To .
Mr .Prime Minister ,
பிரதமராக அறிவிக்கப்பட்ட போது நல்லவர் நேர்மையாளர் பொருளாதார மேதை என்ற வெள்ளை இமேஜுடன் பதவியேற்றவர் நீங்கள் .
சோனியாவின் கைப்பாவையாக இயங்க முன்வைக்கப்படுபவர் என்பதை உணர்ந்திருந்த போதும் நல்லது செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது நிஜம் .
முதலில் ஏதும் செய்ய அதிகாரமற்றவர் ஆனால் நல்லவர் நேர்மையாளர் என்ற ஒருவித குழப்படி இமேஜை தோற்றுவித்தன உங்களின் செயல்பாடுகள் .இயலாமை காரணமாகவே நீங்கள் அமைதி காப்பது போல தோன்றியது .தன்னுடைய அமைச்சரவையில் யார் இடம்பெறுவது என்பதை கூட தீர்மானிக்க முடியாதது உங்கள் மேல் ஒரு பரிதாபத்தை தோற்றுவித்தது .
காலம் போக போக இந்த அரசின் பல ஊழல்கள் வெளியே வர துவங்கின .அப்போதும் உங்களுக்கும் அவற்றிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவே இருந்தது .நீங்களும் அமைதியாகவே இருந்தீர்கள் .ஐயோ பாவம் என்று தோன்றியது .
ஆனால் உங்கள் மீது நேரிடையாக குற்றம் சாட்டப்பட்ட போது மட்டும் நீங்கள் கோபமாக பதில் பேசியது கவனிக்கப்படாமல் போனது .
இன்றோ சுரங்க ஊழலிலும் அலைக்கற்றை ஊழலிலும் உங்கள் பெயர் நேரிடையாகவே அடிபடுகிறது .பிரதமருக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லும் ராஜா JPC முன் அனுமதிக்கப்படவில்லை .இப்போது உங்கள் கைவசம் இருந்த சுரங்க துறை
ஊழல் திரிக்கப்பட்டு பழி சட்ட அமைச்சர் மீது போடப்படுகிறது .இரண்டு விஷயங்களிலும் நீங்கள் சட்டம் முன்பும் மக்கள் முன்பும் பதில் சொல்ல தொடர்ந்து மறுக்கிறீர்கள் .
சரி ,ஊழலை அமைச்சர்கள் செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம் .உங்கள் பொருளாதார பேரறிவால் நாட்டிற்கு நடந்த நல்லது என்ன ?ஒரு பக்கம் வரலாறு காணாத ஊழல்கள் ,அந்நிய முதலீடு துவங்கி நாட்டை அயல்நாடுகளுக்கு விற்றிடும் அவலம் ,பெரு முதலாளிகளுக்கு அனாவசிய சலுகைகள் அவர்கள் சொற்படி நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் என்று,மன்னிக்கவும் , உங்கள் பலவீனத்தின் பட்டியல் முடிவில்லாதது .
மக்களின் தலைவராக வருபவர் மக்கள் மன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும் .அவர்களுக்கு ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது .அப்போதேனும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நேரிடக் கூடும் .நீங்களோ மீண்டும் மீண்டும் தேர்தலை சந்திக்க பிடிவாதமாக மறுப்பவராக இருக்கிறீர்கள் .உலகின் மிகப்பெரிய மக்களாட்சியின் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் என்பதே மிகப்பெரிய அவமானம் தான் .
அரசின் தலைவர் என்ற முறையில் ஆட்சியில் நடக்கும் தவறுகளுக்கு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர் பிரதமர் மட்டுமே .நீங்களோ , சொற்ப சந்தர்ப்பங்களில் ,சில கார்ப்பரேட் மீடியாக்களில் பேட்டிகள் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்கிறீர்கள் .வேறெங்கும் பேச பிடிவாதமாக மறுக்கிறீர்கள் .
உங்களின் பதவி ஆசை உங்களை தொடந்து மேல் சபை உறுப்பினராக வைத்திருக்கிறது .அதே பதவி ஆசையே ஏதோ ஒரு அமைச்சரை பலிகடாவாக்கும் சாதூர்யத்தை உங்களுக்கு தருகிறது .உங்களின் அகம்பாவம் உங்களுக்கு ஒரு ஒளிவட்டம் இருப்பதாக உங்களை நம்ப வைக்கிறது .உங்கள் நேர்மையாளர் பிம்பம் சிதறாமல் உங்கள் கார்ப்பரெட் நண்பர்கள் உங்களை பாதுகாக்கிறார்கள்.இழப்புகள் எல்லாம் கட்சிக்கே என்று தூற்றிவிட்டு நீங்களும் கார்ப்பரேட்காரர்களுக்காக மட்டுமே கவலைப்படுகிறீர்கள் .
ஓய்விற்கு பின்னாலும் ஒரு சொகுசான வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கக் கூடும் .வரலாறு உங்களை இந்திய வரலாற்றின் மிக பலவீனமான பிரதமர் என்று தூற்றக்கூடும் .நீங்கள் வெளிநாடுகளுக்கு தாரைவார்த்த வளங்கள் பற்றி கோஹினூர் வைரத்தை நாம் படித்தது போல நாளைய தலைமுறை படிக்கக்கூடும் .ஆனால் ,இது குறித்து உங்களுக்கு கவலை வேண்டாம் ,ஏனெனில் ,இதனால் நீங்கள் இழக்கப் போவது ஏதுமில்லை ,உங்கள் வெள்ளை முகத்திரையை தவிர ...