இரண்டு வருடங்களுக்கு முன் நான் அப்போது குடியிருந்த வீட்டை காலி செய்ய வேண்டியிருந்தது .ஹிந்துவின் ரெண்டல்ஸ் பகுதியில் தேடிய போது ,சில விளம்பரங்களில் வெஜிடேரியன்ஸ் ஒன்லி என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள் .இன்னமும் சிலரோ ,பிராமின்ஸ் ஒன்லி என்று போட்டிருக்கிறார்கள் .
எனக்கு வீடு பார்த்த ஒரு தரகர் சொன்ன சம்பவம் இது .ஒரு வெஜிடேரியன் குடும்பத்தினருக்கு வாடகைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தாராம் .அவர் சொன்ன வாடகைக்கு ஒப்புக் கொண்டு வந்தவர்கள் பலரும் நான்- வெஜிடேரியன்ஸ் .அதனால் வீடு முடியாமலேயே இருந்ததாம் .வீட்டில் சமைக்க மாட்டோம் என்று சிலர் சொன்னதை கூட வீட்டுக்காரர் ஏற்றுக் கொள்ளவில்லையாம் .சுத்த சைவமாக இருக்கவேண்டும் என்று கறாராக கூறிவிட்டாராம் .ஒருநாள் இவர் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த போது ஏதேச்சையாக பார்த்தால் வீட்டுக்காரர் நின்றுக் கொண்டிருந்தது ஒரு மீன் கடையில் !"எனக்கு சரியான கோபம்மா என்னெல்லாம் சொல்லி என்னைய அலைய விட்டாரு ....ங்க அசைவம் சாப்பிட்டாக் கூட கோழிக் கறி சாப்பிடுவாங்க ,பார்த்திருக்கேன் ...ஆனா மீன் சாப்பிட மாட்டாங்க .இவரு மீன் கடையில மீன் வாங்கிட்டிருக்காரு.இதுல ஆயிரம் கண்டிஷன்.எனக்கு வந்த கோபத்துல ,டேய் ! ...ன்னு கத்திட்டேன் ."
என் தோழி ஒருத்தி குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அசைவம் சமைக்கக் கூடாது .வாங்கிக்கொண்டு வந்து வேண்டுமானால் சாப்பிடலாம் . ஆனால் வீட்டில் சமைக்க அனுமதியில்லை .இன்னமும் சில இடங்களில் வாடகை குறைவாக இருக்கிறதே என்று விசாரித்தால் ,இதுவும் சைவம் மற்றும் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமாக இருக்கிறது .சிலர் வாடகைக்கு மட்டுமல்ல விற்கும் போதும் வெஜிடேரியன்ஸ் ஒன்லி என்று கண்டிஷன் போட்டே விற்கிறார்கள் .
இதற்கெல்லாம் உச்சமாக நேற்று ஜெயின்ஸ் ஹவுசிங் இன் விளம்பரத்தில் கீழ்பாக்கத்தில் அவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் "ஆர்ச் வே " என்ற குடியிருப்பை பற்றி விசாரிக்கையில் அது,
"பார் வெஜிடேரியன்ஸ் அண்ட் நார்த் இந்தியன்ஸ் ஒன்லியாம் !!!!!! "
நான் சிறுமியாக இருந்த போது ,திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில் குடியிருந்தோம் .அந்த ஓனர் சொல்வாராம் ,"என்னுடைய வீட்டை "நான் -வெஜிடேரியன்ஸுக்கு" மட்டுமே வாடகைக்கு தருவேன் .அவர்கள் வெஜிடேரியன்ஸுக்கு மட்டும் என்று சொல்வது சரியென்றால் நான் சொல்வதும் சரிதான் ."