Wednesday 10 June 2009

கரெண்ட் கொடுங்கள் ??????

ஒரு நாள் காலை ,நான் மருத்துவமனைக்குள் நுழைகிறேன் ,ஒரு பெண் ,என்னை ஓடி வந்து பிடித்துக் கொண்டார் .என் நோயாளி ஒருவரின் சகோதரி இவர் ."என் தம்பி போய் விட்டான் ,போய் விட்டான் "என்று கதறினார் ."இவர்கள் கவனிக்காமல் என் தம்பியைக் கொன்று விட்டார்கள் "என்று குற்றம் சாட்டினார் ,பணியிலிருந்த மருத்துவர் செவிலியர் மீது .


என்னவென்று விசாரித்த போது ,செவிலியரில் ஒருவர் சொன்னார் ,"டாக்டர் ,காலயில ஆம்புலன்சில வந்தாங்க .வரும்போதே அவர் இறந்து போயிருந்தார் .வந்த உடனே கரெண்ட் வைங்க ,கரெண்ட் வைங்கன்னு கத்தினாங்க .இப்ப கரெண்ட் வைக்காததால தான் அவர் இறந்து போயிட்டார்ன்னு சொல்றாங்க ,"என்று சொன்னார் .


நான் தனியே அவரை அழைத்து விசாரித்தேன் .வீட்டில் காலையில் தலை சுற்றுகிறது என்று அவர் தம்பி சொல்லியதாகவும் இவர் ஜூஸ் கலக்கி கொண்டு வரும் முன் மயங்கி விழுந்து கிடந்ததாகவும் .அதன் பிறகு பேச்சு மூச்சே இல்லை எனவும் கூறினார் .அதன் பிறகு ஆம்புலன்சிற்கு போன் செய்து இங்கு அழைத்து வந்ததாகவும் கூறினார் .வீட்டில் இருக்கும் போதே தன் தம்பி இறந்துவிட்டதை தான் உணர்ந்ததாகவும் கூறினார் .


பின்னர் எதற்காக கரெண்ட் வையுங்கள் என்று சொன்னீர்கள் என நான் கேட்டதற்கு ,"சிவாஜி படத்தில் கரெண்ட் வைச்சி இறந்த ரஜினிகாந்துக்கு உயிர் கொண்டு வந்தாங்க தானே ?அதுமாதிரி இங்க வந்தவுடனே செஞ்சிருந்தா ,என் தம்பியும் நல்லாயிருப்பான் ,"என்று சொன்னார் .

பொறுமையாக ,"உங்க தம்பி இங்க வரதுக்கு ரொம்ப முன்னாலேயே இறந்து போய்ட்டார் .அவருக்கு இந்த மாதிரி கரெண்ட் எல்லாம் வச்சி உயிர் கொண்டு வர முடியாது ,"என்று விரிவாக விளக்கம் சொல்லி அனுப்பி வைத்தோம் .


4 comments:

Unknown said...

நம் மக்களிடையே இருக்கும் சினிமா மோகத்துக்கு இந்த பதிவையும் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்பதை ‌பொதுமக்கள் உணர வேண்டும் என்ற அறிவுரையையும் தங்களது பதிவில் சேர்த்திருந்தால் பதிவு இன்னும் அழகாக நிறைவு பெற்றிருக்கும். முடிந்தால் சினிமாவையும், நிஜவாழ்க்கையையும் ஒரே மாதிரி பார்க்கும் பாமர ரசிகர்களுக்கு ஒரு நல்ல அறிவுரை பதிவு வெளியிடுங்கள்.

நன்றி

பூங்குழலி said...

அதை வேறு தனியாக சொல்லி புரிய வைக்க வேண்டுமா என்று எண்ணி விட்டு விட்டேன் நண்பரே ....
இது போன்ற பிரமாண்டமான அபத்தங்களை சினிமா குறைத்துக் கொள்ளலாம் .அந்த பெண் இத்தனைக்கும் நன்கு படித்தவர் .ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பவர் .

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

கலையரசன் said...

உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...
வாழ்த்துகள்!

http://youthful.vikatan.com/youth/index.asp

பூங்குழலி said...

மகிழ்ச்சியாக இருக்கிறது
தகவலுக்கு நன்றி நண்பரே ...