Tuesday, 16 November 2010

ஏடாகூடம்

குழந்தைகளின் கடத்தலும் இரண்டு குழந்தைகளின் கொலையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நேரத்தில் என் மகனின் பள்ளியில் பத்து முதல் பன்னிரண்டாம் வகுப்பில் நடந்த சில நிகழ்வுகள் இவை .....

பல குழந்தைகள் பள்ளிக்கு செல்போனுடன் வருகிறார்கள் .பள்ளியில் இதற்கு அனுமதி இல்லையென்றாலும் இவர்கள் பெரும்பாலும் பெற்றோரின் அனுமதியுடனே இதை கொண்டு வருகிறார்கள்;வகுப்புகளுக்கு இடையே பாடல் கேட்பதற்கும் பிரவுஸ் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.இவற்றில் பல லேட்டஸ்ட் மாடல் விலை உயர்ந்த போன்கள்.இது போதாதென்று ஆசிரியர்களும் கூட வகுப்பின் ஊடே செல் போனில் பேசுகிறார்கள் .இது தவிரவும் ஐ பாட்,கேம்ஸ் சி டி போன்றவை சகஜமாக வகுப்பறைக்கு கொண்டுவரப்படுகின்றன .

ஸ்கூட்டியில் வருவதை அனுமதிக்காதீர்கள் ,அவ்வாறு வருபவர்கள் பள்ளியில் முன் அனுமதி பெற வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருந்தும் பல பிள்ளைகள் ஸ்கூட்டியில் வருகிறார்கள் .வீடு திரும்பும் போது மூவராக வண்டியில் வேகமாக பயணிப்பது சகஜமாக நடக்கிறது .

இன்னமும் சில பிள்ளைகள் வீடு திரும்பும் போது தானாகவே தெருவில் செல்லும் ஆட்டோக்களை நிறுத்தி ,பேரம் பேசி தனியே ஏறிச் செல்கிறார்கள் .

ஒரு மாணவனின் பெற்றோர் அமெரிக்காவில் இருக்கிறார்கள் .இங்கு தாத்தா பாட்டியிடம் வளரும் அவன் ,தினம் கொண்டு வரும் பாக்கெட் மணி ,சில நூறுகள் .இன்னொருவன் ,பள்ளிக்கு வந்ததும் அம்மாவுக்கு போன் செய்ய ,டிரைவர் கே எப்சியில் சிக்கன் வாங்கிக் கொண்டு வந்து வகுப்பில் கொடுக்கிறார் .

வார இறுதிகளில் ஒரு மாணவன் ,தன் நண்பர்களுக்கு அருகிலிருக்கும் காபி ஷாப்பில் கொடுக்கும் ட்ரீட்டில் செலவழிபவை சில ஆயிரங்கள் ..

தீபாவளிக்கு அடுத்த நாள் கலர் டிரசில் வரலாம் என்று சொன்ன போது சாதாரண உடையில் வகுப்பிற்கு வந்தானாம் கவுன்சிலரின் மகன் .இங்கு வந்து தன் அப்பாவிற்கு போன் செய்ததும் அவர் கொண்டு வந்து தந்தவை ,பட்டு வேட்டி சட்டை மட்டுமல்ல சுமார் இருபது பவுனில் ஒரு செயின் ,விலை நாலரை லட்சம் என்ற அறிவிப்போடு ..

இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் ,ஒரு பிரபல அரசியல் கட்சியின் முக்கிய புள்ளியின் மகன் எல் கே ஜி யில் பள்ளிக்கு கொண்டு வந்தது ஒரு பிச்சுவா கத்தி .பள்ளியில் பதறிப் போய் பெற்றோரை அழைத்து விசாரித்ததில் ,"எங்கள் மகனை தைரியசாலியாக வளர்க்க விரும்புகிறோம் ,இதையெல்லாம் கண்டித்து அவனை பயந்தாங்கொள்ளியாக மாற்றி விடாதீர்கள் "என்று சொன்னதோடு ,அவனை வேறு பள்ளிக்கும் மாற்றி விட்டார்கள் ....






26 comments:

vasan said...

Roses in different colors, but called as ROSES.

சந்தனமுல்லை said...

:-(

இவை ஏற்படுத்தும் பியர்-‍‍ப்ரஷரை நினைத்தால்....
ஹீம்..பெற்றோரின் இந்தப் போக்கு மிகுந்த கவலையைத் தருகிறது.

பூங்குழலி said...

ஆமாம் சந்தனமுல்லை ,கூட படிப்பவர்களுக்கும் சங்கடம் ,பள்ளிக்கும் சங்கடம். பெற்றோரை முதலில் பாடம் கற்றுக் கொள்ள சொல்ல வேண்டும்

settaikkaran said...

குழந்தைகள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளின் இன்னொரு விபரீதமான பரிமாணம். நன்று!

Kavinaya said...

அப்பாடி... வாசிக்கும்போதே பயமா இருக்கு :( பலரும் மிகுந்த சுயநலவாதிகளாக மாறி வருகிறார்கள் என்று தோன்றுகிறது :(

தமிழ் உதயம் said...

தாங்கள் சொல்வது உண்மை தானா.

பூங்குழலி said...

//குழந்தைகள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளின் இன்னொரு விபரீதமான பரிமாணம்//

உண்மைதான் .சந்தனமுல்லை சொன்னது போல இதனால் ஏற்படும் பியர் பிரஷர் குழந்தைகளுக்கு நல்லதல்ல

பூங்குழலி said...

//அப்பாடி... வாசிக்கும்போதே பயமா இருக்கு :( பலரும் மிகுந்த சுயநலவாதிகளாக மாறி வருகிறார்கள் என்று தோன்றுகிறது :( //

பணம் ஒன்றே எல்லாவற்றிற்கும் ஆன அளவு கோலாக மாறி வருகிறது .அப்படியாகும் போது எல்லோரும் சுயநலவாதிகள் ஆக வேண்டியது தானே

பூங்குழலி said...

தாங்கள் சொல்வது உண்மை தானா.

நூறு சதவீதம் உண்மை தான் ..(இப்படியெல்லாம் சந்தேகம் வந்தால் என்ன செய்வேன் ?)

vinthaimanithan said...

குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதைவிட ஹியூமனாய்டுகளாக இருப்பதையே பெற்றோர் விரும்புகின்றனர்!

பூங்குழலி said...

//குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதைவிட ஹியூமனாய்டுகளாக இருப்பதையே பெற்றோர் விரும்புகின்றனர்//

குழந்தைகள் வரை தங்களுடைய பணபலம் தெரிய வேண்டும் என்கிற நினைப்பு ஒருபுறம் ..குழந்தைகள் கேட்பதையெல்லாம் கொடுத்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் ஒருபுறம்

Asiya Omar said...

பள்ளிக்கூடங்களில் இந்தளவு ஏடாகூடமா?அப்பாடா.

பூங்குழலி said...

இது நான் அறிந்தவரையில் மட்டுமே ....பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் இன்னமும் விழிப்பாக இருக்க வேண்டும்

அருண் பிரசாத் said...

பிச்சுவா கத்தி எல்லாம் டூ மச்சுங்க

Kanchana Radhakrishnan said...

வாசிக்கும்போதே பயமா இருக்கு

பூங்குழலி said...

//பிச்சுவா கத்தி எல்லாம் டூ மச்சுங்க//

எழுதியதை வாசிக்கும் போதே உங்களுக்கு டூ மச்சா தெரியுது ..அது சரி தான்னு வாதிட்ட பெத்தவங்களை பார்க்கும் போது ஆசிரியர்களுக்கு எப்படி இருந்திருக்கும் ?யாருக்காவது சின்ன காயம் பட்டிருந்தா ?

பூங்குழலி said...

//வாசிக்கும்போதே பயமா இருக்கு //

கேட்ட போது எனக்கும் பதட்டமா இருந்துது

அன்புடன் மலிக்கா said...

பூங்குழலி அழகிய பெயர்.

பதிவை படிக்கும்போதே மனதை இனம்புரியா பயம் கவ்வுகிறது.
இப்படிகூட இருக்குமா என்பதைபோல்.
விழிப்புணர்வு பதிவு..

http://niroodai.blogspot.com/

பூங்குழலி said...

பூங்குழலி அழகிய பெயர்.

ஆமாம் ரொம்பவே அழகான பெயர் தான் .ரொம்ப நன்றி ..

//பதிவை படிக்கும்போதே மனதை இனம்புரியா பயம் கவ்வுகிறது.
இப்படிகூட இருக்குமா என்பதைபோல்.
விழிப்புணர்வு பதிவு..//

பள்ளி வளாகத்திற்குள் பிள்ளைகள் எல்லை மீறுவதும் பெற்றோர் அதை ஆதரிப்பதும் ஆசிரியர்கள் கையை பிசைந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதும், வேதனையானது

அருண் பிரசாத் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்....

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_04.html


நன்றி

Unknown said...

//இங்கு வந்து தன் அப்பாவிற்கு போன் செய்ததும் அவர் கொண்டு வந்து தந்தவை ,பட்டு வேட்டி சட்டை மட்டுமல்ல சுமார் இருபது பவுனில் ஒரு செயின் ,விலை நாலரை லட்சம் என்ற அறிவிப்போடு ..//

நல்ல வேளை இன்னமும் சீருடை என்பது தொடர்கிறது. இல்லையென்றால் எத்தனை ஏழைக்குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்கள் பட்டுப்போகக் கூடும்..

Unknown said...

//பள்ளி வளாகத்திற்குள் பிள்ளைகள் எல்லை மீறுவதும் பெற்றோர் அதை ஆதரிப்பதும் ஆசிரியர்கள் கையை பிசைந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதும், வேதனையானது //
உண்மை..

பூங்குழலி said...

ஓ நன்றி ,அருண் பிரசாத்

பூங்குழலி said...

//நல்ல வேளை இன்னமும் சீருடை என்பது தொடர்கிறது. இல்லையென்றால் எத்தனை ஏழைக்குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்கள் பட்டுப்போகக் கூடும்.. //

உண்மைதான் .வகுப்பில் இருக்கும் மத்த மாணவர்களின் மனம் எப்படி அலைபாய்ந்திருக்கும் ?அது தவிரவும் அந்த மாணவனுக்கே இது பாதுகாப்பானது இல்லையே ?

//பள்ளி வளாகத்திற்குள் பிள்ளைகள் எல்லை மீறுவதும் பெற்றோர் அதை ஆதரிப்பதும் ஆசிரியர்கள் கையை பிசைந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதும், வேதனையானது //
உண்மை.. //

பிள்ளைகளை இத்தகைய விஷயங்களில் கண்டிக்க வேண்டிய பெற்றோரே இதை ஒரு அந்தஸ்து சார்ந்த விஷயமாக பார்ப்பது வேதனை தான்

கருத்துகளுக்கு நன்றி பாரதி

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

இதெல்லாம் படிக்கவே பயமா இருக்கு..

இங்க கூட.. ஹாலிடே ஷாப்பிங் என்று உண்டு.. கிறிஸ்தமஸ் டைம்-ல.. அங்குள்ள பொருட்கள் எல்லாமும் விலை ஒரு டாலர்....

சில குழந்தைகள்... $20 - $30 கொண்டு வந்து... அத்தன சாமான் வாங்குவாங்க...

சில குழந்தைகள்... ஒரு டாலர் கூட இல்லாம.. சும்மா உக்காந்து பாவமா வேடிக்கை பார்க்கும்...

ஒரு டாலர் பொருள் வாங்க... இருபது டாலர் எல்லாம் தந்து விடுவது... டூ மச்.. தான்ன்னு தோணும்..

பூங்குழலி said...

பிறந்த நாளுக்கு எல்லோருக்கும் கிப்ட் கொடுக்காத குழந்தையை மற்ற குழந்தைகள் பூவர் என்று சொல்கின்றன .குழந்தைகளின் வரையறைகளுக்குள் ஏழை பணக்காரர் எல்லாம் வந்தது வேதனை தான்