Sunday, 1 July 2018

The Pied Piper of Hamelin

தலைப்பை பாத்து இது ஹாமெலின் எலிகளை  பைப் வாசித்து ஆத்துல  கொன்ன பைப்பர் கதைன்னு நினைச்சிருந்தீங்கனா ?சாரி ...

எங்கப்பாக்கு நிறைய ஹாபிஸ் உண்டு .நிறைய படிப்பாங்க .கதை எழுதுவாங்க .கட்டுரை எழுதுவாங்க .கவிதை எழுதுவாங்க .எங்க வீட்டு தோட்டத்தை ரொம்ப நல்லா பாத்துக்குவாங்க .அப்புறம் சின்ன வயசுல எனக்கு ஓலைய கீறி தென்னந்துடப்பம் செய்ய சொல்லி கொடுத்திருக்காங்க .அப்புறம் ஓலை பின்ன.இன்னமும் நிறைய நிறைய .இதெல்லாம் அப்பாவ நல்லா தெரிஞ்ச எல்லாருக்குமே தெரியும் .

ஆனா நிறைய பேருக்கு தெரியாத அப்பாவோட ஹாபி ஒண்ணு இருக்கு .அதுதான் எலி பிடிக்கிறது .

இவ்வளவு தானானு இத அசால்ட்டா கடக்க போறீங்களா ?நிற்க .வீட்டில எலி பிடிக்கிறது அவ்வளவு லேசான வேல இல்ல .அதுவும் தோட்டத்துல குடியும் குடித்தனமுமா  இருக்குற எலி ஃபேமிலிய ஒழிக்கிறது கருப்பு பணத்தை ஒழிக்கிறதை விட கஷ்டம். எலி தானே ,மருந்து வச்சா செத்துறாதானு நினைக்கிறீங்களா ?டிமானிடைசேஷன்ல கருப்பு பணம் ஒழிஞ்சுதாங்கிறது எப்படி ரிசர்வ் வங்கிக்கே தெரியாதோ அதே மாதிரி மருந்த சாப்பிட்ட எலி செத்துச்சான்னு நமக்கே தெரியாது .அப்படியே  செத்தாலும் ரெண்டு நாள் கழிச்சி அந்த நாத்தம் குமட்டற வரைக்கும் நாம வெயிட் பண்ணனும் .

எலிகள ஒழிக்கறதுக்கு சிறந்த வழி அத பிடிச்சு நாமே கொல்றது தான் .பிடிக்க வேற இப்ப நிறைய  டைப்  பொறீஸ் இருக்கு .பேப்பர்ல ஓட்ட வைக்கிற பொறி  ஒண்ணு இருக்கு பாருங்க .மறந்தாப்பல அதுல கால வச்சி பாருங்க .அது பக்கமே மறுபடி போக மாட்டீங்க .அதனால எலி பிடிக்க ஆக சிறந்த வழி பழைய மாடல் மரப்பொறி தான் .

இத மெயின்டெய்ன் பண்றதே  ஒரு பெரிய வேல .அப்பா இதுல இருக்குற ஸ்பிரிங்குக்கு சரியா எண்ணெய் போட்டு அப்பப்ப கழுவி அத பக்காவா மெயின்டெய்ன் பண்றதுல எக்ஸ்பெர்ட் .எலிவேட்டை டைம் ராத்திரி 9.15 ஏனா அப்பா கரெக்ட்டா 9 மணிக்கு சாப்பிட்டிருவாங்க .அப்புறம் அந்த பொறிக்கு தேங்காய் வைக்கணும் .சீஸ் அயல் நாட்டு ஜெரிகளுக்கு மட்டும்தான் .சரியான சைஸ்ல தேங்கா  பீஸ் வேணும். ரொம்ப பெருசா இருந்த எலி சாப்பிட்டுட்டு நைசா ஓடிரும் .சிறுசா இருந்தா கொக்கில மாட்ட முடியாது .அப்புறம் கூட தேங்காய சும்மா வைக்க முடியாது .லேசா சுட்டு தான் வைக்கணும் .அப்ப தான் அந்த வாடைக்கு எலி வருமாம் .

இப்படி எல்லாம் செட் பண்ணி பொறிய வழக்கமா எலி வர எடத்துல
வச்சிறணும் .எல்லாம் சரியா செஞ்சிருந்தா எலி மாட்டிரும் .எலி மாட்டினவுடனே பொறி மூடுற சத்தத்துல அப்பா நிறைய நாள் பாதி தூக்கத்துல எந்திரிச்சிருக்காங்க .


காலைல முழிச்சவுடனே முதல் வேல பொறிய கொண்டு போய் தோட்டத்துல வச்சிருவேன் .அப்பா பல்ல வெளக்கிட்டு பிரெஷா ,வந்து ஒரு செக் பண்ணி பார்த்துட்டு (மாட்டிருக்கிறது எலி தானான்னு confirm பண்ணணும்ல ) , அத ஒரு பக்கெட் தண்ணில முக்கிருவாங்க.அப்புறம் அது மேல கல்ல வச்சிருவாங்க .எலி தப்பிச்சிருச்சுனா ..labour lost ஆச்சே .அப்புறம் எலி செத்தவுடனே கவர்ல போட்டு குப்பைல போட்டுருவாங்க .சில சமயம் செத்திருச்சா சந்தேகமா இருந்தா டப்னு தலையில கல்ல வச்சு ஒரு .....(இத ஒரு தடவ என் மகன் பாத்துட்டு பயந்து போயிட்டான் ).


ஒரு தடவையெல்லாம் உள்ள ஒரு எலி ,வாலு மாட்டிகிட்டு வெளிய ஒரு எலின்னு  ஒரே பொறில ரெண்டு எலியெல்லாம் மாட்டி இருக்கு  .ரெண்டு மூணு நாளைக்கு எலி மாட்டாம குடும்பமே க்ளோஸ் ஆகிருச்சுன்னு தெரியற வரைக்கும் அப்பா பொறி வச்சிக்கிட்டே இருப்பாங்க .

படங்கள்ல இருக்கிறது நேத்து மாட்டின எலி .பாவம் இப்ப உயிரோட இல்ல.RIP .
  
Sunday, 10 June 2018

நன்றி

எழுபத்தைந்து  வயதிருக்கும் .கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை முடிந்து இருபது வருடங்களுக்கு மேலான தன்னம்பிக்கையாளர் .தனியாக ஒரு பிசினஸ் செய்து அதை பல சோதனைகளுக்கிடையே வெற்றி பெற செய்து கட்டிய சாதனையாளர் .என்னுடய பல வருட பேஷண்ட் .ஏறக்குறைய ஒரு வருடம் முன்னர் கணவர் இறந்து போனார் .சில வருடங்களாக வருடம்  ஒரு முறையே வர முடிந்திருக்கிறது .அவர் மகன் சென்னையில் இருக்கிறார் . மருந்துகளை  இவர் வாங்கி அனுப்பி  வைப்பார் .  ஆனாலும் வாரம்  ஒரு முறையேனும் என்னுடன் தொலைபேசியில் பேசுவார். ஏதேனும் ஊர்  விஷயங்கள் பொதுவாக பேசுவார். உங்க உடம்பை நல்லா பாத்துக்கோங்க என்று சொல்லாமல் ஃபோனை  வைக்க மாட்டார்.

ஜனவரி மாதத்தில் மருத்துவமனையின் தொலைபேசி எண்கள் மாறிப்போனது .அதிலிருந்து பேசுவதில்லை .pharmacyயில்  அவர் மகனிடம் புது எண்களை  தர சொல்லி சொல்லி வைத்திருந்தேன் .போன வாரத்தில் திடீரென அவர் மகன் வந்தார் .வழக்கம் போல மருந்துகள் வாங்க வந்திருக்கிறார் போலும் என நினைக்க "உங்களுக்கு தாங்ஸ் சொல்ல வந்தேன் மேடம் .அம்மா போன வாரம் இறந்துட்டாங்க .ரொம்ப ஏதும் கஷ்டம் இல்ல .காலையில தூங்கி எந்திருச்சு பால் கேட்டிருக்காங்க .கொண்டு வரதுக்குள்ள இறந்துட்டாங்க.பத்து வருஷம் எங்கம்மாவை பாத்துக்கிட்டீங்க .இந்த பத்து வருஷத்துல இந்த எச்ஐவி பத்தி அவங்களுக்கு நினைப்பு கூட வந்ததில்ல.அதனால உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன் .ரொம்ப நன்றி மேடம் .அம்மாக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ."
Sunday, 25 February 2018

விடை தருகிறோம் ஸ்ரீ

ஜெயலலிதாவின்  மரணத்திற்கு பின்னால் பெரும்  வருத்தத்தை ஏற்படுத்தியது ஸ்ரீதேவியின் மரணம் .இன்றைய மருத்துவ வசதிகளின் பின்புலத்தில் 54 என்பது  இளம் வயதே .

இந்தியாவின் முதல் (ஒரே ?)பெண் சூப்பர் ஸ்டார் என்று ஆங்கில ஊடகங்கள் பெருமை கொள்கின்றன .அவரின் சிறந்த படங்கள் என்னவோ தமிழில் தான் .ஹிந்தி சினிமாவில் அதீத அலங்காரத்தோடு கீச் கீச் என பேசும் ஒரு கவர்ச்சி பொம்மையாக அவர் பெரும்பாலும் இருந்தார் .

இந்த குடியேற்றதிற்கு முன்னால் வாழ்வே மாயம் படத்தில் தான் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருந்தார் .அதுவரை உருண்டையாக ஆனாலும் அழகாகவே இருந்தது அவர் மூக்கு .அதை  பற்றி கேட்கப்பட்ட போது கோபமாக மறுத்தார் .ஆனால் தொடர்ந்து கவனிக்கும்  போது அவர் முகம்  மாறிக்கொண்டே இருந்தது .

பல நாள் கழித்து நான் பார்த்த தனிஷ்க் விளம்பரத்தில் அலங்கோலமாக இருந்தார் .பலராலும் சிலாகிக்கப்பட்ட english vinglish படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் முகம் ஒட்டிப்போய் என்னவோ போலே இருந்தது  .
சில புகைப்படங்களில் தன் மகள்கள் ஒத்த வயதில் அவர் தோன்ற முயற்சிப்பது போல தோன்றியது .

ஆனாலும் ,அவர் ஏற்ற பல வேடங்களும்  முகத்தின் பல மாற்றங்களும் அவர் விரும்பி ஏற்றவையே .தொடர்ந்து இளமையாகவே  தோன்ற அவர் விரும்பினார் என்றே  நினைக்கிறேன் .

எது எப்படியோ ,விடை தருகிறோம் ஸ்ரீ .இந்த மரணம் உங்களுக்கு நல்லது தான் .முதுமை உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை இருக்கப்போவதும் இல்லை  . உங்களின் ....ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் ..தொடர்ந்து என் காலர் ட்யூனாக இருக்கும் .... 

Wednesday, 14 February 2018

நான் கடவுள்

நான் கடவுள் -
ஒற்றை   நண்பன் இல்லாமல்  
தூய்மையில் தனித்து .
முடிவில்லாத உலகம்
உலகம்  உலவும் இளங்காதலர்கள்
ஆனால் -நான் 
இறங்க முடியாத கடவுள்.
வசந்தம் ...
வாழ்க்கையே  காதல் 
காதல் மட்டுமே வாழ்க்கை
மனிதனாகவே  இருக்கலாம் -
எதற்கு கடவுளாக -
ஒண்டியாய்


God - Poem by Langston Hughes

I am God—
Without one friend,
Alone in my purity
World without end.
Below me young lovers
Tread the sweet ground—
But I am God—
I cannot come down.
Spring!
Life is love!
Love is life only!
Better to be human
Than God—and lonely

Sunday, 11 February 2018

பத்மாவதி

பத்மாவதி என்கிற பத்மாவத் பார்த்தாச்சு .
இவ்வளவு பிரச்சனை ஆகலைனா இந்த படத்த பாத்திருப்பேனாங்கறது சந்தேகம் தான் .
படம் ரொம்ப அழகா இருக்கு. ஒவ்வொரு சீனும் பாக்குறதுக்கு பிரமிப்பா இருக்கு .பாட்டெல்லாம்  நல்லா இருக்கு.

அந்த ரஜபுத ராஜா -கொஞ்சம் பிலோ ஆவரேஜா தான் காமிக்கறாங்க மொதலேருந்தே .மொத பொண்டாட்டியோட முத்த தொலைச்சுட்டு திட்டு வாங்கிட்டு  வாங்க போறாரு .அங்க போய் பத்மாவதிய கல்யாணம் பண்ணிட்டு வராரு .பாவம் அந்த முதல் பொண்டாட்டி .பாவம் பத்மாவதி .அந்தம்மா அழகுக்கு யாருக்காவது முதல் தாரமாவே வாக்கப்பட்டிருக்கலாம் .அதுக்கப்புறமும் எல்லா இடத்திலேயும்  தப்பு தப்பாவே முடிவு எடுக்குறாரு .அவரோட எல்லா தப்பான முடிவுக்கும் பின்னால இருக்கிறது அவரோட ரஜபுத தர்மமாம் .அப்படி யாருக்கும் உதவாத சமயோசிதமா  முடிவு எடுக்க விடாத தர்மம் என்ன தர்மமோ !

அந்த மொதல் பொண்டாட்டி பாவம் .எந்தூரு இளவரசியோ ?ஆனா தெளிவா யோசிக்குது . அப்புறம் பத்மாவதி .பாவம் அவ்வளவு அழகுக்கு அல்ப ஆயுசு .கல்யாணத்துக்கு முன்னால தைரியமா வேட்டைக்கெல்லாம் போகுது .ஆனதுக்கப்புறம் நாலு சீன்ல நல்லா டிரஸ் பண்ணிட்டு நல்லா டான்ஸ் ஆடுது .சுல்தான பாக்கப்போறேன் சுல்தான பாக்கப்போறேன்ன்னு அப்பப்ப கிளம்புது .நிப்பாட்டி விடுறாங்க .இப்படி நம்மள காதலிக்கிற ஆள் யாருனு பாக்கணுமேன்னு எந்த பொண்ணாருந்தாலும்  ஆசை இருக்காதா என்ன ?அங்க போய் ஒருவழியா சேர்ந்தா சுல்தானோட பொண்டாட்டி விவரமா ,தப்பிக்க வைக்கிறேனுக்கு கழட்டி விடுது.(அந்த புள்ளையும் அழகாவே  இருக்கு .)
என்னைய பொறுத்தவரைக்கும் மொத்த படத்துல பத்மாவதி பண்ண ஒரே உருப்படியான காரியம் அந்த ராஜகுருவோட தலையை கேட்டது தான் .


சுல்தானுக்கு வருவோம் .படத்துல நாயகன் இவரு தான் .ஆனா எதுக்கு இத்தனை சைக்கோத்தனம் ?அவரு சாப்பிடறதுலேருந்து எல்லாத்தையுமே ஒரு சைக்கோத்தனமா செய்ற மாதிரியே காண்மிக்கறாங்க .எப்பவுமே ஒருவித கருப்பு கலர் ட்ரெஸ்ஸே போட்டிருக்காரு .அழகா டிரஸ் பண்ணின வில்லன் இல்லவே இல்லையா என்ன ?அதுவும் ஒரு சாம்ராஜ்யத்தின் மன்னன் ?ரொம்ப அதீதம் அவரின் பாத்திரமாக்கம்.

சில சந்தேகம்

1.இந்த படத்துல ரஜபுத பெருமை படம் பூரா பேசுறாங்க ?அப்புறம் எதுக்கு இத்தனை போராட்டம் ?
2.கில்ஜியையும் முஸ்லிம்களையும் படம் ரொம்ப கீழ்த்தரமா சித்தரிக்குது .முறையா அவங்க தான் போராடி இருக்கணும் அவங்க ஏன் போராட்டம் பண்ணல ?
3.அவங்க சேனை கருப்பு கலர்ல தான் எப்பவுமே உடை அணிறாங்க .பிறைநிலா கொடி வேற .ஆனா ரஜபுத க்ரூப் பூரா வெள்ளை உடைல காவி கொடி ?
4.கில்ஜி ,வரலாற்றை மாத்தி எழுதுற மாதிரி சொல்ல  வேண்டிய தேவை என்ன ?நாம கில்ஜிய பத்தி படிக்கறது தப்போன்னு ஒரு எண்ணத்தை உருவாக்கவா?
5.இந்த ராஜாவே பத்மாவதியை ரெண்டாம் தாரமா தான் கல்யாணம் பண்றாரு அப்புறம் கில்ஜிய என்ன குறை சொல்ல வேண்டிருக்கு ?
6.கில்ஜியோட வாழ்க்கையிலே பெரிய தோல்வி அது இதுன்னு ஸ்க்ரோல் ஓடுது ?அவருக்கு அந்த பத்மாவதி  கிடைக்கல .அத தவிர வெற்றி அவரோடது தான் .இந்த சைடுக்கோ படு தோல்வி ,சர்வ நஷ்டம் இதுல என்ன பெருமைன்னு தெரியல?!
7.சாவுறதுக்கு கூட புருஷன் உத்தரவு கொடுக்கணுமாம்???உத்தரவு கேக்கும் போதே ராஜா மேலேயும் அவர் போர் திறமை மேலேயும் இருக்குற நம்பிக்கை பல்லிளிக்குது.
8..அந்த கடைசி சில காட்சிகள் கடுமையா கண்டிக்கப்பட வேண்டியவை .என்னதான் படத்துக்காக இருந்தாலும் .இத்தனை சுலோ மோஷன்ல இத்தனை நேரம் தீக்குளிப்புக்கு தயாராவதை காண்பிக்கணுமா என்ன ?அதிலேயும் ஒரு சிறுமியும் ஒரு கர்ப்பிணி பெண்ணும் இருப்பதா காண்மிக்கறாங்க .இதெல்லாம் எந்த வகைல நியாயம் ?படத்த தடை பண்றத இருந்திருந்தா நியாயமா அந்த கடைசி  காட்சிகளுக்காக தான் தடை பண்ணியிருக்கணும் . 

Tuesday, 9 January 2018

ஓலா லா

போன வாரத்துல ஒரு ஓலா ஓட்டுநர் சொன்னார் மூணாம் தேதி வண்டி கிடைக்காது மேடம் -நாங்க ஸ்ட்ரைக்னு .எதுக்கு ஸ்ட்ரைக்னு கேட்டப்ப "கவர்ன்மெண்டுல ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தான் ஓட்டணும்னு  சட்டம் போடுறாங்க "-
ரொம்ப நேரம் ஓட்டுறது உங்களுக்கே நல்லதில்ல தானே ?
"அப்ப ரேட்டை ஏத்திக்கொடுக்கணும் மேடம் -ஏத்தாம எட்டுமணிநேரம் ஓட்டுனா எதுக்குமே கட்டுப்படியாகாது ."

ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இப்படி தான் ஸ்ட்ரைக்னு சொல்லி பெருசா எடுபடல .ஆனா இந்த தடவ பரவலா இருந்தது போல .நிறைய வண்டிகள் இருந்த  மாதிரி தெரியல .

இன்னைக்கு ஒரு கேப்ல வந்தேன் .உங்க ஸ்ட்ரைக் என்னாச்சுன்னு விசாரிச்சேன் ."பெருசா பண்ணிட்டோம் மேடம் -Joint Commissioner நேர்ல வந்து பத்து நாள்ல G.O வாங்கி தரேன்னு சொல்லிட்டு போயிருக்கார் .இல்லைனா பொங்கலுக்கு அப்புறம் பெரிய ஸ்ட்ரைக்கா பண்ணுவோம் .

நேத்து ராத்திரி பன்னெண்டு மணியிலேருந்து  வண்டி ஓட்டுறேன் .134 கிலோமீட்டர் ஒட்டியிருக்கேன் .ஆனா பணம் என்னமோ 1400 ரூவா தான் (ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை காட்டினார் ).இது எப்படி கட்டுப்படியாகும் .இதுல ஓலாவுக்கு 30% கமிஷன் போகுது .க்ரூப் வண்டி விட்டு அவங்களுக்கு நல்ல ட்ரிப்பை போட்டுறாங்க .கஸ்டமர் ட்ரைவர் வரலன்னு ட்ரிப்ப கேன்சல் பண்ணிட்டா (driver  denied duty ) 250 ரூவா பிடிச்சிருவாங்க .ரேட்டிங் போடலைன்னா ட்ரிப் கொடுக்க மாட்டாங்க .டீசல் விலை ,வண்டி EMI இல்லை வாடகை எல்லாத்துக்கும் எப்படி கட்டுப்படியாகும் ?

இதுல இவங்களுக்கு இங்க  பிசினஸ் பண்ண லைசென்ஸ் இல்லையாம் .ஒரு லட்சம் கிடைக்குது அம்பதாயிரம் கிடைக்குதுனு ஊர்ல நிலத்தை எல்லாம் வித்து கொண்டு வந்து வண்டி ஓட்டுறாங்க .வேற வழியில்லாம இவங்க சொல்றபடி ஓட்டுறாங்க .காசை வேற இவங்க அக்கவுண்ட்ல வாங்கிட்டு  பொறுமையா transfer  பண்றாங்க .

நாங்க என்ன சொல்றோம்ன்னா,இன்சென்டிவ் (incentive ) வேண்டாம் .ரேட் நியாயமா கொடுக்கணும் .இந்த share  ,pool எல்லாம் மாத்தணும் .அப்புறம் payment நாங்க choose  பண்ற மாதிரி வைக்கணும் .

ஏன் மேடம் ,எவனோ ஒரு வெளிநாட்டுக்காரன் இங்க வந்து காசு சம்பாதிக்கிறதுக்கு ,நம்ம கவர்ன்மெண்ட்டே இந்த கமிஷனை எடுத்துக்கிட்டு ஏன் இத நடத்தக்கூடாது ?"