திருநெல்வேலி ஜங்க்ஷனின் உலகம்மன் கோவில் .நினைவில் ஒரு பெரிய மரமும் நிறைய காலி இடமுமாய் .எதிரே முதல் வீடு ஆச்சி வீடு .அடுத்து சரசா அத்தை அகிலா அப்புறம் மீனா அத்தை பிரேமா அக்கா ,எதிர் வீட்டில் குட்டி இம்ரு (தாத்தா கிரிக்கெட் பிரியர் ),பின்வீட்டில் பாரதி .தெருவெங்கும் ஓடிய திண்ணை .திண்ணை ஒட்டிய சாக்கடை .பொழுதும் மேயும் பன்னிகள் .கோவில் திருவிழாவின் பெரிய ஸ்பீக்கர் .அது பாடிய மச்சானை பாத்தீங்களா ,வாங்கோண்ணா .அதற்கு ஆட்டம் .
கோவிலுக்கும் வீட்டுக்கும் நடுவே பெரிய ரோடு .தட்டியில் அடித்த சினிமா விளம்பரங்கள் .படம் பார்க்க வர சொல்லி கூவிக்கொண்டே போகும் குரல் .பறக்க விட்ட துண்டு சீட்டுகள் .தேர்தல் கூட்டங்கள் .போடுங்கம்மா ஓட்டு வாக்கு சேகரிப்புகள்.இன்னொரு திருவிழா பலிக்கு வாழைப்பழ ருசி காட்டப்பட்ட பன்னிகள் ...
அப்படியே நடந்தால் தாமிரபரணி .நீர் வற்றாத தாமிர ருசி கொண்ட தாமிரபரணி. அம்மா அத்தை கர்ப்பமாயிருந்த சித்தி சேர்ந்தே நீந்திய தாமிரவருணி .தாத்தா .காலையில் ஆற்றில் குளித்து கோமணம் அலசி அருகம்புல் ஆற்றில் அலசி மடியில் சுற்றி நேராக பிள்ளையாருக்கு தரும் தாத்தா .உயரமாக சிகப்பாய் வழுக்கை தலையாய் அச்சு போல் எழுதிய தாத்தா .
ஆச்சியை தூக்கி அடுப்புல வை என்று ஏசிய ஆங்கிலம் படிக்க தெரிந்த ஆச்சி.ஆச்சி வீட்டு செல்லம்மா ,செல்லம்மாள் மகள் உலகு .உலகம்மன் கோவில் .
நன்றி - https://twitter.com/5Murugesan/status/1334317330940116992?s=20