ஏதுமில்லா
ஒற்றை இரவில்
விழித்தே கிடந்தேன் நான்
கண்மூட மறுத்து
சோம்பலில் சுகித்திருந்தேன்
வேடிக்கை பார்த்திருந்தது
வெறுமை
கருத்திருந்தது வானம்
கண்சிமிட்டி காணாமல் போயின
நட்சத்திரங்கள்
என் தலை வருடிக் கடந்தது
நிலா
என் கன்னம் கிள்ளிப் போனது
காற்று
இன்னமும் விழித்திருந்தேன்
பிடிவாதமாய்
கண்டிப்பதாய் வந்து போனதொரு
மின்னல்
பெருமூச்செறிந்து அகன்றது
காற்று
கனவுகள் அமர்ந்து
இமை அயர்ந்த நொடியில்
ஜன்னல் ஓரமாய் எட்டி
விளையாட்டாய் நீர் தெளித்து
உறக்கம் கலைத்து
இரவெல்லாம் என்னுடன் கதைத்திருந்தது
மழை