நான் முதல் முதலில் கோலம் போட பழகியது திருநெல்வேலியில் .ஆச்சி வீட்டில் விடுமுறையில் பக்கத்து வீட்டு மீனா அக்கா சொல்லி கொடுத்த சாக்லேட் கோலம் தான் நான் போட்ட முதல் கோலம் .இதன் பின்னர் கிளி ,மயில் என்று படி படியாக முன்னேறி அதில் தேர்ந்தது தனி கதை .
என் பெரியப்பா வீடு சென்னை ராயப்புரத்தில் இருந்தது .இங்கிருந்த குறுகலான தெருக்களில் கோலம் போட நடக்கும் அடி தடிகளை சிறு வயதில் நான் பார்த்ததுண்டு .பெரிய கோலம் போட இடம் கிடைக்காமல் போய் விடும் என்று இரவிலேயே கோலம் போடுவார்கள் .இதில் சண்டை வேறு .எங்கள் வீட்டருகே விசாலமாக இடம் இருந்தது ,கோலம் போடும் ஆர்வம் தான் பலருக்கும் இல்லை .
நான் பள்ளி படித்துக் கொண்டிருந்த போது மார்கழி என்றாலே கோல நோட்டுக்களின் ராஜாங்கம் தான் பள்ளியில் .எல்லோரும் அவரவருக்கு தெரிந்த கோலங்களை பகிர்வது வழக்கம் .இதில் என் தோழி மீனா ,புள்ளிகளுக்குள் சொந்தமாக கோலம் போடுவதில் வல்லவள் .அவள் கண்டுபிடித்த கோலங்கள் இன்றும் என்னிடம் உண்டு .ஆசிரியர் ஒரு பக்கம் பாடம் நடத்திக் கொண்டிருக்க மறைவாக நோட்டை ஒளித்து வைத்து கோலம் போட்ட காலங்கள் அவை .
வீட்டில் மாலை நேரங்கள் முழுவதும் மறு நாள் காலை போடப் போகும் கோலங்களுக்கான ஒத்திகை நடக்கும் . காலையில் ஐந்து மணிக்கு எழுந்து(இப்போதும் இது எனக்கு எப்படி முடிந்தது என்பது ஆச்சரியம் தான் ) நோட்டும் கையுமாக கிளம்பி ,முந்தின நாள் கோலத்தை பல முறை மீண்டும் ரசித்த பின்னர் அரை மனதுடன் அதில் தண்ணீர் தெளித்து, கோலத்தை ஆரம்பித்து ஏழு மணிக்கு முடித்து ...முடித்த பின் ஒவ்வொரு பக்கமாக அதை நின்று அழகு பார்த்து என்று நாள் பூராவும் கோலத்தை சார்ந்தே நகரும் . ஒரு முறை நான் உட்கார்ந்து கொண்டு கோலம் போடுவதை பார்த்த என் பாட்டி கோபித்து ,நின்று தான் கோலம் போட வேண்டும் என்றார்கள் .அன்றிலிருந்து அதையும் பழகி கொண்டேன்.
இதில் அவ்வப்போது என் கோலத்தை பிரமிப்பாக பார்த்து நகரும் பக்கத்து வீட்டு கிருஷ்ணவேணி (இன்றும் பண்டிகைகளில் நான் போடும் கோலங்களுக்கு முதல் ரசிகை) ,எதிர்த்த வீட்டு மோகனா ,பாப்பம்மாள் (எல்லோரும் பணி பெண்கள் ) இவர்கள் எல்லாரும் அன்றைய கோலத்தை பார்த்து விட்டார்களா என்ற அலசல் வேறு . இதெல்லாம் என் பள்ளி காலத்தில் .
அப்புறம் கல்லூரி காலங்களில் பண்டிகை விஷேஷங்களில் மட்டுமே கோலம் போடுவது என்றாகி போனது .இதில் ஒரு பொங்கல் நாளில் நான் போட்ட கோலத்தை என் பக்கத்து வீட்டிற்கு வந்திருந்த வெளிநாட்டு தம்பதியர் சுத்தி சுத்தி வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மறக்க முடியாதது. இதை எதை வைத்து போடுகிறீர்கள் ,இது எப்படி தரையில் ஒட்டுகிறது ,எப்படி அழியாமல் இருக்கிறது என்று கேள்விகள் வேறு .
திருமணத்திற்கு பின் ,என் மாமியார் வீடு மூன்றாவது மாடியில் ,வாசலில் கோலம் போட இடமே கிடையாது .இதற்கு பின் என் அம்மா வீட்டிற்கு சென்னைக்கு வரும் போது மட்டுமே கோலம் போடுவேன் .இதில் ஒரு முறை அம்மா நான் வேறு எங்கோ வெளியில் சென்ற நேரம் பணி பெண்ணை வைத்து கோலம் போட்டு விட ,பெரிய சண்டையே போட்டேன் .கோலம் போட கிடைத்த ஒரே வாய்ப்பும் நழுவியதே என்று .அதோடு ,"ஏம்மா ,நீ போடலையா ?"என்ற கிருஷ்ணவேணியின் விசாரிப்பும் என்னை வருத்தப்படுத்தியது .
இப்போது நான் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் வாசல் என்பது ஏதோ பேருக்கு வீட்டுக்கு முன்னால் இருக்கும் இடம் .பல நாட்கள் ,"இதற்கு கோலம் வேறு தேவையா" என்று கோலம் போடாமல் விட்டு விட்டேன் .இப்போது தான் போடாமலேயே விட்டு விட்டால் மறந்து விடுமே என்று அஞ்சி சில மாதங்களாக சின்ன சின்ன கோலங்களாக போட ஆரம்பித்திருக்கிறேன் ( பழக்கம் விட்டு போய் போன வருடம் பொங்கலுக்கு நான் போட்ட கோலத்தில் இருந்த பெண்ணை பார்த்து என் சின்ன மகன் "அம்மா வாசலிலே பேய் வரைஞ்சிருக்காங்க "என்று சொல்லி என் மனதை உடைத்தது தனி கதை)
வாசலெங்கும் கோலங்களாக பூத்திருக்கும் இந்த மார்கழி நேரத்தில் என் கோலங்கள் நினைவு சுழல்களாக என் மனதில் சுழன்று கொண்டே இருக்கின்றன .
9 comments:
கல்லூரியில் முதல் வருடத்தில் ரெகார்டு நோட்டில போட்ட கோலங்கள விட்டுட்டீங்களே
என்ன அதிசயம் ,இப்பத்தான் உங்க குலுகோஸ் புலி பாண்டி பத்தி படிச்சிட்டிருந்தேன் .
நன்றி SUREஷ்
// .இதில் ஒரு முறை அம்மா நான் வேறு எங்கோ வெளியில் சென்ற நேரம் பணி பெண்ணை வைத்து கோலம் போட்டு விட ,பெரிய சண்டையே போட்டேன்//
அடேங்கப்பா !
பெரிய டெரரால்லாம் இருந்திருக்கீங்க போல :)))))
வாய்ப்புக்கள் கிடைக்கும்போது, மறக்காமல் இருக்கவும் சிறிய அளவிலாவது கோலம் போடும் கலை தொடரட்டும் !
பெரிய டெரரால்லாம் இல்லை ,ஏதோ சின்ன அளவில்..நன்றி ஆயில்யன்
பூங்குழலி,
உங்க ”கோலங்கள்” ஒரு மெகா தொடர்? கட்டுரை நல்லா இருக்கு.வழக்கமா எல்லோரும் ஸ்டார் கோலங்கள் போட்டு ஆரம்பிப்பாங்க.கோல ஆசை குறைந்து வருவது காலம் செய்த கோலம்.
சுஜதாவின் வசந்த் ஒரு கதையில் கேட்பான்:-
”ஏன் பாஸ்... மெஜாரிட்டி பெண்கள் கோலம் போடும்போது ஏன் மெலிதா சிரித்தக்கொள்கிறார்கள்
அல்லது மனதிற்குள்ளாவது”
ஏன்?
அட புள்ளி வச்சு கோலம் போடறதை வச்சு இவ்வளவு எழுத முடியும் போலிருக்கு போல... இன்னும் அலுக்காத விஷயத்தில் கோலமும் ஒரு விஷயமும் தான்..
-- சண்முகவேல்
ஹ்ம்ம்ம்ம் அக்கா கோலம் போடுவது எத்தனை ரசனைக்குரிய விஷயம்... அந்த கோலம் போடுவதையும் மிக ரசனையோடு சொல்லிருக்கும் விதம் அழகோ ஆழகு....
ஆகா நம்ம நட்ஸ் ...நன்றி
நல்ல பதிவு.
Post a Comment