Tuesday 20 March 2012

கூடங்குளம்

கூடங்குளம் ,ஆறு மாதகாலமாக செய்திகளில் அடிபட்டுக் கொண்டே தான் இருக்கிறது .அணு உலைகளுக்கு எதிரான மக்களின் குரலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது .


காரைக்குடி வரை வந்து ,சிதம்பரம் புகழ் பாடிச் சென்ற பிரதமருக்கு இந்த பிரச்சனை குறித்து வாய்திறக்க மாஸ்கோ போக வேண்டியிருந்தது .தன்  அமெரிக்க முதலாளிகளை குளிப்பாட்டி வைத்திருந்த பிரதமர் அன்று  மாஸ்கோவில் ,தனக்கு ரஷ்யாவிலும் முதலாளிகள் இருப்பதை வெளிப்படுத்தினார் .


மத்திய அமைச்சர் நாராயணசாமியோ ஏதோ கவுன்ட் டவுன் சொல்லிக் கொண்டே இருந்தார் .இறுதியில் இந்த விஷயத்தில் நேர்மையாக பேசியது இவர் ஒருவரே .


கூடங்குளம் பாதுகாப்பானது என்று ஒரு தரப்பும்  பாதுகாப்பில்லாதது என்று மறுதரப்பும் வாதிட்டுக் கொண்டே இருக்கின்றன .மக்கள் மத்தியில் இது குறித்து ஒரு தீர்க்கப்படாத அச்சம் இருந்துகொண்டே இருப்பதன் விளைவாக போராட்டங்கள்( ஆரம்ப காலங்களில் பெரும் ஊடக ஆதரவு கிடைக்காத போதும் )நடந்து கொண்டே இருக்கின்றன .இதில் ஏதும் வன்முறை நிகழ்ந்ததாக தெரியவில்லை .


இதில் முதல் வன்முறையாக அரசு வெளிநாட்டு ஆதரவு என்று பெரும் பூச்சாண்டி காட்டியது .இதுவரை அறியப்படாத  ? உண்மையாக தன்னார்வ நிறுவனங்களுக்கு பெரும் தொகை வருவதாக அரசு கூறியது.வெளிநாட்டு நிதியை பெறுவதற்கென்றே இங்கு பலர் தன்னார்வ நிறுவனங்களை பேப்பர் வரையிலேனும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இதுவரை தெரிந்து கொள்ளாமலா இருந்தது இந்த அரசு ?

முதல்வரோ ஒரு அசாதாரண மின்வெட்டை அமல்படுத்தினார்  .பின்னர்  சாதகமாகவே அறிக்கை தர உருவாக்கப்பட்ட ஒரு குழுவை அமைத்து அதன் அறிக்கையை பெற்றுக் கொண்டார்  .ஒப்புக்கு ஆதரவாளர்களையும் சந்தித்தார் .இடைத் தேர்தல் வேலைக்கு  மொத்த மந்திரி சபையையும் அனுப்பிவிட்டு ,அது முடியும் வரை காத்திருந்தார்  .

இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே போராட்ட ஆதரவு குழுவினர் கைது செய்யப்படுகின்றனர் .அதைவிட கொடுங்கோன்மையாக சுற்றுவட்டார கிராமங்களில் 144  அமலாக்கப்படுகிறது .ஊரிலிருந்து வெளியேறும் வழிகள் சீல் வைக்கப்படுகின்றன .


முதல்வர் அவர்களே ,


1.உங்கள் குழு அறிக்கை தந்தபடி, அணு உலை பாதுகாப்பானது என்றால் அதை மக்களுக்கு எடுத்து சொல்லாமல் எதற்காக அடக்கு முறையை ஏவிவிட்டீர்கள் ?


2.மக்களை இது குறித்து சந்திக்க நீங்கள்  தொடர்ந்து  மறுப்பது ஏன் ?


3.போராட்டக் குழுவினரை கைது செய்தது கூட நியாயமில்லை என்றாலும் போர்க்களம் போல போலீசையும் ராணுவத்தையும் மக்களுக்கு எதிராக ஏன் குவித்தீர்கள் ?


4.விலைவாசி உயர்வை டிவியில் வந்து தேனை குழைத்து சொன்ன நீங்கள் இத்தனை பெரிய விஷயத்தில் மக்களுக்கு ஒரு வெறும் அறிக்கையுடன் ஏன் முடித்துக் கொண்டீர்கள் ?


5.உங்கள் குழுவினரின் அறிக்கை உங்களுக்கு சரியென தோன்றியிருந்தால் அதை சொல்ல சங்கரன்கோவில் தேர்தல் முடியும் வரை காத்திருந்தது எத்தனை மலின அரசியல் ?


6 .எதற்கு இழப்பீடு போல திடீரென இத்தனை கோடிகளை ஒதுக்கினீர்கள் ?நன்மை பயக்கும் ஒரு திட்டத்தின் பலனாளிகளுக்கு இவை எதற்காக ?


7.மக்களிடம் பேச தேவையில்லை என்ற அகங்காரத்தை உங்களுக்கு தொடர்ந்து தருவது யார் ?


8.மக்கள் ,வாழ்வு நிலை போராட்டம் போன்றதான ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது 500     கோடியை பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் எங்கள் முதல்வரே ,பசியால் வாடிய தன் மக்களிடம் "EAT  CAKE " என்று சொன்ன பிரஞ்சு பேரரசி மேரி அன்டோனியெட்டுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ? 


13 comments:

இருதயம் said...

நண்பருக்கு வணக்கம் ,

உங்களின் கேள்விகள் எனக்கு கொஞ்சம் வியப்பாக தான் தெரிகிறது ..

நீங்கள் மக்களை சந்திக்கவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் . நான் தவறு என்று சொல்லவில்லை. கொஞ்சம் யோசித்து பாருங்கள் எப்படி அதனை மக்களையும் தனி தனியாக சந்திக்கமுடியும் ...? எனவே தான் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லி கொள்ளுகிற போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்பதை எப்படி நீங்கள் மறந்து போனீர்கள் ...?

மத்திய குழுவிடம் கேட்கப்பட்ட 50 கேள்விகளுக்கும் உரிய பதிலை மக்களிடம் கொண்டு பொய் சேர்ப்போம் என்று சொன்னாரே திரு . உதயகுமார் , என் மக்களிடம் கொண்டு போய் அதை சேர்க்கவில்லை ..? பதிலை படித்து கூட பார்க்காமல் நாங்கள் அதை ஏற்றுகொள்ள மாட்டோம் என்றாரே ...! நீங்கள் அதை கேட்கமாட்டீர்களா ...?

அப்பாவி மக்களை ஏமாற்றியது தான் திரு. உதயகுமார் செய்த மாபெரும் தவறு

விச்சு said...

கூடங்குளம் பாதுகாப்பானது என முதல்வர் மக்களுக்கு அறிவித்துவிட்டு முன்னமே திறந்திருக்கலாம். இடைத்தேர்தல் வரை காத்திருந்தது உண்மையிலேயே மலின அரசியல்தான்.

Amudhavan said...

கூடங்குளம் விஷயத்தில் மிகச்சரியான அணுகுமுறையுடன்கூடிய கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். இவ்வளவு பாதுகாப்பானதாக அணு உலை இருக்கும்போது எதற்காக இத்தனைத் தாமதம்? அங்கே போராடிக்கொண்டிருக்கிறவர்கள் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. மக்கள்... அதிலும் தொண்ணூறு சதம் பெண்கள். அவர்களிடத்திலே சென்று முதல்வர் விளக்கம் தெரிவித்து உரையாற்றியிருக்கலாம் இல்லையா?
ஒரு மாதத்திற்கும் மேலாக சங்கரன்கோவில் தெருக்களில் உலவிக்கொண்டிருந்த அமைச்சர்களைக் கூப்பிட்டு கூடங்குளம் தொடர்பான முடிவினை எடுத்துவிட்டு அதனை உடனடியாக அமல்படுத்துவாராம்....
இத்தனை மாதங்களும் போராடிய அந்த மக்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.

Avargal Unmaigal said...

சரியான கேள்விகள் ஆனால் அதற்கான பதில் சொல்பவர்கள் இந்த கேள்வியை படிப்பதில்லை. மக்கள் நாம் தான் இதைபடிக்கிறோம் சிந்திக்கிறோம். ஆனால் நமது கேள்விகளுக்கு பதில் சொல்லாதவர்களை மீண்டும் தலைவராக்கி மகிழ்கிறோம் அதுதான் நமது தலைவிதி

பலசரக்கு said...

நெற்றியடி கேள்விகள்

பால கணேஷ் said...

மிக நியாயமான கேள்விகள்! பதில்...?

பூங்குழலி said...

1. கொஞ்சம் யோசித்து பாருங்கள் எப்படி அதனை மக்களையும் தனி தனியாக சந்திக்கமுடியும் ?
ஏன் தேர்தல் நேரத்தில் மட்டும் இவர்களால் சந்திக்க முடிகிறது ....முக்கியமான அமைச்சர்களை அனுப்பி சொல்லுமாறு சொல்லியிருக்கலாம் .ஊடங்கங்களில் அரசு சார்பாக செய்திகள் வெளியிட்டிருக்கலாம் .நினைத்திருந்தால் செய்திருக்கலாம்

2.மத்திய குழுவிடம் கேட்கப்பட்ட 50 கேள்விகளுக்கும் உரிய பதிலை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று சொன்னாரே திரு . உதயகுமார் , என் மக்களிடம் கொண்டு போய் அதை சேர்க்கவில்லை ..?
சரி அவர் கொண்டு போய் சேர்க்கவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள் ,மக்களின் சந்தேகத்தை போக்கும் கடமை அரசுக்கு இருக்கிறதா இல்லையா ?அதுவும் அவர்கள் சார்பாக போராடுபவர்கள் என்று சொல்பவர்கள் அதை செய்ய தவறும் போது ?

3.அப்பாவி மக்களை ஏமாற்றியது தான் திரு. உதயகுமார் செய்த மாபெரும் தவறு.
அப்பாவி மக்களை அவர் ஏமாற்றினார் என்றால் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவது அதற்கு தீர்வாகுமா ?


உங்கள் வருகைக்கு நன்றி இருதயம் அவர்களே

பூங்குழலி said...

எல்லா தரப்பு வாதங்களையும் ஆராய அரசுக்கு பல கால அவகாசமிருந்தது .ஆனாலும் ....நன்றி விச்சு

பூங்குழலி said...

இது மக்களுக்கு பயன்தரும் என்று உறுதியாக நம்பினால் அதை செயல்படுத்த அரசுக்கு உரிமை இருக்கிறது .அதே போல மக்களுக்கு உரிய முறையில் விளக்கம் சொல்லும் கடமையும் இருக்கிறது .அதை செய்ய தவறுவது மக்களாட்சி இல்லை .
நன்றி அமுதவன்

பூங்குழலி said...

இது மக்களுக்கு பயன்தரும் என்று உறுதியாக நம்பினால் அதை செயல்படுத்த அரசுக்கு உரிமை இருக்கிறது .அதே போல மக்களுக்கு உரிய முறையில் விளக்கம் சொல்லும் கடமையும் இருக்கிறது .அதை செய்ய தவறுவது மக்களாட்சி இல்லை .
நன்றி அமுதவன்

பூங்குழலி said...

சரியான கேள்விகள் ஆனால் அதற்கான பதில் சொல்பவர்கள் இந்த கேள்வியை படிப்பதில்லை. மக்கள் நாம் தான் இதைபடிக்கிறோம் சிந்திக்கிறோம். ஆனால் நமது கேள்விகளுக்கு பதில் சொல்லாதவர்களை மீண்டும் தலைவராக்கி மகிழ்கிறோம் அதுதான் நமது தலைவிதி.
மனம் ஏற்க மறுத்தாலும் உண்மைதான் ,அவர்கள் உண்மைகள் .நன்றி அருண் ராஜாமணி ,கணேஷ்

J.P Josephine Baba said...

Good Thinking and valuable questions. Why could n't a chief minister talk through the TV channel even her own channel. In this case the authority won above the humanity and common people wish.

பூங்குழலி said...

நன்றி ஜோசபின் ..மக்களுக்கு முறையே தெரிவிக்கக் கூட முடியவில்லைஎன்றால் நாம் மக்களாட்சியில் இருந்து என்ன பயன் ...