Friday 9 December 2011

முத்துப்பகடை

அப்பா ,அப்பாவிற்கு இரண்டு அண்ணன்கள் .எங்கள் அப்பாவிற்கு நான் ,என் இரண்டு பெரியப்பாக்களுக்கும் ஆளுக்கொரு பெண்ணாக ,நாங்கள் மூவர் . எங்கள் வீட்டு பெண்களுக்கு ஆளுக்கொரு விதமாக பிரச்சனை வந்து போக ,இதற்கெல்லாம் காரணம் தேட புறப்பட்ட என் அக்கா தோண்டிக் கொண்டு வந்து சேர்த்தது தான் இந்த முத்துப்பகடை கதை .


சரி யாரிந்த முத்துப்பகடை ?


இதை அறிய நாம் சில நூற்றாண்டுகள் பின் நோக்கி போக வேண்டியிருக்கிறது .எங்கள் குடும்ப மூதாதையர் ,ஆலடிப்பட்டிக்கு வரும் முன், திருச்செந்தூர் அருகே ஒரு ஊரில் குடியிருந்தார்களாம் .யாருக்கும் அகப்படாத பெரும் புதையல் ஒன்று இருப்பதாக யாரோ புரளியையும் பேராசையையும் கிளப்பிவிட பெரும் மகான்களாக இல்லாத என் முன்னோர் அதை அடையும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் .புதையலை எடுக்கும் முன் பலி கொடுக்க வேண்டும் என்ற சடங்கிற்கு ஏற்ப, பலி கொடுக்க ஆள் தேடி ,நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துப்பகடை என்ற தாழ்த்தப்பட்ட குலத்து பெண்ணை பலியிட்டிருக்கிறார்கள் .இதை தொடர்ந்து ஊரில் கலவரம் ,தீவைப்பு என்று நிலைமை கைமீற ,தப்பியோடியவர்கள் வந்து சேர்ந்த இடம் தான் ஆலடிப்பட்டியாம் .



ஆனால், அநியாயமாக கொலை செய்யப்பட்ட  முத்துப்பகடை இட்ட சாபம், பூசாரி குடும்ப பெண்களான எங்களை ஏழு தலைமுறையாக தொடர்கிறதாம் .நானும் என் அக்காக்களும் ஏழாவது தலைமுறை .இனி வரும் தலைமுறை பெண்களுக்கு இந்த சாபம் இல்லை.இந்த துப்பு துலக்கலை தொடர்ந்து இந்த ஊரில் இருக்கும் கோவில் எங்கள் பூர்வீக குலதெய்வ கோவில் என்பதாக அறிவிக்கப்பட்டு எல்லோரும் அங்கு படையெடுப்பது வழக்கமாகி இருக்கிறது .



இங்கு கோவிலுக்கு வெளியே முத்துப்பகடைக்கென ஒரு சின்ன கோவில் போல இருக்கிறது ,அருகில் ஒரு கிணறும் .இங்கு தான் தப்பியோடும் முன் முத்துப்பகடையின் உடல் போடப்பட்டதாம் .
இந்த கதையை வருவோர் போவோருக்கு சொல்லி ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார் அந்த கோவிலின் பூசாரி .



எங்கள் குடும்பத்து பெண்கள் முத்துப்பகடையை கண்டிப்பாக வணங்க வேண்டுமென்றும் வலியுறுத்தி சொன்னார் .வளையல் ,புடவை போன்றவற்றை படைத்து வழிபடலாமாம் .ஆனால் சாதாரண நூல் புடவை தான் படைக்க வேண்டுமாம் .பட்டுப்புடவை சாமிக்கு மட்டுமானதாம் .பட்டைப் படைத்துவிட்டால் முத்துப்பகடையும் சாமியாக உயர்ந்துவிடுவார் என்பதால் பட்டு மட்டும் கூடவே கூடாதாம் .


தலைமுறைகள் தாண்டியும் சாபங்கள் இட்டும் முத்துப்பகடையின் தீண்டாமை தொடர்கிறது .....



(நன்றி :என் அப்பா எழுதிய  "ஆலடி கண்ட கற்பகசித்தர் " )


10 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

இது உண்மையிலேயே நடந்த கதைதானா....? அப்படி நடந்திருந்தால்.... அது கொடூரம்.

நிறை மாத கர்ப்பிணியை பலியிடுவதென்பது கனவிலும் நினைத்திராத ஒன்று.

கேட்க நாதியற்ற ஜனங்கள் என்பதால், அவர்களை நாம் எப்படியெல்லம் கொடுமை படுத்தியுள்ளோம்.
நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

ஒரு முறை கேரள நம்பூதிரி ஒருவரிடம் உலகம் தோன்றியது பற்றி, பொதுவாக பேசிக்கொண்டிருந்த போது... அவர் சொன்னார்.

"பறைச்சி பெற்றெடுத்த பனிரெண்டு குலங்கள் என்றார்" ஒரு தாழ்த்தப்பட்ட குல பெண்ணிடமிருந்துதான் பல குலங்கள் தோன்றியது.

அவள்தான் எல்லோருக்கும்'ஆதி' என்றார்.

இது உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியவில்லை?.

துணிச்சலான உங்கள் எழுத்துக்கு எனது பாராட்டுகள்.

அதைவிட.... உங்கள் தந்தையாரைத்தான் பாராட்டவேண்டும். அப்பவே இதை 'பதிவு' பன்னியிருக்காரே....!

விச்சு said...

பரவாயில்லை.. தைரியமாக வெளி உலகுக்கு உங்கள் குல உண்மைகளை எடுத்துரைத்துவிட்டீர்கள்.

பால கணேஷ் said...

அந்நாளில் முன்னோர் அறியாமையால் செய்த பெரும்பிழைதான் பலியிடுதல் என்பது. ஆனால் முத்துப்பகடை இட்ட சாபம் தலைமுறைகள் தாண்டித் தொடரும் என்ப‌து நம்பக் கூடிய விஷயம்தானா? இதுதான் எனக்குப் புரியவில்லை!

பூங்குழலி said...

ஆனால் முத்துப்பகடை இட்ட சாபம் தலைமுறைகள் தாண்டித் தொடரும் என்ப‌து நம்பக் கூடிய விஷயம்தானா? இதுதான் எனக்குப் புரியவில்லை//


இந்த கதை பலவிதங்களில் ஆச்சரியம் தருவதாக அமைந்தது .ஆனால் இந்த சாபம் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை தான்.சில பிரச்சனைகள் தொடரும் போது ,காரணங்கள் தேடி அலைகையில் இவ்வித கதைகள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன

பூங்குழலி said...

பரவாயில்லை.. தைரியமாக வெளி உலகுக்கு உங்கள் குல உண்மைகளை எடுத்துரைத்துவிட்டீர்கள்//

முன்னோர்கள் செய்த பிழைக்கு நாம் பொறுப்பில்லை என்றாலும் வேர்களை அறிவது நல்லது தானே .நான் அறிந்து கொண்டது இது என்பதே இதில் அறிவிப்பு

பூங்குழலி said...

//இது உண்மையிலேயே நடந்த கதைதானா....? அப்படி நடந்திருந்தால்.... அது கொடூரம்.//

இது உண்மை நிகழ்வாக இருப்பதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமே

//கேட்க நாதியற்ற ஜனங்கள் என்பதால், அவர்களை நாம் எப்படியெல்லம் கொடுமை படுத்தியுள்ளோம்.
நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.//

உண்மை

//அவள்தான் எல்லோருக்கும்'ஆதி' என்றார்.
இது உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியவில்லை?.//

இந்த கதை நான் கேட்டதில்லை .

//துணிச்சலான உங்கள் எழுத்துக்கு எனது பாராட்டுகள்.

அதைவிட.... உங்கள் தந்தையாரைத்தான் பாராட்டவேண்டும். அப்பவே இதை 'பதிவு' பன்னியிருக்காரே....!//

நன்றி தோழரே ..நாங்கள் இந்த கதையை அறிந்தது சமீபத்தில் தான் .அப்பா எழுதியதும் ஒரு வருடத்திற்கு முன்பு தான் ,ஆனாலும் தெரிந்தவுடன் .நன்றி

நெல்லி. மூர்த்தி said...

பொதுவாக தங்களைப் பற்றிய உயர்வான நிகழ்வுகளையும் வரலாற்றினையும் பறைச்சாற்றுவதை தான் இவ்வுலகம் விரும்பும். மூதாதையரின் தவறுகளுக்கு நாம் எவ்விதத்திலும் பொறுப்பில்லை எனினும் இத்தவறினை சுட்டிக் காட்டியது மூலம், தாங்கள் சாதியக் கோட்பாட்டையும் சமூக அவலத்தையும் தகர்க்கும் மனநிலை கொண்டவர் என்பதை அறியமுடிகின்றது.... தங்களை எப்படி பாராட்டுவது என அறியாமல் விக்கித்து உள்ளேன்.

பூங்குழலி said...

இத்தனை பெரிய பாராட்டுக்கு எனக்கு தகுதியிருக்கிறதா என்று தெரியவில்லை மூர்த்தி அவர்களே , கதையின் சுவாரசியமும் எழுத தூண்டியது .மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

தலைமுறை தாண்டி தொடரும் சாபம்
அரிய வித்தியாசமான சுவாரஸ்யமான தகவலாக இருந்தது
மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்

பூங்குழலி said...

மிக்க நன்றி ரமணி அவர்களே