Wednesday, 18 April 2012

சொல்வதற்கு ஒன்றுமில்லை

முப்பது ஆண்டுகள் சென்றும் கூட, எச் ஐ வியை பொறுத்தவரையில் மருத்துவர்களிடமும் மக்களிடமும் அதை குறித்த அச்சம் இன்னமும் விலகாமலேயே இருக்கிறது .சிலரோ இதை பயன்படுத்தி தவறான சிகிச்சைகள் அளித்து நோயாளிகளின் நிலைமையை இன்னமும் சிக்கலாக்குகிறார்கள் .இப்படி நோய் அதிகமாகியும் ஏற்கெனவே எடுத்துக் கொண்டிருந்த மருந்துகள் சரியாக   பணிசெய்யாமலும் எங்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் இவர்.


பரிசோதனைகள் செய்ததில் டிபியும் இருப்பது தெரியவர இரண்டாம் கட்ட மருந்துகள் ஆரம்பித்துவிட்டு டிபிக்கான சிகிச்சையும் ஆரம்பித்தோம்.உடல்நலம் நன்றாக தேறி பெரிய தொந்தரவுகள் ஏதும் இல்லாமலேயே இருந்தார் அவரும்.


இரண்டு மாதங்களுக்கு முன் அடிக்கடி தலைசுற்று ஏற்படுவதாக  சொல்லவே மூளைக்கு ஸ்கேன் எடுத்தோம் .இதில் கட்டி இருப்பது தெரியவந்தது .இதன் பிறகு ஆரம்பித்தது எல்லா தொந்தரவும் .சில மருத்துவமனைகள் அறுவை சிகிச்சை செய்ய மறுத்தன .சில பல லட்சங்களில் பணம் கேட்டன .எதிர்பாராவிதமாக சென்னை பொது மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு ஏற்பாடானது .கட்டி அகற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் கேன்சர் கட்டி என்பது உறுதி ஆனது .இடைப்பட்ட காலத்தில் அவரின்  உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வந்தது .


இன்று என்னை சந்திக்க வந்திருந்தார் அவரின் மனைவி .நான் நோயின் தீவிரத்தை சொல்லி விளங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன் ."ஆபரேஷனே செய்ய முடியாம இருந்ததே ,இப்ப செஞ்சுட்டோம் ,அதனால ஜெயிச்சிட்டோம்ன்னு நெனச்சேன் மேடம் ",என்று சொல்லிவிட்டு ஒன்றும் பேசாமல் இருந்தார் ."இனி நம்ம கையிலே எதுவுமே இல்லை " என்று மட்டும்  சொல்லிவிட்டு நானும் அமர்ந்திருந்தேன் .அமைதியாகவே இருந்தோம் இருவரும் கொஞ்ச நேரம் .


திடீரென்று பையிலிருந்து ஒரு டப்பாவை எடுத்தார் .அதில் சில கம்மல்கள் ."அவருக்கு முடியாம போனதிலிருந்து செலவுக்கு வேணுமேன்னு இந்த இமிடேஷன் நகை வியாபாரம் செய்றேன் மேடம் .இதுல ஒங்களுக்கு பிடிச்ச ஒண்ணை எடுத்துக்கோங்க ."நான் சொல்வதறியாமல் திகைத்து போயிருந்தேன் ."வேண்டாம்மா "என்றேன் மெதுவாக .அந்த பெண் சொன்னார் ,"மேடம் ,எங்களுக்குன்னு எவ்வளவோ முயற்சி செஞ்சீங்க .ஒங்களுக்குன்னு முன்னவே ஒரு வளையல் எடுத்து வச்சேன் .அவருதான்  நீங்க போட மாட்டீங்கன்னு சொல்லிட்டார் .ஆனா அதுக்கப்புறம் நீங்க இத மாதிரி இமிடேஷன் நகை போடுறதை கவனிச்சேன் .இனிமே ஒங்கள பாக்க வருவேனோ என்னமோ ,இத ஒங்களுக்குன்னு பாத்து எடுத்துட்டு வந்தேன் .சங்கடப்படாம எடுத்துக்கோங்க மேடம் ."