Monday, 31 August 2009

கனவு போல் ...


கதிரிழந்த ஆறுகள் ஆழத்துள்
அலைகளை அழுகிற அவ்விடத்தில் ,
மந்திரித்தது போலே உறங்குகிறாள்.
நிழல்கள் மகிழ்வாய் துணை சேரும்
இவ்விடம் தேடி நெடும் தூரம்,
ஒற்றை விண்மீன் வால் பற்றி
பின்தொடர்ந்து வந்தவளாய் .
துயில் கலைக்க வேண்டாம் ,உறங்கட்டும்.


வீணில் விறைத்துகிடக்கும் அந்தியை நாடி
குளிர் நீர் இறைக்கும் ஊற்றுகள் நாடி
சிவந்து வெளுக்கும் பகல் விடுத்தாள்
காடுகள் நிறைத்த கதிர் விடுத்தாள்.
துயில் வழியே ,திரையூடே போல்
வானம் வெளிறியதாய்தெரியக் காண்கின்றாள்
சோககீதங்கள் இசைத்தலையும்
வானம்பாடியின் குரலும் கேட்கின்றாள்


ஓய்வு ஓய்வு ,பரிபூரண ஓய்வு
உச்சி முதல் மார்புவரை சாற்றியதாய்.
மேற்கில் ஊதா நிலம் நோக்கி
அவள் முகம் சாய்த்தே கிடக்கின்றாள் .
மலையிலும் வெளியிலும் முதிர்ந்திருக்கும்
மணிகளை அவள் காணப்போவதில்லை
அவள் கைகள் தொட்டே ரசிக்கின்ற
மழைத்துளியையும் உணரப் போவதில்லை


ஓய்வு , ஓய்வு ,இனி எப்பொழுதும்
பாசிப் படர்ந்த கரையோரம்
ஓய்வு ஓய்வு மனதாழம் வரை
காலம் இல்லாது ஓயும் வரை.
எந்த வலிக்கும் கலையாத உறக்கம் இது
எந்த பகலுக்கும் விடியாத இரவு இது
அவளுறையும் பூரண அமைதியையே
உவகை முந்தி நீக்கும் வரை
DREAM LAND

by: Christina Rossetti (1830-1894)WHERE sunless rivers weep
Their waves into the deep,
She sleeps a charmed sleep:
Awake her not.
Led by a single star,
She came from very far
To seek where shadows are
Her pleasant lot.

She left the rosy morn,
She left the fields of corn,
For twilight cold and lorn
And water springs.
Through sleep, as through a veil,
She sees the sky look pale,
And hears the nightingale
That sadly sings.

Rest, rest, a perfect rest
Shed over brow and breast;
Her face is toward the west,
The purple land.
She cannot see the grain
Ripening on hill and plain;
She cannot feel the rain
Upon her hand.


Rest, rest, for evermore
Upon a mossy shore;
Rest, rest at the heart's core
Till time shall cease:
Sleep that no pain shall wake;
Night that no morn shall break
Till joy shall overtake
Her perfect peace.

Friday, 28 August 2009

தனிமை


இரவில் தூக்கமில்லை,
இப்போது தனிமை மட்டுமே
என் படுக்கையருகே இருக்க வருகிறாள் .
அவள் காலடிச் சத்தங்கள் நெருங்கும் வரையும்
சோர்ந்த பிள்ளையாய் அசந்துக் கிடக்கிறேன்
மெல்ல விளக்கை ஊதி நிறுத்தி
இருளைக் கூட்டினாள் , பார்த்துக் கிடக்கிறேன் .
இடமும் புறமும் அசையாதமர்ந்து
அமர்ந்தே சோர்ந்து தலையைக் கவிழ்கிறாள்.
அவளும் முதிர்ந்தவள் ,
அவளும்,போர்களை சண்டையிட்டறிந்தவள்
மாலையாய் அதனால் பெருமைகள் சுமப்பவள் .

சோகம் சூழ்ந்த இருளினூடே
கரைவிட்டு மெல்ல அகலும் அலையும்
வெறும் கரை தொட்டு அரை மனதாய் விலகும் .
விந்தைக் காற்றொன்றும் வீசி முடித்ததும்
எதுவும் இல்லை ...அமைதி மட்டும்.
ஏற்றுக் கொள்கிறேன் நானும்
தனிமையை நாடி அவள் கரம் பற்றவும்
இறுகப்பற்றி அவள்வசம் காத்துக்கிடக்கவும்,
கண்ணில் விரியும் தரிசில் எங்கும்
மழை ஒற்றை ஒலியாய் நிரம்பும் வரையும்


Loneliness
By Katherine Mansfield

Now it is Loneliness who comes at night
Instead of Sleep, to sit beside my bed.
Like a tired child I lie and wait her tread,
I watch her softly blowing out the light.
Motionless sitting, neither left or right
She turns, and weary, weary droops her head.
She, too, is old; she, too, has fought the fight.
So, with the laurel she is garlanded.

Through the sad dark the slowly ebbing tide
Breaks on a barren shore, unsatisfied.
A strange wind flows… then silence. I am fain
To turn to Loneliness, to take her hand,
Cling to her, waiting, till the barren land
Fills with the dreadful monotone
of rain

Thursday, 27 August 2009

குருதட்சனை
எண்பது வயதை கடந்தவர் திரு.வெங்கடராமன் என்பவர் . தமிழாசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் .அதை விட முக்கியமாக தன் மாணவர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் .2007 ல் ஒரு பழைய மாணவர்களின் சந்திப்பின் போது இவர் கடன் தொல்லை காரணமாகவும் வாடகை பிரச்சனை காரணமாகவும் தன் ஓய்வூதியத்தில் சமாளிக்க முடியாமல் சிரமப்படுவதை அறிந்த இவரின் மாணவர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்தனர் .
அதன்படி இவரின் மாணவர்கள் மற்றும் மாணவரல்லாதவர்களின் பங்களிப்போடு பத்து லட்சம் ரூபாய் சேர்க்கப்பட்டது .இதில் நாமக்கல் அருகே குருசாமிபாளையம் என்ற ஊரில் நிலம் வாங்கி இதில் இரண்டு மாடி வீடும் கட்டப்பட்டது ."குருநிவாஸ் " என்று இதற்கு பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது . இந்த வீட்டை தங்கள் ஆசிரியருக்கு காணிக்கையாக்கியிருக்கும் மாணவர்கள் ,அதை இந்த வருடம் ஆசிரியர் தினத்தன்று அவரிடம் முறைப்படி ஒப்படைக்கவிருக்கிறார்கள் .
ஆசிரியர் மீது மரியாதை இல்லாத மாணவர்கள் ,மாணவர்கள் மீது அதிகம் ஈடுபாடு இல்லாத ஆசிரியர்கள் என்று பரவலாக குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிற இன்றைய காலகட்டத்தில் ,ஒரு ஆசிரியருக்கு அதுவும் தமிழாசிரியருக்கு நன்றி பாராட்டியிருக்கும் இந்த மாணவர்களை பாராட்டுவோம் .நன்மக்களாய் தன் மாணவரை உருவாக்கிய அந்த ஆசிரியரையும் போற்றுவோம் .

Tuesday, 25 August 2009

நானும் அவளும்


அவள் பாடிக்கொண்டே தான் இருந்தாள்
பசுமை போர்த்திய ஓடையின் கரையில்
உற்சாகம் சுமந்த கதிரின் ஒளியில்
துள்ளிக் களிக்கும் மீன்களை பார்த்துக் கொண்டே

நான் அழுதுக்கொண்டே தான் இருந்தேன்
நிழல்கள் போர்த்திய நிலவின் ஒளியில்
கண்ணீராய் இலைகளை ஓடையில் உதிர்க்கும்
மே மாத மலர்களைப் பார்த்துக் கொண்டே

நான் நினைவுகளால் அழுதேன்
அவள் நம்பிக்கைகளால் பாடினாள்
என் கண்ணீரைக் கடல் விழுங்கிக் கொண்டது
அவள் பாடல்கள் காற்றில் உயிர் இழந்து கரைந்தன


Song (She Sat And Sang Alway)
by Christina Rosetti

She sat and sang alway
By the green margin of a stream,
Watching the fishes leap and play
Beneath the glad sunbeam.

I sat and wept alway
Beneath the moon's most shadowy beam,
Watching the blossoms of the May
Weep leaves into the stream.

I wept for memory;
She sang for hope that is so fair:
My tears were swallowed by the sea;
Her songs died on the air.

Friday, 21 August 2009

மீண்டும் வா
இரவிலுறங்கும் அமைதியில் என்னிடம் வா
கனவில் பேசும் மௌனத்தில் என்னிடம் வா
செழித்த கன்னமோடு ஒளிரும் கண்களோடும் வா
ஓடையில் நீந்தும் கதிரொளி போலும் வா
கடந்து போன
என் நினைவே ,நம்பிக்கையே ,என் காதலே
கண்ணீரில் மீண்டும் என்னிடம் வா


தித்திக்கின்ற கனவே ,
திகட்டத் தித்திக்கின்ற கனவே ,
கசந்தினிக்கின்ற கனவே
சொர்க்கத்தில் அன்றோ நீ விழித்திருக்க வேண்டும்.
அங்கே காதல் ததும்பி
உயிர்கள் களித்திருக்கும்
தாகித்திருக்கும் கண்கள் கதவில் காத்திருக்கும்
மெல்லத் திறக்கும் கதவும்
உள்ளுறையச் செய்து மீண்டும் அகற்றாதிருக்கும்


மரணத்தில் விரைத்திட்ட என் உயிர் வாழ்ந்திருக்க
என் கனவுகளில் என்னிடம் வா
துடிப்பிற்கொரு துடிப்பாய் மூச்சுக்கொரு மூச்சாய்
உனக்கு தருவேன்
மீண்டும் கனவில் என்னிடம் வா
மெல்லச் சொல்லி மெல்லச் சாய்ந்திரு
அன்று போலவே ,என் அன்பே ,என்றோ போலவேEcho
by Christina Rossetti

Come to me in the silence of the night ;
Come in the speaking silence of a dream ;
Come with soft rounded cheeks and eyes as bright
As sunlight on a stream ;
Come back in tears,
O memory, hope, love of finished years.

O dream how sweet, too sweet, too bitter sweet,
Whose wakening should have been in Paradise,
Where souls brimfull of love abide and meet ;
Where thirsting longing eyes
Watch the slow door
That opening, letting in, lets out no more.

Yet come to me in dreams that I may live
My very life again though cold in death :
Come back to me in dreams, that I may give
Pulse for pulse, breath for breath :
Speak low, lean low,
As long ago, my love, how long ago.

Thursday, 20 August 2009

கதை

இது ரொம்ப வருஷங்களுக்கு முன்னால நடந்தது .என் பெரிய மகனுக்கு அஞ்சு வயசு இருக்கும் அப்ப .இவனும் கத சொன்னா தான் தூங்குவான் .அதவும் நெறைய சொல்லணும் .நெறைய நேரம் எங்கப்பாவோட உக்காந்து டிஸ்கவரி சேனல் பார்ப்பான் .

இவனுக்கு முதல் முறையா வெறகு வெட்டி கதைய சொல்றேன் .தண்ணிக்குள்ள கோடாலி விழுந்ததும் வெறகு வெட்டி ஓ ன்னு அழுதான் ன்னு நான் சொல்றேன் .இவன் கேக்குறான் ,
"எதுக்கு அழுதான் ?"
"கோடாலி இல்லைனா வெறகு வெட்ட முடியாது .வெறகு வெட்டி விக்கலைன்னா இவனுக்கு காசு கெடைக்காது அதுக்குத் தான் .புதுசு வாங்கவும் காசு இல்ல."
"அதுக்கு எதுக்கு அழனும் ?டிஸ்கவரி சேனல்ல கையில காலில எதையோ மாட்டிக்கிட்டு தண்ணிக்குள்ள போறாங்களே ,அது மாதிரி போயி எடுத்திட்டு வர வேண்டியது தானே ?"

Wednesday, 19 August 2009

கதை

தினம் ராத்திரி என் மகனுக்கு கதை சொல்லனும்.அதவும் புதுப்புதுக் கதையா வேற சொல்லணும் .இதுக்காக நானும் நிறைய கதை படிக்க வேற வேண்டியிருக்கு .இப்ப அது இல்ல விஷயம் .இப்ப ரெண்டு நாள் முன்னால கதைன்னு ஆரம்பிச்சான் .நானும் சரி யோசிச்சு சொல்றேன்னு யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் ,புதுசா எதுவுமே ஞாபகம் வரல .ஹரிச்சந்திரன் கதையை சொல்லி ரொம்ப நாளாயிடுச்சி.சரி அதையே சொல்லிருவோம்ன்னு சொல்லியாச்சு .


கதைய இழுத்து இழுத்து சொல்லி முடிச்சேன் (ஏன்னா அப்புறம் சின்ன கதைன்னு சண்டை போடுவான் இல்லைனா இன்னொரு கதை சொல்லணும் ).சொல்லி முடிச்சிட்டு ,இப்ப இந்த கதையிலிருந்து ஒனக்கு என்ன தெரியுதுன்னு கேட்டேன் .
நான் சின்ன பிள்ளையா இருக்கப்ப ,"எந்த கஷ்டம் வந்தாலும் பொய் சொல்லக் கூடாதுங்கறது "தான் இந்த கதையோட முதல் நீதி.இவன் சொன்னான் ,"நல்லவங்கள டிரிக் (trick) பண்ணக் கூடாது ."

Monday, 17 August 2009

பொக்கிஷம்

முதலில் கதையை ஒரு கவிதையாக சொல்ல முற்பட்ட சேரனுக்கு பாராட்டுக்கள் .
காமெராவை இயக்கியவருக்கு பாராட்டுக்கள் .
கடிதம் எழுதுவது எப்படி ,அது எப்படி பயணிக்கிறது என்பதை இந்த தலைமுறைக்கு சொன்னதுக்கும் சேரனுக்கு பாராட்டுக்கள் .
நிலா ,காற்று ,வானம் பாடல் இனிமை .


அப்புறம்,
காதலை கவிதையாக சொல்வது சரிதான் அதற்கென ஒரு மூன்று மணிநேரம் அதையே ஒரே குரலில் சொல்லிக் கொண்டிருப்பது சரியா ?
சேரன் இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை(தெரியும் ...பெரிய நடிகர்கள் ஒப்புக் கொள்ளவில்லை )
ஒப்பனை வேறு சரி சொதப்பல் .
ஆனாலும் சேரன் நதீராவை விட தன்னை அதிகம் காதலிக்கிறார் என்பது தெரிகிறது ,படம் முழுவதும் அவரே .அவர் கடிதங்களையும் அவரே வாசிக்கிறார் .நதீராவின் கடிதங்களையும் பெரும் நேரம் அவரே வாசிக்கிறார் .மூன்று மணி நேரத்தில் முக்கால் பாகத்திற்கு மேல் இவர் முகம் மட்டுமே திரையில் தெரிகிறது .

பத்ம பிரியா பல காட்சிகளில் ஒரே உடை .ஒரே காமெரா ஆங்கிளில் அவரைக் காண்பிக்கிறார்கள் .நன்றாக தான் நடித்திருக்கிறார் .
விஜயகுமாரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது .
சேரனின் மனைவியாக வருபவரின் ஒப்பனையும் சரியில்லை .தேவையில்லாமல் இழுத்து இழுத்து பேசுகிறார் .
மகனின் காதலும் கொஞ்சமும் யதார்த்தமில்லாமல்... மொபைலுக்கும் கடிதத்திற்கும் அல்லது அந்தகால காதல் இந்த கால காதல் என்று வேறுபடுத்த முயன்றிருக்கிறார் .மகனாக வருபவர் அவர் வேலையை சரியாகத் தான் செய்திருக்கிறார் .ஆனால் கடிதம் வாசிப்பதை தவிர வேறு யாருக்கும் எந்த வேலையும் பெரிதாக இல்லை .

கடிதம் சரியாக போகிறதா என்று பார்க்கக் கூடவே சேரன் செல்லும் காட்சி ஒரு அழகிய கவிதை .அதே போல் டிரங் கால் போடப்போகும் இடத்தில் "மழை எப்ப நிக்கும்" என்று கேட்கும் காட்சியும் .இதுபோல் காட்சிகளை கவிதையாக்காமல் கவிதைகளை வாசிப்பதை மட்டுமே காட்சியாக்கியது ஏன் ?

Wednesday, 12 August 2009

பாடல்


நான் இறந்த பின், என் அன்பே
சோகங்கள் இசைக்க வேண்டாம்
என் தலைமாட்டில் ரோஜாக்கள் நட்டுவைக்க வேண்டாம்
சைப்பிரஸ் நிழலாய் படரவும் வேண்டாம்
என்மேல் போர்த்திய புற்கள் எல்லாம்
பனிதொட்டு மழைதொட்டு நனைந்து கிடக்கட்டும்
உங்கள்,
விருப்பம் போல் என்னை நினைத்துக் கொள்ளலாம்
விருப்பம்போல் என்னை மறந்தும் போகலாம்


இருண்ட நிழல்களை நான் காணப் போவதில்லை
மழையின் ஈரம் உணரப் போவதுமில்லை .
பாடிக்கொண்டே இருக்கும் வானம்பாடி
அதன் முனகல் எனக்கு கேட்கப்போவதில்லை
உதயமும் அஸ்தமனமுமில்லா அந்தியினூடே
கனவுகள் கண்டு நான் களித்துக் கிடக்கையில்
உங்களை,
விருப்பம்போல் நான் நினைத்துக் கொள்ளலாம்
விருப்பம் போல் நான் மறந்தும் போகலாம்
Song
by Christina Rossetti

When I am dead, my dearest,
Sing no sad songs for me ;
Plant thou no roses at my head,
Nor shady cypress tree :
Be the green grass above me
With showers and dewdrops wet ;
And if thou wilt, remember,
And if thou wilt, forget.
I shall not see the shadows,
I shall not feel the rain ;
I shall not hear the nightingale
Sing on, as if in pain ;
And dreaming through the twilight
That doth not rise nor set,
Haply I may remember,
And haply may forget.

Monday, 10 August 2009

அனுபவம் புதுமை

நேத்து ஒரு தொலைக்காட்சிக்காக என் மகனுக்கு கண்ணன் வேஷம் போட வேண்டியிருந்தது .இதுக்காக உடை மத்த சமாச்சாரம் எல்லாம் வாங்க வடபழனியில "திலகம் டிரஸ் மெட்டிரியல்ஸ்" லுக்கு சனிக்கிழமை போனோம் .சின்ன பொந்து மாதிரி இருந்த கடையில வள்ளுவர்ல இருந்து ஸ்பேஸ் சூட் வரைக்கும் வச்சிருந்தாங்க .நாங்க போனப்ப இன்னொரு அம்மா அப்பாவும் அவங்க கண்ணனுக்கு வேணுங்கறத எடுத்திட்டு இருந்தாங்க .நா பாத்திட்டு இருக்கும் போது இன்னொரு அம்மா அப்பா வந்தாங்க .அவங்க பையனுக்கு அடுத்த மாசம் ஃபான்ஸி டிரஸ்ஸாம் .அதுக்கு ஸ்பேஸ் சூட் பாக்க வந்திருந்தாங்க .கடைக்காரர் ஒரு மாசம் முன்னால புக் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டார் . இதுக்கு தேவையானது எல்லாமே இருக்கான்னு பாத்தாங்க கொஞ்ச நேரம் .அப்புறம் நாங்க கண்ணன் டிரஸுக்கு எடுக்குற நகை அத இத பாத்ததும் ராஜா வேஷம் போடலாம்ன்னு தோணியிருக்கும் போல .கட்டபொம்மன் வேஷம் போட்டிரலாமான்னு பேசிக்கிட்டாங்க .உடனே கடைக்காரர் சொன்னார் ,"போடலாம் ஆனா பரிசு கிடைக்காது .அதெல்லாம் ஸ்கூலிலேயே சொல்லுவாங்க , விடுதலை போராட்ட வீரர் வேஷம் போடனும்ன்னு .அப்ப போட்டாத் தான் பரிசு கிடைக்கும் ."
உடனே இவங்க கொஞ்ச நேரம் பேசிக்கிட்டாங்க . அப்புறம் ,"கலாம் வேஷம் போடலாமா ?"கடைக்காரர் சொன்னார் ," அம்மா ,இப்பெல்லாம் மரம் ,பழம்ன்னு தான் வேஷம் போடுறாங்க .அப்படி புதுசா போட்டாத் தான் பரிசு கிடைக்கும் .அப்துல் கலாமெல்லாம் அவுட் ஆஃப் ஃபாஷன் "

Friday, 7 August 2009

பாட்டி

ஊருக்கு போய் வந்ததில் சில சுவாரசியமான நிகழ்வுகளை சேமிக்க முடிந்தது .


என் அத்தை ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தாராம் .உடன் பயணம் செய்தவர்களில் ஒரு வயதானவரும் இருந்தார் போல .அவர் இவர்களுடன் பேசிக் கொண்டு வந்ததில் அவரும் ஆலடிப்பட்டியையோ அதன் சுற்று வட்டாரத்தையோ சேர்ந்தவர் என்று தெரிந்ததாம் .அது மட்டுமல்ல அவர் என் பாட்டியையும் தாத்தாவையும் நன்கு அறிந்திருந்தாராம் .

அவர் சொன்னாராம் ,"உங்க அம்மா ரொம்ப அழகு .அவங்களை கல்யாணம் கட்டிக்கிட பெரிய போட்டியே இருந்துது .அதில நானும் ஒருத்தன் .நானும் உங்க அப்பாவும் ,வசதி மத்த விஷயங்கள்ல ஒரே அளவு தான் .ஆனா ,உங்கம்மாவ வைத்தியலிங்கப் பூசாரிக்குக் கட்டிக் கொடுத்திட்டாங்க .அவரு புத்திசாலி .அவரும் உங்கம்மாவும் படிப்பு இருந்தா நல்லா இருக்கலாம்ன்னு தெரிஞ்சு உங்க எல்லாரையும் கஷ்டப்பட்டு நல்லா படிக்க வச்சிட்டாங்க .நீங்களும் நல்லா இருக்கீங்க .நா என் பிள்ளைகளைப் படிக்க வைக்கல ."

இதை என் அத்தை என் பாட்டியிடம் வந்து சொல்ல ,பாட்டிக்கு சரி கோபம் வந்ததாம் ."எவன் அவன் ,இந்த வயசுல (பாட்டிக்கு அப்போது எழுபது வயசுக்கு மேலிருக்கும் ) இந்த பேச்சை பேசுற வெவஸ்த கேட்டவன் " என்று திட்டித் தீர்த்தாராம் .

Wednesday, 5 August 2009

அனுபவம் புதுமை

நேத்து சாயங்காலம் .வீட்டுகிட்ட ஒரு கோவில் .அதுகிட்ட நடந்து போய்கிட்டிருந்தேன் .ஆள் நடமாட்டம் அதிகமில்ல .ஓரமா ஒரு சுமோ நின்னுக்கிட்டுருந்தது .திடீர்ன்னு ஒருத்தர் வந்து ,"சிஸ்டர் கொஞ்சம் பொடவை கட்டிவிடமுடியுமா "ன்னு கேட்டார்.பாத்தா கார் கிட்ட பொண்ணு .பதச்சு போயி நின்னுக்கிட்டுருந்தது .

"கோவிலுக்கு வந்தோம் .சுத்தி முடிச்சு வரதுக்குள்ள புடவை கழண்டிருச்சி ,கொஞ்சம் கட்டிவிட முடியுமா ?பிளீஸ் ?"எனக்கா சந்தேகம் .எதுக்கு நம்மள நிப்பாட்டி கேட்கணும் .நா புடவை கட்டியிருந்தா கூட பரவாயில்லை .நானே சுரிதார் போட்டிருக்கேன் .கோவிலுக்குள்ள எத்தனையோ பொம்பளைங்க இருந்திருப்பாங்களே ?ன்னு.
"வெளிய எங்கயாவது போறீங்களா "ன்னு கேட்டேன் .
"இல்ல வீட்டுக்கு தான் போறோம் .
"அப்புறம் என்ன, கார்ல ஏறி உக்காந்து போக வேண்டியது தானே ?வீட்டில போய் கட்டிக்கலாம் ."
"இல்ல சிஸ்டர் ,பிளீஸ் கொஞ்சம் கட்டி விட முடியுமா ?இப்படியே போக முடியாது ."

சரி, துணிஞ்சிற வேண்டியது தான்னு பக்கத்தில போய் நின்னா அந்த பொண்ணு அழத் தயாராகிக்கிட்டுருந்தது ."எனக்கு கட்ட தெரியாது .சுரிதார் போடுறேன்னு சொன்னேன் .இவரு கேக்கல ,"ன்னு புலம்பிச்சு .வயசு கூட பதினாறில் இருந்து பதினெட்டுக்குள்ள தான் இருக்கும் .கார் மறைவுல நிக்க வச்சு (பாவம் வெக்கமா வேற இருந்தது போல ) கட்டி விட்டேன் .

வித விதமா சாரி பின் வேற குத்தியிருக்கு .புடவை வேற வெந்தைய கலருல வளவள துணி .வழுக்கிக்கிட்டே போச்சு .ஒவ்வொரு மடிப்பு எடுக்கும் போதும் ,"தாங்க்ஸ் ஆண்ட்டி ,தாங்க்ஸ் ஆண்ட்டி "ன்னு சொல்லிக்கிட்டே இருந்திச்சு. மடிச்சு "சொரிகிக்கோமா" ன்னு சொன்னா ,அத கூட பாவம் சரியா செய்ய தெரியல .அவரு வேற ,"சிஸ்டர் முந்தானையையும் சரி பண்ணி விட்டுருங்க "ன்னு சொல்றார்.அதையும் சரி பண்ணி விட்டுட்டு ,"சுமாரா கட்டியிருக்கேன் .அப்படியே ஏறி உக்காந்து வீட்டுக்கு போயிடுங்கன்னு "சொல்லிட்டு வந்தேன் .அவங்க சொன்ன தாங்க்ஸ் காத்துல தொரத்திக்கிட்டே வந்துது .

Tuesday, 4 August 2009

அம்மன் கொடை

அடுத்த நாள் ,கிடா வெட்டி சாமி கும்பிடுவார்களாம்.இதோடு மூன்று நாள் கொடை நிறைவு பெற்றது .

கொடை பார்க்க சென்றது ஒரு சிலிர்ப்பான அனுபவம் தான் .ஆனால் பலரைப் போல விடிய விடிய பார்க்க சிரமமாக தான் இருந்தது .முதல் நாள் மட்டும் இரவு பன்னிரண்டு மணி வரை பார்க்க முடிந்தது.

இந்த சாக்கில் ஊரையும் கொஞ்சம் சுற்றிப் பார்க்க முடிந்தது .உறவினர் பலரை சந்திக்கவும் முடிந்தது . என் அப்பாவின் அத்தை மகள் வீட்டில் நுங்கு (முழுதாக கொடுத்தார்கள் .நோண்டித் திங்க ஸ்பூனும் கொடுத்தார்கள் )சாப்பிட்டதும் ,பத்தி (பத்திரக்காளி என்பதன் சுருக்கம் இது .அப்பாவின் நெருங்கிய நண்பர் வள்ளிநாயகம் பெரியப்பாவின் மனைவி இவர் ) பெரியம்மா ரைஸ் மில்லில் இரவில் பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டதும் இன்னமும் நாவிலும் மனதிலும் தித்திப்பாய் ...

Saturday, 1 August 2009

அம்மன் கொடை

சாமியாட்டம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தது .கோவிலுக்குள் வில்லுப்பாட்டு நடந்துகொண்டிருந்தது .இது தவிரவும் இன்னொரு பக்கம் தாயார் கூத்து நடக்கும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது .

விமர்சையான கொடையாகவே இருந்தது தெரிந்தது .சுத்து வட்டாரங்களில் இந்த கொடை மிக பிரபலமாக இருப்பது ஏன் என்றும் புரிந்தது .அன்றிரவும் கரகாட்டம் இருந்தது .ஆடியது இன்னொரு குழுவினர் .இவர்களுக்கான ஏற்பாடை செய்து கொண்டிருந்தவர்கள் குழுவினரை தேடிக் கொண்டிருந்திருப்பார்கள் போலும் .
பல தடவை மைக்கில் கூப்பிட்டபடியே இருந்தனர் ."கரகாட்ட கோஷ்டி எங்கிருந்தாலும் வரவும் ,கரகாட்டம் ஆடுபவர்கள் எங்கிருந்தாலும் உடனே வரவும் ,கரகாட்டம் ஆடுபவர்களை கமிட்டி மெம்பர்கள் கூப்பிடுகிறார்கள் உடனே வரவும் ,கரகாட்ட குழுவினரை புக் செய்த .......அழைக்கிறார் உடனே வரவும் ",என்று அழைத்தப்படியே இருந்தனர் வெகு நேரம் .