Monday, 2 February 2009

தாயிற் சிறந்த ....

கர்ப்ப காலத்தில் சிகிச்சைக்கு வந்தார் இந்த பெண் .தன் முதல் கர்ப்பத்தின் போதே தனக்கு எச்.ஐ.வி நோய் இருப்பது தெரியும் இவருக்கு .முதல் குழந்தை நோயினால் பாதிக்கப் பட்டது .அதனை வளர்க்க முடியாமல் ஒரு அநாதை இல்லத்தில் விட்டிருக்கிறார் .பின் கணவரும் இறந்து விட மறுமணம் புரிந்திருக்கிறார் .

வாரிசு சட்டத்திற்கு ஏற்ப மீண்டும் கர்ப்பமானார் .இடைப்பட்ட கால கட்டத்தில் இவருக்கு நோய்க்கான எ.ஆர்.டி மருந்துகள் ஆரம்பிக்கப் பட்டன .இந்த நேரத்தில் தான் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார் ,ஐந்தாம் மாதத்தில் .மருந்துகளை மாதா மாதம் பெற்றுக் கொண்டிருந்தார் இலவசமாக .பேறு காலம் நெருங்கும் போது
தன் கணவன் தன்னை துன்புறுத்துவதாகவும் தன்னால் இந்த குழந்தையையும் வளர்க்க முடியாது எனவும் கூறினார் .

பிரசவம் முடிந்ததும் வேறு ஒரு தம்பதியினர் குழந்தையை வளர்க்கிறோம் என்று முன்வந்தனர் .ஆனால் குழந்தைக்கு எச்.ஐ.வி நோய் பாதிப்பு இருக்கக் கூடாது என்று கூறினர்,கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் வரும் சாத்தியக் கூறுகள் இருப்பதனால் ...பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு நோய் இருப்பது தெரிய வந்தது .தானே வளர்த்துக் கொள்வதாக இந்த பெண் கூறி விட்டார் .

சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார் இவர் .இவர் உடல்நிலையை பார்த்த போது இவர் மருந்துகளை
உட்கொள்ளவில்லை என்பது தெரிந்தது .எவ்வளவு நாட்கள் சாப்பிடவில்லை என்று கேட்ட போது ,காத்திருந்தது அதிர்ச்சி .தன் கர்ப்ப காலத்தில் ஐந்தாம் மாதத்திலிருந்து சாப்பிடவில்லை என்று கூறினார் .நாங்கள் கேட்ட போதெல்லாம் சாப்பிடுவதாக கூறினீர்களே என்றதுக்கு ,"சும்மா சொன்னேன் "என்றார் அலட்டாமல் .


தன்னுடலில் நோய் கட்டில் இல்லையென்றால் குழந்தைக்கு நோய் வரக் கூடும் என்று தெரியும் இவருக்கு .இந்த நோயை பொறுத்தவரை மருந்துகளை காலம் தவறாமல் சரியாக உட்கொள்வது அதி முக்கியம் என்றும் தெரியும் ..எல்லாம் தெரிந்தும் மாத்திரை பெரிதாக இருந்ததால் சாப்பிடவில்லை என்ற காரணத்தைக் கூறிக் கொண்டு ஒரு சிறு மழலையின் வாழ்வை நாசப்படுத்திவிட்டார் .

குழந்தை இப்போது வேறு ஒரு காப்பகத்தில் இருக்கிறது .
எவரை நோவது ?