இரவில் ,
சில நிலாக்கள் கொய்து
நகைக்கிறது நதி.
நிலாக்களை தேடி
நதியில் குதிக்கின்றன
விண்மீன்கள் .
விண்மீன்களை
ஒளித்தும் மறைத்தும்
விளையாடுகிறது நதி.
வானம் நீந்திகிடக்கிறது
நதியில்
எப்பொழுதும் .
விளையாட்டாய் மேனி நனைத்து சிறுவர்கள்
அலசி செல்கிறார்கள் நதியில்
தத்தம் சிரிப்புகளை
சிரிப்புகளை
சிதறவிட்டு
கலகலவென சிரிக்கிறது நதி .
காதலர்கள் ,
களவும் ஊடலும்
கரைத்து நடக்கிறார்கள் நதிக்கரையில்
அவர்கள் ரகசியம் உணர்ந்து
காலோரமாய்
கிசுகிசுக்கிறது நதி .
களைந்த இளமையை
சிலர் துழாவி ரசிக்கிறார்கள் மணலில்.
பொக்கை வாய் திறந்து
பரிகாசம் செய்கிறது நதி
நிழலும் நிஜமுமாக
வெவ்வேறு முகங்கள் காட்டி
காலம் கடக்கிறது
நதிக்கரையில்
எனினும்
சலனமின்றி
நதி ஓடிக் கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு துளியும் புதுத்துளியாக....