Monday, 28 December 2009

விருதும் இல்லாமல் விழாவும் இல்லாமல்


காலையில கண் முழிச்சா
நா "கண் திறக்கும் கதிரவன்" தான்
பேஸ்ட கொஞ்சம் பிதுக்கையில
நா "பல் துலக்கும் பகலவன்" தான்

குளிச்சிட்டு வரும் போது
நா "அழுக்ககற்றும் ஆதவன் "தான்
சாப்பிடும் போதும் கூட
"உண்டு செரிக்கும் உத்தமன் " நான்

நொடிக்கு தான் ஒண்ணாக
நூறு கோடி பட்டமுண்டு
கண்ஜாடை செஞ்சுபுட்டா
விழா எடுக்க கூட்டமுண்டு

நேத்து சொன்ன வாழ்த்தெல்லாம்
நடுச்சாமம் கரைஞ்சிருச்சி
உச்சி மண்ட குளுந்ததெல்லாம்
தல சீவ உதிந்திருச்சி

இன்னைக்கி பொழுது இப்ப
சொகமில்லா பொழப்பாச்சி
காது குளிர நாலு சொல்லு
கேக்காத பொழுதாச்சி

அய்யான்னு சொல்லுவாங்க
அய்யன்ன்னு சொல்லுவாங்க
மெத்த படிச்சவுங்க
மெருகாத்தான் சொல்லுவாங்க

அதிசயப் பேச்செல்லாம்
அசராம சொல்லுவாங்க
புதுசு புதுசாத்தான்
படிச்சு வந்து சொல்லுவாங்க

இத்தனையும் இல்லாம
ராப்பொழுது கழியாது
இந்த பாட்டு கேக்காம
சோறு கூட செமிக்காது

நாளைக்கி பொழுது வந்தா
கோடி ஜனம் கூடி வரும்
ஆரவாரம் கோஷமெல்லாம்
வானம் முட்ட கேட்டு வரும்

ஆனாலும் அது வரைக்கும்
காத்திருக்க தெம்பு இல்ல
நல்ல வார்த்த கேக்காம
துண்டுக்குள்ள உசிரு இல்ல

மனசு மாய்ஞ்சு போகுமுன்னே
புத்துசிரு பாச்சிடுங்க
நேத்து எடுத்த படத்த கொஞ்சம்
டிவியில போட்டுடுங்க


2 comments:

அண்ணாமலையான் said...

அட கடவுளே? ஏன் இப்படி...?

Kavinaya said...

சரியா புரியலை. யாருடைய புலம்பல் இது?