பிரசவ கால சிறப்பு சிகிச்சைக்காக எங்களிடம் வந்த பெண் இவர் .எப்போதும் படபடவென்று பேசிக் கொண்டே இருப்பார் .சில வாரங்களுக்கு முன் குழந்தைக்கு ஹெச் .ஐ.வி இருக்கிறதா என்று கண்டறிய ரத்த பரிசோதனை செய்யப்பட்டது .இதில் குழந்தைக்கும் நோய் இருப்பது தெரியவந்தது .
நேற்று வயிற்றுபோக்கு இருப்பதாக சொல்லி குழந்தையை தூக்கிக்கொண்டு வந்திருந்தார் .பரிசோதனை முடிவுகளை இதுவரையிலும் இவரிடம் தெரிவிக்கவில்லை .குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந்தையை அனுப்பி வைத்தோம் .போகும் முன்னர் ,"டெஸ்ட் எடுத்தீங்களே ரிசல்ட் வந்துவிட்டதா ?"என்று கேட்ட போது நீங்கள் போய் வருவதற்குள் வாங்கி வைக்கிறோம் என்று சொல்லி அனுப்பி வைத்தோம் .
மருத்துவர் பார்த்துவிட்டு இன்னமும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும் என்று சொன்னார் .வேறு மருத்துவரிடம் அனுப்பும் படியும் பரிந்துரைத்திருந்தார் .அதற்கு முன் சொல்லிவிடலாம் என முடிவு செய்து அழைத்து உட்கார வைத்து மெதுவாக ,குழந்தைக்கும் நோய் இருக்கிறது என்று சொன்னோம் .ஆனால் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும் .அதிலும் பாசிடிவாக வந்துவிட்டால் நோய் இருப்பது உறுதியாகிவிடும் என்பதையும் சொன்னோம் .
ஆண்ட்டி ,ஆண்ட்டி என்று அதுவரையும் கூட ஓயாது பேசிக் கொண்டே இருந்தவர் ,அதன் பின் கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை .அமைதியாகவே உட்கார்ந்திருந்தார் ."எங்க மாமியார் கூட வந்திருக்காங்க ஆண்ட்டி ,அவங்க கேப்பாங்க ரிசல்ட் என்ன ஆச்சுன்னு .ஹெச்.ஐ.வி இருக்குன்னு சொன்னா திரும்பவும் எதுக்கு கூட்டிட்டி வரணும்ன்னு கொழந்தைய டிரீட்மென்ட்டுக்கே கூட்டிட்டு வர விட மாட்டாங்க .டிரீட்மென்ட்டுக்கும் இங்க தானே வரணும் ?நா என்ன சொல்லட்டும் ஆண்ட்டி ?நோய் இல்லன்னு சொல்லிறவா ?அடுத்த தடவ டெஸ்ட் செஞ்ச தானே நிச்சயமா தெரியும் ?ஆனா அடுத்த தடவையும் பாசிட்டிவா வரலாம் தானே ?அப்ப நா என்ன சொல்லட்டும் ?அவங்க எல்லாரும் கேப்பாங்க ஆண்ட்டி?"
நாங்கள் சொன்னோம் ,ரிசல்ட் வரவில்லையென சொல்லி வையுங்கள் .உறுதி செய்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என ."நா அப்படியே சொல்லிடுறேன் .ஒங்க கிட்ட கேட்டா நீங்களும் அப்படியே சொல்லுங்க ."என்று சொல்லிவிட்டு சென்றார்.
பேச்சின் ஊடே அப்படியே உறைந்து போன அவர் முகமும் கண்ணீரை கட்டுபடுத்திக் கொண்டே அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்த அவர் தெளிவும் இன்னமும் மனதை வாட்டுகின்றன .மாமியாருக்கு
விஷயம் தெரிந்துவிடும் என்பதால் கூட அவர் அழாமல் இருந்திருக்கக்கூடும் .
Thursday, 3 June 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
பாவம் பெற்றவள்.. என்ன பாடு பட்டிருக்கும் அவள் மனது..:((
ஆமாம் ,கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை அந்த பெண் .பின் சுதாரித்துக் கொண்டார். அறுபது குழந்தைகளுக்கு ஒரு நேரத்தில் பரிசோதனை செய்ததில் இந்த குழந்தை மட்டுமே பாசிடிவ் .... ரொம்பவே கஷ்டமாக இருந்தது
:((((
அந்த பெண் கம்பீரத்தின் அடையாளம்.
வாழ்வில் வென்றுகாட்டுவார்.
//அந்த பெண் கம்பீரத்தின் அடையாளம்.
வாழ்வில் வென்றுகாட்டுவார்//
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி .அந்த நேரத்தில் சட்டென சுதாரித்துக் கொண்டு அடுத்ததை யோசிக்க ஆரம்பித்த அவரின் அந்த தெளிவு வியப்பாகவே இருந்தது ..
Post a Comment