Monday, 10 May 2010

இறுதி வரை

போன வாரத்தில் ,நெடுநாட்களாக சிகிச்சையில் இருந்த ஒரு பெண் இறந்து போனார். எச்.ஐ.வியால் அல்ல ,கர்ப்பப்பை வாய் புற்று நோய் காரணமாக .கிட்டத்தட்ட ஒரு ஏழு மாதங்களுக்கு முன் இவருக்கு புற்று நோய் இருப்பதை கண்டறிந்தோம் .உடனே சிகிச்சைகள் ஆரம்பித்தும் ,நோய் குறையவில்லை ,பரவவும் ஆரம்பித்தது .சில மாதங்களிலேயே ,சிறுநீரகம் வரையும் பரவியது .சிறுநீரகங்கள் பழுதடைய ஆரம்பித்தன .இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று எல்லா நிபுணர்களும் கையை விரித்துவிட்டனர் .


சாதாரண இல்லத்தரசியாக ,இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார் .திடீரென ,தன் கணவருக்கும் தனக்கும் எச்.ஐ.வி இருப்பது தெரிந்தவுடன் சிகிச்சை எங்கு கிடைக்கும் என்பதை கண்டறிந்து வந்து சேர்ந்தார்.ஒருநாள் கூட மாத்திரை மருந்துகள் சாப்பிட மறந்ததில்லை .சிகிச்சைக்கு பணம் தேவைப் படும் என சில சிறப்பு பயிற்சிகள் பெற்று ஆசிரியராக பணிசெய்ய துவங்கினார். ஒவ்வொரு முறையும் எல்லாவற்றையும் நன்றாக தெளிவாக கேட்டுக் கொண்டே கிளம்புவார் .என் இரண்டு குழந்தைகள் கொஞ்சம் பெரியதாக வரும் நான் இருந்தால் போதும் என்று சொல்வார் .


இறுதியாக வந்த போது உடல்நலம் மிகவும் கெட்டிருந்தது .சரியாக சாப்பிட முடியவில்லை .உடல் வேறு வெகுவாக இளைத்திருந்தது .ஆனாலும் ,"நல்லா இருக்கேன் மேடம் .உங்கள பாத்துட்டேன்ல்ல என் ஒடம்பு நல்லாயிரும் .எல்லாரும் என்ன நல்லா பாத்துக்கிறீங்க .அங்க வீட்டிலேயும் எல்லாரும் என்ன நல்ல பாத்துக்குறாங்க .என் பசங்க கூட என்ன தொந்தரவு செய்யறதில்ல .பாப்பா அவளே துணிய துவைச்சுக்குரா .தம்பி கூட அவனே கெளம்பி ஸ்கூல் ,டியூஷன் எல்லாம் போய்க்கறான்.
எங்க நைனா என்ன இப்படி கவனிச்சுக்குவாருன்னு நா நெனைக்கவே இல்ல மேடம் .ஜூஸ் புழிஞ்சு கொடுக்கறாரு .ராத்திரி பகல் பக்கத்திலேயே இருந்து விசிறி விடுறாரு .என் பக்கத்திலே எல்லாரும் எப்பவும் இருக்காங்க மேடம் .கஷ்டத்திலேயும் நா கொடுத்து வச்சவ .நா கண்டிப்பா நல்லாயிருவேன் மேடம் ,"என்று சொல்லிக் கொண்டே வந்தவர் ,"எங்க நைனா கேக்குறாரு ஒன்னைய பொழைக்க வைக்க ஏதாவது வழி இருக்கான்னு கேட்டுட்டு வாடான்னு .சொல்லுங்க மேடம் ,நா நல்லாயிருவேன்ல்ல .எங்க நைனா கேக்கச் சொன்னாரு.நா முன்ன மாதிரி நல்லாயிருவேன்ல்ல ?"இதை அழுதபடியே அவர் கேட்டது இன்னமும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது .


7 comments:

செல்வராஜ் (R.Selvaraj) said...

உங்கள் பணியிடத்து அனுபவங்களும் அதில் தெரியும் மக்களின் இயல்பு வாழ்வு நிலையும் சிறப்பான பதிவாக அமைகின்றன. பணிசார்ந்த அழுத்தங்களுக்கு வடிகாலாக, ஒரு வெளிப்பாடாகக் கூட இது உங்களுக்கு அமைந்திருக்கலாம். ஆரவாரமான பதிவுகளுக்கு இடையே இது போன்ற அமைதியான இடுகைகளைப் படிக்க இதமாக இருக்கிறது. தொடருங்கள் பூங்குழலி.

பூங்குழலி said...

மிக்க நன்றி செல்வராஜ் .

சந்தனமுல்லை said...

மனம் கனத்து போயிருக்கிறது, பூங்குழலி! :-( ஒன்றும் சொல்லத் தோன்றாமல்...அந்த பெண்ணைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்!

பூங்குழலி said...

ஆமாம் சந்தனமுல்லை ,நினைக்கும் போதெல்லாம் நாம் ஏதேனும் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்று மனம் குடைகிறது .இறுதி வரையிலும் தன்னம்பிக்கை குறையாமலேயே இருந்தார் .கடைசி முறை வந்த போது எல்லாம் தைரியமாக பேசியவர் ,போகும் போது நான் பிழைப்பேனா என்று கேட்டு அழுதது கண்ணுக்குள்ளேயே நிற்கிறது .இனியேனும் நிம்மதி கிடைக்கட்டும் .

நோயாளிகளுடன் அதிகமாக எமோஷனலாக இன்வால்வ் ஆகக் கூடாது என்பார்கள், ஆனாலும் நடைமுறையில் பல நேரங்களில் அது சாத்தியமில்லாமல் போகிறது

சே.வேங்கடசுப்ரமணியன். said...

உள்ளத்தை தைக்கும் நிக்ழ்வு.ஹெச்.ஐ.வி க்கு எதிரான பணிகளில் கைகோர்ப்போம்.

devathai said...

Hello, i am navaneethan from 'DEVATHAI' which is a tamil bi-monthly magazine. in our magazine, we have a separate page for lady bloggers. we planned to publish your blog in this issue. i want just your o.k. and a recent photograph.
my mobile no is. +91 9500019222
thanks
Navaneethan

பூங்குழலி said...

நன்றி நவநீதன் ,என்னுடைய வலைப்பூவை பற்றி எழுதிக் கொள்ளுங்கள் ..உங்கள் மின்னஞ்சல் தாருங்கள் .புகைப்படம் வேண்டாமே