Wednesday, 29 April 2009

ஒரு துளி

ஒரு துளி ஆப்பிள் மரம் மேல் விழுந்தது
கூரையில் இன்னொன்று
சிலதுளிகள் இறவானம் முத்தமிட்டிறங்கி
மேற்கூரை முழுதும் சிரிக்க செய்தன


கடலுக்கு உதவ சென்றது ஓடை
ஓடைக்கு உதவ போயின சில துளிகள்
எனை நான் கேட்டேன் ,இவை முத்துக்களாய் இருந்தால்
என்னமாய் எழில் மாலைகள் ஆகக் கூடும் !


சாலையில் தூசுகள் இட மாற்றம் ஆயின
பறவைகள் இன்னமும் உற்சாகமாய் பாடின
கதிரொளி தன் தலைப்பாகை கழற்றி எறிந்தது
பழத்தோட்டம் மிட்டாய்கள் அணிந்து கொண்டது

விரக்தியுற்ற யாழ்களை தென்றல் கொணர்ந்து
அவற்றையும் மகிழ்ச்சியில் நீராட்டிக் கொடுத்தது
கிழக்கு ஒரேயொரு கொடியை ஏற்றியே
திருவிழா முடித்தே கையெழுத்திட்டது


A drop fell on the apple tree

By Emily Dickinson

A drop fell on the apple tree.
Another on the roof;
A half a dozen kissed the eaves,
And made the gables laugh.

A few went out to help the brook,
That went to help the sea.
Myself conjectured, Were they pearls,
What necklaces could be!

The dust replaced in hoisted roads,
The birds jocoser sung;
The sunshine threw his hat away,
The orchard spangles hung.

The breezes brought dejected lutes,
And bathed them in the glee;
The East put out a single flag,
And signed the fête away.

Tuesday, 28 April 2009

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்

படத்துக்கு பேர் நல்லா தான் அமைஞ்சிருக்கு.


நிறைய பாரதிராஜா படங்கள் ஞாபகத்துக்கு வருது படம் பாக்கும் போது ...

முதல் பாதியில் முட்டத்தை படம்பிடிச்சிருக்காங்க .அழகா தான் இருக்கு .


ரெண்டாவது பாதியில் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு போயிட்டோம் ,இனிமுடிக்கணுமே ன்னு முடிச்சிருக்காங்க .பருத்தி வீரன் நல்லா ஓடினது இந்தகட்டத்தில ஞாபகம் வந்திருக்கும் ன்னு நினைக்கிறேன் .

நாயகன் நாயகி நடிச்சிருக்காங்க !அப்புறம் அந்த நாயகனோட நண்பர்கள் ,வில்லனுக்கு அக்கா இவங்களும் நல்லாதான் நடிச்சிருக்காங்க .


ரெண்டு குத்துப் பாட்டு ,அதில வில்லனுக்கு ஒன்னு ..எதுக்குன்னு தெரியல ?அதிலேயும் வாயசைப்பு ரொம்ப மோசம் .அப்புறம் மூக்கை சிந்தி சாம்பாரில போடுறது ,சடங்காறதுன்னா என்ன ? மாதிரி சில அருவருப்பான விஷயங்கள் ....
பாட்டும் பின்னணி இசையும் படத்துக்கு பொருந்தல ...


அப்பப்ப சில பழைய படங்கள டிவியில காட்டுறாங்க(கரகாட்டகாரன் ) ,எதுக்குன்னு புரியல (இதையாவது பாத்து சந்தோஷப்படட்டும்ன்னு நெனச்சாங்களோ என்னமோ )


மொத்ததுல நிறைய பாரதிராஜா படங்கள இருந்து நிறைய காட்சிகள் உருவி கடைசியில பருத்தி வீரன்ல இருந்து கொஞ்சம் உருவி படம் எடுத்த மாதிரி இருந்துது .
முதல் பாதியில் எடுத்த சிரமத்தில் கொஞ்சமாவது இரண்டாவது பாதியில் எடுத்திருக்கலாம் .

சீதாப்பிராட்டிக்கு


நீ
சிறு பிள்ளையாய்
தூக்கி விளையாடிய
சிவதனுசை தானே
வாலிபனாய் ராமன்
உடைத்துப் போட்டான்
அந்த உன் வீரத்தை நீ எங்களுக்கென
தக்க வைத்துக் கொண்டிருக்கலாம்சரி அதுவாவது போகட்டும்
சகல செல்வங்களுக்கும்
அதிபதியான நீ
ஒரேயொரு பொன்மானுக்கு
ஆசைப்படப் போய்
பெண்கள் எல்லாருமே
தங்கத்திற்கு மயங்குபவர்கள்
என்ற தீராத பழியை அல்லவா
சுமத்தி விட்டு சென்று விட்டாய்

Saturday, 25 April 2009

தனிமை

தன்னந்தனியாக திரிந்து அலைகிறேன்
தனிமை வேண்டும் என தவம் செய்யக் கோரி

எவரும் எட்டாத மலை சிகரங்களில்
எவரும் அண்டாத வனப் பிரதேசங்களில்

எவர் சுவடும் இல்லாத கடற்கரை வெளிகளில்
எவரும் நோக்கிராத பூட்டிய அறைகளில்

எங்கும் சிக்காமல் நான் தேடும் தனிமை
ஏன் கிட்டவில்லை என நின்று பார்க்கையில்

என்னுடன் நானே உலவித் திரிகையில்
எங்ஙனம் கிட்டும் எவருமற்ற தனிமை ?


Thursday, 23 April 2009

இல்லாள்

இவர் எப்போதும் சிகிச்சைக்கு வரும் போது தன் நண்பருடன் தான் வருவார் .மனைவியைப் பற்றி கேட்கும் போதெல்லாம் ,"அவள் இங்கு வர மாட்டாள் ,"என்று சொல்லி விடுவார் .இப்படி சொல்பவர்கள் மனைவிகளுக்கு சில வேளைகளில் தங்கள் கணவர்களுக்கு நோய் இருப்பதே தெரியாமல் இருக்கக் கூடும் .இதன் பொருட்டு நானும் சளைக்காமல் ,"உங்கள் மனைவியை அழைத்து வாருங்கள் ,"என்று சொல்லிக் கொண்டே இருந்தேன் .

ஒரு முறை இவர் நண்பர் ,இவர் மனைவியுடம் தொலைபேசியில் என்னை பேசச் சொன்னார் .நானும் பேசி விட்டு ,"கண்டிப்பாக,ஒரு முறையாவது இங்கு வாருங்கள் "என்று கூறினேன் .

போன வாரத்தில் தீடீரென என் அறையில் நுழைந்த இவர் நண்பர் சொன்னார் ,"சிரமப்பட்டு இவர் சம்சாரத்தை கூட்டிகிட்டு வந்திருக்கோம் .இவன் கூட பேசுறதில்ல ,இவனுக்கு சாப்பாடு போடுறதில்ல ,பையன பக்கத்தில வர விடுறதில்ல .கொஞ்சம் விளக்கமா சொல்லி அனுப்புங்க "என்று வரிசையாக கூறினார் .

நானும் என்னுடன் பணிபுரியும் ஆலோசகர்களும் ,இவர் மனைவியிடம் பேசினோம் .போகும் போது அவர் ,"இத்தனை நாள் இந்த நோய் பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது .பக்கத்தில வந்தாலே நமக்கு வந்திருமோ ன்னு பயந்துட்டேன் .அக்கம் பக்கத்து காரங்க சொல் பேச்சு கேட்டு இப்படி செஞ்சுட்டேன் .இனிமே அவர நல்லா பாத்துக்கிறேன் ,"என்று சொல்லிவிட்டு சென்றார் .

Tuesday, 21 April 2009

பிளாட்டினம் வாங்கலையோ !

ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி அக்ஷய திருதி, நாள் நெருங்கி கொண்டிருக்கிறது .
முந்தைய வருடங்களில் நம் நாட்டு ,குறிப்பாக தமிழ் நாட்டு மக்கள் வாங்கி குவித்த தங்கத்தின் எடை மட்டும் சில டன்கள் .இந்த வருடமும் விளம்பரங்கள் ஆரம்பித்து விட்டன .இந்த நாளில் தங்கம் வாங்கினால் வளம் கொழிக்கும் என்று எண்ணி வீட்டில் இருந்த கொஞ்சம் தங்கத்தையும் அடகு வைத்து புது தங்கம் வாங்கினார்கள் .இவர்கள் வாழ்வில் எல்லாம் எப்படி வளம் பெருகியது என்று நமக்கு இன்னமும் தெரியவில்லை .

முக்கியமான செய்தி என்னவென்றால் ,விஜய் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன் .விளம்பரத்தில் தோன்றிய ஜோசியர் சொன்னார் ,அக்ஷய திருதியைக்கு வெள்ளை நிறம் கொண்ட பால், மல்லிகை(இந்த திருதியையின் மவுசு குறைந்து விட்டதா இத்தனை மலிவு விலை விஷயங்களைப் பற்றி பேசுகிறார் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே ) மற்றும் வெள்ளை நிற ஒப்பில்லாத பிளாட்டினம் .அப்படி போடுங்க !

வெள்ளை நிற உலோகமாகிய வெள்ளி இருக்கிறது ,அலுமினியம் இருக்கிறது ,வொய்ட் மெட்டல் இருக்கிறது ,ஏன் வெள்ளை தங்கம் கூட இருக்கிறது ,ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு பிளாட்டினம் தான் வாங்க வேண்டுமாம் .

யார் வீட்டில் வளம் சேர்ப்பதற்கோ ??????????

Friday, 17 April 2009

லிங்கேஸ்வரி

வைத்தியலிங்கத் தாத்தா இறந்து சரியாக ஐம்பது நாட்களில் நான் பிறந்தேன்.
அம்மா சொல்வார்கள், பாட்டி சாயலில் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக . நானும் கொஞ்சம் அதே சாயல் கொண்டு பிறந்ததால் அம்மா எனக்கு பாட்டியின் பெயரைப் போல வைக்க வேண்டும் என்று சொன்னார்களாம் .பாட்டி பெயர் " பத்திரக்காளி" .என் அம்மா இதை சற்று (?) மாற்றி "பத்ரா " என்று பெயர் வைக்கலாம் என்று சொன்ன போது ,அப்பா வைத்தால் பத்திரக்காளி என்று வைக்க வேண்டும் இல்லையென்றால் வேறு பெயர் தான் என்று கூறிவிட்டாராம் .பூங்குழலி என்ற பெயர் என் அப்பா மனதில் பல வருடங்களுக்கு முன்னரே நிச்சயிக்கப்பட்டு விட்டது .


பொழுது போகாத ஒரு மதியத்தில் பாட்டியுடன் வம்பு பேசிக் கொண்டிருந்தேன் ."ஏன் பாட்டி ,தாத்தா செத்து கொஞ்ச நாளேயே நான் பொறந்தேனே ,அப்ப நா தாத்தாவோட மறுபிறவி தான ?அப்ப எனக்கு ஏன் தாத்தா பேர வைக்கல ?"என்று சும்மா கேட்டு வைத்தேன் விளையாட்டாக .இது போல அபிப்பிராயம் பாட்டிக்கு இருக்க கட்டாயமாக வாய்ப்பே இல்லை என்றே நினைத்திருந்தேன் .


நான் கேட்டு முடித்ததும் பாட்டி சொன்னார் ,"ஆமாளா,அதான் ஒனக்கு "லிங்கேஸ்வரி " ன்னு பேர் விடச் சொன்னேன் ."

Thursday, 16 April 2009

தாத்தா - பாட்டி

வைத்தியலிங்கத் தாத்தாவை நான் பார்த்ததே இல்லை .நான் பிறப்பதற்கு சரியாக ஐம்பது நாட்களுக்கு முன்னர் இறந்து போனார் இவர் .இவரின் புலமையைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் ,குறிப்பாக கம்பராமாயணத்தில் .

ஆலடிப்பட்டியில் மளிகை கடை வைத்திருந்தாராம் .பாட்டி சொல்வார் ,"பாக்கி வச்சிருப்பான் ,கடையில வந்து நின்னுட்டு ராமாயணக் கதை கேப்பான் .அத சொல்ல ஆரம்பிச்சதும் இவருக்கு கடையும் நெனப்பிருக்காது கணக்கும் நெனப்பிருக்காது .இப்படியே கணக்கு மறந்து தான் கடையையே மூட வேண்டியதாப் போச்சு .""கத தான் நல்லா சொல்வாரு .வேற என்னத்த கண்டாரு "

இப்படி பல நேரங்களில் ராமாயணக் கதை சொன்ன தாத்தா எல்லாவற்றையும் மறந்து அதில் திளைத்துப் போனதை பற்றி அங்கலாய்த்திருக்கிறார் பாட்டி .

Monday, 13 April 2009

என் சொற்கள்

சட்டென்று எதையும்
சொல்லிவிட முடிவதில்லை
இப்பொழுதெல்லாம் ..
எதைக் குறித்தேனும்
எவர் பொருட்டேனும்
நிதானிக்க வேண்டியிருக்கிறது


நிதானித்தே பேசிப் பயின்றதில்
என் சொற்கள்
காற்றில் அலைந்தபடியே இருக்கின்றன
உன்னுடையவை நாங்கள்
என என் காதில் கிசுகிசுத்தப்படி .........

திருமணங்கள் (2)

இந்த செய்தி ஒரு பெண் நோயாளியைப் பற்றியது .இவர் ஒரு விதவை .இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் .இதில் மகளுக்கும் நோய் பாதிப்பு உண்டு .இவருக்கு பல காலமாக மறுமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது .இதில் தப்பொன்றும் இல்லை .ஆனால் நோய் இல்லாத ஒருவரை தான் மணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தார் .இவரின் நோய் பற்றி அறியாமல் இவருடன் பழகிய ஒருவர் ,நோய் பற்றி தெரிய வந்ததும் காணாமல் போனார் .ஒருவர் இதையும் மீறி சரியென்று வந்த போது, மகளுக்கும் இருப்பது தெரிந்ததும் விலகினார் .

நோய் இருக்கும் சிலர் இந்த பெண்ணை மணந்து கொள்ள முன்வந்த போது ,மறுத்து விட்டார் இவர் ."இருவருக்கும் மருந்துகளுக்கே செலவு சரியாக இருக்கும் ,இதில் என்ன குடித்தனம் செய்ய முடியும் ?"என்பது இவர் கேள்வி .இது நியாயமான கேள்வி தான் என்றாலும் இதற்காக நோயில்லாத ஒருவரின் வாழ்க்கையை சீர்குலைக்க முடியுமா ?


இந்த பெண்ணுக்கு நாளடைவில் இதுவே மனநோயாகிப் போனது.தன் மகள் தனக்கு தடையாக இருப்பதாகவும் நினைக்க துவங்கினார் இவர் .ஒரு முறை பரிசோதனைக்கு வந்த போது ,தன் மகள் இறந்து விட்டதாகவும் தன் திருமணத்திற்கு ஏதும் தடை இல்லை எனவும் உடனே மாப்பிள்ளை பார்க்க வேண்டும் எனவும் கட்டளையிட்டார் .

உடன் உறவினர் என்று எவரும் இல்லாத நிலையில் இவரை மனநல மருத்துவரிடமும் அனுப்ப முடியவில்லை .நாங்கள் சொல்லும் ஆலோசனைகள் எதையும் கேட்கும் முடிவில் அவரும் இல்லை .

Saturday, 11 April 2009

திருமணங்கள்

ஒரு இளைஞர் ,திருமணமாகாதவர் கிட்டத்தட்ட 2002ல் இருந்து சிகிச்சைக்கு வந்து கொண்டிருப்பவர் .இவர் திடீரென சில வருடங்களாக வரவில்லை .பின்னர் திரும்பவும் வந்து நின்றார் 2007ல் ,தன் மனைவியுடன் .

இந்த நோய் பற்றி எதுவும் தெரிவிக்காமல் ,ஒரு அநாதை பெண்ணை இவருக்கு மணம் செய்து வைத்திருக்கின்றனர் இவர் பெற்றோர் .மனைவிக்கு தெரியக் கூடாதென மருந்துகளையும் சாப்பிடாமல் நோய் முற்றிப் போய் ,வந்து சேர்ந்தார். இதனூடே அந்த பெண்ணையும் நோய் பாதித்திருந்தது .

அந்த பெண்ணுக்கு அவரும் அவர் பெற்றோரும் சேர்ந்து செய்த கொடுமைகள் ,எண்ணிலடங்காதவை .சில மாதங்களுக்கு முன் இவர் இறந்து போனார் .அந்த பெண்ணை இவர் பெற்றோரும் ஆதரிக்க மறுத்து விட்டனர் .அவர்களுக்கு தங்கள் நோயாளி மகனைப் பார்த்துக் கொள்ள செலவில்லாமல் ஒரு செவிலி தேவைபட்டிருக்கிறாள் அவ்வளவே .

திருமணத்திற்கு முன் எச் .ஐ .வி பரிசோதனை பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது .
இதை கட்டாயமாக்குவதில் பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன .திருமணம் செய்பவர்கள் தாங்களே தார்மீகப் பொறுப்பேற்று இந்த சோதனை செய்ய முன்வரவேண்டும் .நோய் இருப்பதை அறிந்தவர்கள் இதை பற்றி அறியாத பேதைகளின் வாழ்க்கையை சீர்குலைக்காமல் இதே நோய் பாதிப்பு உள்ளவர்களை மணந்துகொள்ள முன்வரலாம் .

Tuesday, 7 April 2009

ரத்த உறவுகள்

ஒரே குடும்பத்தில் அக்கா ,தம்பி ,தம்பியின் மனைவி என்று மூவரும் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் .

இது எவ்வாறு நேர்ந்தது என்று விசாரித்ததில் ,முதலில் நோயினால் தம்பி பாதிக்கப்பட்டிருக்கிறார்.இவரிடம் இருந்து இவர் மனைவி பாதிக்கப்பட்டிருக்கிறார் .இது இந்த நோயைப் பொறுத்த வரை சகஜம் .
அக்கா மகளையே மணந்திருக்கிறார் இவர் .ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் அக்காவிற்கு இவர் ரத்தம் தர நேர்ந்திருக்கிறது .அதில் அவருக்கும் நோய் பரவி விட இப்போது மூவரும் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் .

தக்க காரணங்கள் இருந்தால் அன்றி ரத்தம் ஏற்றுவது தவிர்க்கப் படவேண்டும் ,கொடுப்பவர் எத்தனை அறிந்தவராக இருந்தாலும் .இதனால் இது போன்ற நோய் தொற்று அபாயங்கள் மட்டுமன்றி ரத்த தானம் பெறுவது ஒரு உறுப்பு தானம் பெறுவதற்கு சமம் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

பிறந்தநாள்

நேற்று வழக்கமாக காய் வாங்கும் சூர்யா கிரீன்ஸ் கடைக்கு சென்றிருந்தேன் .இதே வளாகத்துக்குள்ளே இசைக் கல்லூரியும் உண்டு .
நேற்று ஒரு இளைஞர் பட்டாளம் வெளியே நின்று கொண்டு காரை இங்கே நிறுத்த வேண்டாம் என்று ஒரு பக்கம் சுவரை ஒட்டிய இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது .


காய் வாங்கிக் கொண்டிருக்கையில் ஒரு இருபது பேர் அளவிலான ஒரு கூட்டம் கூடியது .இதில் பல பெண்களும் அடக்கம் .அவர்கள் வகுப்பு தோழன் போலும் ,ஒரு இளைஞனை அழைத்து வந்தார்கள் .கைகள் இரண்டையும் பின்னால் கட்டினார்கள் .இவனை சுவரோரம் நிற்க வைத்து அவன் மேல் உஜாலா சொட்டு நீலம்,சாஸ் ,முட்டை,பீர் என மாறி மாறி எதை எதையோ ஊற்றிக் கொண்டே இருந்தார்கள் .அவன் வாயிலும் மூக்கிலும் போய் திக்கு முக்காடிக் கொண்டிருந்தான் .

இதில் ஒரு பெண் கடையினுள் வந்த போது ,ஒருவர் கேட்டார் ,"என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? அந்த பையன் திணறிக் கொண்டிருக்கிறான் ".அந்த பெண் சாவகாசமாக பதில் சொன்னாள் ,"இன்று அவன் பிறந்தநாள் ,அதைத் தான் கொண்டாடுகிறோம் ."போன வாரம் ஒரு பிறந்த நாளுக்கு ,ஐந்து கிலோ கேக்கை வாங்கி பிறந்தநாள் கொண்டாடுபவன் மேல் கொட்டினார்களாம் ."இது லோ பட்ஜெட் கொண்டாட்டம் " என்றாள் .

இவர்கள் எல்லோரும் இசை கல்லூரி மாணவர்களாம் .

இசை என்பது மெல்லிய உணர்விலானது .மெல்லிய உணர்வுகளை தூண்டக் கூடியது என்றெல்லாம் கதைகள் எழுதுகிறோம் .அங்கோ, இவர்கள் கூச்சலிலும் ஆரவாரத்திலும் அந்த இடமே அல்லோகலப் பட்டுக்கொண்டிருந்தது.

கொண்டாட்டம் கூடாதென்பதில்லை ஆனால் ,எல்லாவற்றிற்கும் சில வரையறைகள் உண்டு அல்லவா ?

Monday, 6 April 2009

தேங்காய் டீ !

எங்கள் ஊரில் பெண்கள் பல மணிகள் தொடர்ந்து பீடி சுற்றுவதால் இடையே களைப்பு நீக்க டீ அருந்துவர் .இதில் எவரும் விருந்தினர் வந்துவிட்டாலும் அவர்களுக்கும் இந்த டீயும் ,வெண்ணெய் மாச்சிலும் (பட்டர் பிஸ்கெட்!) வழங்கப்படும் .

இது சகஜம் தானே என்று நினைப்பவர்களுக்கு ,இது சாதாரண டீயில்லை .சரி ,இதில் என்ன சிறப்பு ?

டீயுடன் துருவிய தேங்காயையும் சேர்த்து போட்டு தருவார்கள் .டீயில் முறுக்கை உடைத்துப் போட்டு ஊற வைத்து சாப்பிட்டிருக்கிறேன் .இஞ்சி சுக்கு என எதை எதையோ சேர்த்தும் குடித்திருக்கிறேன் .ஆனால் இந்த தேங்காய் டீயை ஆலடிப்பட்டியைத் தவிர வேறு எங்கும் சுவைத்ததில்லை .

Saturday, 4 April 2009

நான்

நான் ,
உன்னில் பாதியாய் என்றுமே இல்லை
உன் நிழலாகவும் நான் விரும்பவில்லை
உன் வெற்றியின் பின்னால் என்ற
பெருமைகள் எனக்கு தேவையுமில்லை

உனக்காக தோள் கொடுக்க முடியும் என்னால்
உன்னை தூக்கி விடவும் சுமக்கவும் கூட முடியும்
உன்னோடு விளையாட சண்டையிட
என இரண்டும் முடியும்

தனியாய் ,
முழுவதுமாய்,
இயங்க விடு என்னை

Friday, 3 April 2009

பாட்டி

பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன் என் மிதிவண்டியில் .ஒரு சந்தில் திரும்பும் போது எதிரே வந்த ஒரு பெண் என் மீது மோதி ..இருவருக்கும் காயம் .தவறு அந்த பெண் மீது .அங்கே ஒரு கடையில் நின்றுக் கொண்டிருந்த தன் நண்பர் (அ) காதலருக்கு கையசைத்துக் கொண்டே தவறான பக்கத்தில் வந்து மிதிவண்டியைத் திருப்பினார் .(இதைப் பார்த்து அங்கிருந்த நபர் சிரித்துக் கொண்டே இருந்தார் .விழுந்த பின்பும் அவர் அவ்விடத்திலிருந்து அசையவேயில்லை .)

முழங்காலில் சில ரத்தக் காயங்களுடன் வீடு திரும்பினேன் .பாட்டி வீட்டில் இருந்தார் .என்னவென்று அவர் விசாரிக்க நானும் நடந்ததைக் கூறினேன் .அடுத்து நடந்தது நான் சற்றும் எதிர்பாராதது .என் பாட்டிக்கு அத்தனை கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை .அது மட்டுமல்ல அந்தப் பெண்ணை , இங்கு எழுத முடியாத சில வார்த்தைகள் சொல்லித் திட்டினார்." பிள்ள மேல
இப்படி வந்து கண்ணு மண்ணு தெரியாம மோதியிருக்காளே "என்று அந்த வசை மழையை முடித்துக் கொண்டார் .

இதில் நான் அறிந்து கொண்ட செய்திகள் ....
1. பாட்டி என் மீது வைத்திருந்த பாசம் (அதை அவர் காட்டிக் கொள்ளாத போதும் )
2.பாட்டிக்கு சில சந்தர்ப்பங்களில் கோபம் வரும்
3.பாட்டிக்கு சில (பல?)கெட்ட வார்த்தைகள் தெரியும் .