அப்பா ,அப்பாவிற்கு இரண்டு அண்ணன்கள் .எங்கள் அப்பாவிற்கு நான் ,என் இரண்டு
பெரியப்பாக்களுக்கும் ஆளுக்கொரு பெண்ணாக ,நாங்கள் மூவர் . எங்கள் வீட்டு
பெண்களுக்கு ஆளுக்கொரு விதமாக பிரச்சனை வந்து போக ,இதற்கெல்லாம் காரணம் தேட
புறப்பட்ட என் அக்கா தோண்டிக் கொண்டு வந்து சேர்த்தது தான் இந்த முத்துப்பகடை கதை
.
சரி யாரிந்த முத்துப்பகடை ?
இதை அறிய நாம் சில நூற்றாண்டுகள் பின் நோக்கி போக வேண்டியிருக்கிறது .எங்கள்
குடும்ப மூதாதையர் ,ஆலடிப்பட்டிக்கு வரும் முன், திருச்செந்தூர் அருகே ஒரு ஊரில்
குடியிருந்தார்களாம் .யாருக்கும் அகப்படாத பெரும் புதையல் ஒன்று
இருப்பதாக யாரோ புரளியையும் பேராசையையும் கிளப்பிவிட பெரும் மகான்களாக இல்லாத என்
முன்னோர் அதை அடையும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் .புதையலை எடுக்கும் முன்
பலி கொடுக்க வேண்டும் என்ற சடங்கிற்கு ஏற்ப, பலி கொடுக்க ஆள் தேடி ,நிறைமாத
கர்ப்பிணியாக இருந்த முத்துப்பகடை என்ற தாழ்த்தப்பட்ட குலத்து பெண்ணை
பலியிட்டிருக்கிறார்கள் .இதை தொடர்ந்து ஊரில் கலவரம் ,தீவைப்பு என்று நிலைமை
கைமீற ,தப்பியோடியவர்கள் வந்து சேர்ந்த இடம் தான் ஆலடிப்பட்டியாம் .
ஆனால், அநியாயமாக கொலை செய்யப்பட்ட முத்துப்பகடை இட்ட சாபம், பூசாரி குடும்ப
பெண்களான எங்களை ஏழு தலைமுறையாக தொடர்கிறதாம் .நானும் என் அக்காக்களும் ஏழாவது
தலைமுறை .இனி வரும் தலைமுறை பெண்களுக்கு இந்த சாபம் இல்லை.இந்த
துப்பு துலக்கலை தொடர்ந்து இந்த ஊரில் இருக்கும் கோவில் எங்கள் பூர்வீக குலதெய்வ
கோவில் என்பதாக அறிவிக்கப்பட்டு எல்லோரும் அங்கு படையெடுப்பது வழக்கமாகி இருக்கிறது
.
இங்கு கோவிலுக்கு வெளியே முத்துப்பகடைக்கென ஒரு சின்ன கோவில் போல இருக்கிறது
,அருகில் ஒரு கிணறும் .இங்கு தான் தப்பியோடும் முன் முத்துப்பகடையின் உடல்
போடப்பட்டதாம் .
இந்த கதையை வருவோர் போவோருக்கு சொல்லி ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார் அந்த
கோவிலின் பூசாரி .
எங்கள் குடும்பத்து பெண்கள் முத்துப்பகடையை கண்டிப்பாக வணங்க
வேண்டுமென்றும் வலியுறுத்தி சொன்னார் .வளையல் ,புடவை போன்றவற்றை படைத்து
வழிபடலாமாம் .ஆனால் சாதாரண நூல் புடவை தான் படைக்க வேண்டுமாம்
.பட்டுப்புடவை சாமிக்கு மட்டுமானதாம்
.பட்டைப் படைத்துவிட்டால் முத்துப்பகடையும் சாமியாக உயர்ந்துவிடுவார்
என்பதால் பட்டு மட்டும் கூடவே கூடாதாம் .
தலைமுறைகள் தாண்டியும் சாபங்கள் இட்டும் முத்துப்பகடையின் தீண்டாமை தொடர்கிறது .....
(நன்றி :என் அப்பா எழுதிய "ஆலடி கண்ட கற்பகசித்தர் " )