Tuesday, 23 February 2010

பாத்திரம் அறிந்து

சிகிச்சைக்காக புதிதாக வந்த ஒரு பெண் .நிறைய படித்தவர் .பல வருடங்களாக தனக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியும் என்று கூறினார் ,கிட்டத்தட்ட பத்து வருடங்களாக .ஆனால் தான் எந்த சிகிச்சையும் இதுவரை செய்து கொள்ளவில்லை என்றும் கூறினார் .

இவரின் கணவர் திருமணம் ஆகி மூன்று வருடங்களிலேயே இறந்துவிட்டார் .கணவருக்கு எச்.ஐ.வி இருப்பது இவருக்கும் திருமணத்திற்கு முன்பே தெரியுமாம் .தெரிந்தும் ஏன் அவரை திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேட்டதற்கு ,பாவம் என்று செய்து கொண்டேன் என்று கூறினார் ."சரி பாவம் என்று திருமணம் செய்து கொண்டீர்கள் ,எதற்காக காண்டம் உபயோகிக்கவில்லை ?"என்று கேட்டேன் ."அவர் செத்து போய்ட்டா ,ஒடனே நானும் செத்து போயிடனும்ன்னு நெனைச்சேன் .அதனால எச்.ஐ.வி வராம பாத்துக்கனும்ன்னு தோனல .அவரு மூனே வருஷத்தில செத்து போனப்ப தான் பயமா இருந்துது .அப்புறமும் ஒடம்பு நல்லாயிருந்த வரைக்கும் பெரிசா ஒண்ணும் தோனல .ஆனா இப்ப நெனைக்கும் போது இப்படி முட்டாளா இருந்திருக்கோமே ன்னு வருத்தமா இருக்கு .எதுக்காக அப்படி அன்னிக்கி முடிவு எடுத்தேன்னு யோசிக்கவே இப்ப வருத்தமா இருக்கு .எங்க வீட்டில எல்லாருக்கும் பிடிச்ச பிள்ள நான் .அவங்களுக்கு தெரிஞ்சா என்ன பாடுபடுவாங்களோ.."என்று சொல்லி ஓவென்று அழுதார் .

Saturday, 20 February 2010

என்னவென்று சொல்வது ?

என் மகனின் பள்ளியில் நடந்த சில நிகழ்வுகள் இவை .

1.ஓபன் ஹவுசிற்கு, என் மகனுடன் எட்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனின் தந்தை வந்திருந்தார் .அவன் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக பெற்றிருப்பதாக ஆசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் .ஆசிரியர் "அவன் இந்த டெர்ம் முழுவதும் நிறைய நாட்கள் வரவில்லை .லீவ் லெட்டரும் கொடுக்கவில்லை .பெற்றோரை அழைத்து வா என்று சொன்னேன் ."என்று சொன்னார் .அந்த தந்தையோ இல்லை அவன் ஒரு நாளோ இரண்டு நாளோ தான் லீவ் போட்டிருக்கிறான் என்று சொன்னார் .ஆசிரியர் ரெஜிஸ்டரை காட்டினார் .மகன் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தான் .அவர் ஆசிரியரையும் மகனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் .அவர் முகத்தில் அவமானம் +அதிர்ச்சி +ஏமாற்றம் .

2.பள்ளி வாசலில் காலையில் ஒரு மாணவி ,ஒன்பது அல்லது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கலாம் . காரில் வந்து இறங்கினாள் .கார் போகும் வரை கேட்டருகே நின்று கொண்டிருந்தாள் .ஒரு ஐந்து நிமிடம் சென்றிருக்கும் வேகமாக வெளியே வந்தவள் ,எதிர் திசையில் நடந்து போய்விட்டாள்.எதிரே இருக்கும் கடைக்கு போகிறாளோ என்று பார்த்தால் கடையையும் தாண்டி ரோட்டை கடந்து போய்விட்டாள் .

3.பள்ளிவிட்ட பிறகு ,ஆட்டோவுக்கு வந்தாள் ஒரு சிறுமி .எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும் .ஆட்டோ ஓட்டுனர் ,அந்த சிறுமியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தார் .இன்னமும் சிலர் வரவேண்டும் போலும் .பேசிக் கொண்டிருந்த போதே கிச்சுகிச்சு மூட்டுவது போல் விளையாடினார் .அங்கே இங்கே தொட்டுக் கொண்டு .உடன் இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ,விஷமச் சிரிப்புடன் .

Saturday, 13 February 2010

கோலமும் நானும் பாட்டியும்

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ,நேரம் கிடைக்கும் போது பகலிலோ மாலையிலோ கோலம் போடுவது வழக்கம் .எப்போதும் பெரிய கோலங்களை தான் போடுவேன் .இது நேரம் ஆகும் என்பதால் சுற்றி சுற்றி உட்கார்ந்து மெதுவாக போட்டுக் கொண்டிருப்பேன் .

இப்படி ஒருநாள் கோலம் போட்டுக் கொண்டிருந்தேன் .வசதியாக உட்கார்ந்து கோடுகளை இழுத்துக் கொண்டிருந்தேன் .மாடியில் வீட்டில் இருந்த பாட்டி ,நான் பாதி கோலத்தில் இருக்கும் போது இறங்கி வந்து படிக்கட்டில் உட்கார்ந்தார் .ஒன்றும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார் .

நான் கோலத்தில் ஒரு பக்கம் முடித்துவிட்டு இன்னொரு பக்கம் சென்று உட்காரப் போனேன் .உடனே சட்டென்று ,"கோலத்த நின்னுகிட்டு இழுளா ,சப்பாணி பொம்பள மாதிரி ஒக்காந்து இழுக்கா .நேரா நின்னுக்கிட்டு இழு ,"என்றார் வேகமாக .நான் உடனே ,"நின்னுக்கிட்டே கோலம் போட்டா கால் வலிக்கும் பாட்டி "என்றதும் "ஆமா ,இப்படி கெழவி கணக்கா ஒக்காந்துட்டே இழுத்தா தான் வெளங்குமோ?கத்தி போல நின்னுக்கிட்டு இழு "என்றார் மீண்டும் .

அன்றிலிருந்து கோலம் போடும் போது முடிந்தவரை நின்று கொண்டு தான் போடுகிறேன் . நின்று கொண்டு புள்ளி வைக்கும் போது அது ஒரு சீராகவும் விழுகிறது ,கோலமும் முழுமையாக சமமாக இருக்கிறது .

Thursday, 11 February 2010

குழந்தைக்காக

புதிதாக சிகிச்சைக்கு வந்த பெண் .வந்தவுடன் சொன்னார் ,"போன வருடமும் அதற்கு முந்தின வருடமும் பரீட்சை செய்த போது எனக்கு எச்.ஐ.வி இல்லை ,இப்போது செய்த போது இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள் ."எதற்காக வருடா வருடம் பரீட்சை செய்து கொண்டீர்கள் என்று கேட்ட போது ,"அவருக்கு எச்.ஐ.வி இருக்கிறது என்பது மூன்று வருடங்களாக தெரியும் அதனால் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் என்று ."

உங்கள் கணவருக்கு இருப்பது தெரியும் என்றால் ஏன் நீங்கள் காண்டம் உபயோகிக்கவில்லை என்று கேட்டேன் .குழந்தை வேண்டும் என்பதற்காக என்றார் அழுதபடி .திருமணம் ஆகி பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கின்றன .குழந்தை இல்லை .குழந்தைக்கான முயற்சியில் ,விரும்பியோ கட்டாயத்தின் காரணமாகவோ ஈடுபட்டதில் எஞ்சியது எச்.ஐ.வி மட்டுமே .

Friday, 5 February 2010

தவிப்பு

தம்பதியராக சிகிச்சைக்கு வருபவர்கள் தான் இவர்களும் .கணவர் ஏதோ தாக்குதலில் அடிபட, ரத்தம் ஏற்றியதில் எச்.ஐ.வி வந்தது .பல வருடங்கள் ஆன பின்னரும் இருவருக்கும் அதை ஏற்றுக் கொள்வது சிரமமாகவே இருக்கிறது .சொல்லும் போதெல்லாம் அழுகை வரும் .

போன வாரத்தில் வழக்கமான பரிசோதனைக்காக வந்திருந்தார்கள் .அப்போதும் ,"அடிப்பட்டப்ப செத்து போயிருவாருன்னு தாங்க நெனைச்சோம் .ஆனா அதில பொழைக்க வச்ச ஆண்டவன் இதில எங்கள மாட்டிவிட்டுட்டான் ,"என்று சொல்லி அழுதார் மனைவி .மேலும் ,"பசங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிச்சிகிட்டே இருந்தோம் .பெரியவன் இப்பதான் காலேஜ் சேர்ந்திருக்கான் .ரெண்டாவது பையன் ஸ்கூல் படிக்கிறான் .பெரியவன்கிட்ட போன வாரம் தான் சொன்னோம் .நாளைக்கு ஒடம்புக்கு ஏதாவது முடியலைன்னா அவனுக்கு தெரியனும் இல்லையா .அப்படியே இடிஞ்சி போயிட்டான் .எப்படிம்மா எப்படிம்மா ன்னு கேட்டுகிட்டே இருந்தான் .ரிபோர்டெல்லாம் காண்பிச்சோம் .சரிம்மா ஒடம்ப நல்லா பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு விட்டுட்டான் .ஏத்துப்பான்னு நெனைக்கவே இல்ல .இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு ,"என்றும் சொன்னார் .

தனக்கு எச்.ஐ.வி இருக்கிறது என்று தெரிந்த அந்த ஒரு நொடியை விடவும் ,எவரும் அறியாமல் சிகிச்சைக்கு வந்து சென்ற அந்த சில நேரங்களை விடவும் மகனிடம் சொல்ல முடிவெடுத்த அந்த ஒரு நொடியை விடவும் ஏன் அவனிடம் சொன்ன அந்த ஒரு நொடியை விடவும் கூட அவன் பதிலுக்கென காத்திருந்த அந்த ஒரு நொடி வலி நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும் .

Tuesday, 2 February 2010

அழகாக

நேற்று வந்த ஒரு கணவன் மனைவி .எப்போதாவது ஒரு முறை தான் இந்த கணவருக்கு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வர நேரம் கிடைக்கும் .இவர் அழைத்து வராவிட்டால் வழி தெரியாது என்று இவர் மனைவியும் சரியாக சிகிச்சைக்கு வருவதில்லை .ஆனால் வரும் போதெல்லாம் நான் என் மனைவியை எப்படி தாங்குகிறேன் என்பதை பற்றிய பிரதாபம் அதிகம் இருக்கும் ."நான் ஜூஸ் போட்டுக் கொடுத்தேன் "."நான் பழம் வாங்கிக் கொடுத்தேன் .""அவங்க தான் அழுது உடம்பைக் கெடுத்துக்குராங்க".இப்படியே பேசிக் கொண்டிருப்பார் .

இவர்களின் மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள்,திருமணம் ஆன சில மாதங்களிலேயே .தீக்காயங்களுடன் இருந்த மகளுக்கு தொட்டு எதுவும் செய்ய வேண்டாம் ,உங்களுக்கு அவளுக்கு இருக்கும் நோய் வரலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்லியும் ,மகளுக்கு சிகிச்சை செய்தததில் இவருக்கு எச்.ஐ.வி வந்தது .கணவருக்கு இல்லை ."செத்தப்பக்கூட தொட்டு அழக் கூடாதுன்னு டாக்டர் சொன்னாரு ,எப்படிங்க எம்பிள்ளைய தொடாம இருக்க முடியும் ?"என்று சொல்லி அழுவார்.

மகளை நினைத்து அழுது கொண்டே இருப்பதாக கணவர் அங்கலாய்ப்பார் .நேற்று வந்தவர் ,"வரவர இவ அழகு கொறையுது .மொகம் ஒரு களையா இல்ல .ஒடம்பு வேற கொஞ்சம் மெலியிற மாதிரி இருக்கு .நா ஒப்பனா சொல்றேன் டாக்டர் .இவ செத்தாலும் கூட எனக்கு கவலயில்ல ,ஆன இவ சாகுற வரைக்கும் அழகா இருக்கணும் ,அதுதான் முக்கியம் .அதுபடி நீங்க பாத்துக்கோங்க ."

"மொதல்ல நீங்க அவங்கள ஆஸ்பத்திரிக்கு ஒழுங்கா கூட்டிட்டு வாங்க .அழகாக தான் இருக்காங்க (நிஜமாகவே அழகாக களையாக இருப்பார் ) எனக்கு தெரிஞ்ச வரைக்கும் .இதுக்கு மேல அழகாக தெரியணும்ன்னு சொல்றீங்க ,அப்ப நீங்க இங்க கூட்டிட்டு வரக் கூடாது ,பியூட்டி பார்லருக்கு தான் அவங்கள கூட்டிட்டு போகணும் .ஒரு பேசியல் பண்ணி முடிய வெட்டி விட்டு ஜீன்ஸ் போட்டுவிட்டா இன்னுமே அழகாக இருப்பாங்க .சினிமாவில இல்ல சீரியலில கூட நீங்க நடிக்க வைக்கலாம் ,"என்று சொன்னேன் கோபமாக .

"அவர் தப்ப எப்பவுமே ஒத்துக்க மாட்டாரு .என்னையே கொற சொல்வாரு "என்று
வருத்தமாக சொல்லிவிட்டு சென்றார் அவர் .

Monday, 1 February 2010

தாலி

சில நாட்களுக்கு முன்னால் நடந்தது . காலையிலேயே மருத்துவமனை அல்லோகலப்பட்டது . வெளியூரிலிருந்து வரும் பலர் காலையிலேயே வந்து இங்கேயே குளித்துவிட்டு பரிசோதனைக்கு வருவது வழக்கம் .இவ்வாறு குளித்த பெண் ஒருவர் தன் தாலி செயினைக் குழாயின் மேல் மாட்டி வைத்து விட்டு குளித்து இருக்கிறார் .மறந்து விட்டு வந்தவர் திரும்ப சென்ற போது செயின் இல்லை .மூணு பவுன் என்று சொல்லி சத்தமாக அழுதுக் கொண்டிருந்தார் .ஆளாளுக்கு அவரவர் கருத்தை வழக்கம் போல் ,சொல்லிக் கொண்டிருந்தார்கள் ."தாலியைக் கழற்றலாமா ?"மூணு பவுனு !தங்கம் விக்கிற விலையில போனா கிடைக்குமா ?"தங்கம் கெடைச்சா சும்மா விடுவாங்களா ?"ஆஸ்பத்திரியில வந்து கழட்டிட்டு குளிக்கனுமா ?என்று தங்கம் சம்பந்தமாகவும் தாலி சம்பந்தமாகவும் பல கருத்துகள் .அந்தப் பெண்ணோ அழுதுக் கொண்டே இருந்தார் .

இந்த அமளிகள் ஓய்ந்து ஒரு மணி நேரம் சென்ற பின் மீண்டும் சத்தம் என் அறைக்கு வெளியே .இருபெண்களின் குரல்கள் மட்டும் ஓங்கி கேட்டது .நடந்தது இது தான் .இந்தப் பெண் குளித்து விட்டு வந்த பின் இன்னொரு பெண் குளிக்க சென்றிருக்கிறார் .செயினைப் பார்த்த இவர் அதை எடுத்து வந்துவிட்டிருக்கிறார் .இப்போது அதை அந்த பெண்ணிடம் திரும்ப தந்துவிட்டார் ,"தாலியை கழட்டின நீயெல்லாம் பொம்பளையா " என்பது போன்ற
அறிவுரைகளை இணைத்து .அமைதியாய் அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்தார் தாலியை தொலைத்தவர் .

எங்களுக்கு எஞ்சியது இரண்டு கேள்விகள் தான் ,அந்தப் பெண் நகையை ஒரு பொது இடத்தில் கழற்றி வைத்தது விட்டு அஜாக்கிரதையாய் இருந்தது பெரிய தவறு .ஆனால் ,எடுத்தவர் எதற்காக அதை எடுத்தார் , எதற்காக திரும்ப தந்தார் ?