Wednesday 16 March 2011

ஜோத்பூர் -யார் பொறுப்பு ?

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு என்று நமக்கு காலம் காலமாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது .உலகெங்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பெண் கர்ப்பம் சம்பந்தப்பட்ட காரணங்களால் இறக்கிறாள் .
பல வளரும் மற்றும் ஏழை நாடுகளில் இன்னமும் பிரசவங்கள் வீடுகளிலேயே இதற்கென ஏதும் பயிற்சி இல்லாதவர்களாலேயே செய்யப்படுகிறது .பிரசவம் சம்பந்தப்பட்ட மரணங்களுக்கான காரணங்கள் பலவாக சொல்லப்பட்டாலும் சரியான பயிற்சி இன்றி செய்யப்படும் பிரசவங்களும் போதிய வசதிகள் இல்லாத இடத்தில் செய்யப்படும் பிரசவங்களும் முக்கிய காரணங்கள் என்பதை மறுக்க முடியாது .


சமீபத்தில் ராஜஸ்தான் ஜோத்பூர், உமைட் மருத்துவமனையில் நிகழ்ந்துவிட்ட மரணங்கள் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டியவை .கடந்து மூன்று வாரங்களில் மட்டும் இந்த மருத்துவமனையில் பதினெட்டு பெண்கள் இறந்திருக்கின்றனர் .இதில் பதினேழு பேர் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டவர்கள் .ஒருவர் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் .இது தவிரவும் பச்சிளம் குழந்தைகள் மூன்று பேரும் பலியாகி இருக்கின்றனர் .

இறந்தவர்கள் அனைவருக்கும் அறுவை சிகிச்சைக்கு பின் தீவிர ரத்தபோக்கு ஏற்பட்டு பின்னர் நிலைமை மோசமடைந்து மரணம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது .பதினாறு மரணங்கள் நிகழ்ந்து விட்ட பிறகே மாநில அரசு விழித்தெழுந்து காரணங்கள் கண்டறிய முற்பட்டிருக்கிறது .ஆரம்ப விசாரணையில் இந்த பெண்களுக்கு ஏற்றப்பட்ட ஐ வி ப்ளூயிட்ஸ் எனப்படும் குளுகோஸ் பாட்டில்களில் காளான் இருப்பது கண்டறியப்பட்டது .இதை தொடர்ந்து இந்த பாட்டில்களை சப்பளை செய்த இண்டோரை சேர்ந்த பேரென்டெரல் சர்ஜிகல் நிறுவனத்தின் கிடங்குகள் சோதனையிடப்பட்டு அங்கிருந்த பத்தாயிரம் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன .அதன்பின் ஆறு மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்து கொண்டிருக்கிறது .மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன .

மாநில அரசு இறந்தவர்களுக்கு இழப்பீடாக ஐந்து லட்சம் ரூபாய் அறிவித்திருக்கிறது

கொல்கத்தாவில் சோதனை செய்யப்பட பாட்டில்களில் மூன்றில் ஒன்றில் OD 0077 என்ற நச்சுப் பொருள் இருந்தது நிரூபிக்கப்பட்டிருந்தது .

இவையெல்லாம் நமது நாட்டு நடப்பின் விதிமுறைகள் படி சரியாக நடந்து கொண்டிருந்தாலும் ,பதில் காணப்படவேண்டிய கேள்விகள் இதில் நிறைய உண்டு .

1.ஆரம்ப நிலை விசாரணையிலேயே மருத்துவமனையில் பல குறைபாடுகள் ,குறிப்பாக ,ஆபரேஷன் தியேட்டர் பராமரிப்பு ,பணிபுரியும் மருத்துவர்களின் பயிற்சியின்மை ,சீனியர் மருத்துவர்கள் மேற்பார்வையிட வராதிருத்தல் போன்ற பல விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டும் மருத்துவமனை ஊழியர்கள் ஒருவர் மீது கூட இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ?

2.கெட்டு போயிருந்த ப்ளூயிட்ஸ் தான் காரணமென்றால் மற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஏன் எதுவும் நேரவில்லை ?இல்லை இது வெளியில் தெரியவில்லையா ?

3.தொடர்ந்து ஒரே வகையான மரணங்கள் ஏற்பட்ட போது ஏன் நிர்வாகம் உடனே காரணங்களை ஆராய்ந்து பார்க்கவில்லை ?

4.மருத்துவமனை சுகாதாரமும் அதன் மேற்பார்வையும் இத்தனை சீர்கெட்டு கிடக்கும் நிலையில் ,அதை தற்காலிகமாகவேனும் மூடாமல் தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதித்திருக்கிறார்கள் ஏன் ?

5.ஏன் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை தரக்கூடாது ?

சிகிச்சை என்பது நோய்க்கு ஏற்றாற்போல் என்பது மாறிப்போய் நோயாளியிடம் இருக்கும் பணத்திற்கேற்றார் போல் என்று மாறிக் கொண்டிருக்கிறது .பணம் இருப்பவர்களுக்கு நல்ல ? உயர்தர சிகிச்சையும் இல்லாதவர்களுக்கு இருக்கும் பணத்திற்கு ஏற்றாற்போல் சிகிச்சை வழங்குவதும் நடைமுறையாகிவிட்டது .கார்பரேட் சலுகைகள் ,ஊழல் என்று லட்சக் கணக்கான கோடிகளை இழக்கும் அரசு எல்லோருக்கும் சமமான மருத்துவம் கிட்ட வேண்டும் என்பதில் ஏனோ பாராமுகமாக இருக்கிறது .

பெரும் பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் நட்சத்திர மருத்துவமனைகளில் போய் படுத்துக்கொள்கின்றனர் .வசதி இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளில் வேறு வழியின்றி தஞ்சம் புகுகின்றனர் .இதை சரி செய்ய அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதை விட்டுவிட்டு ,மாநில அரசு தனியாருக்கு காப்பீடு என்ற பெயரில் கோடிகளை இறைக்கிறது .நடுவண் அரசோ ,இந்தியாவை வல்லரசாக்கவும் பதவியில் உள்ளோர் எதிர்காலத்தை வளமாக்கவும் ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருக்கிறது.

ஜோத்பூரில், அலட்சியத்தால்,பல குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர் .இன்று வரையில் சரியான பதில் சொல்லவோ பொறுப்பேற்றுக் கொள்ளவோ எவரும் தயாராக இல்லை. இந்த மரணங்கள் ஒளிருவதாக நாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்தியாவில் அழிக்க முடியாத கறைகள் ,அவமானங்கள்.


5 comments:

Anonymous said...

நச் கேள்விகள்

பூங்குழலி said...

நன்றி சதீஷ்குமார் ..விடைகள் நாம் அறியக் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் ...

பூங்குழலி said...

இன்றைய செய்தி :இந்த மரணங்களுக்கு பொறுப்பாக்கப்பட்டு மூன்று மருத்துவர்கள் இடைகால பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்த மரணங்கள் ஒளிருவதாக நாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்தியாவில் அழிக்க முடியாத கறைகள் ,அவமானங்கள்.

நச் வரிகள்

பூங்குழலி said...

மருத்துவனைகள் பராமரிப்பிலும் ஏழைகளுக்கு செய்யப்படும் மருத்துவத்திலும் நமக்குள்ள அலட்சியத்தையே இந்த மரணங்கள் காண்பிக்கின்றன ....நன்றி செந்தில்குமார்