்லாம் சரியா சாப்பிடுறீங்களா ன்னு கூட விசாரிக்கறதில்ல .அப்புறம் கோவம் வருமா ,வராதா ?"

Saturday, 4 July 2009

பெண்ணுரிமை

பல நூறு வருஷமா தான்
பூட்டி தான் வச்சாங்க
கெணத்துக்குள்ள தவள போல
மாட்டி தானே வச்சாங்க

உரிமையெல்லாம் தந்து புட்டோம்
கரிசனந்தான் கொண்டு புட்டோம்
மேடையில ஏத்திபுட்டோம்ன்னு ....
சொந்த கத எதுக்கு இப்ப?

என்ன உரிம தந்தீக ?
எப்படித்தான் தந்தீக ?
எங்கிருந்து தந்தீக ?
எவருடையத தந்தீக ?

கல்லில மாவு அரைச்சோம்
கிரைண்டரில் அரைக்கும் உரிம தந்தீக
கிணத்தடியில் தொவச்சிக்கிட்டோம்
மிஷினில் தோய்க்கவும் உரிம தந்தீக

அட பிள்ள ஒன்னு பெத்துகிடத்தான்
பெரிய உரிம தந்தீக
பத்து மாசம் சொமந்தப்புறம்
ஒரு எழுத்துக்கு உரிம தந்தீக

பாரி வள்ளல் பரம்பர தான்
பேகனுக்கு ஒறவிவுக
வாரி கொடுத்தே வாழ்ந்து விட்ட
எம் .ஜி ஆரு போல் இவுக

வீட்டிலிருந்து வாசலுக்கு
போக உரிம தந்தீக
அட அப்புறமா வேலைக்கும்
போக உரிம தந்தீக

சம்பளத்த கொண்டு தந்தா
சேல வாங்க உரிம தந்தீக
மெச்சி தான் சொல்ல வேணும்
ரவிக்க வாங்கவும் உரிம தந்தீக

அள்ளி அள்ளி தந்தீக
அசத்தலா தந்தீக
சிம்மாசனம் மேலேறி
பகட்டா தான் தந்தீக

எத்தன நாள் சொன்னாலும்
சொல்லவே முடியாது
எப்படித்தான் சொன்னாலும்
வெளங்க சொல்ல இயலாது

சொந்த பெரும பேசிகிட்டு
அதிகாரம் ஏத்திக்கிட்டு
பெருசாக பேசாதீக
அதிலொண்ணும் பெருமையில்ல

ஒங்க வழி பாத்துகிட்டு
ஒழுங்க தான் போய்க்கிடுங்க
எங்க வழி நேராத்தான்
நாங்களே செஞ்சுக்குறோம்