Friday 31 July 2009

அம்மன் கொடை

சாயங்காலம் திரும்ப ஊர் சுற்ற ? கிளம்பினோம் .தெரிந்தவர்களை எல்லாம் பார்த்து விட்டு வர வேண்டும் என்பதால் ஒவ்வொரு வீடாக சென்று வந்தோம் .ஊரையே ஒரு முறை வலம் வந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும் .

இரண்டாம் நாள் கொடையின் சிறப்பு சாமியாட்டம் .
பந்தலில் ஒரு பக்கம் ,பொங்கல் விட்டுக் கொண்டிருந்தார்கள் .பொங்கல் முடிந்தவுடன் கொட்டடிக்க ஆரம்பித்தார்கள் .கொட்டடிக்க அடிக்க சாமியாட்டம் துவங்கியது .சரியான இட நெருக்கடி .சாமிக்கு ஆடவே இடமில்லை ."எடம் விடுங்கையா ...வழிய மறிச்சு நிக்காதீங்க " என்று சொல்லியபடியே சிலர் கூட்டத்தை விலக்கி சாமிக்கு ஆட இடம் கொடுக்க முயன்றுக் கொண்டிருந்தனர் .ஆட இடமில்லாமலோ என்னவோ, சாமி முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தது .


இந்த நெரிசலில் சிலர் சாமிக்கு மாலைகள் போடத் துவங்கினர் .எல்லாம் கொஞ்சமே பூக்கள் வைத்து கட்டப்பட்ட மாலைகள் .இந்த மாலைகளின் நார்கள் எல்லாம் சேர்ந்து சாமியின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தன .இதை எடுக்க ஒருவர் முயல அது இன்னமும் கொஞ்சம் இறுகிப் போனது .ஒருவழியாக ,சில மாலைகளை கழற்றி போட்டனர் .

கொஞ்சம் மூச்சு விட முடிந்தாலோ என்னவோ சாமி கொஞ்சம் வலுவாக ஆடத் துவங்கினார் இப்போது .இந்த ஆட்டம் அதிகாலை மூன்று மணி வரை தொடருமாம் .


No comments: