Friday, 27 February 2009

என் முறை ?

காத்திருக்கிறேன்
இது என் முறையாக இருக்கக் கூடும்
என் வெப்பம் ஏறிக்கொண்டே இருக்கிறது
இல்லை இதுவும் என் முறை இல்லை


என் இதயம் அடங்காமல் துடித்துக்கொண்டிருக்கிறது
என் அருகில் இன்னும் சில இருக்கைகளில் காற்று குடியேறுகிறது
என் இருக்கையில் நான் மட்டும் அடைத்துக்கொண்டு
கதவு திறக்கப்படும் போதெல்லாம்
குளிர் என் மயிர்க்கால்களை கூசச் செய்கிறது


எப்போது என் முறை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
வரிசைப் படி என பதில் வந்த படியே
உள்ளே போன தேநீர் கோப்பைகள் கூட
என் வெப்பத்தில் இன்னமும் சூடாகவே இருக்கும்
தூக்கம் வருவது போல் பாசாங்கு செய்து கொண்டே இருக்கிறது
அதை எட்டிப்பிடிக்க கண்கள் துடித்துக்கொண்டே

கதவு திறந்து மூடுவது தூரமாய் தெரிகிறது
இங்கில்லாதவர்களும் இருப்பவர்களும் கலவையாய் தெரிகிறார்கள்
எங்கோ என் பெயர் போல் கேட்கிறது
என்னருகே ஏதோ அலறல்களும்
கதவு திறக்கும் சத்தமும் ......
இப்போது மருத்துவமனையே என்னை சுற்றி

Thursday, 26 February 2009

நிஜம்
சத்தியமாக ,நம்புங்கள் என்னை
நான் அழுகிக் கொண்டிருக்கிறேன்
என்னில் எங்கும் துர்நாற்றம் பரவிக் கிடக்கிறது


என்னை சுற்றி மொய்க்கும் ஈக்களுக்கு தெரியாமல் போனாலும்
என் கால் தீண்டும் எலிகள்
அதை உணர்ந்தே ஓடுகின்றன


என் புண்கள் பலவும் புரையோடிப் போயிருக்கின்றன
வற்றாமல் சீழ் வடிந்து கொண்டே இருக்கிறது அவற்றில்
எத்தனை களிம்புகளிலும் சுகம் கிட்டாமல்

என் வெளிப் பூச்சைக் கண்டு ஏமாந்து போகாதீர்கள்
என் அழுக்கைக் கொண்டே அதை நான்
முலாம் பூசியிருக்கிறேன்

எனக்காக ஏதேனும் மருந்திட விழைந்தால்
என்வெளிப் பூச்சை மட்டும் கொஞ்சம் கீறாமல் இருங்கள்
என் ரணங்கள் கொஞ்சமேனும் ஆறட்டும்

Wednesday, 25 February 2009

ஒரு கழியினால் இதயம் உடைவதில்லை

ஒரு கழியினால் இதயம் உடைவதில்லை
ஒரு கல்லினாலும் கூட
ஒரு சாட்டை சன்னமாய் கண்களுக்கு புலப்படாமல்,
நான் அறிந்திருக்கிறேன்


அந்த மாய உயிரினமும்
வீழும் மட்டும் வீச
எனினும் அந்த சாட்டையின் பெயர் உன்னதமானது
சொல்லவும் கூட


சிறுவனால் கண்டெடுக்கப்பட்ட
பறவையின் பெருந்தன்மை
தன் உயிர் குடித்த கல்லினிடத்தும்
பாடிக் கொண்டிருப்பது.....


NOT with a club the heart is broken
----------------------------------------------------
by Emily Dickinson


NOT with a club the heart is broken,
Nor with a stone;
A whip, so small you could not see it,
I ’ve known

To lash the magic creature
Till it fell,
Yet that whip’s name too noble
Then to tell.

Magnanimous of bird
By boy descried,
To sing unto the stone
Of which it died.

Tuesday, 24 February 2009

என் மனம்

என் மனதினை பாரமாய்
தினமும் சுமக்கிறேன்
ஏதோ ஒரு புன்னகையில் அது லேசாவதும்
ஒரு துளி கண்ணீரில் பாரம் கூடுவதுமாய்
என் மனதின் எடை மாறிக்கொண்டேஇருக்கிறது


ஒரு தராசில் அதை நெறுத்து வைத்து
சரியான அளவைகள் இட்டு
ஒரே சமனில் வைத்திருக்கும் சாமர்த்தியம்
இன்னமும் எனக்கு சாத்தியப்படாமல் போகிறது
அது சாத்தியப்படும் மட்டும்
விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில்
ஏறுவதும் இறங்குவதுமாக
மாறிக் கொண்டே இருக்கும் மனம்..

Friday, 20 February 2009

அறியாமை

பல நோயாளிகளுக்கு எல்லா நோய்களுக்கும் தீர்வு ஒரு பாட்டில் குளுகோஸ் அல்லது ஒரு ஊசி .தேவையற்ற மருந்துகளால் எந்த பயனும் இல்லை என்பது மட்டுமல்ல தீங்கு நேரிடலாம் என்று கூறினாலும் இவர்களுக்கு புரிவதில்லை .இதை நான் சொன்ன போது ஒரு பாட்டி சொன்னார் ,"ஊசி போடாத வைத்தியம் எனக்கு தேவையில்லை ."

நான் கடமலையில் பணி புரிந்த போது அந்த ஊரிலிருந்த பெண்கள் பலர் எப்பொழுதெல்லாம் உடல் சோர்வு தெரிகிறதோ (?) அப்பொழுதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு பாட்டில்கள் ஏற்றிக் கொள்ளும் வழக்கம் வைத்திருந்தனர் .அப்படி ஏற்ற வேறு மருத்துவர் கிடைக்காமல் என்னிடம் வந்தார் ஒரு பெண் .ஏற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ."ஒன்றும் தேவையில்லை " என்று கூறி அனுப்பி விட்டேன் .
வெளியிலேயே வெகு நேரம் அமர்ந்து கொண்டிருந்த அவரிடம் ,"பஸ்சுக்கு
உட்கார்ந்திருக்கீங்களா ?"என்று கேட்ட போது ,"எங்க வீட்டுக்காரர் குளுகோஸ் போட்டுட்டு வா ன்னு சொல்லி எர நூறு ரூவா கொடுத்து விட்டாரு .இப்ப நா ஏத்தாம போனா திட்டுவாரு ,"என்று சொன்னார் .

என்னுடன் நர்ஸ் பணிபுரிந்த பெண் படு சுட்டி ,"டாக்டர் தான் வேண்டாம் ன்னு சொல்றாங்கல்ல ,அப்புறம் நீ எதுக்கு போடணும் ன்னு வம்பு பண்ற ?"என்றார் துடுக்காக ."ஐயோ ,எங்க வீட்டுக்கார திட்டுவாருக்கா ,ரூவா கொடுத்திருக்காருல்ல " ,என்றார் அந்த பெண் மீண்டும் .இவர் மறுபடியும்,"அட போம்மா !போற வழியில ஒரு பொடவை வாங்கிட்டு போ இந்த காசுக்கு .அவர் கிட்ட போட்டாச்சு ன்னு சொல்லிரு ."அதற்கு அந்த பெண் சொன்னார் ,"ரசீது காட்டச் சொல்வாரு ..".இப்போது எவரிடமும் பதில் இல்லை .

வருத்தமாகவே வெளியேறினார் அந்த பெண் .

இதைப் பற்றி இங்கேயும் ..
http://ruraldoctors.blogspot.com/2008/12/blog-post_25.html

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் -
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு ,
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் -
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்,
எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் -
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்,
எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் -
ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்


ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா ,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள்
என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திருகரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் -
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு ,
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் -
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்,
எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் -
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்,
எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் -
ஐயனே என் ஐயனே

Thursday, 19 February 2009

என் பூவுக்குள் என்னை ஒளித்துக்கொள்கிறேன்

நான் என் பூவுக்குள் என்னை ஒளித்துக் கொள்கிறேன்
அதை மார்பில் அணியும், நீ..
அறியாமல், என்னையும் சேர்த்தே அணிகிறாய்
தேவதைகளுக்கு தெரியும் மிச்சம்


நான் என் பூவுக்குள் என்னை ஒளித்துக்கொள்கிறேன்
அது, ஜாடியில் வாடுகையில், நீ,
அறியாமல், எனக்காக உணர்கிறாய்
தனிமை போலவே


I hide myself within my flower
------------------------------------------
by Emily Dickinson

I HIDE myself within my flower,
That wearing on your breast,
You, unsuspecting, wear me too—
And angels know the rest.


I hide myself within my flower,
That, fading from your vase,
You, unsuspecting, feel for me
Almost a loneliness.

Saturday, 14 February 2009

இது மட்டுமே உண்டு

இது மட்டுமே உண்டு கொண்டுவர இன்று
இதுவும் இதை தவிர்த்து என் இதயமும்
இதுவும் இதை தவிர்த்து என் இதயமும்
மற்றும் அத்தனை வயல்களும்
மற்றும் பரந்து விரிந்த பசும் புல்வெளிகளும்


கவனமாகஎண்ணிக்கொள் ,நான்மறந்துவிட்டால்
ஒருவரேனும் கணக்கு சொல்லக் கூடும்
இதுவும் ,இது தவிர்த்து என் இதயமும்
மற்றும் அடைகளில் கூடும் அத்தனைஈக்களும்


It's All I Have to Bring Today
by Emily Dickinson (1830 - 1886)


It's all I have to bring to-day,
This, and my heart beside,
This, and my heart, and all the fields,
And all the meadows wide.
Be sure you count, should I forget, --
Someone the sum could tell, --
This, and my heart, and all the bees
Which in the clover dwell.

திருமணமாம் திருமணமாம்

பாட்டியின் பல பதில்களில் ஒரு அலட்சியமான தொனி இருக்கும் .எதற்குமே அசராதவர் அவர் என்பதையும் எத்தனை உறுதி மிக்கவர் அவர் என்பதையும் அவரது பேச்சுகள் பல நேரம் உணர்த்திவிடும் .என் பாட்டியின் மக்கள் என் அப்பாவையும் சேர்த்து ஐவர் .இதில் வரிசைப் படி ,அத்தை ,பெரிய பெரியப்பா ,சின்ன பெரியப்பா ,அப்பா,சின்ன அத்தை .

என் அம்மா அப்பாவின் திருமண புகைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம் இதில் பாட்டி தாத்தா இருவருமே இல்லையே என்று யோசித்திருக்கிறேன் .அம்மாவிடம் கேட்ட போது சொன்னார் ,"பாட்டி என்
கல்யாணத்திற்கு வரவே இல்லை ",என்று .

பிறகு ஒரு சமயம் பாட்டியுடன் இருந்த போது இது நினைவு வர ,

நான் -"ஏன் பாட்டி ,நீங்க அப்பாவோட கல்யாணத்துக்கு போகல ?
பாட்டி -"வேற எவன் கல்யாணத்துக்கு நான் போனேன் ?,"
நான் -"அப்ப யார் கல்யாணத்துக்கும் நீங்க போகலையா ?"
பாட்டி -"போகல "
நான் -"ஏன் போகல? "
பாட்டி -"ஒருத்தன் மெட்ராசில கல்யாணம் வச்சான் ,ஒருத்தன் பொண்டாட்டி ஊர்ல வச்சான் ,உங்கப்பா கல்யாணத்த குத்தாலத்தில வச்சான் ,இதுக்கு எதுக்கு போகணும் ?"
நான் -"அதுக்காக போகாம இருப்பாங்களா ?"
பாட்டி -"அதான் எல்லா பொண்ணும் வீட்டுக்கு தானேளா வரும் பாத்துக்கலாம் ன்னு போகல "

வாயடைத்து போனேன் நான் .

Thursday, 12 February 2009

இறந்து போனவர்கள்

சிறு பிள்ளையாய்
பயத்துடன் எட்டிப் பார்த்த ஞாபகம்
அடுத்த தெரு பாட்டியின் இறுதி ஊர்வலம்
முன்னால் சில பேரின் கொட்டும் ஆட்டமும்
பின்னால் சில பேரின் அழுகையும் ஓலமும்
என எதற்கும் அசையாமல் போனாள் பாட்டி
பல நாளாய் என் கனவில் மட்டும்
பயம்காட்டிக் கொண்டே இருந்தாள் பிணமாய்


பள்ளி படிக்கையில்
தாத்தா இறந்து போனார்
அம்மாவின் சித்தியின் பெருங்குரல் அழுகை
ஆச்சியின் அவர் அம்மாவின் ஒப்பாரி சத்தம்
பெரிது பெரிதாக ரோஜா மாலைகள்
என விமர்சையாய் தேரில் போனார் தாத்தா
பயமும் இல்லை துக்கமும் இல்லை
என் கனவிலும் அவர் தெரிந்ததில்லை பிணமாய்


கல்லூரி நாட்களில்
பாட்டியின் மரணம்
பல நாள் போராட்டத்தின் நிச்சயித்த முடிவுதான்
அத்தையின் விசும்பல் அப்பாவின் கதறல்
மெலிந்த தேகத்தில் பட்டு போர்த்தி
இன்னமும் சில நாள் இருந்திருக்கலாமோ ?
இன்னமும் அன்பாய் நாம் நடந்திருக்கலாமோ?
என ஏக்கங்கள் தெளித்து போனார் பாட்டி


ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அத்தை
நான்கு ஆண்டுகளுக்கு முன் பெரியப்பா
என இன்னமும் சிலரை காலம் கொண்டது
வெற்றிடமாக இன்னமும் இவர்கள் விட்ட இடங்கள்
எத்தனை கண்ணீரிலும் நிரம்ப மறுத்து
நினைவில் வாழ்பவர்கள் இறந்தே போகாதவர்கள் என்றறிந்த காலம்
இவர்கள் இறந்தது பல நேரம் நினைவே இல்லை

Tuesday, 10 February 2009

நான் கடவுள்

பிச்சைக்காரர்களை வைத்துக் கொண்டு பல காலமாக காமெடி செய்து கொண்டிருக்கும்தமிழ் சினிமாவில் இது ஒரு புது பார்வை தான் .படத்தில் அனைவரின் உழைப்பும்தெரிகிறது .ஆனால் இதில் வியக்க வைப்பது ஆர்தர் வில்சனும் இளையராஜாவும்...


காமெரா காசியை அப்படியே சுருட்டிக் கொண்டு வந்திருக்கிறது .அதன் அத்தனைவிஷயங்களையும் அந்த ஒரு டைட்டில் பாடலில் கொண்டு வந்து விட்டது .ஒவ்வொரு ஃப்ரேமும் அத்தனை அழகு.


அடுத்தது இளையராஜா ..இன்னமும் என்ன இருக்கிறது இவரைப் பற்றி சொல்ல ....

கதை ...அது இந்நேரம் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் ......


ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியிருக்கிறார் பாலா ...எவருமே சும்மா வந்து போனார்கள் என்று சொல்ல முடியாது .....நிறைய பேர் இருந்த போதும்எல்லோரும் மனதில் பதிகிறார்கள்.இதற்கு ஒளிப்பதிவாளரும் காரணம் என்று நினைக்கிறேன் .தேவையில்லாத வசனங்கள் எதுவுமே வந்ததாக தெரியவில்லை .

கதையில் நகைச்சுவை ஒரு பலம் ..அது பல நேரங்களில் பல சமூக கேலிகளாகவெளிப்படுகிறது .குறிப்பாக அந்த பிச்சைக்காரர் ஒருவரின் பேச்சுகள் நச் .இதை நகைச்சுவை என்று சொல்வது கூட சரியா என்று
தெரியவில்லை

ஆர்யா ...ரொம்ப உழைத்திருக்கிறார் என்று தெரிகிறது .ஆனால் இவரின் பாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை .விரைப்பாக நடக்கிறார் .சண்டைபோடுகிறார் ......ஆசனங்கள் செய்கிறார் .

படத்தில் கொஞ்சம் சீர் செய்யப் பட்டிருக்க வேண்டியவை ....
வேறு மொழிகளுக்கு சப் டைட்டில் போட்டிருக்கலாம் .
அந்த அம்மா பாத்திரம் கொஞ்சம் நெருடல் .நடிப்பிலும் ஆக்கத்திலும் .
கதாநாயகி பாடும் பாடல்களுக்கு வெறும் குரல் சேர்க்காமல் ..மொத்தமாக soundtrack சேர்ததிருக்கிறார்கள் ...பொருந்தவில்லை ...
எல்லாவற்றையும் விட கதாநாயகி கடைசியில் பேசும் நீள வசனம் ...ரொம்ப சராசரி


மீண்டும் ஒரு வித்தியாசமான களத்தில் கதை சொன்னதிற்கு பாலாவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை .குறிப்பாக "பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன் ",பாடலை நினைத்தாலே கண்ணீர் வருகிறது .அதே நேரம் இவர் யதார்த்தமான களங்களில் அதிகம் யதார்த்ததிற்கு ஒவ்வாத நாயகர்களை படைப்பதையும் கொஞ்சம் மாற்றலாமோ ?

இந்த திரைப்படத்தை நான் ஆறாம் தேதியே பார்த்து விட்டேன் .இதற்கு இணையத்தில் நான் படித்த பல விமர்சனங்கள் என்னையும் ஒன்று எழுத தூண்டியது .


சமீப காலங்களில் நான் பார்த்த திரைப் படங்களில் என்னை அதிகம் பாதித்தது இந்த படம் .

உனதே

என் உயிர் இருக்கிறது என்னிடம்
என் உயிர் மட்டுமே இருக்கிறது என்னிடம்
என்னிடம் இருக்கும் என் உயிர்
உனதே


காதல் இருக்கிறது என்னிடம்
என்னிடம் இருக்கும் உயிர்மேல்
காதல் இருக்கிறது என்னிடம்
அது உனதே உனதே உனதே


நான் உறக்கம் கொள்வேன்
நான் ஓய்வும் கொள்வேன்
ஆனால் மரணம் ஒரு இடைநிறுத்தமே


ஏனெனில் ,
நீண்ட பசும் புல்லுள் இருக்கும்
என் ஆண்டுகளின் அமைதியும்
உனதே உனதே உனதே


Yours and yours and yours
By Leo Marks


The life that I have
Is all that I have
And the life that I have
Is yours.

The love that I have
Of the life that I have
Is yours and yours and yours.


A sleep I shall have
A rest I shall have
Yet death will be but a pause.

For the peace of my years
In the long green grass
Will be yours and yours and yours.

Saturday, 7 February 2009

தாயிற் சிறந்த ....

என்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண் இவர் .சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய வழக்கமான பரிசோதனைக்காக வந்திருந்தார் .கிளம்பும் முன் கொஞ்சம் தயங்கி நின்றவரிடம் என்னவென்று விசாரித்த போது ,கையில் கொண்டு வந்திருந்த ஒரு மாத்திரையைக் காட்டினார் .இது சத்து மாத்திரை தானே என்றும் கேட்டார் .

நாங்கள் ,"ஒரு மாத்திரையை வைத்துக் கொண்டு எப்படி சொல்ல முடியும் .ஒரே நிறத்தில் பல வகையான மாத்திரைகள் இருக்கக் கூடும் .அதனால் மொத்தமாக பாட்டிலுடன் எடுத்துவாருங்கள் பார்த்து சொல்கிறோம் ",என்று கூறினோம் .
"பாட்டில் கொண்டு வர முடியாது "என்று கூறினார் .

இதை விசாரிக்க வேண்டும் என்று ,"சரி ,இது எங்கிருந்து கிடைத்தது " என்றதும்
"என் மகளுக்கு ஒரு வரன் வந்திருக்கு .மாப்பிள்ளை வீட்டுக்கு போயிருந்தோம் .
வீட்டில இந்த மாத்திரை இருந்தது .மாப்பிள்ளை இந்த மாத்திரை தான் ரொம்ப நாளா சாப்பிடுறார் ன்னு சொன்னாங்க .என்ன மாத்திரையோ,என்ன நோயோ ன்னு தெரியலையே ன்னு உங்க கிட்ட கேட்கலாம்ன்னு தெரியாம எடுத்திட்டு வந்தேன் .என் வீட்டுக்காரர் இப்படித்தான் நோய் இருக்கறத மறைச்சி என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டார் ,நா பட்ட கஷ்டம் என் பொண்ணும் படக் கூடாதில்ல ?"என்றார் .

அது ஒத்த வேறு மருந்துகளையும் கொண்டு வரச் செய்து ,அது சத்து மாத்திரை தான் என்று உறுதி செய்த பின் அனுப்பி வைத்தோம் .

Wednesday, 4 February 2009

தேவை விருதுகள்

நடிகர் நாகேஷின் மரணம் அவருக்கான அனுதாபங்களுடன் அவர் பேர் சொல்லும் அளவுக்கு விருதுகள் எதுவும் பெறாமல் போனதை பற்றிய வருத்தங்களையும் வெளிக்கொணர்ந்தது .

அவரே ஒரு நிகழ்வில் ,"எனக்கு ஏன் விருதுகள் ஏதும் கிடைக்கவில்லை என்று யோசித்திருக்கிறேன் ,பின்னர் தான் தெரிந்தது இங்கிருப்பவர்கள் பரிந்துரை செய்யாததால் தான் எனக்கு அவை கிடைக்கவில்லை ,"என்று கூறினார் .

காலம் கடந்த பின் கிடைக்கும் விருதுகள் அவமானச் சின்னங்கள் தவிர வேறில்லை .ஆனானப்பட்ட நடிகர் திலகதிற்கே ,சிறந்த துணை நடிகர் விருது கொடுத்து கேவலப் படுத்தியிருக்கிறோம் .அவருக்கும் "தாதா சாகிப் பால்கே விருது ",கலைஞரும் மூப்பனாரும் பதவிக்கு வந்த போது தான் சாத்தியமாயிற்று .

ஒரு கலைஞனுக்கு என்னதான் காலத்தை வென்ற கலைஞன் என்று நாம் பட்டங்கள் கொடுத்தாலும் ,விருதுகள் அவர்களுக்கு ஒரு வெளிப்படையான அங்கீகாரமாக தெரிவதில் வியப்பில்லை .மறைந்த பிறகு வருத்தப்படுவதை விட
இருக்கும் போதே அவர்களை கவுரப்படுத்துவது சிறப்பானது தானே .

ஆச்சி மனோரமா ,ஒரு மிகச் சிறந்த கலைஞர் .எத்தகைய பாத்திரமானாலும் ஏற்று சிறப்பாக்கி நடிக்கக் கூடியவர் .ஆயிரம் படங்கள் என்று எண்ணிக்கை அளவில் மட்டுமன்றி தன் நடிப்பிலும் சாதனை படைத்தவர் .உடை ,பாவனைகள் ,வட்டார பேச்சு என்று முழுமையாக பாத்திரத்துடன் ஒன்றி நடிக்கக்கூடியவர் .நடிகைகளில் இந்திய அளவில் ,ஏன் உலக அளவில் கூட இவரைப் போல சாதித்தவர்கள் எவரும் உண்டா என்பது சந்தேகமே ...

ஏன் இவருக்கு ஒரு "தாதா சாகிப் பால்கே விருது "கொடுக்கக்கூடாது ?

Monday, 2 February 2009

தாயிற் சிறந்த ....

கர்ப்ப காலத்தில் சிகிச்சைக்கு வந்தார் இந்த பெண் .தன் முதல் கர்ப்பத்தின் போதே தனக்கு எச்.ஐ.வி நோய் இருப்பது தெரியும் இவருக்கு .முதல் குழந்தை நோயினால் பாதிக்கப் பட்டது .அதனை வளர்க்க முடியாமல் ஒரு அநாதை இல்லத்தில் விட்டிருக்கிறார் .பின் கணவரும் இறந்து விட மறுமணம் புரிந்திருக்கிறார் .

வாரிசு சட்டத்திற்கு ஏற்ப மீண்டும் கர்ப்பமானார் .இடைப்பட்ட கால கட்டத்தில் இவருக்கு நோய்க்கான எ.ஆர்.டி மருந்துகள் ஆரம்பிக்கப் பட்டன .இந்த நேரத்தில் தான் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார் ,ஐந்தாம் மாதத்தில் .மருந்துகளை மாதா மாதம் பெற்றுக் கொண்டிருந்தார் இலவசமாக .பேறு காலம் நெருங்கும் போது
தன் கணவன் தன்னை துன்புறுத்துவதாகவும் தன்னால் இந்த குழந்தையையும் வளர்க்க முடியாது எனவும் கூறினார் .

பிரசவம் முடிந்ததும் வேறு ஒரு தம்பதியினர் குழந்தையை வளர்க்கிறோம் என்று முன்வந்தனர் .ஆனால் குழந்தைக்கு எச்.ஐ.வி நோய் பாதிப்பு இருக்கக் கூடாது என்று கூறினர்,கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் வரும் சாத்தியக் கூறுகள் இருப்பதனால் ...பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு நோய் இருப்பது தெரிய வந்தது .தானே வளர்த்துக் கொள்வதாக இந்த பெண் கூறி விட்டார் .

சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார் இவர் .இவர் உடல்நிலையை பார்த்த போது இவர் மருந்துகளை
உட்கொள்ளவில்லை என்பது தெரிந்தது .எவ்வளவு நாட்கள் சாப்பிடவில்லை என்று கேட்ட போது ,காத்திருந்தது அதிர்ச்சி .தன் கர்ப்ப காலத்தில் ஐந்தாம் மாதத்திலிருந்து சாப்பிடவில்லை என்று கூறினார் .நாங்கள் கேட்ட போதெல்லாம் சாப்பிடுவதாக கூறினீர்களே என்றதுக்கு ,"சும்மா சொன்னேன் "என்றார் அலட்டாமல் .


தன்னுடலில் நோய் கட்டில் இல்லையென்றால் குழந்தைக்கு நோய் வரக் கூடும் என்று தெரியும் இவருக்கு .இந்த நோயை பொறுத்தவரை மருந்துகளை காலம் தவறாமல் சரியாக உட்கொள்வது அதி முக்கியம் என்றும் தெரியும் ..எல்லாம் தெரிந்தும் மாத்திரை பெரிதாக இருந்ததால் சாப்பிடவில்லை என்ற காரணத்தைக் கூறிக் கொண்டு ஒரு சிறு மழலையின் வாழ்வை நாசப்படுத்திவிட்டார் .

குழந்தை இப்போது வேறு ஒரு காப்பகத்தில் இருக்கிறது .
எவரை நோவது ?