Thursday, 11 September 2014

பெண்பாவம்

தென் தமிழகத்தின் கிராமங்களில் ஒன்றை சேர்ந்தவர் இவர் .சிகிச்சைக்கு  சில மாதங்கள் வரவில்லை . விசாரித்தபோது ,இவரின்  பதினான்கு வயது மகள் பள்ளிக்கு  சென்று வரும் வழியில் ,ஒருவன் ,இவன் வயது பதினெட்டாம் ,தினமும்  கிண்டல் செய்தபடி இருந்திருக்கிறான் .கையை பிடிப்பது ,தூக்கி சென்று விடுவேன்  என்று இவன் அத்து மீறவும் ,அவன் பெற்றோரிடம் போய்  இவர் , மகனை கண்டிக்கும் படி சொல்லியிருக்கிறார் .அவர்கள் ஏதும் செய்தது போல் தெரியவில்லை .இவன் தொந்தரவு தொடர்ந்திருக்கிறது .அந்த பெண்ணோ பள்ளிக்கு போகவே பயந்து போயிருக்கிறது . பிரச்சனை பெரிதாவது போல் தோன்றவே இவர் போலீசிடம் போயிருக்கிறார் .அவர்கள் ஏதும்  கண்டுகொள்ளவில்லையாம் .பெண் வீட்டில் இருந்தாலும் எவரேனும் துணைக்கு இருக்க வேண்டியிருப்பதால் மருத்துவமனைக்கு வர முடியவில்லை என்று சொன்னார் .

மீண்டும் இன்று வந்திருந்தார் .பேச்சு  வாக்கில் இது குறித்து விசாரிக்கவே ,"அவன்  அப்படியே தான் செஞ்சுக்கிட்டிருந்தான்க்கா .போலீஸ் கிட்ட  போய் சொன்னா  அவங்க ஒண்ணும் கண்டுக்குற மாதிரி தெரியல .அவன் புள்ளைய தூக்கிருவேன்னு மெரட்டிக்கிட்டே இருந்தான் .புள்ள  பள்ளிக்கூடமே  போக மாட்டேங்கு .அப்புறம் அவர புடிச்சு இவர புடிச்சு போலீசுக்கு இருபதாயிரம் கொடுத்தப்புறம் அவன மெரட்டி இப்ப  வேற ஊருக்கு போயிட்டான் ."

"அவன் பிரெண்ட்   ஒரு பய ஊருக்குள்ள  இருக்கான் .அவன் போன வாரத்துல ஒரு மூணு வயசு  புள்ளைய தூக்கிட்டு போய் அசிங்கம் செஞ்சிருக்கான்.அந்த புள்ளையோட அப்பா வெளியூருல வேலைக்கு போயிருக்காப்ல .அந்த பொண்ணு அவனோட போய் ஒத்த ஆளா மல்லுகட்டியிருக்கு .யாரும் என்னன்னு கண்டுக்கல.அப்புறம் போலீசுக்கு ரெண்டாயிரம்  குடுத்திருக்கு .அப்பவும் அவங்க கேஸ் எழுதலக்கா .வெறுமனே அவன மெரட்டி விட்டிருக்காங்க .பாவம் அந்த புள்ள பயந்து போய் கெடக்கு .

"இந்த பயலுவ செல்லுல அசிங்க அசிங்கமா படம் பாத்துட்டு இப்படி புத்தி கெட்டு திரியிறான்ங்கக்கா "

என்னைய விட்டா ஒருத்தனையாவது போட்டு தள்ளிருவேன்க்கா .ஒருத்தன போட்டாத்தான் இவனுங்க அடங்குவாங்க .பத்து லட்சம் செலவாகும் .மூணு மாசம் உள்ள இருக்கணும் .உள்ள மாத்திர முழுங்க விடமாட்டங்க .நீங்க வேற தெனம் விடாம சாப்பிடனும்ன்னு  சொல்றீங்க .அதுக்கே தான் நா பேசாம இருக்கேன்க்கா  ."

"எத்தன வயசுலேயும் பொம்பள புள்ளைய வீட்டுல வச்சுக்கிட்டு நிம்மதியா இருக்க முடியலக்கா ."6 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அம்மா
இன்று தங்கள் வலைப்பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.

நன்றி.
http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html

பூங்குழலி said...

மிக்க நன்றி குணசீலன் உங்கள் அறிமுகத்திற்கு

பால கணேஷ் said...

மனிதன் என்ற போர்வையில் மிருகங்கள் உலவும் நாடாகி விட்டதே நம் தமிழ்நாடு. இவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளி விடலாம் என்று அந்தப் பெணமணிக்கு வருகிற கோபம் என்னுள்ளும் வருவதுண்டு.

விச்சு said...

மனிதம் என்பதை மறந்த மிருகங்கள், அதைக்கண்டும் காணாத சமூகம், காவல்துறை போன்றவை இருக்கும்வரை இது போன்ற அவலங்கள் நடக்கின்றன. என்கவுண்ட்டர் மட்டுமே சிறந்த வழி.

பூங்குழலி said...

உண்மைதான் கணேஷ் ..எப்படியேனும் தீர்வு கிடைக்காதா என்ற ஆற்றாமையின் வெளிப்பாடே அந்த கோபம்

பூங்குழலி said...

நாம் அறியாத பதிவு செய்யப்படாத குற்றங்கள் நிறைய இருக்கின்றன ...இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு என்கவுண்டர் இல்லை விச்சு