Wednesday, 16 December 2009

தாய்க்கு தலைமகன்

இந்த பெண்மணி எங்களிடம் சிகிச்சைக்கு வந்த போது வெளியில் பல தவறான சிகிச்சைகள் செய்யப்பட்டு உடல்நலம் சற்று கவலைக்கிடமாக இருந்தது.சரியான சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நன்கு தேறியது.இப்போது கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாக இங்கு தொடர்ந்து சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கிறார் .இவருக்கு வயது நாற்பத்து ஐந்து இருக்கும் .

எப்போதும் இவரை அழைத்து வருவது இவரின் மகன் .வயது பதினெட்டிலிருந்து இருபதிற்குள் தான் இருக்கும் .ஆனால் அவன் தன் அம்மாவை பார்த்துக் கொள்ளும் விதம் அலாதியானது .ஒவ்வொரு முறை வரும்போதும் ,"எங்கம்மா நல்லா இருக்காங்களா ?"என்று ஒரு நூறு முறையாவது கேட்டுக் கொள்வான் ."வேற ஏதாவது டெஸ்ட் செய்யனும்ன்னா யோசிக்காதீங்க டாக்டர் ,கண்டிப்பா செய்திருங்க "இதை ஒரு ஐம்பது முறை ."வெயிட் கூடியிருக்காங்களா ? ரிப்போர்ட் எல்லாம் நல்லா இருக்கா?" என்று இவன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருப்பான் .

எல்லா சோதனைகளும் முடிந்து மருந்துகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பும் முன்னர் கண்டிப்பாக ஒரு முறை என் அறையின் உள்ளே வந்து ,"நிச்சயமா ,எங்கம்மா நல்லா இருக்காங்கல்ல ,"என்று உறுதி செய்து கொண்ட பின்னரே கிளம்புவான் .இத்தனையையும் மெல்லிய ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டிருப்பார் அவன் அம்மா .


1 comment:

Kavinaya said...

ரொம்ப நல்ல பிள்ளை. கொடுத்து வைத்த அன்னை.