Tuesday, 9 June 2009

என் கொலுசுகள்


தீராத மையல் எனக்கு
என் கொலுசுகள் மேல்
அவை அணியாத கால்களை
காணவே அருவருக்கும் மனம்
கணுக்கால் மறைக்கும் செருப்புகள் கூட
நான் அணிவதில்லை
என் கொலுசுகளுக்கு
மூச்சடைக்கும் என


உரத்த குரலில்
அதிர பேசும் வாயாடிகள் அல்ல
என் கொலுசுகள்
வாயடைத்து போன ஊமைகளும் அல்ல.
செல்லமாய் சிணுங்கி
என் பாதங்களுடன் மோகித்துக் கிடக்கின்றன
என் கொலுசுகள்


என் பாதத்தில் பங்குபெற வந்த
மெட்டிகள் மேல்
பொல்லாத கோபம்
என் கொலுசுகளுக்கு
இன்னமும் அவற்றினிருந்து
ஒரு அடி தள்ளித்தான் கிடக்கின்றன


பட்டுப்புடவை மேல் மட்டும்
என் போலவே
ஆசைதான்
என் கொலுசுகளுக்கும்
எட்டியதை
இழை இழையாய் பிரித்து
உடுத்திப் பார்க்கின்றன


நான் மட்டும் இருக்கும் போது
சிரித்து
என் கால்களில் சறுக்கி விளையாடி
உரிமை கொள்ளும்
என் கொலுசுகள்


நான் புதிதொன்றை
மாற்றும் போதும்கூட
பல்லிளித்து
வருத்தம் காட்டாமல்
விலகிக் கொள்ளும்


என் மேல் தீராத மையல் தான்
என் கொலுசுகளுக்கும்


14 comments:

மயாதி said...

உங்கள் கொலுசுக்குள் இவ்வளவு ரகசியமா?
அது சரி நீங்கள் கொலுசு எண்டது கொலுசை மட்டுமா தோழி?

geevanathy said...

//பட்டுப்புடவை மேல் மட்டும்
என் போலவே
ஆசைதான்
என் கொலுசுகளுக்கும்
எட்டியதை
இழை இழையாய் பிரித்து
உடுத்திப் பார்க்கின்றன///

நன்றாக உள்ளது

ஆயில்யன் said...

பாதத்தின் மீது விருப்பம்

மெட்டியின் மீது கோபம்

பட்டின் மீது மோகம்

விலகும் போது சோகம்

எல்லாம் கலந்திருக்கிறது கொலுசுகளின் மீதான உங்கள் காதல் :))

பூங்குழலி said...

நான் கொலுசு என்றது கொலுசை மட்டுமே மயாதி

பூங்குழலி said...

நன்றி ஜீவன்

பூங்குழலி said...

எல்லாம் கலந்திருக்கிறது கொலுசுகளின் மீதான உங்கள் காதல் :))

அழகான உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஆயில்யன்

இராவணன் said...

//கணுக்கால் மறைக்கும் செருப்புகள் கூட
நான் அணிவதில்லை
என் கொலுசுகளுக்கு
மூச்சடைக்கும் என

எட்டியதை
இழை இழையாய் பிரித்து
உடுத்திப் பார்க்கின்றன
//

மிக மிக அருமை

//நான் புதிதொன்றை
மாற்றும் போதும்கூட
பல்லிளித்து
வருத்தம் காட்டாமல்
விலகிக் கொள்ளும்


என் மேல் தீராத மையல் தான்
என் கொலுசுகளுக்கும்
//
இது மட்டும் கொலுசுக்கு எழுதினதா தெரியல.:)

பூங்குழலி said...

மிக்க நன்றி இராவணன் .

என் மேல் தீராத மையல் தான்
என் கொலுசுகளுக்கும்
//
இது மட்டும் கொலுசுக்கு எழுதினதா தெரியல.:)

கண்டிப்பா கொலுசுக்கு எழுதினது தான் .நானும் என் கொலுசுகளும் காதலிக்கக் கூடாதா என்ன ?

தமிழ் said...

/உரத்த குரலில்
அதிர பேசும் வாயாடிகள் அல்ல
என் கொலுசுகள்
வாயடைத்து போன ஊமைகளும் அல்ல.
செல்லமாய் சிணுங்கி
என் பாதங்களுடன் மோகித்துக் கிடக்கின்றன
என் கொலுசுகள்/

அருமை

பூங்குழலி said...

நன்றி திகழ்மிளிர்

Barari said...

VERY GOOD IMAGINE KEEP IT UP

பூங்குழலி said...

நன்றி Barari

Sakthivel said...

கொலுசின் மேல் உள்ள காதலை இத்துணை அழகாக கூட சொல்ல முடியுமா!!! நன்றி.. :-) இப்போ எனக்கும் ஒரு கரு கிடைச்சுருக்கு.. :-))

பூங்குழலி said...

என் கவிதைகளில் எனக்கு மிக பிரியமானது இந்த கவிதை ..என் அணிகளில் எனக்கு மிக பிரியமானது என் கொலுசுகள் .நன்றி சக்தி