Tuesday, 5 April 2011

முன்பொரு காலத்தில் தேர்தல் .....

முன்பெல்லாம் தேர்தல் என்பது திருவிழா போல் இருந்தது .படங்கள் மாற்றப்படும் போது ஒரு தட்டியை மாட்டு வண்டியில் வைத்து கொண்டு வழி நெடுக துண்டு சீட்டு கொடுத்துக் கொண்டு போவார்கள் ,தேர்தல் நேரத்தில் கும்பிட்டபடியே இந்த தட்டிகளில் ஊர்வலம் வருவார் வேட்பாளர். அதன் பிறகு அவரின் உறவினர்கள் பலரும் வீடு வீடாக வந்து வாக்கு கேட்பார்கள் .பல இடங்களில் பெண்கள் வந்து ஆரத்தி எடுத்து வசூல் செய்து கொண்டு போவார்கள் .இதிலும் முன்பெல்லாம் அவர்கள் ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே ஆரத்தி. பின்பு எல்லாருக்கும் எடுத்து பணத்தை பிராக்கெட் பண்ணுவது வழக்கமாகிப் போனது .ஊருக்குள் நுழையும் போதே ஓட்டு விழுமா விழாதா என்று தெரிந்து விடுமாம் .


ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி ,சுவரெல்லாம் சித்திரம் தீட்டி திரும்பும் இடமெல்லாம் கட்சியின் சின்னங்களாக இருக்கும்.மற்ற கட்சிகளை கிண்டல் செய்தும் தங்கள் கட்சியின் சின்னத்தை விளம்பரப்படுத்தியும் ஒரு இளைஞர் கூட்டம் பாட்டு பாடி ஓட்டு கேட்டு வரும் ("போடுங்கம்மா ஓட்டு ,ரெட்டை இலையைப் பார்த்து இல்லை உதயசூரியனைப் பார்த்து ", "காமராஜர் ஹிந்தி படிக்கணும் ,கக்கன்ஜியும் சேர்ந்து படிக்கணும் "-இது இந்தி எதிர்ப்பு போராட்டம் போது ) .கட்சியின் முக்கிய தலைவர்கள் பேசும் நாட்களில் அக்கம் பக்கம் ஊர்களிலிருந்து எல்லாம் வந்து சேர்வார்கள் அவர்களின் பேச்சைக் கேட்க .


தேர்தல் கமிஷன் திடீரென்று இவையெல்லாம் மக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் பின் ஏதேதோ காரணங்களுக்காகவும் தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வந்தது .இதன் பின் சுவர்களில் படம் வரைவது போஸ்டர் ஒட்டுவது தடை செய்யப்பட்டது .சத்தமாக பிரச்சாரம் செய்வது ,நடு இரவு பிரச்சாரம் செய்வது போன்றவையும் நிறுத்தப்பட்டன .எங்கேனும் ஏதேனும் அண்ணா ,கலைஞர் ,எம் ஜி ஆர் என்று யாராவது ஒலி நாடாக்களில் பேசிக்கொண்டே இருப்பார்கள் .எம் ஜி ஆர் எல்லா பட்டி தொட்டிகளிலும் தத்துவபாடல்களும் அவ்வப்போது காதல் பாடல்களும் பாடிக் கொண்டே இருப்பார் .அனைவரையும் ஆப் செய்தது தேர்தல் ஆணையம் .


செலவுகளும் நிறைய கண்காணிக்கப்பட்டன .ஆனால் அதிசயமாக போஸ்டர்கள் காணாமல் போனது போல் பணம் காணாமல் போகவில்லை .அண்டர்கிரவுண்ட் போனது .அங்கங்கே சாராயம் ,நிறைய இடங்களில் பிரியாணி ,பூத்திற்கு பணம் ,ஆரத்திக்கு பணம் என்று சில்லறைகளாக செலவழிந்து கொண்டிருந்த பணம் ,பாதாளம் வரை பாய்ந்து ஓடத் துவங்கியது .பூத்திற்கு பணம் என்பது போய் ஒவ்வொரு ஓட்டிற்கும் பணம் (பொன்னான வாக்குகள் இல்லையா சும்மா போடா முடியுமா )என்றானது .


தற்சமயம் எல்லா கட்சிகளும் ஆளுக்கொரு தொலைகாட்சி வேறு வைத்திருக்கிறார்கள் .விளம்பர இடைவெளியின் போதெல்லாம் தலைவர்கள் வந்து தலைக்காட்டுகிறார்கள் ,பேசியதையே திரும்ப திரும்ப பேசுகிறார்கள் .ஆனாலும் மனப்பாடம் ஆகாமல் துண்டு சீட்டுகளில் இருந்தும் பெரிய அட்டைகளில் இருந்தும் படிக்கிறார்கள் .அப்புறம் கிராபிக்ஸ் வேறு ,எம் ஜி ஆர் விஜயகாந்தாகிறார் (எம் ஜி ஆரின் ஆன்மா அவரை மன்னிக்கட்டும் ) .அவரவர் செய்தி தொலைக்காட்சிகளில் தலைமையின் ஆணைக்குட்பட்ட விரிவா ஆஆஆஆஆன அலசல்கள் .அப்புறம் பாடல்கள் அதற்கு தலைவர்களில் நடிப்பு .


இப்படியாக டிவி பொட்டிகளுக்குள் அடங்கிப் போன தேர்தல் நிறைய களையிழந்து தான் போனது .கோடி லட்சம் என்று பிடிபடுவதையும் எல்லா கட்சிகளிலும் உள்குத்து நடந்து போட்டி வேட்பாளர்கள் நிற்பதையும் தவிர சுவாரசியமாக எதுவும் இல்லை .சுவர்களில் படம் வரைந்தால் , கமிஷனே ஆள் வைத்து வெள்ளை அடிக்கிறது .எதிர்கட்சிகள் கிழிக்க வேண்டிய போஸ்டர்களையும் கூட தேர்தல் கமிஷனே கிழிக்கிறது .மக்கள் காலை எழுந்தவுடன் வீட்டு வாசலில் கவரில் பணமோ சேலையோ கிடக்கும் என்ற ஆசையில் தேர்தல் நேரத்திலும் வழக்கம் போலவே தூங்கப் போகிறார்கள் .7 comments:

Anonymous said...

நல்லதொரு பதிவு.. தேர்தல் விழாக்கள் எப்படி மாறி வருகின்றன என்பதை நினைக்கும் போது.. ஆச்சர்யப் படுத்துகின்றன. ஆனால் ஆரோக்ய மாற்றம் இல்லையே என்பது வருத்தம் தருகின்றன

ராஜ நடராஜன் said...

ஜனநாயக ரீதியாக பழைய தேர்தல் காலங்கள் சுவையானதென்றாலும் அதன் அழகையெல்லாம் கட்சிகள் ஹைஜாக் செய்து விட்டார்கள்.

புதிய தேர்தல் ஆணைய மாற்றங்களை வரவேற்க கற்றுக்கொள்வோம்.

Ponchandar said...

மக்கள் காலை எழுந்தவுடன் வீட்டு வாசலில் கவரில் பணமோ சேலையோ கிடக்கும் என்ற ஆசையில் தேர்தல் நேரத்திலும் வழக்கம் போலவே தூங்கப் போகிறார்கள் - இப்படி இலவசத்தை எதிர்பார்க்கும் அவல நிலைக்கு மக்களை அரசியல் கட்சிகள் தள்ளிவிட்டன. படிச்சவங்க ஓட்டுப் போட வருவதில்லை. படிக்காதவங்க ஒரு நாள் இலவசத்தை பார்த்து....அடுத்த ஐந்து ஆண்டுகள் இருளிலேயே இருக்கின்றனர்... தமிழகத்தை காப்பாற்றப் போவது யாரோ ?

பூங்குழலி said...

தேர்தல் முன்போல இல்லை என்பது உண்மைதான் .மக்கள் பங்கேற்பும் ஆர்வமும் கவலைக்கிடமாக இருக்கின்றன .ஒருவேளை இந்த கெடுபிடிகள் தான் அதற்கு காரணமோ என்று தோன்றுகிறது .நன்றி இக்பால் செல்வன்.

பூங்குழலி said...

//புதிய தேர்தல் ஆணைய மாற்றங்களை வரவேற்க கற்றுக்கொள்வோம்//


நீங்கள் சொல்வது உண்மை தான் .இந்த மாற்றங்களுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டியது தான் .ஆனாலும் எல்லோரும் பங்கேற்று தேர்தல் கட்சி என்று பேசி மாய்ந்து போன காலங்கள் மறைந்து போனது வருத்தம் தான்

பூங்குழலி said...

உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கிறது 'ராஜ'நட 'ராஜன்' .வருகைக்கு நன்றி .

பூங்குழலி said...

//படிச்சவங்க ஓட்டுப் போட வருவதில்லை. படிக்காதவங்க ஒரு நாள் இலவசத்தை பார்த்து....அடுத்த ஐந்து ஆண்டுகள் இருளிலேயே இருக்கின்றனர்... தமிழகத்தை காப்பாற்றப் போவது யாரோ ?//


சரிதான் பொன்சந்தர் .பேசுபவர்கள் ஓட்டு போடுவதில்லை .ஓட்டு போடுபவர்கள் இலவசம் கேட்கிறார்கள் .மாற்ற வேண்டியது நாம் தான் .