Thursday, 3 December 2020

உலகம்மன் கோவில் தெரு

 திருநெல்வேலி ஜங்க்ஷனின் உலகம்மன் கோவில் .நினைவில் ஒரு பெரிய மரமும் நிறைய காலி இடமுமாய் .எதிரே முதல் வீடு ஆச்சி வீடு .அடுத்து சரசா அத்தை அகிலா அப்புறம் மீனா அத்தை பிரேமா அக்கா ,எதிர் வீட்டில் குட்டி இம்ரு (தாத்தா கிரிக்கெட் பிரியர் ),பின்வீட்டில் பாரதி .தெருவெங்கும் ஓடிய திண்ணை .திண்ணை  ஒட்டிய சாக்கடை .பொழுதும்  மேயும் பன்னிகள் .கோவில் திருவிழாவின்  பெரிய ஸ்பீக்கர் .அது பாடிய மச்சானை பாத்தீங்களா ,வாங்கோண்ணா .அதற்கு ஆட்டம் .

கோவிலுக்கும் வீட்டுக்கும் நடுவே பெரிய ரோடு .தட்டியில் அடித்த சினிமா விளம்பரங்கள் .படம் பார்க்க வர சொல்லி கூவிக்கொண்டே போகும் குரல் .பறக்க விட்ட துண்டு சீட்டுகள் .தேர்தல் கூட்டங்கள் .போடுங்கம்மா ஓட்டு வாக்கு சேகரிப்புகள்.இன்னொரு  திருவிழா பலிக்கு வாழைப்பழ ருசி காட்டப்பட்ட   பன்னிகள் ...

அப்படியே நடந்தால்  தாமிரபரணி .நீர் வற்றாத தாமிர ருசி கொண்ட தாமிரபரணி. அம்மா அத்தை கர்ப்பமாயிருந்த சித்தி சேர்ந்தே நீந்திய தாமிரவருணி .தாத்தா .காலையில் ஆற்றில் குளித்து கோமணம் அலசி அருகம்புல் ஆற்றில் அலசி மடியில் சுற்றி நேராக பிள்ளையாருக்கு தரும்  தாத்தா .உயரமாக சிகப்பாய் வழுக்கை தலையாய் அச்சு போல் எழுதிய தாத்தா .

ஆச்சியை தூக்கி அடுப்புல வை என்று  ஏசிய  ஆங்கிலம் படிக்க தெரிந்த ஆச்சி.ஆச்சி  வீட்டு செல்லம்மா ,செல்லம்மாள் மகள் உலகு .உலகம்மன் கோவில் .



நன்றி - https://twitter.com/5Murugesan/status/1334317330940116992?s=20


Sunday, 8 November 2020

இன்றிரவில்

இன்றிரவில் 

மிக சோகமான 

வரிகளை எழுத முடியும் 


இந்த இரவு நட்சத்திரங்களாக இருக்கிறது  -  

நீல நட்சத்திரங்கள் தூரத்தில் நடுங்குகின்றன 

என்பது போல  


இரவு காற்று வானத்தில் சுழன்று  பாடுகிறது 


மிக சோகமான 

வரிகளை எழுத முடியும் 

இன்றிரவில் 


நான் அவளை காதலித்தேன். 

அவளும்  என்னை  காதலித்தாள், 

சில நேரங்களில் .


இதே போல்   இரவுகளூடே 

அவளை அணைத்திருந்தேன் 

முடியாத வானத்தின்  கீழ் 

முத்தங்களிட்டேன் 

மீண்டும் மீண்டும் .


சில நேரங்களில் 

அவள் என்னை காதலித்தாள் ;

அவளை நானும் .

உறைந்த அந்த  பெருங்கண்களை 

எப்படி காதலிக்காமல் இருப்பது  


இன்றிரவில் 

மிக சோகமான 

வரிகளை எழுத முடியும் 


அவள் என்னுடன் இல்லை 

அவளை தொலைத்துவிட்டேன்  


விசாலமான  ஒலிக்கும் இரவு -

இன்னமும் விசாலமாக   இருக்கிறது 

அவளில்லாமல் .

புல்லில் பனி போல 

உயிரில் விழுகிறது 

கவிதை .


என் காதல் அவளை தக்க வைக்காததால்  

என்னவாகபோகிறது 

இரவு நட்சத்திரங்களாக இருக்கிறது 

அவள் என்னுடன் இல்லை .


இவ்வளவுதான் .

தூரத்தில் யாரோ பாடுகிறார்கள் ,தூரத்தில் .

அவளை தொலைத்ததாக மனம் நம்பவில்லை 


அவளை அழைத்து வருவது போல 

என் பார்வை அவளை தேடுகிறது ,

என் இதயமும் .

அவள் என்னுடன் இல்லை .


அதே மரங்களை வெள்ளையாக்கும் அதே இரவு .

அன்றைய நாங்கள் இன்று நாங்களில்லை .

இப்போது  நான் நிச்சயமாக அவளை  காதலிக்கவில்லை 

ஆனால் எப்படி காதலித்தேன் !

அவள் காது  எட்டும்  காற்றை என் குரல் தேடுகிறது 


வேறொருவருக்கு ,

அவள் வேறொருவருக்கு,

என் முத்தங்களுக்கு முன்  போல்.

 

அவள் குரல் 

அவள் பளீர் உடல் 

அவள் முடிவில்லா கண்கள்... 


அவளை  நான் இப்போது காதலிக்கவில்லை .

நிச்சயமாக. 

ஒருவேளை காதலிக்கக்கூடும் ?  

காதல் சுருக்கமானது 

மறப்பது  நீளமானது .


இதே போல் இரவுகளில் 

அணைத்திருந்ததால் 

அவளை தொலைத்ததாக மனம் ஏற்கவில்லை .

இது அவள் எனக்கு உணர்த்தும் கடைசி வலியாகவும் 

இது நான் அவளுக்கு எழுதும் கடைசி பாடலாகவும்   

இருந்தும் கூட ....







Tonight I can write the saddest lines

Pablo Neruda


Tonight I can write the saddest lines.

Write, for example, 
'The night is starry and the stars are blue and shiver in the distance.'

The night wind revolves in the sky and sings.

Tonight I can write the saddest lines.
I loved her, and sometimes she loved me too.

Through nights like this one I held her in my arms.
I kissed her again and again under the endless sky.

She loved me, sometimes I loved her too.
How could one not have loved her great still eyes.

Tonight I can write the saddest lines.
To think that I do not have her. To feel that I have lost her.

To hear the immense night, still more immense without her.
And the verse falls to the soul like dew to the pasture.

What does it matter that my love could not keep her.
The night is starry and she is not with me.

This is all. In the distance someone is singing. In the distance.
My soul is not satisfied that it has lost her.

My sight tries to find her as though to bring her closer.
My heart looks for her, and she is not with me.

The same night whitening the same trees.
We, of that time, are no longer the same.

I no longer love her, that's certain, but how I loved her.
My voice tried to find the wind to touch her hearing.

Another's. She will be another's. As she was before my kisses.
Her voice, her bright body. Her infinite eyes.

I no longer love her, that's certain, but maybe I love her.
Love is so short, forgetting is so long.

Because through nights like this one I held her in my arms
my soul is not satisfied that it has lost her.

Though this be the last pain that she makes me suffer
and these the last verses that I write for her.

Translation by W. S. Merwin



Thursday, 14 May 2020

வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே ....

"வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே,
நாடி நிற்குதே அனேக நன்மையே ,உண்மையே "னு

ஆரம்பிக்கிற பட்டுக்கோட்டை பாட்டு  .ராணுவத்திலேருந்து  வீட்டுக்கு திரும்பும் சிவாஜியும் அவர் தோழர்களும் நம்பிக்கையா பாடிக்கிட்டே வருவாங்க .அப்புறம் இதே பாட்டோட சோக வெர்ஷன் ,"வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே"னு போகும் . ஏனோ இன்னைக்கு அந்த வீடியோ பார்த்ததிலிருந்து இந்த பாட்டு ஞாபகத்திலேயே இருக்கு .எத்தனை பேர் எத்தனை மணி நேரம்ன்னு  குழந்தைங்க ,பாத்திரம் ,வாத்து ,நாய்னு  கூட சுமந்துட்டு நடந்து போய்க்கிட்டே இருக்காங்க .வீடுங்கறது என்ன .A house is made of bricks but a  home is made of hearts னு ஒரு  பழமொழி இருக்கு .எங்கிருந்தோ எங்கேயோ பிழைக்க ஏன் வராங்க ?ஒரு நல்ல வாழக்கை அமையும்னு தானே ?இல்ல சம்பாதிச்சு திரும்ப போய் ஒரு வீடு இல்ல  ஏதோ ஒரு தொழில் பண்ணி பிழைச்சுக்கலாம்ன்னு தானே ?கூட்டிட்டு வரவங்களுக்கும் இவங்க வசதிக்கு தானே கூட்டிட்டு வராங்க ? ஒரு அரசு என்ன செஞ்சிருக்கணும் ?இதுல யோசிக்க பெருசா எதுவுமே இல்லையே ?ஒண்ணு அவங்கள இங்கேயே நிலைமை  சரியாகற வரைக்கும் இருங்க அதுவரைக்கும் நாங்க பாத்துக்கறோம்னு சொல்லணும் இல்ல ஊருக்கு போகணும்ன்னு ஆசைப்பட்டீங்கனா அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சு தரோம்ன்னு பண்ணியிருக்கணும் . அது விட்டுட்டு ரயில் விடுறோம் விடல,விட்டப்புறம் இங்க வேலை கெட்டுப்போகும்னு போக விடமாட்டோம்ங்கறதெல்லாம் என்ன நியாயம் ?

ஊருக்கே போய்ட்டா எப்படியாவது பிழைச்சுக்கலாம்ன்னு  தானே எப்படியோ கிளம்பி போறாங்க ?அங்கேயும் போய் உள்ள விடுறதிலேருந்து எத்தனை சிக்கல் .40 km லேருந்து 1000 kmலாம் என்ன தைரியத்துல நடக்க ஆரம்பிக்கறாங்க ?அந்த குழந்தைங்க என்ன பண்ணும் ?வழியில தண்ணி சாப்பாடெல்லாம் என்ன பண்ணுவாங்க ?யார் தருவா ?தைப்பூசத்துக்கு பழனிக்கு பாதயாத்திரைக்கு போறவங்களுக்கு வழியெல்லாம் பந்தல் வச்சு சாப்பாடும்  தண்ணியும் கொடுத்துகிட்டே இருப்பாங்க .ஊரே அடைஞ்சு கிடக்குதே யார் வருவாங்க  இவங்களுக்கு சாப்பாடோ தண்ணியோ தர ?டாய்லெட் வசதிகளுக்கு எங்க போவாங்க ?இதை மொத்த அரசும் எப்படி கலங்காம வேடிக்கை மட்டுமே பாக்குது ?மனுஷங்கன்னா  அவ்வளவு இளப்பமா ?இவ்வளவு குரூரமா ஒரு அரசு இருக்க முடியுமா ?அப்ப இவங்க யாரோட குடிமக்கள் ?





எப்ப போய் சேர்வோம்ன்னு தெரியாது ,வழியில என்ன நடக்கும்னு தெரியாது .அந்த நாயையும் வாத்தையையும் இருந்த இடத்துல தூக்கிப்  போட்டுட்டு போயிருக்கலாம் .அதையும் சேர்த்து சுமந்துட்டு போக சொல்றது எது ?அது ஏன் ஒரு அரசுகிட்டயும் அதன் மக்களான நம்ம  கிட்டயும் இல்லாம போச்சு ....







Sunday, 1 March 2020

அன்பெனும் பெருங்கொடை

அம்மாவுடன் வரும்  ஒரு சிறுமி .சில வருடம்  வரல .ஒரு நாள் அவள் மாமா கூட்டிட்டு  வந்தார் .அவருக்கு இருபத்தைந்து வயதுக்குள்ள  இருக்கும்  .நோய் அதிகமாகி மூச்சு விடவே சிரமப்பட்டுட்டிருந்தா  .சத்தம் போட்டேன் 
"எங்கக்கா இறந்து போய்ட்டாங்க "
"அதனால இவளை ஏன் கூட்டிட்டு வரல"ன்னு கோபப்பட்டேன்."கண்டிப்பா அட்மிட் தான் பண்ணனும் .இப்ப ஒண்ணும் சொல்றதுக்கில்ல"னு சொல்லிட்டேன் .

அவளோ பத்து வயசு இருக்கும் .அட்மிட் ஆகவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறா .வீட்டுக்கு அனுப்புங்கன்னு அழுகை வேற .எதையோ சொல்லி ஏமாத்துற வயசும் இல்ல .கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு  அனுப்பிடுறோம்னு கஷ்டப்பட்டு ரூம்க்கு கூட்டிட்டு போறோம் .மொத்த மருத்துவமனையும் அவ கிட்ட கெஞ்சிருக்கோம் .எப்படியோ சமாதானமாகி இருந்துட்டா .உடம்பு ஒத்துழைக்கலன்னு புரிஞ்சுதோ என்னமோ .நுரையீரல் இருதயம்ன்னு ஏகப்பட்ட தொற்று . பத்து நாள்ல வீட்டுக்கு போயே  ஆகணும்ன்னு ஒரே அழுகை .உடல்நிலை இப்ப கொஞ்சம் தேறியிருந்தது.ஆனா அழுதே சிக் ஆகிருவா போலிருந்தது .இப்படியே அழுகை அடம் கெஞ்சல்னு ஒரு மூணு நாலு அட்மிஷன் .ரெண்டு வருஷத்துக்கு முன்னால இன்ஜினியரிங் சேர்ந்தப்ப "என்னை bless  பண்ணுங்க aunty "னு ஆசிர்வாதம் வாங்கினப்ப பிரமிப்பா இருந்தது .

மாமா  திருமணமாகி நல்ல வேலைல இருக்கார் .அவர் மனைவியும் அவள அத்தனை அன்பா பாத்துக்குறாங்க .போன  வாரம் மாமா கூட செக்கப் வந்திருந்தா ."நா மொதல்ல கூட்டிட்டு வந்தப்ப எங்கக்காக்கோ இவளுக்கோ எச்.ஐ.வி இருக்கதே எனக்கு தெரியாது .எங்கம்மா, அந்த ஆஸ்பத்திரிக்கு  தான் 
அக்கா போவான்னு சொன்னாங்க .அதனால கூட்டிட்டு வந்தேன் .நீங்க சொன்னத கேட்டதும் ஷாக் ஆகிருச்சு .அதோட இவளை  வேற அட்மிட் பண்ணனும்ன்னு சொன்னதும் எனக்கு ஒண்ணுமே புரியல .அப்புறம் கூட 
அவ்வளவு கோபம் தான்  வந்தது .சீ ..நம்ம  அக்காவும்  இறந்துட்டாங்க ,இவளுக்கும் இந்த வியாதியானு .சொன்னா நம்ப மாட்டீங்க ,போற  வழியில ஆட்டோலேருந்து தள்ளி விட்டுட்டேன் .நல்ல வேளை .இப்ப நெனச்சா கூட மனசு கஷ்டமாயிருக்கும் ,இப்படி முட்டாள்தனம் செய்ய போனோமேனு ."  



Wednesday, 1 January 2020

கடவுள்

கடவுள் நான்
ஒரு நண்பனில்லாமல்,
தூய்மையில் தனியாய்.
முடியாத உலகம் .

கீழே ,
இளங்காதலர்கள்
இனிமையாக திரிகிறார்கள்
ஆனால் இறங்க முடியாது.
கடவுள் நான்.

வசந்தம் .
வாழ்க்கையே காதல் .
காதல் மட்டுமே வாழ்க்கை .
மனிதனாக இருக்கலாம்
கடவுளாக காட்டிலும்
தனிமையாய்


God 

Langston Hughes 

I am God—
Without one friend,
Alone in my purity
World without end.

Below me young lovers
Tread the sweet ground—
But I am God—
I cannot come down.

Spring!
Life is love!
Love is life only!
Better to be human
Than God—and lonely.