Sunday, 4 October 2015

ரிக்க்ஷா காசி


இந்த ப்ளாஷ் பேக்கின் காலம் சுமார் முப்பது வருடங்களுக்கு முந்தையது .அன்னைக்கெல்லாம் இன்றைய பாஷ்  அண்ணா நகர் சென்னைக்கு மிக அருகில்ன்னு விளம்பரப்படுத்தப்படும் சில ஏரியாக்கள் மாதிரியே தான் இருந்தது .கொல்லையில கருவேப்பிலை இல்லைன்னா அத வாங்க நீங்க அமிஞ்சிக்கரைக்கு தான்  போகணும் .


என்னோட ஸ்கூல் எங்க வீட்லேருந்து ஒரு  அஞ்சு தெரு தள்ளி இருந்திருக்கும் .எங்கப்பா அந்த காலத்தின் டுகாட்டியான லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் வச்சிருந்தாப்ல .ஆனா ஏதோ காரணத்தினால அதுல என்னையும் என் தம்பியையும் ஸ்கூல்ல தினம் டிராப் பண்றது கொஞ்சம் சிரமமா இருந்திருக்கும் போல .அன்னைக்கு பிரதான பள்ளி வாகனங்கள் பெரிய பிள்ளைகளுக்கு சைக்கிளும், சின்ன பிள்ளைகளுக்கு ரிக்க்ஷாவும் தான் .இன்னைக்கு மாதிரி பிள்ளைகள ஸ்கூல்ல விட்டுட்டு கேட்ட மூடி அசெம்பிளி முடியும் வரைக்கும் காம்பவுண்டு சுவருக்கிட்டேயே காத்திருந்து டாட்டா சொல்ல பெத்தவங்க வந்தா கூப்பிட்டு உங்க வேலய பாக்க நீங்க போங்க, உங்க பிள்ளைய நாங்க பாத்துக்கிறோம்ன்னு ஸ்கூல்ல கவுன்சின்லிங் பண்ணியிருப்பாங்க .

ஒருநாள் எங்கப்பா  ஒல்லியா ,சுமாரான   உயரமா ,சுமாரான வழுக்கை தலையோட (வயசு   என்னவோ முப்பதொட்டி தான் இருந்திருக்கும் )  ஒருத்தர கூட்டிட்டு வந்து ,"இவரு  ரிக்க்ஷா மாமா .நாளையிலேருந்து இவரு   வண்டியில தான் நீங்க ஸ்கூலுக்கு போகப்போறீங்க"ன்னு சொன்னாங்க தடால்ன்னு .  இதுல  ரிக்க்ஷா மாமா எனப்பட்டவர் பேரு காசி ,வண்டி எனப்பட்டது ஊதினால் உடைந்துவிடும் நிலைமையில் இருந்த ஒரு சைக்கிள் ரிக்க்ஷா .

காலயில ஸ்கூலுக்கு போகிற அவசரத்துல எந்த வம்புக்கும்  வழியிருக்காது .ஆனா சாயங்காலம் படு ஜாலிதான் .எப்படியும் அந்த ரிக்க்ஷவில பத்து பேராவது இருப்போம் .இதுல ட்ரைவர்  சீட்டுக்கும் அதோட டாப்புக்கும் டிமாண்ட் அதிகம் .முதல்வர்  போஸ்ட் மாதிரி அது பிரெஸ்டீஜ் போஸ்ட் .இதுக்கு தினம் ஒரு சண்டை  நடக்கும் .அதுல உக்காராட்டா நான் வண்டியிலேயே  ஏறமாட்டேன் .அதுக்கு பயந்தே ,பூங்குழலி கோச்சிக்கும்ன்னு யாரையும் உக்காரவிடமாட்டாப்ல .டாப்லவேற யாராவது உக்காந்துட்டா நாளைக்கு  உனக்குதான்ன்னு  சமரசம்  பேசி, நான் ட்ரைவர்  சீட்ல ஏற, வண்டி அன்னைக்கெல்லாம் பத்து நிமிஷம் லேட்டா தான் கெளம்பும் .இதனாலேயே சைக்கிள் ரிக்க்ஷா என்றாலும் ,ஓட்டிய நேரம் விட  காசி அத இழுத்த நேரம் தான் அதிகம்.




இதுல வண்டி வேற எப்பவும் அவசர சிகிச்சை பிரிவு அட்மிஷனுக்கு தயாராகிற  மாதிரியே இருக்கும் .எல்லாம் பேசி முடிச்சி இழுக்க ஆரம்பிக்கறப்ப பஞ்சராயிடும்  .அப்புறம்  பைய உள்ள போட்டுட்டு பெருசுங்க நடக்க சிறுசுங்க வண்டியிலேயே இருக்க காசி வண்டி  இழுப்பாப்ல .நாங்க ஜாலியா மழலை பட்டாளம் படத்தோட சூப்பர் ஹிட் பாட்டான "தள்ளு மாடல் வண்டியிது ..பாட்ட பாடிக்கிட்டே போவோம் .அதுலேயும் "எண்ணே வெல ஏறிப்போச்சு மாட்ட கொடுங்க" லைன்ன படுசத்தமா பாடுவோம்.ஆனா
எந்த சிக்கலும் இல்லாம வண்டி கெளம்பிருச்சுனா அன்னைக்கெல்லாம் எங்கள கைல பிடிக்க முடியாது ."ஓரம்போ ஓரம்போ காசி ரிக்க்ஷா  வருதுன்னு"  எங்க  அலப்பறையில மத்த ரிக்க்ஷாக்காரங்க காசிய பொறாமையா பாத்துட்டு போவாங்க .

கொஞ்ச நாள் போக இந்த சைக்கிள் ரிக்க்ஷா ஓல்ட் பேஷனாகி கூண்டு ரிக்க்ஷா வந்தது .புத்தம் புதுசா அப்டேட் ஆகி காசி ஒரு புளு கலர் கூண்டு ரிக்க்ஷா வாங்குனாப்புல. எங்களுக்கு புது ரிக்க்ஷா வந்தது பெருமைனாலும்  டாப் இல்லாதது வருத்தம் தான் .அதனால ட்ரைவர் சீட்ல நாங்க டர்ன் போட்டு உக்கார (என்னடா கொள்கை விலகலா இருக்கேன்னு நினைக்காதீங்க ...இப்பெல்லாம் நாங்க  பெருசாகி புரிந்துணர்வு  காரணமா இன்று நீ நாளை நான்னு ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துட்டோம் )காசி வழக்கம் போல இழுப்பாப்ல .


இப்படியே  சில ஆண்டு ஆகியிருக்கும்,ஏதோ ஒரு சண்டையில காசி   என்னைய முண்டக்கண்ணின்னு சொல்ல ,நான் பயங்கர கோபம் +ரோஷமாகி நான் இனிமேல் உன் வண்டியில ஏறமாட்டேன்னு சொல்லிட்டேன் .அப்புறம் ஏறவும் இல்ல .ஸ்கூலும் பக்கத்திலேயே இருந்ததால நடந்து போகிறது ரொம்ப கஷ்டமாவும் இல்ல .

இதுக்கிடையில காலம் மாறி மாருதி வேன் வந்து இந்த ரிக்க்ஷாக்கெல்லாம் எமனா போச்சு .அதோட அப்பப்ப  வாசல்ல பாத்து  விசாரிச்ச காசியும் காணாம போனார் .கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அப்பா காசிய பாத்ததா சொன்னாங்க ."இப்பெல்லாம் எங்க சார் பிள்ளைங்க ரிக்க்ஷால வருது .ஒண்ணும் தொழிலில்ல ..."