ஒரு அண்டமெங்கும் விரிந்திருக்கிறது
என் வெளி
நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம்
என ஐந்தும் சேர்த்து
சில காடுகள் மலைகள் சோலைகள் நீரோடைகள்
எனவும் பரவிக் கிடக்கிறது
என் வெளி
எங்கோ ஒரு பாலைவன மணல் பொட்டலும் சேர்த்து
தெளிந்த நீரோடைகளில்
நீந்திக் கிடக்கிறேன் நான்
காடுகள் தோறும் சுற்றித் திரிகிறேன்
சோலைகளில் மலர் கொய்து
சூட்டிக் களிக்கிறேன்
என் மனம் போல்
சிகரங்களில் ஏறி தொட்டுப் பார்க்கிறேன்
விண்ணைக் கூட
நட்சத்திரங்களை பறித்து
ஓடைகளில் நனைக்கிறேன்
நீரெல்லாம் ஜொலிக்கின்றன
என் மீன்கள்
குயில்கள் கூவிக் கடக்கின்றன என்னை
மான்கள் கொஞ்சிப் போகின்றன
சில எருமைகளும் பாம்புகளும்
உரசிப் போகின்றன
அதனதன் விருப்பம் போல்
கீறும் சிறு முட்களும்
நாறும் சில குப்பைகளும்
குறுக்க முடியாததாக இருக்கிறது என் வெளி
மலர்கள் சொரிந்து கிடக்கின்றன
என் பாதையெங்கும்
மகரந்த வாசம் ஏந்தி
எவரும் தீண்ட முடியாததாக
இருக்கிறது என் வெளி
எனதே எனதாக -
எவர்க்கும் வசப்படாமல்
உலவித் திரிகிறேன்-
நானோர்
வனதேவதையென