பல வேடதாரிகளின்
மேடையாக இருக்கிறது
காலம்
பல்லிளுப்புகளும் பாசாங்குகளும்
கடவு சீட்டாக
வசீகர இளிப்பு
ஒய்யார இளிப்பு
சொத்தை இளிப்பு என
வகைவகையாக கிடைக்கின்றன
இளிப்புகளும்
வசீகர இளிப்புகள்
ரசிக்கப்பட்டாலும்
வசப்படுத்துபவை என
அஞ்சப்படுகின்றன
ஒய்யார இளிப்புகள்
வகை அறியப்பட்டவுடன்
விலக்கப்படுகின்றன
பதில் இளிப்புகளுடன்
சொத்தை இளிப்புகள்
வேடிக்கை செய்யப்படுகின்றன
பொருட்டாகவே இல்லாதவை போல்
பாவிக்கப்படுகின்றன
ஆனாலும்
சொத்தை இளிப்புகள்
பெரும் மேடைகளில் வீற்றிருக்கின்றன
அலங்காரமாக .
எது கருதியோ
இவை போதுமென்றே
ஏற்றிவைக்கிறார்கள்
மேடைக்கு உரியவர்களும்
தத்தம் பாசாங்குகள்
இவற்றினூடே பரிமளிக்கக்கூடும்
என்ற ஆவலினாலும்...
அவ்விளிப்புகளும்
இப்பாசாங்கு அறியாதது போல்
கொலுவிருக்கின்றன
வசீகரங்களுக்கான வெளியை
விழுங்கியபடி ,
என்றோ ஒரு மெய்நாளில்
இவ்விளிப்புகளை விலக்க நேரிடும் போது
மேடையும் காலமும்
இவற்றினுடையதென மாறியிருக்கின்றன
இம்மேடையில்
இனி ஒண்டவும் இடமில்லை என
தவிர்த்து ஒதுங்குகின்றன
பிற இளிப்புகளும் பாசாங்குகளும்
சாலையோரங்களில் அன்றாடம்
மண்டிக் கிடக்கின்றன
நிராகரிப்புகளாக......