Tuesday 1 June 2010

அறியாமல்

சில நாட்களுக்கு முன் அம்மா வீட்டிற்கு நான் சென்றிருந்த போது என் சிறு வயது முதல் எங்களிடம் பணி செய்த பெண் வந்தாள்.சின்ன வயதில் (என் திருமணம் வரை )எனக்கு வாராவாரம் தலை தேய்த்து விடுவாள் .இப்போதெல்லாம் இவள் வருவதே அபூர்வம் தான் .ஊர் கதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ,அவள் தங்கையைப் பற்றி விசாரித்தேன் .(இவள் குடும்பம் மொத்தமும் எனக்கு அத்துப்பிடி .இவள் தங்கையும் எங்களிடம் சில காலம் பணி செய்திருக்கிறாள் )


"அதுக்குத்தாம்மா வந்தேன் .அதுக்கு ரொம்ப முடியல.செவ்வாக்கெழமையே போயிரும்ன்னு நெனைச்சோம் .எங்கெங்கியோ பாத்துட்டேன் .ஒண்ணும் சரியாகல .மொதல்ல கே அம் சி ல சேத்து வச்சிருந்தேன் .என்னென்னமோ டெஸ்ட் பண்ணினாங்க .ரத்தம் தான் கொறையா இருக்கு வேற ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டாங்க .அப்புறம் வீட்டாண்ட டிரஸ்ட் ஆஸ்பத்திரில போயி காண்பிச்சேன் .அங்க இருக்கிற டாக்டர் எங்க ஆஸ்பத்திரிக்கு வா நல்லா ஆக்கிரலாம்னு சொன்னாரு .அவரு சொன்ன எடத்துல போயி சேத்தேன்.பதினாலாயிரம் ரூவா குடுத்தேம்மா .வெறும் குளுகோஸ் மட்டும் தான் போட்டாங்க .ரத்தம் வெளிய வாங்கிட்டு வந்து கொடுத்தேன் ,அத மூணு பாட்டில் ஏத்துனாங்க .வேற ஒண்ணுமே செய்யல .மருந்து கூட எழுதி தரலம்மா வீட்டுக்கு போகும் போது .ஏதாவது செஞ்சு காப்பாத்தி விடும்மா .ஒரு பொண்ண கட்டி கொடுத்தாச்சு .இன்னொரு பொண்ணு இருக்கே .கொஞ்சம் பாரும்மா ,"என்று வருத்தமாக சொன்னாள் .


வீட்டிற்கு சென்று ரிபோர்டை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தாள் .ரத்தம் மிகவும் குறைவாக இருந்தது .ஏன் குறைகிறது என்ற காரணம் கண்டறியப்படாமலேயே இருந்தது .அடையார் கேன்சர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன் .அங்கு சென்று பார்த்துவிட்டு போன் செய்தாள் ."நல்லா பாத்தாங்கம்மா .எல்லா டெஸ்டும் எடுத்திருக்காங்க .நாளக்கி வரச் சொல்லியிருக்காங்க ரிபோர்டுக்கு "என்று சொன்னாள் .அப்புறம் போன் ஏதும் வரவில்லை .


ஒரு வாரம் முன்பு அம்மா சொன்னார்கள் அவள் தங்கைக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக .அதோடு அவளை ஜி ஹெச் இல் சேர்த்திருப்பதாகவும் .நேற்று கேட்ட போது ,"பாவம், இறந்து போனாள் "என்று சொன்னார்கள் .


6 comments:

ரிஷபன் said...

அட கடவுளே! காப்பாத்த முடியலியா..

பூங்குழலி said...

ஆமாம் ரிஷபன் ,ரொம்ப முற்றிய நிலையில் நோய் இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை

எல் கே said...

சரியாக நோயை கண்டுபிடிக்காத மருத்துவரின் தவறே இதற்கு காரணம்,

பூங்குழலி said...

//சரியாக நோயை கண்டுபிடிக்காத மருத்துவரின் தவறே இதற்கு காரணம்,//


ம்ம்ம் ....முன்பே என்னவென்று கண்டறிருந்திருந்தால் ,காலத்தில் சிகிச்சை செய்திருக்க முடியும் .கே எம் சி யில் எல்லா பரிசோதனைகளுமே செய்திருக்கிறார்கள் ,ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை ...

அன்புடன் நான் said...

மிக வருத்தமா இருக்குங்க.
முன்பே கண்டறியப்படலையோ???
அவங்களுக்கு என் அஞ்சலி.

பூங்குழலி said...

ஆமாம் ,கருணாகரசு . கண்டறியப்பட்ட போது காலம் கடந்துவிட்டது