Monday, 15 June 2009

தாயிற் சிறந்த .....





ஒரு ஆராய்ச்சிக்காக பாலியல் தொழில் செய்யும் சில பெண்களோடு பணி புரிய நேர்ந்தது .ஆளுக்கொரு கதை இருக்கும் .சில சுவாரசியமாக ,சில வழக்கம் போல .

இவர்களுள் குறைந்த வயதுடைய பெண் ஒருவர் .வயது பதினெட்டு .இவரோடு எப்போதும் வரும் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் .கேட்டால் பக்கத்து வீடு என்று சொல்வார்.


மாதம் ஒரு முறை என பரிசோதனைக்கு வரும் போதெல்லாம் போதையிலேயே இருப்பார் .கேட்டால் ஊரிலிருக்கும் கோவில்கள் பேரையெல்லாம் சொல்லி இல்லவே இல்லை ,தனக்கு அந்த பழக்கமே கிடையாது என்று சத்தியம் செய்வார்.ஒரு முறை பரிசோதனைக்கு வந்த போது ,மிக அதிக போதையில் இருந்தார் .சரியாக பேசக் கூட முடியவில்லை .வீட்டிற்கு அனுப்பி விட்டோம் .

அடுத்த நாள் வந்த போது இதை பற்றி கேட்டு பயன் ஏதும் இல்லை என்பதனால் ,வழக்கம் போல நான் சோதனைகளை மட்டும் செய்து கொண்டிருந்தேன் .நான் ஒன்றும் கேட்காமல் இருந்தது அந்த பெண்ணை உறுத்தியிருக்க வேண்டும் ."என் மேல கோவமா ?"என்றார் மெதுவாக .நான் அமைதியாகவே இருந்தேன் ."நேத்து ரொம்ப குடிச்சிட்டேன் போல .கஸ்டமர் குடிக்கச் சொன்னான் ."

"இப்படியா குடிக்கிறது ?நிப்பாட்டலாமே ,மருந்து மாத்திரை எல்லாம் இருக்கு "என்று கேட்டேன். சிரித்துக் கொண்டார் ,"எனக்கு பதிமூணு வயசிலிருந்து இந்த பழக்கம் இருக்கு .நா பெரிய பொண்ணு ஆன உடனே எங்கம்மாவும் எங்க மாமாவும் கஸ்டமர் கூட்டிட்டு வந்தாங்க .குடிச்சா தான் அந்த வயசுல வலி தெரியாம இருக்கும் ன்னு குடிக்க பழக்குனாங்க .அப்புறம் அப்படியே பழக்கம் ஆயிருச்சி ."உங்கம்மா எங்கே ?"என்று நான் கேட்டதற்கு ,"மாசா மாசம் என்கூட வராங்களே அவங்க தான் எங்கம்மா .இங்க அத சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க .நா சொன்னேன்ன்னு சொல்லிராதீங்க ,"என்று பதில் சொன்னார் .

நான் மீண்டும் ,"குடிப் பழக்கம் விடறதுக்கு வைத்தியம் பாக்கலாமா ?"என்று கேட்க ,"நீங்க நிப்பாட்ட மருந்து குடுப்பீங்க ,நானும் நிப்பாட்டுவேன் .ஆனா வீட்டுக்கு வந்ததும் கஸ்டமர் வருவாங்க ,அப்ப திருப்பி குடிக்க தோணும் ,சரி நானே குடிக்காம இருந்தாலும் கஸ்டமர் கம்பனிக்கு குடிக்க சொல்வாங்க ,அப்ப என்ன செய்யறது ?"



3 comments:

ஈரோடு கதிர் said...

அந்த அம்மாவுக்கும்.. ஒரு கதை இருக்கும் தானே....

பூங்குழலி said...

உண்மைதான் .ஆனால் அதை தொடர்கதையாக்க வேண்டுமா ?

ஒளியவன் said...

வருத்தமளிக்கும் விசயம். பாவம் அறியா வயதில் சுயவிருப்பமின்றி தள்ளப் பட்டோர்கள்.