Saturday, 25 August 2012

மழை





இன்றிரவில் 
என் வாசல் வந்து நின்றது மழை
யாசிப்பதாய்  பாவித்து ....

காணாதது போல் நான் இருக்க 
படிதாண்டி மெல்ல 
கூடம்  தொட்டு 

என் வழியெங்கும் 
முத்துக்கள் 
கொட்டி 

செல்லமாய் 
சாளரம் வழியே 
என் கன்னம் வருடி 

ஏதோவென்று 
நான் இருக்க 

பொய்க் கோபத்தில் 
 படபடவென்று  
மொட்டை மாடி ஏறி 
என் துணிகள் நனைத்து 

துணி எடுக்க 
தவிப்புடன் நான் ஓட    
என் கரம் பற்றி  
ஹோவென சிரிக்கும் மழை ......  







இளவரசிகள் :விற்பனைக்கு .....


          


சிறிதும் பெரிதுமாக 
பலபல ஊர்கள் 
ஊரெங்கும் அரசர்கள் ...


ஓலை வீடுகளில் சிலரும்  
ஓட்டு வீடுகளில் சிலரும் 
மாடி வீடுகளில் சிலரும்
வீடுகள் தவிர்த்து சிலரும்  என 
தத்தம்  சாம்ராஜ்யங்களில் 
கோலோச்சி இருந்தார்கள் 


அவரவர் ராஜ்யத்தில் 
வந்துதித்தார்கள்  ராஜகுமாரிகள் 
அவரவருக்கு இடப்பட்ட தொட்டில்களில் 


பஞ்சில் சிலவும் 
பட்டில் சிலவும் 
இரு கைகள், சிறகுகள் என
அநேகமாயிருந்தன தொட்டில்களும் 
இத்தொட்டில்களை அலங்கரித்திருந்தனர் 
ராஜகுமாரிகள் 
பொன்னும் மணியும் அன்பும் உடுத்தி 


சிறுதேர்கள் உருட்டி நடைபயின்று 
அரசர்களின் கையில் நடந்து 
பட்டாம்  பூச்சிகளின் சிறகுகள் சுமந்து
பள்ளிக்கும் போனார்கள் 
பட்டங்களும் சட்டங்களும் 
வென்றே வந்தார்கள் 


வானவில் வண்ணங்கள் சூடி 
மழை நீர் முத்துக்கள் அணிந்து 
விண்மீன்கள்  ஆடைகளில்  உடுத்தி 
தேர்களில் பவனி வந்தார்கள் 
அரசிகளாகப் போகிறோம் 
என்ற மமதையுடன் 
  

காலம் விதித்த  ஒரு கரிநாளில் 
ராஜகுமாரிகளுக்கு ராஜகுமாரர்களை 
தேட போய் வந்த அரசர்கள் 
சாம்ராஜ்யங்கள் பறிக்கப்பட்டு 
சாமான்யர்களிலும் கீழென  சபிக்கப்பட... 
கனவுகள் அகற்றப்பட்டு 
இளவரசிகள்  விற்கப்படுகிறார்கள் 
சேடிப் பெண்களாக .....
















Wednesday, 22 August 2012

என் கனவுகள்





உயிர் களைந்து
இமை போர்த்தி 
உறங்கப் போகிறேன்  நான்
மூடிய கண்களுக்குள்
விழிக்கின்றன என் கனவுகள்


உறக்கத்தின் திறவுகோலிட்டு
திறந்துவிட
சிறகுணர்ந்த  பறவைகள் போல்
சிறு செருக்குடன்
பறந்து  கலைகின்றன  திசைக்கொன்றாய்  ....


எங்கோ என்றோ  எதுவோ என
இனம் புரியாதவையாக
ஏந்தி வருகின்றன எதையெதையோ
வகை பிரிக்காமல்
கொட்டி சேர்க்கின்றன சலிப்பின்றி


இதமாக  தலைகோதும்
தளிர் கை போலொன்றும் 
நறுக்கென்று கிள்ளும்
நகமென ஒன்றும்
கண்சிமிட்டி ஜாடை காட்டி
சிரிக்கின்றன என் கனவுகள்


தொலைந்து போனவை சிலவும்
அகலாதிருப்பவை சிலவும்
அருவருப்பானவை அழகானவை என
என் விடியா நீள் இரவுகளின்
விளக்குகள் என் கனவுகள்


விடியலில்
செல்ல கோபம் காட்டி
அடைய மறுக்கின்றன என் கனவுகள்
மீண்டும் பறக்கவிருப்பதாக
பாவித்து பாசாங்கு செய்கின்றன



மெல்ல கையிலேந்தி
வாஞ்சையாய் தலைகோதி
சிறகுகள் மடக்கி
தொட்டில்கள் இட்டு
உறங்கச் செய்கிறேன்


உறங்கப் போனதும்
இமை அகற்றி
உயிர் உடுத்தி
கண்விழிக்கிறேன்
எப்பொழுதும்  போலவே ...





Monday, 13 August 2012

பெண் +போலீஸ்

காவல்துறை   மக்களிடத்து தன்  நம்பிக்கையை இழந்து பல காலமாகிவிட்டது .முற்றிலும் பெண்காவலர்களால் ஆன
காவல் நிலையங்கள் நிறுவப்பட்ட  போது அவை பெரும் புரட்சியாக சித்தரிக்கப்பட்டன .அதுமட்டுமல்லாமல் பெண்கள் முன்னேற்றத்தில்  முக்கியமானதொரு மைல்கல்லாகவும்  ...

நான் அறிந்த சில  பெண் +காவலர்கள்  சார்ந்த  அனுபவங்களில் சில  இவை ..

1.இவரே பெண் காவலர்  .தெருவில் நடந்து கொண்டிருந்த  போது  இவரின் ஐந்து பவுன் சங்கிலி  திருட்டு போனது .மூன்று வருடங்கள் ஆகியும்   நகையையும்  மீட்க முடியவில்லை ,திருடனையும் பிடிக்க முடியவில்லை .அந்நேரம் கூட அந்த திருடனை விரட்டி சென்று இவர் பிடிக்க முயலவே இல்லை .அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டாராம் ?!

2. இவரும்  பெண் காவலரே .உடல் நலக் குறைவுக்கென இவர் ஒய்வெடுக்க வேண்டிருக்க
தக்க சான்றிதழ்கள்  (எல்லாமே உண்மையானவை )முறையாக கொடுத்த பின்னும்   "லீவ் அப்ரூவல் " ஆக  தன் மேலதிகாரிகளுக்கு இவர் கொடுத்தது சில ஆயிரங்கள் ?!

3.தெரிந்த பெண்ணொருத்தி .குழந்தையில்லை என விவாகரத்து ஏதும் செய்யாமல் திருட்டுத்தனமாக  இன்னொரு திருமணம் செய்து  கொண்டான் கணவன் .இவளின் நகைகளையும் அடமானத்தில் வைத்து விட்டு .அதை மீட்டு தர பெண் காவல்  நிலையம்  சென்றவளால் சில  முறைக்கு மேல்  செல்ல முடியவில்லை .ஏன் என்று கேட்ட போது ,"போங்க மேடம் ,அங்க போயி நிக்குறதுக்கு என்  வீட்டுகாரரரு   கிட்டயே  கேட்டு வாங்கிறலாம் போலிருக்கு .எப்ப  போனாலும் காசு கேக்குராங்க .இல்லன்னா  சாப்பாடு  ஜூஸ் ன்னு ஏதாவது வாங்கிட்டு வர சொல்றாங்க .சாப்பாடு  நேரம்ன்னா பிரியாணி வாங்கித் தரனும் .செலவளிக்க முடியல ."

4.கணவனை இழந்த பெண் .கணவன் நோயுடன் கடனையும் வைத்துவிட்டு போக ஒரே மகளுக்கு மாமியார் சொத்தில் ஏதேனும் வாங்க போராடிக்   கொண்டிருக்கிறாள் .காவல் நிலையம் ,மாமியார் வீடு  என்று  மாறி மாறி அலைந்தவள்    சில நாளில் ஓய்ந்து போனாள் ."போ மேடம் ...ஒரொரு தடவையும்  மாமியார் கிட்ட  பேச காசு கேக்குறாங்க ..அந்த பக்கம்  மாமியார் கிட்ட காசு  வாங்குறாங்க .அந்தம்மா துட்டு வச்சிருக்கு .எங்கிட்ட என்ன இருக்கு ?ஒரேடியா என் மாமியார்  இது என் மகனுக்கே பொறந்ததில்லன்னு சொல்லிருச்சி .போலீசுல அம்பதாயிரம்  கேக்குறாங்க .சொத்தே அவ்வளவு தான் பெறும் . போகட்டும் விட்டுட்டேன் .விடு மேடம் ."

நீதி தேவதை புறக்கண் மட்டுமல்ல அகக்கண்ணும்  அறிவும்  கட்டப்பட்டே இருக்கிறாள்  ஊமையாக ...

Tuesday, 7 August 2012

மழை







வெகு நாட்களாக மறந்து போயிருந்தேன் 
மழையை நான் 

எங்கோ தூர தேசம் போயிருக்க வேண்டும் 
என்று எண்ணியிருந்தேன் ..

எவர் ஊர்களிலோ தன்னை  மறந்து 
அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் ..

வெறும்வானம் பரிகசித்த சில நாளில் 
கோபித்தே  இன்னமும்  மறந்து போனேன்  

நான் 
எனை  வெறுத்த ஒரு நாளில் 
செல்லமாய் 
என் தலை தட்டி 
கண் மூடி 
கன்னம் தொட்டு 
நான் 
என்றது  மழை  ..........