Sunday, 10 June 2018

நன்றி

எழுபத்தைந்து  வயதிருக்கும் .கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை முடிந்து இருபது வருடங்களுக்கு மேலான தன்னம்பிக்கையாளர் .தனியாக ஒரு பிசினஸ் செய்து அதை பல சோதனைகளுக்கிடையே வெற்றி பெற செய்து கட்டிய சாதனையாளர் .என்னுடய பல வருட பேஷண்ட் .ஏறக்குறைய ஒரு வருடம் முன்னர் கணவர் இறந்து போனார் .சில வருடங்களாக வருடம்  ஒரு முறையே வர முடிந்திருக்கிறது .அவர் மகன் சென்னையில் இருக்கிறார் . மருந்துகளை  இவர் வாங்கி அனுப்பி  வைப்பார் .  ஆனாலும் வாரம்  ஒரு முறையேனும் என்னுடன் தொலைபேசியில் பேசுவார். ஏதேனும் ஊர்  விஷயங்கள் பொதுவாக பேசுவார். உங்க உடம்பை நல்லா பாத்துக்கோங்க என்று சொல்லாமல் ஃபோனை  வைக்க மாட்டார்.

ஜனவரி மாதத்தில் மருத்துவமனையின் தொலைபேசி எண்கள் மாறிப்போனது .அதிலிருந்து பேசுவதில்லை .pharmacyயில்  அவர் மகனிடம் புது எண்களை  தர சொல்லி சொல்லி வைத்திருந்தேன் .போன வாரத்தில் திடீரென அவர் மகன் வந்தார் .வழக்கம் போல மருந்துகள் வாங்க வந்திருக்கிறார் போலும் என நினைக்க "உங்களுக்கு தாங்ஸ் சொல்ல வந்தேன் மேடம் .அம்மா போன வாரம் இறந்துட்டாங்க .ரொம்ப ஏதும் கஷ்டம் இல்ல .காலையில தூங்கி எந்திருச்சு பால் கேட்டிருக்காங்க .கொண்டு வரதுக்குள்ள இறந்துட்டாங்க.பத்து வருஷம் எங்கம்மாவை பாத்துக்கிட்டீங்க .இந்த பத்து வருஷத்துல இந்த எச்ஐவி பத்தி அவங்களுக்கு நினைப்பு கூட வந்ததில்ல.அதனால உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன் .ரொம்ப நன்றி மேடம் .அம்மாக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ."