இந்த பெண்ணை நான் சில வருடங்களாக அறிவேன் .பொலிவுடன் அழகாக இருக்கும் பெண் வரவர அழகு குறைந்தும் மெலிந்தும் படபடப்பாகவும் காணப்பட்டாள் .இந்த முறை வந்த போது ,"ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ?ஏதாவது பிரச்சனையா ?"என்று கேட்டவுடன் ஒரு சிரிப்பு .எதைக் கேட்டாலும் அதே சிரிப்பு .
பரிசோதனைகள் எல்லாம் முடித்துவிட்டு ,மறுபடியும் ,"உடம்பு மெலிஞ்சிக்கிட்டே போகுது ,எதைக் கேட்டாலும் கெக்கபிக்கேன்னு ஒரு வெத்துச் சிரிப்பு வேற ?என்னதான் பிரச்சனை ?இஷ்டமில்லேன்னா சொல்லவேணாம் " என்று சொன்னவுடன் ஆரம்பித்தாள் .
"இவருக்கு நா யார்கிட்டயாவது எங்களுக்கு நோய் இருக்குதுன்னு சொல்லிடுவேன்ன்னு பயம் .அதனாலே என்னைய யார்கிட்டயும் பேசவே விடமாட்டார் .இவர் வெளியே போனவுடனே கதவ சாத்துனா இவரு ராத்திரி வரும் போது தான் தொறக்கணும் .எதுனாலும் அவங்க அம்மா ,சொல்றபடித்தான் கேட்பார் .அவரு ஒடம்புக்கு ஏதாவதுன்னா ஒடனே ஆஸ்பத்திரில போயி பார்த்து சரி பண்ணிக்குவார் .எனக்குன்னா அவங்க அம்மா சொன்னாதான் கூட்டிட்டு போவார் .அவங்க அம்மாவும் பாதி நேரம் கஷாயம் வச்சி குடின்னு சொல்லிருவாங்க ."
"எங்கம்மா வீடு ரெண்டு மணிநேரம் தூரம் தான் .நான் போயி மூணு மாசம் ஆகுது .எங்கம்மாவும் எங்க தாத்தாவும் தனியா இருக்காங்க .எங்கம்மா எங்க வீட்டுக்கு வந்தா கூட இவரு இல்லைன்னா இவங்க அம்மா முன்னாடி தான் பேசணும் .அவங்களையும் சாயங்காலம் அனுப்பிடுவாங்க ."
"இவங்க அக்காவுக்கு பைக் வாங்கி கொடுத்திருக்காரு .எனக்கும் வாங்கி கொண்டுங்கன்னா ,நீ ஊர் சுத்தனும்மான்னு கேக்குறாரு .அவங்க அக்கா பைக்குல நா ஓட்டி பழகிருவேன்னு அத வீட்டுக்கு கொண்டுவர விடுறதில்ல .வீட்டிலேயிருந்த பழைய ஸ்கூட்டியையும் அங்கே கொண்டு போய் விட்டுட்டாரு ."
"என்னைய வேலைக்கு அனுப்புங்க ன்னு சொன்னா .அதெல்லாம் எனக்கு சரியா வராது ன்னு சொல்றாரு .
எங்க மாமியாரும் கூட அதிசயமா வேலைக்கு அனுப்புன்னு சொல்லிட்டாங்க .ஆனா இவரு டி வியை பாத்துட்டு படுத்து தூங்கிட்டு வீட்டிலேயே கெடன்னு சொல்றாரு ."
"இத்தனை வருஷத்துல எனக்கு என்ன பிடிக்கும்ன்னு கூட அவருக்கு தெரியாது ."
"அம்மா வீட்லேயும் எதுவும் கேக்க பயப்படுறாங்க .நா கல்யாணம் ஆகாமலேயே இருந்திருக்கலாம் .கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு பிள்ளையும் பெத்துட்டு நாலு வருஷமா நரகத்தில இருக்கேன் ."
"இப்பக் கூட நா வெளியே போன ஒடனே என்னடி அவ்வளவு நேரம் பேச்சு ன்னு வீட்டுக்கு போறவரைக்கும் கேட்டுக்கிட்டே இருப்பாரு ,"என்றார் அழுதுகொண்டே .